2020-08-16
T.247 - புறவம் (காழி) - குழிவிட்டெழு வழி
-----------
(வண்ணவிருத்தம்;
தனனத் தனதன .. தனதான)
(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர்)
குழிவிட் டெழுவழி .. அறியாத
.. குருடர்க் கிசைவுற .. ஒழுகாமல்
ஒழிவற் றுனதடி .. யிணைபாடும்
.. உணர்வுற் றிடவருள் .. புரியாயே
அழிவைத் தருவிட(ம்) .. மணிபோல
.. அழகைத் தருமிட .. றுடையானே
பொழிலிற் சிறையளி .. இசைபாடும்
.. புறவத் தினிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
குழி-விட்டு எழு வழி அறியாத
.. குருடர்க்கு இசைவு உற ஒழுகாமல்,
ஒழிவு-அற்று உனது அடியிணை பாடும்
.. உணர்வு-உற்றிட அருள் புரியாயே;
அழிவைத் தரு விட(ம்) மணி போல
.. அழகைத் தரு மிடறு உடையானே;
பொழிலில் சிறை-அளி இசை பாடும்
.. புறவத்தினில் உறை பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
குழி-விட்டு எழு வழி அறியாத குருடர்க்கு இசைவு-உற ஒழுகாமல் - குழியிலிருந்து நீங்கி உயரும் நெறியை அறியாத அறிவீனர்களோடு பொருந்தி அப்படி அவர்கள்போல் தீயவழியைக் கைக்கொள்ளாமல்; (இசைவு - பொருந்துதல்; உடன்பாடு); (ஒழுகுதல் - நடத்தல்; செயல்படுதல்);
ஒழிவு-அற்று உனது அடியிணை பாடும் உணர்வு உற்றிட அருள் புரியாயே - இடைவிடாமல் உன் திருவடி இரண்டையும் பாடும் அறிவை நான் பெற அருள்வாயாக; (உணர்வு - அறிவு; தெளிவு);
அழிவைத் தரு விட(ம்) மணி போல அழகைத் தரு மிடறு உடையானே - எல்லாவற்றையும் அழிக்கவல்ல ஆலகாலம் ஒரு நீலமணிபோல் அழகு செய்யும் கண்டத்தை உடையவனே; (மிடறு - கண்டம்);
பொழிலில் சிறை-அளி இசை பாடும் புறவத்தினில் உறை பெருமானே - சோலையில் அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் இனிய இசையெழுப்பும் புறவம் (சீகாழி) என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (புறவம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment