Saturday, July 16, 2022

S.130 - சிவன் - இராமன் - சிலேடை

2011-04-12

S.130 - சிவன் - இராமன் - சிலேடை

----------------

மூத்தவனாய் வந்திப்பார் முன்னாண்ட வன்தானாய்க்

காத்தவன் கையால் கயிலைபேர் - தூர்த்த

அரக்கன் அலறவே விட்டவன் ஆறு

கரக்குமரன் தாசரதி காண்.


சொற்பொருள்:

மூத்தவன் - 1. மூத்த மகன்; / 2. காலத்தால் முற்பட்டவன்; உயர்ந்தவன்;

வருதல் - பிறத்தல்;

பார் - உலகம்;

வந்தித்தல் - துதித்தல்;

முன் - 1. முன்பு ஒரு காலத்தில்; 2. எதிரே;

ஆண்டவன் - 1. ஆட்சி புரிந்தவன்; / 2. கடவுள்;

பேர்த்தல் - பெயர்த்தல்;

தூர்த்தன் - காமுகன்; கொடியோன்;

அலறவே விட்டவன் - 1. அலற ஏ விட்டவன்; / 2. அலறவே இட்டவன்/விட்டவன்;

- அம்பு;

இடுதல் - வைத்தல்; (மலைமேல் விரல் இட்டு இராவணனை நெரித்ததைச் சுட்டியது);

விடுதல் - 1. பிரயோகித்தல்; / 2. போகவிடுதல்;

கரத்தல் - மறைத்தல்; கொடாதிருத்தல்;

காண் - முன்னிலை அசைச்சொல்;


இராமன்:

மூத்தவனாய் வந்து, இப்-பார் முன் ஆண்டவன்தானாய்க்

காத்தவன்; கையால் கயிலை பேர் தூர்த்த

அரக்கன் அலற ஏ விட்டவன்; ஆறு

கரக்குமரன், தாசரதி காண்.

மூத்தவனாய் வந்து - முதல் மகனாகப் பிறந்து;

இப்-பார் முன் ஆண்டவன்தானாய்க் காத்தவன் - இந்தப் பூமியை முன்பு அரசாண்ட மன்னாய்க் காத்தவன்;

கையால் கயிலை பேர் தூர்த்த அரக்கன் அலற ஏ விட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த, காமுக அரக்கனான இராவணன் அலறி அழியும்படி அம்பு தொடுத்தவன்;

தாசரதி - தசரதன் மகனான இராமன்;


சிவன்:

மூத்தவனாய், வந்திப்பார் முன் ஆண்டவன்தானாய்க்

காத்தவன்; கையால் கயிலை பேர் தூர்த்த

அரக்கன் அலறவே இட்டவன்; ஆறு

கரக்கும் அரன், தாசரதி காண்.

மூத்தவனாய் - எல்லாரினும் தொன்மையானவன் ஆகி, எல்லாரினும் உயர்ந்தவன் ஆகி;

வந்திப்பார் முன் ஆண்டவன்-தானாய்க் காத்தவன் - வணங்கும் பக்தர்கள் எதிரே காட்சிதரும் கடவுள் ஆகிக் காத்தருள்பவன்;

கையால் கயிலை பேர் தூர்த்த அரக்கன் அலறவே இட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த, கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி (திருப்பாதவிரலை) ஊன்றியவன்;

ஆறு கரக்கும் அரன் - கங்கையைச் சடையுள் ஒளித்த ஹரன்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------


No comments:

Post a Comment