2011-02-25
T.143 - நின்றவூர் (திருநின்றவூர்) - மற்றெவர் எனக்கிணை
-----------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)
(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)
மற்றெவரெ னக்கிணையெ னப்புகலு(ம்)
.. நச்சரவ மெத்தைமகிழ் அச்சுதனு(ம்)
.. மட்டுமலி நற்கமலம் உற்றவனும் .. அஞ்சுமாறே
அற்றையள வற்றுயரு(ம்) மெய்த்தலைவன்
.. அத்தியுரி சுற்றுமக லத்திறைவன்
.. அக்குமணி அப்பனொரு பக்க(ம்)மலை .. மங்கைபாகன்
துற்றுவிட(ம்) நிற்கமுகில் ஒத்தகறை
.. பெற்றகளன் அக்கரன்அ லைக்கு(ம்)நதி
.. சுற்றிவரு பொற்சடையன் நெக்குருகி .. அன்பினோடு
சொற்றமிழி சைத்துவழி பட்டவரின்
.. நற்றுணைவன் முப்புரமெ ரித்தகணை
.. தொட்டவனி ருப்பதுதி ருப்பொலியு(ம்) .. நின்றவூரே.
பதம் பிரித்து:
"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலு(ம்)
.. நச்சரவ-மெத்தை மகிழ் அச்சுதனு(ம்)
.. மட்டு மலி நற்கமலம் உற்றவனும் அஞ்சுமாறே
அற்றை அளவற்று உயரு(ம்) மெய்த்தலைவன்;
.. அத்தியுரி சுற்றும் அகலத்து-இறைவன்;
.. அக்கும் அணி அப்பன்; ஒரு பக்க(ம்) மலைமங்கை-பாகன்;
துற்று-விட(ம்) நிற்க, முகில் ஒத்த கறை
.. பெற்ற களன்; அக்கரன்; அலைக்கு(ம்) நதி
.. சுற்றிவரு பொற்சடையன்; நெக்குருகி அன்பினோடு
சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின்
.. நற்றுணைவன்; முப்புரம் எரித்த கணை
.. தொட்டவன் இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே.
"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலு(ம்) நச்சரவ-மெத்தை மகிழ் அச்சுதனு(ம்) மட்டு மலி நற்கமலம் உற்றவனும் அஞ்சுமாறே அற்றை அளவற்று உயரு(ம்) மெய்த்தலைவன் - தானே பரம் என்று வாது செய்த நாகப்படுக்கையை மகிழும் திருமாலும், தேன் நிறைந்த நல்ல தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் அஞ்சும்படி, அன்று எல்லையின்றி ஓங்கிய உண்மையான தலைவன்; (அச்சுதன் - திருமால்); (மட்டு - தேன்; வாசனை); (அற்றை - அன்று);
அத்தியுரி சுற்றும் அகலத்து-இறைவன் - யானைத்தோலை மார்பு சூழப் போர்த்த இறைவன்; (அத்தி - யானை); (உரி - தோல்); (சுற்றுதல் - சூழ்ந்திருத்தல்); (அகலம் - மார்பு);
அக்கும் அணி அப்பன் - எலும்பையும் அணிந்த அப்பன்; (அக்கு - எலும்பு)
ஒரு பக்க(ம்) மலைமங்கை-பாகன் - திருமேனியில் ஒரு பக்கத்தில் மலைமகளைப் பாகமாக உடையவன்;
துற்று-விடம் நிற்க, முகில் ஒத்த கறை பெற்ற களன் - உண்ட ஆலகாலம் தங்க, அதனால் மேகம் போன்ற கறையை அடைந்த கண்டத்தை உடையவன்; (துற்றுதல் - உண்தல்); (களன் - கண்டன்; களம் - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "கடல்விடம் உண்ட கருங்களனே"); (நிற்றல் - தங்குதல்);
அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்; (अक्षर akṣara - a. 1 Imperishable, indestructible);
அலைக்கு(ம்) நதி சுற்றிவரு பொற்சடையன் - அலைமோதுகின்ற கங்கை சுற்றித் திரிகின்ற பொற்சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்);
நெக்குருகி அன்பினோடு சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின் நற்றுணைவன் - உள்ளம் உருகிப் பக்தியோடு தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்குபவர்களுக்கு நல்ல துணைவன்; (சொற்றமிழ் - புகழ்தமிழ்; சொல்தல் - புகழ்தல்); (பெரியபுராணம் - "மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்); (துணைவன் - தோழன்; உதவுபவன்); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "நற்றுணையாவது நமச்சிவாயவே");
முப்புரம் எரித்த கணை தொட்டவன் இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே - முப்புரங்களையும் எரித்த அம்பைச் செலுத்திய சிவபெருமான் உறையும் இடம் திரு விளங்குகின்ற திருநின்றவூர் ஆகும். (தொடுதல் - செலுத்துதல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------