Showing posts with label தானா தத்தத் தனதான. Show all posts
Showing posts with label தானா தத்தத் தனதான. Show all posts

Wednesday, May 6, 2026

T.227 - நாகை (நாகப்பட்டினம்) - மாலால் இக்கட்டு

2019-07-18

T. 227 - நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - மாலால் இக்கட்டு

-----------------

(வண்ணவிருத்தம்;

தானா தத்தத் .. தனதான)


மாலால் இக்கட் .. டுறுவேனும்

.. மாநே யத்தைப் .. பெறுவேனோ

மூலா முத்தித் .. திருவாளா

.. மூவா முக்கட் .. சடையானே

சூலா பெற்றக் .. கொடியானே

.. தூயா பத்தர்க் .. கருள்கால

காலா கப்பற் .. கடல்நாகைக்

.. காரோ ணத்துப் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாலால் இக்கட்டு .. உறுவேனும்

.. மா-நேயத்தைப் .. பெறுவேனோ?

மூலா; முத்தித் .. திருவாளா;

.. மூவா முக்கட் .. சடையானே;

சூலா; பெற்றக் .. கொடியானே;

.. தூயா; பத்தர்க்கு .. அருள்-கால-

காலா; கப்பற் .. கடல்-நாகைக்

.. காரோணத்துப் .. பெருமானே.


மாலால் இக்கட்டு உறுவேனும் - அறியாமையால் துன்பம் உறுகின்ற நானும்; (மால் - அறியாமை; மயக்கம்); (இக்கட்டு - இடுக்கண்);

மா-நேயத்தைப் பெறுவேனோ - உன்னை வழிபடும் சிறந்த அன்பைப் பெறுவேனோ? (அருள்க);

மூலா - மூலனே (ஆதியே); (அப்பர் தேவாரம் - 6.15.6 - "மூலனாம் மூர்த்தியாம்");

முத்தித் திருவாளா - முத்தியை அருளும் திருவாளனே;

மூவா முக்கட் சடையானே - என்றும் இளமையோடு இருக்கும், முக்கண்ணுடைய, சடையினனே;

சூலா - திரிசூலத்தை ஏந்தியவனே;

பெற்றக்-கொடியானே - இடபக்கொடியை உடையவனே; (பெற்றம் - ஆன்; இடபம்);

தூயா - தூயனே;

பத்தர்க்கு அருள் காலகாலா - பக்தர்களுக்கு அருளும் காலகாலனே; (காலகாலன் - காலனுக்குக் காலன் ஆனவன்);

கப்பற்-கடல் நாகைக்-காரோணத்துப் பெருமானே - கப்பல்கள் செல்லும் கடல் சூழ்ந்த திருநாகைக்-காரோணத்தில் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------