Tuesday, July 5, 2022

T.136 - புகலி (காழி) - என்றனகம் மடமாதர்

2011-02-12

T.136 - புகலி (காழி) - என்றனகம் மடமாதர்

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான)

(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


என்றனக(ம்) மடமாதர் என்றுபல விதவாசை

.. .. என்றுமெழு மனமாகி .. மிகுகாசை

.. இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடலோடி

.. .. எண்டிசையு(ம்) மிகநேடு .. மயலாலே

உன்றனடி பரவாமல் இங்குழலு(ம்) நிலைமாற

.. .. உன்பெயரை உரைநாவை .. அருளாயே

.. ஒண்கடலில் எழுமாலம் உம்பருய அமுதாக

.. .. உண்டுகரு மணியாரு(ம்) .. மிடறானே

அன்றுமலர் அடிதேடு சங்குதரி அரிவாட

.. .. அங்கியதன் உருவாகி .. உயர்வோனே

.. அங்கையினில் மழுவாள கொன்றையணி திருமார்ப

.. .. அம்புதொடு மதவேளை .. முனிவோனே

தென்றலினில் மணம்வீசு தண்பொழிலில் அறுகால்கள்

.. .. தெந்தனென இசைபாட .. அடியார்கள்

.. செந்தமிழ்கள் அவையோதி வந்துதொழு பதியான

.. .. தென்புகலி தனில்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

என்றன் அக(ம்) மடமாதர் என்று பலவித ஆசை

.. .. என்றும் எழு மனம் ஆகி, மிகு காசை

.. இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடல் ஓடி

.. .. எண்-திசையு(ம்) மிக நேடு மயலாலே

உன்றன் அடி பரவாமல் இங்கு உழலு(ம்) நிலை மாற,

.. .. உன் பெயரை உரை நாவை அருளாயே;

.. ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக

.. .. உண்டு கரு மணி ஆரு(ம்) மிடறானே;

அன்று மலர்அடி தேடு சங்கு தரி அரி வாட

.. .. அங்கி-அதன் உரு-ஆகி உயர்வோனே;

.. அங்கையினில் மழுவாள; கொன்றை அணி திருமார்ப;

.. .. அம்பு தொடு மதவேளை முனிவோனே;

தென்றலினில் மணம் வீசு தண்பொழிலில் அறுகால்கள்

.. .. தெந்தனென இசை பாட, அடியார்கள்

.. செந்தமிழ்கள் அவை ஓதி வந்து தொழு பதியான

.. .. தென்-புகலிதனில் மேவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

என்றன் அ(ம்) மடமாதர் என்று பலவிதசை என்றும் எழு மனம் ஆகி - என் வீடு, மனைவி, என்று பலவகை ஆசைகள் எப்பொழுதும் எழுகின்ற மனத்தை உடையேன் ஆகி; (அகம் - வீடு);

மிகு காசை இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடல் ஓடி எண்-திசையு(ம்) மிக நேடு மயலாலே - மிகுந்த பொருளை இவ்வுலகில் அலைகளும் கப்பல்களும் நிறைந்த கடல் கடந்து சென்று எட்டுத்-திக்குகளிலும் மிகவும் தேடும் மயக்கத்தினால்; (இம்பர் - இவ்வுலகம்); (வங்கம் - படகு); (ஓடுதல் - செல்லுதல்); (நேடுதல் - தேடுதல்); (மயல் - மயக்கம்); (கொன்றைவேந்தன் - "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு");

உன்றன் அடி பரவாமல் இங்குழலு(ம்) நிலை மாற - உன் திருவடியைப் போற்றாமல் இங்கு வருந்தும் நிலை மாறும்படி; (பரவுதல் - துதித்தல்);

ன் பெயரை உரை நாவை அருளாயே - உன் திருநாமத்தைச் சொல்லும் நாக்கை எனக்கு அருள்வாயாக;

ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக உண்டு கருமணிரு(ம்) மிடறானே - ஒளியுடைய பாற்கடலில் எழுந்த விஷத்தைத், தேவர்கள் உய்யும்பொருட்டு, அமுதம்போல் உண்டு கரிய மணி பொருந்தும் கண்டத்தை உடையவனே; (ஆலம் - விஷம்); (உம்பர் - தேவர்);

அன்று மலடி தேடு சங்கு தரி அரி வாட அங்கி-தன் உரு-கி உயர்வோனே - முன்பு மலரடியைத் தேடியவனான சங்கை ஏந்தும் திருமால் வாடுமாறு ஜோதி உருக்கொண்டு ஓங்கியவனே; (அங்கி - நெருப்பு);

அங்கையினில் மழுவாள - கையில் மழுவாள் ஏந்தியவனே;

கொன்றைணி திருமார்ப - திருமார்பில் கொன்றைமாலை அணிந்தவனே;

அம்பு தொடு மதவேளை முனிவோனே - கணை ஏவிய மன்மதனைச் சினந்து எரித்தவனே; (மதவேள் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

தென்றலினில் மணம் வீசு தண்-பொழிலில் அறுகால்கள் தெந்தனென இசை பாட - தென்றலில் மணம் கமழும் குளிர்ந்த சோலையில் வண்டுகள் தெந்தனென இசை பாட; (திருப்புகழ் - திருப்பரங்குன்றம் - "மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்");

அடியார்கள் செந்தமிழ்கள் அவை தி வந்து தொழு பதி - அடியவர்கள் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடிவந்து வணங்குகின்ற தலமான; (பதி - தலம்; தலைவன்);

தென்-புகலிதனில் மேவு பெருமானே - அழகிய புகலியில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (தென் - அழகிய); (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment