2011-02-24
T.141 - நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை
-----------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)
(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)
ஒற்றையென நிற்குமிறை அற்றவரின்
.. உற்றதுணை பொற்கொடியை ஒத்தவுமை
.. ஒட்டியுறை முக்கணன்வி டத்தையணி .. கண்டநேயன்
சுற்றுமெரி மிக்கெழநி ருத்தமிடு
.. சொக்கனிடு பிச்சைமகிழ் பிச்சனொரு
.. துக்கமிலன் நச்சரவன் நற்பெயரை .. என்றுமோதும்
நற்றவர கத்தளித னைக்கருதி
.. நச்சியவர் உச்சியுறை அத்தன்முன(ம்)
.. நக்குமதில் அட்டவன திச்சடையன் .. அண்டவாணன்
சிற்றிடையர் மட்டலர்தொ டுத்துநிறை
.. சித்தமொடு சுற்றிவர இட்டமருள்
.. சிற்பரனி ருப்பதுதி ருப்பொலியு(ம்) .. நின்றவூரே.
பதம் பிரித்து:
ஒற்றை என நிற்கும் இறை; அற்றவரின்
.. உற்ற துணை; பொற்கொடியை ஒத்த உமை
.. ஒட்டி உறை முக்கணன்; விடத்தை அணி கண்ட நேயன்;
சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு
.. சொக்கன்; இடு பிச்சை மகிழ் பிச்சன்; ஒரு
.. துக்கம் இலன்; நச்சரவன்; நற்பெயரை என்றும் ஓதும்
நற்றவர் அகத்-தளிதனைக் கருதி;
.. நச்சியவர் உச்சி உறை அத்தன்; முன(ம்)
.. நக்கு மதில் அட்டவன்; நதிச்-சடையன்; அண்டவாணன்;
சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை
.. சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள்
.. சிற்பரன், இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
ஒற்றை என நிற்கும் இறை - தனியன் ஆனவன்; ஒப்பற்றவன்; ஏகன்; இறைவன்; (ஒற்றை - ஒன்று; தனிமை; ஒப்பின்மை);
அற்றவரின் உற்ற துணை - அன்பர்க்கு அன்பன்; வேறு பற்றின்றித் தன்னை அடைந்தவர்களைக் காப்பவன்; (அறுதல் - அன்புகொள்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்");
பொற்கொடியை ஒத்த உமை ஒட்டி உறை முக்கணன் - அழகிய கொடி போன்ற உமாதேவி திருமேனியில் சேர்ந்து இருக்கின்ற முக்கண்ணன்;
விடத்தை அணி கண்ட நேயன் - ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்த அன்பன்;
சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு சொக்கன் - சுற்றிலும் தீ மிகுந்து எழும் சுடுகாட்டில் கூத்து ஆடுகின்ற சொக்கன்; (சுற்றும் - சூழ); (சொக்கன் - சொக்கம் என்ற தாண்டவம் ஆடுபவன்; அழகன்; சிவன்);
இடு பிச்சை மகிழ் பிச்சன் - பிச்சையை விரும்பும் பேரருளாளன்; (பிச்சன் - பித்தன்); (பித்தன் - பேரருளாளன் என்ற பொருள்); (அப்பர் தேவாரம் - 4.80.4 - "தில்லை அம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி");
ஒரு துக்கம் இலன் - எந்தத் துக்கமும் இல்லாதவன் - இன்பவடிவினன்;
நச்சரவன் - விஷப்பாம்பை அணிந்தவன்;
நற்பெயரை என்றும் ஓதும் நற்றவர் அகத்-தளிதனைக் கருதி - நல்ல திருநாமத்தை எப்பொழுதும் ஓதிய நல்ல தவம் உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலை விரும்பியவன்; (அகத் தளி - மனக்கோயில்); (கருதுதல் - விரும்புதல்; மதித்தல்); (கருதி - கருதியவன்; ஏறி, சூடி, முதலான பெயர்ச்சொற்கள் ஒத்த அமைப்பு); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");
நச்சியவர் உச்சி உறை அத்தன் - தன்னை விரும்பியவர்களது உச்சிமேல் உறையும் தந்தை; (நச்சுதல் - விரும்புதல்); (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 1.76.4 - "உளங்கொள்வார் உச்சியார் கச்சியேகம்பன்");
முன(ம்) நக்கு மதில் அட்டவன் - முன்பு சிரித்தே முப்புரங்கள் அழித்தவன்; (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);
நதிச்-சடையன் - சடையில் கங்கையை அணிந்தவன்;
அண்டவாணன் - எங்கும் நிறைந்தவன்; சர்வவியாபி; (அண்டவாணன் - அண்டம் முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி);
சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள் சிற்பரன் - சிறிய இடையை உடைய பெண்கள் வாசமலர்களைத் தொடுத்து, அன்பு நிறைந்த மனத்தோடு வலம்செய்து வழிபாடு செய்ய, அவர்களுக்கு இரங்கி அவர்களது விருப்பங்களை (விரும்பிய வரங்களை) அருள்கின்றவன், அறிவுக்கு எட்டாதவன்; (மட்டு - தேன்; வாசனை); (நிறை சித்தம் - அன்பு நிறைந்த மனம்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்; ஞானத்தால் மேலானவன்);
இருப்பது திருப்-பொலியும் நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திரு விளங்குகின்ற திருநின்றவூர்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment