Tuesday, October 20, 2026

P.523 - பறியலூர் - கம்பமத களிறுதனைக்

2020-09-19

P.523 - பறியலூர் (பரசலூர்)

-----------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னை")


1)

கம்பமத களிறுதனைக் கதறவுரி செய்தபிரான்

செம்பவள மேனியினான் சேவமரும் பரமனிளம்

கொம்பனையாள் கூறுமகிழ் கோமான் உறையுமிடம்

பைம்புனலார் வாவிதிகழ் பறியல்வீ ரட்டமே.


கம்ப-மத-களிறுதனைக் கதற உரிசெய்த பிரான் - அசையும் இயல்புடைய மதயானையை அது பிளிறும்படி தோலுரித்த பெருமான்; (கம்பம் - அசைவு);

செம்பவள மேனியினான் - செம்பவளம் போல் செம்மேனி உடையவன்;

சே அமரும் பரமன் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் பரமன்; (சே - எருது);

இளங்கொம்பு அனையாள் கூறு மகிழ் கோமான் உறையும் இடம் - இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையை ஒரு கூறாக விரும்பிய தலைவன்; (கோமான் - அரசன்; பெருமையிற் சிறந்தோன்); (* இளங்கொம்பனையாள் - இத்தலத்து இறைவி திருநாமம்);

பைம்புனல் ஆர் வாவி திகழ் பறியல் வீரட்டமே - அழகிய நீர் நிறைந்த குளம் திகழும் திருப்பறியலூர் வீரட்டம்; (வாவி - நீர்நிலை);


2)

கசியுமனத் தினராகிக் கைதொழுதார் வினையெல்லாம்

நசியவருள் நம்பெருமான் நரைவெள்ளே றொன்றுடையான்

சசியதனைச் சடைமீது தாங்கியவன் தங்குமிடம்

பசியவயல் புடைசூழ்ந்த பறியல்வீ ரட்டமே.


கசியும் மனத்தினர் ஆகிக் கைதொழுதார் வினையெல்லாம் நசிய அருள் நம் பெருமான் - மனம் கசிந்து கைகூப்பி வணங்கும் பக்தர்களது வினைகளெல்லாம் அழியும்படி அருளும் நம் பெருமான்;

நரை-வெள்-ஏறு ஒன்று உடையான் - ஒரு வெள்ளை எருதை ஊர்தியாக உடையவன்;

சசிஅதனைச் சடைமீது தாங்கியவன் தங்கும் இடம் - சந்திரனைச் சடையின்மேல் அணிந்தவன் உறையும் இடம்; (சசி - சந்திரன்);

பசிய வயல் புடை சூழ்ந்த பறியல் வீரட்டமே - பசுமை திகழும் வயல்கள் சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்;


3)

கறவையினம் தருபாலால் கழல்தொழுத சண்டிக்கு

நறைமலரார் நற்றாமம் நல்கியருள் செய்தாதை

அறைகடலின் நஞ்சுதனை ஆர்கண்டன் அமருமிடம்

பறவையினம் ஆர்சோலைப் பறியல்வீ ரட்டமே.


கறவையினம் தரு பாலால் கழல் தொழுத சண்டிக்கு நறைமலர் ஆர் நல்-தாமம் நல்கி அருள்செய் தாதை - பாற்பசுக்-கூட்டங்கள் தந்த பாலால் திருவடியை வழிபட்ட சண்டீசருக்கு வாசமலர்கள் பொருந்திய மாலையைச் சூட்டி அருள்செய்த தந்தை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (சண்டீசர் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க); (பெரியபுராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.56 - "சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்றங்கு அவர் பொற்றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்");

அறைகடலின் நஞ்சுதனை ஆர் கண்டன் அமரும் இடம் - ஒலிக்கும் கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு அணிந்த நீலகண்டன் விரும்பி உறையும் தலம்; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

பறவையினம் ஆர் சோலைப் பறியல் வீரட்டமே - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


4)

உண்மிகுத்த அன்பால்சீர் ஓதியவர் வினைதீர்ப்பான்

தண்மிகுத்த கங்கைதனைச் சடைக்கரந்தான் சாருமிடம்

கண்மிகுத்த மலர்மலிந்த கவினாரும் சோலைதனில்

பண்மிழற்றி வண்டாரும் பறியல்வீ ரட்டமே.


முற்குறிப்பு: இலக்கணக் குறிப்பு: புணர்ச்சியில், ள்+ம = ண்ம என்று திரியும்.

உள் மிகுத்த அன்பால் சீர் ஓதியவர் வினை தீர்ப்பான் - அகத்தில் மிகுந்த அன்போடு புகழை ஓதி வணங்கும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவன்; (உள் - மனம்); (சம்பந்தர் தேவாரம் - 1.60.11 - "போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை");

தண் மிகுத்த கங்கைதனைச் சடைக் கரந்தான் சாரும் இடம் - குளிச்சி மிகுந்த கங்கையைச் சடையில் மறைத்தவன் உறையும் தலம்;

கள் மிகுத்த மலர் மலிந்த கவின் ஆரும் சோலைதனில் - மது மிகுந்த மலர்கள் நிறைந்த அழகிய சோலையில்;

பண் மிழற்றி வண்டு ஆரும் பறியல் வீரட்டமே - பண்கள் பாடி வண்டுகள் பொருந்தும் திருப்பறியலூர் வீரட்டம்; (மிழற்றுதல் - ஒலித்தல்); (ஆர்தல் - பொருந்துதல்); (அப்பர் தேவாரம் - 4.12.1 - "பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்");


5)

அஞ்செழுத்தை ஓதியவர் அருவினையைத் தீர்க்குமரன்

அஞ்சரத்து மன்மதனை அனங்கனென ஆக்கியவன்

குஞ்சரத்தின் உரிபோர்த்த குழகனிடம் வண்டினங்கள்

பஞ்சுரத்தைப் பாடுகின்ற பறியல்வீ ரட்டமே.


அஞ்செழுத்தை ஓதியவர் அருவினையைத் தீர்க்கும் அரன் - திருவைந்தெழுத்தைச் சொல்லி வழிபடும் பக்தர்களது கொடிய வினையையெல்லாம் தீர்க்கும் ஹரன்;

அஞ்-சரத்து மன்மதனை அனங்கன் என ஆக்கியவன் - அழகிய (/ ஐந்து) (மலர்) அம்புகளை ஏவும் மன்மதனை உடலற்றவன் என்று ஆக்கியவன்; (அம் - அழகு); (சரம் - அம்பு); (ஐஞ்சரம் - ஐந்து சரங்கள் - என்பது எதுகைநோக்கி, "அஞ்சரம்" என்று போலியாக வந்தது என்று கொண்டும் பொருள்கொள்ளளாம்); (அனங்கன் - உடல் அற்றவன் - காமன்); (சம்பந்தர் தேவாரம் - 1.89.6 - "நகுவெண்டலை யேந்தி நானாவிதம் பாடிப் புகுவான் அயம்பெய்யப்" - ஐயம் அயம் எனப் போலியாயிற்று).

குஞ்சரத்தின் உரி போர்த்த குழகன் இடம் - யானையின் தோலைப் போர்த்த அழகன் உறையும் தலம்; (குஞ்சரம் - யானை); (உரி - தோல்); (குழகன் - இளையோன்; அழகன்);

வண்டினங்கள் பஞ்சுரத்தைப் பாடுகின்ற பறியல் வீரட்டமே - வண்டுகள் பஞ்சுரம் என்ற பண்ணைப் பாடும் (சோலை சூழ்ந்த) திருப்பறியலூர் வீரட்டம்; (சம்பந்தர் தேவாரம் - 3.14.3 - "அஞ்சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி");


6)

ஓட்டினையோர் கையேந்தி உண்பலிதேர்ந் துழல்செல்வன்

காட்டினிலே முழவார்த்துக் கணஞ்சூழ ஆடுமிறை

நாட்டமணி நெற்றியுடை நாதனிடம் வண்டினங்கள்

பாட்டிசைக்கும் பொழில்சூழ்ந்த பறியல்வீ ரட்டமே.


ஓட்டினை ஓர் கை ஏந்தி உண்பலி தேர்ந்து உழல் செல்வன் - ஒரு கையில் கபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரியும் செல்வன்;

காட்டினிலே முழவு ஆர்த்துக் கணம் சூழ ஆடும் இறை - சுடுகாட்டில் முழவுகளை ஒலித்துப் பூதகணங்கள் சூழக் கூத்தாடும் இறைவன்;

நாட்டம் அணி நெற்றியுடை நாதன் இடம் - கண் திகழும் நெற்றியுடைய தலைவன் உறையும் தலம்; (நாட்டம் - கண்);

வண்டினங்கள் பாட்டு இசைக்கும் பொழில் சூழ்ந்த பறியல் வீரட்டமே - வண்டுகள் இசை பாடுகின்ற சோலை சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்;


7)

பிரியமிலாத் தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தபிரான்

வரியரவே நாணாக மலைவில்லால் மதிலெய்தான்

கரியகுழல் விற்புருவக் காதலியோர் பங்கனிடம்

பரிமளமார் பொழில்சூழ்ந்த பறியல்வீ ரட்டமே.


பிரியம் இலாத் தக்கன் செய் பெருவேள்வி தகர்த்த பிரான் - ஈசன்மேல் அன்பு இல்லாதவனான தக்கன் செய்த பெரிய வேள்வியை அழித்த பெருமான்;

வரி-அரவே நாணாக மலை-வில்லால் மதில் எய்தான் - வரிகளுடைய பாம்பையே மேருமலை என்ற வில்லில் நாணாகக் கட்டி முப்புரங்களை எய்து அழித்தவன்;

கரிய குழல் வில்-புருவக் காதலி ஓர் பங்கன் இடம் - கருங்கூந்தலும் வில் போன்ற புருவமும் உடைய உமையை ஒரு பங்கில் உடையவன் உறையும் தலம்;

பரிமளம் ஆர் பொழில் சூழ்ந்த பறியல் வீரட்டமே - நறுமணம் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்; (பரிமளம் - நறுமணம்);


8)

மயல்கொண்ட மனத்தினனாய் மலையெடுத்தான் அழநெரித்தார்

கயல்கொண்ட கண்ணுமையாள் காதலனார் கருதுமிடம்

புயல்வந்து தழுவுகின்ற பொழிலினிடைக் குயிலினங்கள்

பயில்கின்ற கவினாரும் பறியல்வீ ரட்டமே.


மயல் கொண்ட மனத்தினனாய் மலை எடுத்தான் அழ நெரித்தார் - அறியாமை உடைய மனத்தினன் ஆகிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி அவனை நசுக்கியவர்; (மயல் - மயக்கம்; அறியாமை);

கயல் கொண்ட கண்-உமையாள் காதலனார் கருதும் இடம் - கயல்மீன் போண்ற கண்ணையுடைய உமைக்குக் கணவர் விரும்பி உறையும் தலம்; (கொள்தல் - ஒத்தல்); (பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 12.274 - "வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா");

புயல் வந்து தழுவுகின்ற பொழிலினிடைக் குயிலினங்கள் பயில்கின்ற கவின் ஆரும் பறியல் வீரட்டமே - மேகம் வந்து பொருந்துகின்ற சோலையில் குயில்கள் ஒலிக்கின்ற அழகிய திருப்பறியலூர் வீரட்டம்; (புயல் - மேகம்); (பயில்தல் - ஒலித்தல்); (கவின் - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 1.136.1 - "எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே");


9)

செங்கமலத் தயனோடு திருமாலும் சேர்ந்துதொழ

அங்கியென ஓங்கியவன் ஆலநிழல் ஐயனிடம்

தெங்குவளர் பொழில்சூழச் செந்நெல்லார் செய்யருகே

பைங்குவளை மலர்கின்ற பறியல்வீ ரட்டமே.


செங்கமலத்து அயனோடு திருமாலும் சேர்ந்து தொழ அங்கி என ஓங்கியவன் - செந்தாமரைமேல் இருக்கும் பிரமனும் விஷ்ணுவும் கூடி வணங்கும்படி ஜோதியாகி எல்லையின்றி நீண்டவன்; (அங்கி - நெருப்பு);

ஆலநிழல் ஐயன் இடம் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியான பெருமான் உறையும் தலம்;

தெங்கு வளர் பொழில் சூழச் செந்நெல் ஆர் செய் அருகே மடைகளிலே பைங்குவளை மலர்கின்ற பறியல் வீரட்டமே - தென்னஞ்சோலை சூழச், சிறந்த நெல் விளையும் வயல்களின் அருகே அழகிய குவளைமலர்கள் மலர்கின்ற திருப்பறியலூர் வீரட்டம்; (சுந்தரர் தேவாரம் - 7.16.1 - "கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக் கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே");


10)

கோடுகின்ற மனக்கேடர் கூறுமொழி மதியாதீர்

ஆடுகின்ற அடிகளன்பர்க் கருளுடையான் அமருமிடம்

நாடுகின்ற மலர்களிலே நறையுண்டு சிறைவண்டு

பாடுகின்ற பொழில்சூழ்ந்த பறியல்வீ ரட்டமே.


கோடுகின்ற மனக்-கேடர் கூறு மொழி மதியாதீர் - மனக்கோட்டம் (வஞ்சனை) உடைய தீயோர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கோடுதல் - வளைதல்; நெறிதவறுதல்); (மனக்கோட்டம் - புத்தியின் கோணல்);

ஆடுகின்ற அடிகள் - கூத்தப்பெருமான்; (அடிகள் - சுவாமி; கடவுள்);

அன்பர்க்கு அருள் உடையான் அமரும் இடம் - பக்தர்களுக்கு அருள்புரியும் பெருமான் விரும்பி உறையும் தலம்;

நாடுகின்ற மலர்களிலே நறை உண்டு சிறைவண்டு பாடுகின்ற பொழில் சூழ்ந்த பறியல் வீரட்டமே - நாடி வந்த பூக்களில் தேனை உண்டு சிறகுகளையுடைய வண்டுகள் இசை பாடுகின்ற சோலை சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்; (நறை - தேன்); (சிறை - சிறகு);


11)

பச்சமணி நெஞ்சுடையார் பதிகங்கள் பலபாடி

நச்சுமணி கண்டத்தன் நாரியொரு கூறுமராக்

கச்சுமணி யாகவென்பும் காட்டுமிறை கருதுமிடம்

பச்சையணி பொழில்சூழ்ந்த பறியல்வீ ரட்டமே.


பச்சம் அணி நெஞ்சு உடையார் பதிகங்கள் பல பாடி நச்சும் மணிகண்டத்தன் - நெஞ்சில் அன்பு உடையவர்கள் பல பதிகங்கள் பாடி விரும்புகின்ற நீலமணிகண்டன்; (பச்சம் - பட்சம் - பக்ஷம் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.18.2 - "கொன்றை நயந்தாளும் பச்சம்முடை அடிகள்"); (நச்சுதல் - விரும்புதல்); (நச்சுமணி - விஷ மணி);

நாரி ஒரு கூறும், அராக்-கச்சும், அணியாக என்பும், காட்டும் இறை கருதும் இடம் - ஒரு கூறாக உமையையும், அரைக்கச்சாகப் பாம்பையும், ஆபரணமாக எலும்பையும் காட்டும் இறைவன் விரும்பி உறையும் தலம்; (நாரி - பெண்); (அரா - பாம்பு); (என்பு - எலும்பு);

பச்சை அணி பொழில் சூழ்ந்த பறியல் வீரட்டமே - பச்சைநிறம் திகழும் (செழுமை மிக்க) அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியலூர் வீரட்டம்; (அணிதல் - பூணுதல்); (அணி - ஆபரணம்; அழகு);


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment