Showing posts with label தானத்தத் தான தானன x3 தந்ததான. Show all posts
Showing posts with label தானத்தத் தான தானன x3 தந்ததான. Show all posts

Friday, April 22, 2022

T.124 - ஆலவாய் (மதுரை) - தேவைக்குக் காசு

2010-05-23

T.124 - ஆலவாய் (மதுரை) - தேவைக்குக் காசு

-----------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்ததான

(வாசித்துக் காணொ ணாதது - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


தேவைக்குக் காசு சேயிழை .. சேவைக்குப் போது போய்மிகு

.. .. சீலர்க்குத் தூர னாயிழி .. சிந்தையாலே

.. தீதிற்புக் காயுள் ஓடிடும் .. ஈனத்தைத் தீர நீடிய

.. .. சேமத்தைச் சேர நாடொறும் .. அன்பினாலே

நாவிற்குப் பூண தாமுன .. நாமத்தைக் கூறி வாழுயர்

.. .. ஞானத்தைத் தாநி லாமதி .. இண்டைசூடீ

.. நால்வர்க்குக் கேடி லாமறை .. போதித்துத் தார தாவிள

.. .. நாகத்தைப் பூணு(ம்) மார்பின .. இந்திராதி

தேவர்க்குத் தேவ னேதொழு .. சேடர்க்குத் தாய னாய்வினை

.. .. தேய்வித்துப் பேறும் ஈபவ .. ஒன்றிலாத

.. தீனர்க்குத் தானம் ஈபவர் .. வாழ்தற்குப் பார லாதொரு

.. .. சேணிற்புத் தேளின் வானைவ .. ழங்குமீசா

பாவைக்குக் கூற தீபவ .. பாணர்க்குப் பாடல் ஈபவ

.. .. பாதத்தைக் காலன் மார்பினில் .. அன்றுவீசிப்

.. பாலற்குக் காவல் ஈபவ .. பாடிப்பொற் பாதம் ஓதினர்

.. .. பாலித்தற் கால வாயமர் .. எம்பிரானே.


பதம் பிரித்து:

தேவைக்குக் காசு சேயிழை .. சேவைக்குப் போது போய், மிகு

.. .. சீலர்க்குத் தூரனாய், இழி சிந்தையாலே

.. தீதிற்-புக்கு ஆயுள் ஓடிடும் .. ஈனத்தைத் தீர, நீடிய

.. .. சேமத்தைச் சேர, நாள்தொறும் அன்பினாலே

நாவிற்குப் பூணதாம் உன .. நாமத்தைக் கூறி வாழ் உயர்

.. .. ஞானத்தைத் தா, நிலாமதி இண்டைசூடீ;

.. நால்வர்க்குக் கேடிலா மறை .. போதித்துத், தாரதா இள

.. .. நாகத்தைப் பூணு(ம்) மார்பின; .. இந்திராதி

தேவர்க்குத் தேவனே; தொழு .. சேடர்க்குத் தாய் அனாய்; வினை

.. .. தேய்வித்துப் பேறும் ஈபவ; ஒன்றிலாத

.. தீனர்க்குத் தானம் ஈபவர் .. வாழ்தற்குப் பார் அலாது ஒரு,

.. .. சேணிற் புத்தேளின் வானை வழங்கும் ஈசா;

பாவைக்குக் கூறது ஈபவ; .. பாணர்க்குப் பாடல் ஈபவ;

.. .. பாதத்தைக் காலன் மார்பினில் அன்று வீசிப்,

.. பாலற்குக் காவல் ஈபவ; .. பாடிப் பொற்பாதம் ஓதினர்

.. .. பாலித்தற்கு ஆலவாய் அமர் எம்பிரானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

தேவைக்குக் காசு, சேயிழை சேவைக்குப் போது போய் - ஈட்டிய காசைத் தேவை என்று எண்ணிய ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், நேரத்தையெல்லாம் பெண்கள் சேவைக்கும் செலவழித்து; (சேயிழை - பெண்);

மிகு சீலர்க்குத் தூரனாய் - சீலம் மிக்கவர்களோடு நட்பின்றி விலகியிருந்து;

இழி சிந்தையாலே தீதில் புக்கு ஆயுள் ஓடிடும் ஈனத்தைத் தீர - இழிந்த மனத்தால் தீயவற்றையே நாடி, வாழ்நாள் கழிகின்ற இந்த இழிவு தீருமாறு; (ஈனம் - இழிவு);

நீடிய சேமத்தைச் சேர - நிலைத்த க்ஷேமத்தைப் பெற;

நாள்தொறும் அன்பினாலே நாவிற்குப் பூணதாம் உன நாமத்தைக் கூறி வாழ் உயர் ஞானத்தைத் தா, நிலாமதி இண்டைசூடீ - தினமும் அன்போடு நாவிற்கு அணிகலன் ஆகும் உனது திருநாமத்தைச் சொல்லி வாழ்கின்ற உயர்ந்த ஞானத்தை அருள்க, நிலா வீசுகின்ற சந்திரனை இண்டைபோலச் சடையில் அணிந்தவனே; (பூண் - ஆபரணம்); (உன - உன்+அ - உன்னுடைய); (நிலா - சந்திரிகை; சந்திரனின் கிரணம்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (அப்பர் தேவாரம் - 4.11.2 - "நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே");


நால்வர்க்குக் கேடிலா மறை போதித்துத் - சனகாதியர் நால்வருக்கு அழியாத வேதங்களை உபதேசித்து;

தாரதா இளநாகத்தைப் பூணு(ம்) மார்பின - மாலையாக இளம்பாம்பை மார்பில் அணிந்தவனே; (தாரதா - தார்அது ஆக; தார் - மாலை);

இந்திராதி தேவர்க்குத் தேவனே - இந்திரன் முதலாய தேவர்களுக்கெல்லாம் தேவனே;

தொழு சேடர்க்குத் தாய் அனாய்; வினை தேய்வித்துப் பேறும் ஈபவ - தொழும் சேடர்களுக்கு (பெரியோர்களுக்கு) தாய் ஒத்தவனே; அவர்களது வினையை அழித்துப் பேறு அளிப்பவனே; (சேடர் - பெரியோர்); (அனாய் - அன்னாய் - அன்னவனே); (தேய்வித்தல் - தேயச்செய்தல்; தேய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 6.52.7 - "விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித்தான் காண்");

ஒன்றிலாத தீனர்க்குத் தானம் ஈபவர் வாழ்தற்குப் பார் அலாது ஒரு, சேணில் புத்தேளின் வானை வழங்கும் ஈசா - ஒன்றும் இல்லாத வறியோர்க்குத் தானம் செய்பவர்கள் வாழ இம்மண்ணுலகம் அல்லாமல் ஒப்பற்ற, தேவர்களுக்கும் மேலான, சிவலோகத்தை அருளும் ஈசனே; (ஒன்று இலாத - ஒன்றும் இல்லாத; உம் தொக்கது); (தீனன் - வறியவன்); (ஒரு - ஒப்பற்ற); (சேண் - ஆகாயம்); (புத்தேள் - தேவர்); (புத்தேளின் வான் - தேவர்களுக்கும் மேலான இடம்; தேவலோகத்தினும் உயர்ந்த இடமான சிவலோகம்); (அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்"); (சம்பந்தர் தேவாரம் - 2.60.11 - "ஊனம் இலராய் உம்பர் வானத்துறைவாரே" - உம்பர் வானத்து - வானோர்க்குயர்ந்த உலகத்தில்); (அப்பர் தேவாரம் - 5.88.10 - "பெருமான்திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே");


பாவைக்குக் கூறது ஈபவ - உமைக்குத் திருமேனியில் பாகம் அளித்தவனே;

பாணர்க்குப் பாடல் ஈபவ - பாணபத்திரருக்குப் பாடலை அளித்தவனே; (பாணபத்திரருக்குத் திருமுகப்-பாசுர ஓலை கொடுத்தருளிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க; திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்); (பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 12.37.28 - "மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகங் கொடுத்தார் காண");

பாதத்தைக் காலன் மார்பினில் அன்று வீசிப், பாலற்குக் காவல் ஈபவ - திருவடியால் காலனை மார்பில் உதைத்து, மார்க்கண்டேயருக்குக் காவல் அருளியவனே; (பாலற்கு - பாலன்+கு - பாலனுக்கு);

பாடிப் பொற்பாதம் ஓதினர் பாலித்தற்கு ஆலவாய் அமர் எம்பிரானே - பாடிப் பொன்னடியைத் துதித்தவர்களைக் காக்கத் திருஆலவாயில் எழுந்தருளிய எம்பெருமானே; (பாடிப் பொற்பாதம் ஓதினர் - "பொற்பாதம் பாடி ஓதினர்"; பாடி & ஓதி - ஒருபொருட்பன்மொழி - பன்முறை தொடர்ந்து செய்தல் கருதி வந்தது); (பாலித்தல் - காத்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Thursday, April 21, 2022

T.123 - பொது - தேகத்தைப் பேண

2010-05-17

T.123 - பொது - தேகத்தைப் பேண

-----------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன .. தந்ததான

(வாசித்துக் காணொ ணாதது - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


தேகத்தைப் பேண மாநிதி .. தேடற்குப் பாவை மாரொடு

.. .. சேரற்குப் பேர வாவெழு .. நெஞ்சினாலே

.. சீர்கெட்டுப் பூமி மேல்மிகு .. தீதுற்றுக் கால னார்தமர்

.. .. சேர்வுற்றுச் சூழ ஆவியு(ம்) .. மங்கிடாமுன்

சோகத்துக் கேது வாம்வினை .. தூரத்துப் போக மாமலர்

.. .. தூவிப்பொற் பாத மேதொழும் .. அன்புதாராய்

.. சூரர்க்குக் கால னாகிய .. பாலற்குத் தாதை யேபொடி

.. .. தோளெட்டிற் பூசி னாயனல் .. அங்கையானே

வேகத்திற் கீடி லாவிடை .. மேலுற்றுப் பாரெ லாமுழல்

.. .. மேகத்தைப் போல வேயொளிர் .. கண்டதேவா

.. வேதத்தைப் பாடு நாவின .. வாதிட்டுத் தேடு மாலொடு

.. .. வேதற்குக் காணொ ணாவண(ம்) .. நின்றநாதா

ஆகத்திற் கூறு மாதுமை .. ஆடைக்குத் தோலு(ம்) மாநடம்

.. .. ஆடற்குக் காடு(ம்) நாடிய .. பண்பினானே

.. ஆலித்துப் பாயும் ஓர்புனல் .. வேணிப்புக் கார மாசுண

.. .. ஆரத்தைப் பூணு(ம்) மார்புடை .. எம்பிரானே.


பதம் பிரித்து:

தேகத்தைப் பேண, மா-நிதி .. தேடற்குப், பாவைமாரொடு

.. .. சேரற்குப், பேரவா எழு நெஞ்சினாலே

.. சீர்கெட்டுப், பூமிமேல் மிகு .. தீது உற்றுக், காலனார் தமர்

.. .. சேர்வுற்றுச் சூழ ஆவியு(ம்) மங்கிடாமுன்,

சோகத்துக்கு ஏதுவாம் வினை .. தூரத்துப் போக, மா-மலர்

.. .. தூவிப் பொற்பாதமே தொழும் அன்பு தாராய்;

.. சூரர்க்குக் காலனாகிய .. பாலற்குத் தாதையே; பொடி

.. .. தோள் எட்டிற் பூசினாய்; அனல் அங்கையானே ;

வேகத்திற்கு ஈடு இலா விடை .. மேல் உற்றுப் பாரெலாம் உழல்,

.. .. மேகத்தைப் போலவே ஒளிர் கண்ட; தேவா;

.. வேதத்தைப் பாடு நாவின; .. வாதிட்டுத் தேடு மாலொடு

.. .. வேதற்குக் காணொணா-வண(ம்) நின்ற நாதா;

ஆகத்திற் கூறு மாதுமை, .. ஆடைக்குத் தோலு(ம்), மா-நடம்

.. .. ஆடற்குக் காடு(ம்) நாடிய பண்பினானே;

.. ஆலித்துப் பாயும் ஓர் புனல் .. வேணிப் புக்கு ஆர, மாசுண

.. .. ஆரத்தைப் பூணு(ம்) மார்புடை எம்பிரானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

தேகத்தைப் பேண, மா-நிதி தேடற்குப், பாவைமாரொடு சேரற்குப், பேர்-அவா எழு நெஞ்சினாலே - இந்த உடம்பை வளர்ப்பதற்கும், பெரும்பொருளைச் சம்பாதிப்பதற்கும், பெண்களோடு சேர்வதற்கும் மிகுந்த ஆசை எழும் மனத்தினால்; (அவா - ஆசை);

சீர்கெட்டுப், பூமிமேல் மிகு தீது உற்றுக், காலனார் தமர் சேர்வுற்றுச் சூழ, ஆவியு(ம்) மங்கிடாமுன் - நிலைகெட்டுப், பூமியில் மிகுந்த துன்பம் அடைந்து, யமதூதர்கள் வந்தடைந்து சூழ, உயிர் அழிவதன் முன்னமே; (தீது - தீமை; துன்பம்); (தமர் - பரிசனங்கள்)

சோகத்துக்கு ஏதுவாம் வினை தூரத்துப் போக, மா-மலர் தூவிப் பொற்பாதமே தொழும் அன்பு தாராய் - துக்கத்துக்குக் காரணமான வினையெல்லாம் நீங்கிப்போகும்படி, நல்ல பூக்களைத் தூவிப் பொன்னடியையே வழிபடும் பக்தியை அருள்வாயாக; (சோகம் - துக்கம்); (ஏது - ஹேது - காரணம்);

சூரர்க்குக் காலனாகிய பாலற்குத் தாதையே - சூரபதுமனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் காலன் ஆன மகனுக்கு (முருகனுக்கு) அப்பனே; (பாலற்கு - பாலன்+கு - பாலனுக்கு); (பாலன் - மகன்);

பொடி தோள்-எட்டில் பூசினாய் - எட்டுப்-புஜங்களில் திருநீற்றைப் பூசியவனே;

அனல் அங்கையானே - கையில் தீயை ஏந்தியவனே;

வேகத்திற்கு ஈடு இலா விடைமேல் உற்றுப் பாரெலாம் உழல், மேகத்தைப் போலவே ஒளிர் கண்ட - மிகவும் விரைந்து செல்லக்கூடிய இடபவாகனத்தின்மேல் எல்லா உலகங்களிலும் திரிகின்ற, மேகம் போலக் கரிய நிறங்கொண்டு ஒளிவீசுகின்ற கண்டத்தை உடையவனே; (உழல்தல் - திரிதல்); (கண்ட - கண்டனே);

தேவா - தேவனே;

வேதத்தைப் பாடு நாவின - வேதத்தைப் பாடியருளியவனே;

வாதிட்டுத் தேடு மாலொடு வேதற்குக் காணொணா-வண(ம்) நின்ற நாதா - தம்மில் எவர் பெரியவர் என்று வாது செய்து தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாதபடி அளவின்றி நீண்டு நின்ற சோதி ஆன தலைவனே; (வேதற்கு - வேதன்+கு - வேதனுக்கு; வேதன் - பிரமன்); (காணொணா - காண ஒண்ணா; தொகுத்தல் விகாரம்);

ஆகத்தில் கூறு மாதுமை, ஆடைக்குத் தோலு(ம்), மா-நடம் ஆடற்குக் காடு(ம்) நாடிய பண்பினானே - திருமேனியில் உமைமங்கை பாகமும், ஆடைக்குத் தோலையும், பெருங்கூத்து ஆடச் சுடுகாட்டையும் விரும்பியவனே; (ஆகம் - மேனி); (மாது - பெண்); (நாடுதல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.83.6 - "விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்");

ஆலித்துப் பாயும் ஓர் புனல் வேணிப் புக்கு ஆர, மாசுண-ஆரத்தைப் பூணு(ம்) மார்புடை எம்பிரானே - ஒலித்துப் பாயும் கங்கை சடையில் புகுந்து தங்கப், பாம்பை மாலையாக அணிந்த மார்பை உடைய எம்பெருமானே; (ஆலித்தல் - ஒலித்தல்); (வேணி - சடை); (ஆர்தல் - பொருந்துதல்; தங்குதல்); (மாசுணம் - பாம்பு); (ஆரம் - மாலை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------