2020-09-07
P.520 - பேரளம்
-----------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
வீழ்புனல் தேக்கிய வேணி வெண்மதி
வாழ்பதி செய்திட வல்ல ஈசனைச்
சூழ்பொழிற் பேரளச் சுயம்பு நாதனைத்
தாழ்பவர் தம்வினை சாய்தல் திண்ணமே.
வீழ்-புனல் தேக்கிய வேணி - வானிலிருந்து இழிந்த கங்கையை அடைத்த சடையை; (வேணி - சடை);
வெண்மதி வாழ் பதி செய்திட வல்ல ஈசனைச் - வெண்திங்கள் வாழும் இடம் ஆக்க வல்ல ஈசனை; (பதி - உறைவிடம்; ஊர்);
சூழ்-பொழிற் பேரளச் சுயம்புநாதனைத் - சோலை சூழ்ந்த பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை; (* சுயம்புநாதன் - பேரளத்தில் இறைவன் திருநாமம்);
தாழ்பவர்தம் வினை சாய்தல் திண்ணமே - வணங்கும் பக்தர்களது வினை அழிதல் நிச்சயம்;
2)
பாலனார் அஞ்சிடப் பாசம் வீசிய
காலனார் தமையுதை கருணை வாரியைச்
சோலையார் பேரளச் சுயம்பு நாதனை
ஆலமார் கண்டனை அடைதி நெஞ்சமே.
பாலனார் அஞ்சிடப் பாசம் வீசிய காலனார்தமை உதை கருணை வாரியைச் - மார்க்கண்டேயர் அஞ்சும்படி பாசத்தை வீசிய காலனை உதைத்த கருணைக்கடலை; (வாரி - கடல்);
சோலை ஆர் பேரளச் சுயம்புநாதனை - சோலை நிறைந்த பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
ஆலம் ஆர் கண்டனை அடைதி நெஞ்சமே - ஆலகாலத்தை உண்டு அணிந்த நீலகண்டனை நெஞ்சே அடைவாயாக; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்); (அடைதி - சரண்புகுவாய்; அடைவாய்); (சுந்தரர் தேவாரம் - 7.54.8 - "வாடி நீயிருந்து என் செய்தி மனமே"); (இலக்கணக் குறிப்பு - "இ" - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி; நடத்தி - என்பது நடப்பாய் என்று பொருள்படும்; செய்தி - செய்வாய்; நினைதி - நினைப்பாய்; எண்ணுதி - எண்ணுவாய்);
3)
நன்மையார் திருப்பெயர் நாளும் எண்ணிடும்
தன்மையார்க் கன்பனைச் சாம வேதனைத்
தொன்மையார் பேரளச் சுயம்பு நாதனைப்
புன்மைதீர் போதனைப் போற்று நெஞ்சமே.
நன்மை ஆர் திருப்பெயர் நாளும் எண்ணிடும் தன்மையார்க்கு அன்பனைச் - நன்மை மிக்க திருநாமத்தைத் தினமும் தியானிக்கும் அன்பர்களுக்கு அன்பனை;
சாமவேதனைத் - சாமவேதத்தில் விருப்பமுடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 3.56.2 - "சடையினன் சாமவேதன்");
தொன்மை ஆர் பேரளச் சுயம்புநாதனைப் - பழமை மிக்க பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
புன்மை தீர் போதனைப் - சிறுமைகளைத் தீர்க்கும் ஞானவடிவினனை;
போற்று நெஞ்சமே - நெஞ்சே போற்றுவாயாக;
(* பேரளத் தலக்குறிப்பு நூலில் கூறப்படும் தலவரலாற்றுச் செய்தி: கார்ஷணாஜினி என்ற முனிவர் ஈசனது எல்லா நாமங்களையும் சொல்லி வழிபட எண்ணி இத்தலத்தில் தவம்செய்தார். ஈசன் அவ்வண்ணமே அருள்செய்தான். அதன் காரணமாகப், "பெயர்களுக்கு இருப்பிடம்" என்ற தலப்பெயர். (பேரளம் = பேர் + அளம்));
4)
இணையடி பணிசுரர்க் கிரங்கி வெந்நுனைக்
கணைதொடு வீரனைக் கம்பம் தீர்த்தருள்
துணைவனைப் பேரளச் சுயம்பு நாதனைப்
பிணைமலர் கொடுதொழப் பெருகும் இன்பமே.
இணையடி பணி சுரர்க்கு இரங்கி வெந்-நுனைக் கணை தொடு வீரனைக் - இருதிருவடிகளைப் பணிந்த தேவர்களுக்கு இரங்கி, (முப்புரங்களை எரிக்க) நுனியில் தீயை உடைய கணையை எய்த வீரனை; (வெம்மை - சூடு); (நுனை - முனை; நுனி);
கம்பம் தீர்த்தருள் துணைவனைப் - நடுக்கத்தைத் தீர்த்து அருளும் துணைவனை; (கம்பம் - நடுக்கம் - அச்சம்);
பேரளச் சுயம்புநாதனைப் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
பிணைமலர்கொடு தொழப் பெருகும் இன்பமே - தொடுத்த மலரால் தொழுதால் இன்பம் பெருகும்;
5)
குழையணி காதனைக் கோதில் சீருடைப்
பழையனைப் பணிந்தவர் பாவம் தீர்த்திடும்
தொழிலனைப் பேரளச் சுயம்பு நாதனை
அழலினை ஏந்தியை அடைதி நெஞ்சமே.
குழை அணி காதனைக் - காதில் குழையை அணிந்தவனை;
கோது-இல் சீருடைப் பழையனைப் - குற்றமற்ற புகழை உடைய தொன்மையானவனை;
பணிந்தவர் பாவம் தீர்த்திடும் தொழிலனைப் - வணங்கியவர்களது பாவத்தைத் தீர்க்கும் தொழிலை உடையவனை; (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே");
பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
அழலினை ஏந்தியை - கையில் நெருப்பை ஏந்தியவனை;
அடைதி நெஞ்சமே - நெஞ்சே, அடைவாயாக;
6)
திவாகரர் கோடியிற் றேசன் தாள்தொழு(து)
அவாவினை அறுத்தவர்க்(கு) அபயம் நல்கிடும்
சுவாமியைப் பேரளச் சுயம்பு நாதனைப்
பவானிதன் கொழுநனைப் பரவி வாழ்மினே.
திவாகரர் கோடியின் தேசன் தாள் தொழுது - கோடி சூரியரினும் ஒளி மிக்கவனது திருவடியைத் தொழுது; (திவாகரன் - சூரியன்); (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு); (தேசன் - ஒளிவடிவினன்); (கோடியிற்றேசன் = கோடியின் தேசன் - கோடியைவிட ஒளியுடையவன்);
அவாவினை அறுத்தவர்க்கு அபயம் நல்கிடும் சுவாமியைப் - தங்கள் ஆசைகளைத் துறந்தவர்களுக்கு (பற்றுகளை அறுத்தவர்களுக்கு) அபயம் அருளும் சுவாமியை; (அவா - ஆசை);
பேரளச் சுயம்புநாதனைப் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
பவானிதன் கொழுநனைப் - பவானி என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனை; (* பவானி - இத்தலத்து இறைவி திருநாமம்);
பரவி வாழ்மினே - துதித்து உய்யுங்கள்; (மின் - முன்னிலைப் பன்மை ஏவல் விகுதி);
7)
வண்டமர் கணைதொடு மதனை நீறுசெய்
அண்டனை ஆதியை அரனை வெண்டிங்கள்
துண்டணி பேரளச் சுயம்பு நாதனைத்
தெண்டிரைச் சடையனைச் சிந்தி நெஞ்சமே.
வண்டு அமர் கணைதொடு மதனை நீறுசெய் அண்டனை - வண்டுகள் விரும்பும் மலர்க்கணையை ஏவிய மன்மதனைச் சாம்பலாக்கிய கடவுளை; (அண்டன் - எல்லா அண்டங்களுக்கும் தலைவன்);
ஆதியை - முதல்வனை;
அரனை - ஹரனை;
வெண்திங்கள்-துண்டு அணி - திருமுடிமேல் வெண்பிறையை அணிந்த; (திங்கட்டுண்டு - திங்கள்+துண்டு);
பேரளச் சுயம்புநாதனைத் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
தெண்திரைச் சடையனைச் சிந்தி நெஞ்சமே - தெளிந்த அலைகளையுடைய கங்கையைச் சடையில் உடையவனை, நெஞ்சே, சிந்திப்பாயாக;
8)
கத்திட அரக்கனைக் கயிலைக் கீழ்முடி
பத்தடர் பரமனைப் பால்வெண் ணீறணி
சுத்தனைப் பேரளச் சுயம்பு நாதனை
நித்தனை நாள்தொறும் நினைதி நெஞ்சமே.
கத்திட அரக்கனைக் கயிலைக்கீழ் முடி பத்து அடர் பரமனைப் - ஓலமிட்டு அழும்படி இராவணனைக் கயிலைமலையின்கீழ் அவனது பத்து-முடிகளையும் நசுக்கிய பரமனை; (அடர்த்தல் - நசுக்குதல்);
பால்-வெண்ணீறு அணி சுத்தனைப் - பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய தூயனை;
பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
நித்தனை - அழிவற்றவனை; (நித்தன் - நித்தியன் - என்றும் உள்ளவன்);
நாள்தொறும் நினைதி நெஞ்சமே - நெஞ்சே நீ தினந்தோறும் நினைவாயாக;
9)
தேன்றிகழ் மலரணி தேவ தேவனைக்
கோன்றனை அரியயன் குறுகொ ணாதுயர்
தோன்றலைப் பேரளச் சுயம்பு நாதனை
மான்றனை ஏந்தியை வாழ்த்தி வாழ்மினே.
தேன் திகழ் மலர் அணி தேவதேவனைக் - தேன் திகழும் மலர்களை அணிந்த தேவதேவனை; (தேன்றிகழ் = தேன்+திகழ்);
கோன்-தனை - தலைவனை;
அரி அயன் குறுகொணாது உயர் தோன்றலைப் - திருமால் பிரமன் இவர்களால் அடைய இயலாதபடி எல்லையின்றி நீண்ட தலைவனை; (குறுகொணாது - குறுக ஒணாது - ஈற்றகரம் தொக்கது); (குறுகுதல் - அணுகுதல்); (ஒண்ணுதல் - இயலுதல்); (தோன்றல் - தலைவன்);
பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
மான்-தனை ஏந்தியை வாழ்த்தி வாழ்மினே - கையில் மானை ஏந்திய பெருமானை வாழ்த்தி உய்யுங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);
10)
குறையறி வுடையவர் குற்றக் கொள்கையர்
அறைவன பொருளல அரனை ஆவடு
துறையனைச் பேரளச் சுயம்பு நாதனைப்
பிறையணி இறைவனைப் பேணி உய்ம்மினே.
குறையறிவு உடையவர் குற்றக்-கொள்கையர் அறைவன பொருள் அல - தெளிந்த அறிவு இல்லாதவர்களும் குற்றமுடைய கொள்கைகளை உடையவர்களும் சொல்லும் பொய்ம்மொழிகள் பொருளற்றவை; (அறைதல் - சொல்லுதல்);
அரனை - ஹரனை;
ஆவடுதுறையனைச் - திருவாவடுதுறையில் உறைபவனை;
பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
பிறை அணி இறைவனைப் பேணி உய்ம்மினே - பிறையை அணிந்த இறைவனைப் போற்றி உய்யுங்கள்;
11)
சாலநைந் திமையவர் சங்க ராவென
வேலனைப் பயந்தருள் விமல னைப்புலித்
தோலனைப் பேரளச் சுயம்பு நாதனைச்
சூலனைத் துதிசெயத் துன்பம் நீங்குமே.
சால நைந்து இமையவர் "சங்கரா" என - (சூரபத்மனின் துன்புறுத்தலால்) மிகவும் வாடி வருந்திய தேவர்கள், "சங்கரனே! அருளாய்" என்று இறைஞ்ச; (நைதல் - வாடுதல்; மனம் வருந்துதல்);
வேலனைப் பயந்து-அருள் விமலனைப் - அவர்களுக்கு இரங்கி, வேலை ஏந்தும் முருகனைப் பெற்றருளிய தூயனை; (பயத்தல் - மகப் பெறுதல்);
புலித்தோலனைப் - புலித்தோலை ஆடையாகக் கட்டியவனை;
பேரளச் சுயம்புநாதனைச் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;
சூலனைத் துதிசெயத் துன்பம் நீங்குமே - சூலபாணியைத் துதித்தால் நம் துன்பம் தீரும்;
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment