2011-05-14
V.021 - உலகிற் பலிகொள - மடக்கு
----------------
(ஆறடிக் கட்டளைக் கலித்துறை - அடியீற்றில் மடக்கு அமைந்தது)
உலகிற் பலிகொள உன்கையிற் கொண்டனை ஓட்டினையே
உலராச் சடையின னேவுகந் தேற்றையும் ஓட்டினையே
கலவ மயிலன மாதொரு பாலெனக் காட்டினையே
கலந்திசை ஓங்க நடம்செய நாடினை காட்டினையே
சிலந்திக் கருள்செயப் புக்கது காவிரித் தீவினையே
சிலம்படி வாழ்த்திடு மென்குறை தீர்த்தழி தீவினையே.
பதம் பிரித்து:
உலகில் பலிகொள உன் கையில் கொண்டனை ஓட்டினையே;
உலராச் சடையினனே; உகந்து ஏற்றையும் ஓட்டினையே;
கலவ-மயில் அன மாது ஒரு-பால் எனக் காட்டினையே;
கலந்து இசை ஓங்க நடம்-செய நாடினை காட்டினையே;
சிலந்திக்கு அருள்செயப் புக்கது காவிரித் தீவினையே;
சிலம்பு-அடி வாழ்த்திடும் என் குறை தீர்த்து அழி தீவினையே.
சொற்பொருள்:
ஓட்டினை - 1. பிரமனின் மண்டையோட்டை; 2. இடபத்தை ஏறிச் செலுத்துவாய் (உகைத்தாய்);
காட்டினை - 1. தோன்றுமாறு செய்தாய்; 2. சுடுகாட்டை;
தீவினை - 1. காவிரியில் தீவாக அமைந்த திருவானைக்காவை; 2. பாவம்;
உலகில் பலிகொள உன் கையில் கொண்டனை ஓட்டினையே - உலகில் பிச்சையேற்க உன் கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தினாய்; (பலிகொள்தல் - பிச்சையேற்றல்);
உலராச் சடையினனே - கங்கையை அணிந்த சடையுடையவனே;
உகந்து ஏற்றையும் ஓட்டினையே - விரும்பி இடபவாகனம் ஏறியவனே; (ஏறு - எருது);
கலவ-மயில் அன மாது ஒரு-பால் எனக் காட்டினையே - கலாபமயில் போன்ற உமாதேவி திருமேனியில் ஒரு பாகம் என்று காட்டினாய்; (பால் - பக்கம்);
கலந்து இசை ஓங்க நடம்-செய நாடினை காட்டினையே - மிகவும் இசையோடு கூடிய கூத்து ஆடச் சுடுகாட்டை விரும்பினாய்;
சிலந்திக்கு அருள்செயப் புக்கது காவிரித் தீவினையே - வழிபாடு செய்த சிலந்திக்கு அருள்செய்யக் காவிரியில் தீவாக இருக்கும் திருவானைக்காவில் எழுந்தருளியவனே;
சிலம்பு-அடி வாழ்த்திடும் என் குறை தீர்த்து அழி தீவினையே - சிலம்பை அணிந்த திருவடியை வாழ்த்தும் என் குறைகளைத் தீர்த்துப் பழவினையையும் அழிப்பாயாக; (சிலம்பு-அடி - சிலம்பு அணிந்த அடி);
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
இப்பாடல் ஆறடிகளில் அடிகள்தோறும் கட்டளைக்கலித்துறை அடிகளின் இலக்கணம் அமைய இயற்றியது. அடிகளின் ஈற்றுச்சீர்களில் மடக்கு அமைந்த பாடல்.
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment