Saturday, July 9, 2022

T.144 - நின்றவூர் (திருநின்றவூர்) - என்றும் ஆசைகள்

2011-04-07

T.144 - நின்றவூர் (திருநின்றவூர்) - என்றும் ஆசைகள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன .. தனதான)

(ஐந்து பூதமும் ஆறு சமயமும் - திருப்புகழ் - விராலிமலை)


என்றும் ஆசைகள் மோது மடமனம்

.. .. .. இன்ப வாழ்வென மாய வலையினில்

.. .. இங்கு வீழ்வுறு மாறு செயவுனை .. நினையாமல்

.. குன்று போல்வினை கூடி மிகவிடர்

.. .. .. கொண்டு வாடடி யேனு(ம்) மதிபுனை

.. .. .. குஞ்சி யாயுன தாளை வழிபட .. அருளாயே

மன்று போலிடு கானில் இருளது

.. .. .. துன்று வேளையில் ஆடு கழலின

.. .. வன்கை யானையின் ஈர உரிபுனை .. திருமார்பா

.. வம்பு லாவிய வாளி தொடுமதன்

.. .. .. வந்து போர்புரி நாளில் அவனது

.. .. மைந்த தாருடல் நீறு படமுனி .. தவயோகீ

உன்றன் மேனியில் நூலை நிகரிடை

.. .. .. மங்கை பாகம தான அழகின

.. .. உந்தி சூழ்தரும் ஆடை எனவதள் .. உடையானே

.. உம்பர் தானவர் வேலை கடைதினம்

.. .. .. வந்த கார்மலி ஆலம் அமுதென

.. .. உண்டு மாமணி போல அணிதிரு .. மிடறானே

அன்று தாளடை மாணி நிலைபெற

.. .. .. அன்பி லாநம னாரை விழவுதை

.. .. அங்க ணாவழி யாத புகழுடை .. முதலோனே

.. நின்றன் ஏர்மலி பாத(ம்) நினைபவர்

.. .. .. நெஞ்ச மேதளி யாக மகிழ்பவ

.. .. நின்ற வூரிட மாக இனிதுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

என்றும் ஆசைகள் மோது மடமனம்

.. .. .. இன்ப-வாழ்வு-என மாய-வலையினில்

.. .. இங்கு வீழ்வுறுமாறு செய, உனை .. நினையாமல்,

.. குன்று போல் வினை கூடி, மிகவிடர்

.. .. .. கொண்டு வாடு-அடியேனு(ம்) மதி புனை

.. .. .. குஞ்சியாய், உன தாளை வழிபட .. அருளாயே;

மன்று போல் இடுகானில் இருளது

.. .. .. துன்று வேளையில் ஆடு கழலின;

.. .. வன்-கை-யானையின் ஈர-உரி புனை .. திருமார்பா;

.. வம்பு உலாவிய வாளி தொடு மதன்

.. .. .. வந்து போர்புரி நாளில் அவனது

.. .. மைந்தது ஆர் உடல் நீறு-பட முனி .. தவயோகீ;

உன்றன் மேனியில் நூலை நிகர் இடை

.. .. .. மங்கை பாகமது ஆன அழகின;

.. .. உந்தி சூழ்தரும் ஆடை என அதள் .. உடையானே;

.. உம்பர் தானவர் வேலை கடை-தினம்

.. .. .. வந்த கார் மலி ஆலம் அமுது-என

.. .. உண்டு மாமணி போல அணி திரு .. மிடறானே;

அன்று தாள் அடை மாணி நிலைபெற,

.. .. .. அன்பு-இலா நமனாரை விழ உதை

.. .. அங்கணா; அழியாத புகழுடை .. முதலோனே;

.. நின்றன் ஏர் மலி பாத(ம்) நினைபவர்

.. .. .. நெஞ்சமே தளியாக மகிழ்-பவ;

.. .. நின்றவூர் இடமாக இனிதுறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

என்றும் ஆசைகள் மோது மட-மனம் இன்ப-வாழ்வு என மாய-வலையினில் இங்கு வீழ்வுறுமாறு செய - எப்பொழுதும் ஆசைகள் அலைமோதுகின்ற பேதைமனம் இன்பவாழ்வு என்று வஞ்சவலையில் இங்கே விழும்படி செய்ய;

உனை நினையாமல் குன்று போல் வினை கூடி, மிக இடர் கொண்டு வாடு அடியேனும் - உன்னை எண்ணாமல், மலைபோல் வினைகள் கூடி, துன்புற்று மிகவும் வாடுகின்ற அடியேனும்;

மதி புனை குஞ்சியாய், உன தாளை வழிபட அருளாயே - சந்திரனைத் தலைமேல் அணிந்தவனே, உன்னுடைய திருவடிகளை வழிபட அருள்வாயாக; (குஞ்சி - தலைமயிர். தலைக்கு ஆகுபெயர்); ("மதி புனை குஞ்சி ஆய் - அறிவை அணியும் தலை ஆகி" என்று கொண்டு, "நான் அறிவு தெளிந்து" என்றும் கொள்ளலாம்); (உன - உனது; - ஆறாம் வேற்றுமை உருபு);

மன்று போல் இடுகானில் இருளது துன்று வேளையில் ஆடு கழலின - கூத்தாடும் அரங்காகச் சுடுகாட்டில் இருள் செறிந்த வேளையில் கூத்தாடும் திருப்பாதனே; (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);

வன்-கை-யானையின் ஈர-உரி புனை திருமார்பா - வலிய தும்பிக்கையுடைய யானையின் ஈரத்தோலைப் போர்வையாகத் திருமார்பில் அணிந்தவனே; (உரி - தோல்);

வம்பு உலாவிய வாளி தொடு மதன் வந்து போர்புரி நாளில் அவனது மைந்தது ஆர் உடல் நீறு-பட முனி தவயோகீ - வாசனை கமழும் அம்புகளை ஏவும் மன்மதன் வந்து போர்செய்த தினத்தில் அவனது அழகிய உடல் சாம்பலாகும்படி கோபித்த தவயோகியே; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு); (மதன் - காமன்); (மைந்து - அழகு; அது - பகுதிப்பொருள்விகுதி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (முனிதல் - கோபித்தல்);

உன்றன் மேனியில் நூலை நிகர் இடை மங்கை பாகமது ஆன அழகின - உன் திருமேனியில் நூல் போன்ற சிற்றிடையுடைய உமாதேவி ஒரு பாகம் ஆன அழகனே;

உந்தி சூழ்தரும் ஆடை என அதள் உடையானே - அரையில் சூழும் ஆடையாகத் தோலைக் கட்டியவனே; (உந்தி - வயிறு); (தருதல் - ஒரு துணைவினை); (அதள் - தோல்);

உம்பர் தானவர் வேலை கடை-தினம் வந்த கார் மலி ஆலம் அமுது-என உண்டு மாமணி போல அணி திரு மிடறானே - தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த அன்று பொங்கிய கருமை மிகுந்த ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அழகிய மணி போலக் கண்டத்தில் அணிந்தவனே; (உம்பர் - தேவர்); (தானவர் - அசுரர்); (வேலை - கடல்); (கார் - கருமை); (மிடறு - கண்டம்);

அன்று தாள் அடை மாணி நிலைபெற, அன்பு இலா மனாரை விழ உதை அங்கணா - முன்பு உன் திருவடியில் சரண்புகுந்த மார்க்கண்டேயர் என்றும் இறவாமல் வாழ, (அவரைக் கொல்ல வந்த) அன்பு இல்லாத கொடிய காலனை விழுந்து இறக்கும்படி உதைத்த அருட்கண்ணனே; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (நிலைபெறுதல் - நிலைத்தல்; துன்பமற்றநிலை அடைதல்); (நமனார் - நமன் - இயமன்); (அங்கணன் - அருட்கண்ணன்);

அழியாத புகழுடை முதலோனே - என்றும் திகழும் புகழை உடைய ஆதிமூர்த்தியே;

நின்றன் ஏர் மலி பாதம் நினைபவர் நெஞ்சமே தளியாக மகிழ் பவ - உனது அழகிய திருவடியை நினைத்தவர் நெஞ்சத்தையே கோயிலாக மகிழும் பவனே; (ஏர் - அழகு); (தளி - கோயில்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்); (* பூசலார் நாயனாரைக் குறிப்பால் உணர்த்தியது என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.40.8 - "தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே");

நின்றவூர் இடமாக இனிது உறை பெருமானே - திருநின்றவூர் கோயிலாகக்கொண்டு இனிது உறைகின்ற பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 2.24.9 - "நாகேச்சுர நகரே இடமா உறைவாய் என இன்புறுமே");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment