Saturday, July 30, 2022

T.150 - பொது - மாதைக் காசை

2011-06-15

T.150 - பொது - மாதைக் காசை

--------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான)

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா)


மாதைக் காசைத் .. தின(ம்)நாடி

.. மாயத் தேபுக் .. கழிவேனோ

வேதத் தாயைப் .. பணியாத

.. வீணர்க் கேதப் .. பிணிதீராய்

பாதச் சீரைத் .. தமிழாலே

.. பாடிப் பேணத் .. தவறாத

காதற் சீலர்க் .. கணியானே

.. கானத் தாடற் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாதைக் காசைத் தினம் நாடி,

.. மாயத்தே புக்கு அழிவேனோ;

வேதத்தாயைப் பணியாத

.. வீணர்க்கு ஏதப்-பிணி தீராய்;

பாதச் சீரைத் தமிழாலே

.. பாடிப் பேணத் தவறாத

காதற் சீலர்க்கு அணியானே;

.. கானத்து ஆடற் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மாதைக் காசைத் தின(ம்) நாடி, மாயத்தே புக்கு அழிவேனோ - பெண், பொருள் என்ற ஓயா ஆசைகளால் மாயையுள் அழுந்தி அழியாதவாறு அருள்வாயாக; (மாயம் - மாயை);

வேதத்தாயைப் பணியாத வீணர்க்கு ஏதப்-பிணி தீராய் - வேதத்தில் விளங்கும் உன்னைப் பணியாத வீணர்களுக்குத் துன்பத்தைத் தரும் பிணியை (உடல்நோய் & பிறவிநோய்) நீக்காதவனே; (வேதத்தாய் - வேதங்களில் விளங்கும் நீ); (ஏதம் - துன்பம்); (பிணி - நோய்; பந்தம்; மும்மலக்கட்டு); (அப்பர் தேவாரம் - 6.12.5 - "வேதத்தாய் கீதத்தாய்"); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

பாதச்-சீரைத் தமிழாலே பாடிப் பேணத் தவறாத காதற்-சீலர்க்கு அணியானே - உன் திருவடிப்-புகழைத் தமிழால் பாடிப் போற்றத் தவறாத அன்புடைய சீலர்களுக்கு அண்மையில் இருப்பவனே; (சீர் - புகழ்); (பேணுதல் - போற்றுதல்); (அணியான் - அணியன் - அருகே இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 6.57.3 - "வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி");

கானத்து ஆடற்-பெருமானே - சுடுகாட்டில் கூத்தாடலை உடைய பெருமானே; (கானம் - காடு - சுடுகாடு); (அப்பர் தேவாரம் - 6.55.4 - "கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment