2020-09-04
P.518 - நாரையூர்
-----------
(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன்")
(இதனை ஒத்த அமைப்பை வடமொழியில் ஸ்ரக்விணீ (स्रग्विणी - sragviNI) என்று அழைப்பர். அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பே - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
குறிப்பு: இப்பதிகத்தில் சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று விரித்தல் விகாரம், விட்டிசைத்தல் முதலியன வரக்காணலாம். வெளிப்படையாகக் குறிப்பிடாத இடங்களிலும் உணர்ந்துகொள்க.
1)
பாரையும் வானையும் பாலனம் செய்பவன்
நீரையும் பாம்பையுந் நீள்சடைச் சூடினான்
ஆரையும் கைதொழா ஐயனெம் முக்கணன்
நாரையும் போற்றிசெய் நாரையூர் நாதனே.
பாரையும் வானையும் பாலனம் செய்பவன் - மண்ணுலகையும் விண்ணுலகையும் காத்தருள்பவன்;
நீரையும் பாம்பையும் நீள்சடைச் சூடினான் - கங்கையையும் நாகத்தையும் நீள்சடையில் அணிந்தவன்; (பாம்பையுந் நீள்சடை - சந்தம் கருதி நகர-ஒற்று விரித்தல் விகாரம்);
ஆரையும் கைதொழா ஐயன் - யாரையும் வணங்காத தலைவன் - தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன்;
எம் முக்கணன் - எங்கள் முக்கண்ணன்;
நாரையும் போற்றிசெய் நாரையூர் நாதனே - நாரையும் வழிபாடு செய்த திருநாரையூரில் உறையும் சுவாமியான சிவபெருமான்; (* நாரை வழிபாடு செய்தது தலவரலாறு & தலப்பெயர்க்காரணம்);
2)
வாரிமா நஞ்சையும் வாய்மடுத் தும்பர்தம்
ஆரிடர் தீர்த்தவன் அங்கையோ டேந்திவந்(து)
ஊரிடும் பிச்சையை நச்சினான் ஒண்ணுதல்
நாரியோர் பங்கினன் நாரையூர் நாதனே.
வாரி மா-நஞ்சையும் வாய்மடுத்து உம்பர்தம் ஆரிடர் தீர்த்தவன் - கடல் உமிழ்ந்த ஆலகாலத்தையும் அள்ளியெடுத்து உண்டு தேவர்களது பெருந்துன்பத்தைத் தீர்த்தவன்; (வாரி - 1.கடல்; 2.அள்ளி); (வாய்மடுத்தல் - உண்ணுதல்);
அங்கை ஓடு ஏந்திவந்து ஊர் இடும் பிச்சையை நச்சினான் - கையில் ஒரு கபாலத்தை ஏந்திவந்து ஊரில் உள்ளவர்கள் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவன்; (நச்சுதல் - விரும்புதல்);
ஒண்ணுதல் நாரி ஓர் பங்கினன் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (ஒண்ணுதல் = ஒள்+நுதல்; நுதல் - நெற்றி);
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்; (பங்கினன்னாரையூர் - பங்கினன் நாரையூர்; னகர-ஒற்று விரித்தல் விகாரம்);
3)
வெள்ளமார் வேணியில் வெண்பிறைக் கண்ணியான்
துள்ளுமான் மூவிலைச் சூலமார் கையினன்
கள்ளமில் பத்தரைக் காத்தருள் கண்ணுதல்
நள்ளிருட் கூத்தனெம் நாரையூர் நாதனே.
வெள்ளம் ஆர் வேணியில் வெண்பிறைக் கண்ணியான் - கங்கை பொருந்திய சடையில் வெண்திங்களைக் கண்ணிமாலை போல் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
துள்ளு-மான் மூவிலைச் சூலம் ஆர் கையினன் - கையில் துள்ளும் மானையும் திரிசூலத்தையும் ஏந்தியவன்;
கள்ளம் இல் பத்தரைக் காத்தருள் கண்ணுதல் - கள்ளமற்ற பக்தர்களைக் காத்தருளும் நெற்றிக்கண்ணன்;
நள்ளிருட் கூத்தன் - நள்ளிருளில் ஆடுபவன்;
எம் நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் எங்கள் சிவபெருமான்;
4)
மாகறல் வாஞ்சியம் வான்மியூர் மேயவன்
சாகரம் கக்குவன் னஞ்சினைத் தாங்கிய
மேகமார் கண்டனோர் வெள்ளையே றேறினான்
நாகநாண் ஆர்த்தவன் நாரையூர் நாதனே.
மாகறல் வாஞ்சியம் வான்மியூர் மேயவன் - திருமாகறல், திருவாஞ்சியம், திருவான்மியூர், முதலிய தலங்களிலெல்லாம் எழுந்தருளியவன்;
சாகரம் கக்கு வன்னஞ்சினைத் தாங்கிய மேகம் ஆர் கண்டன் - கடல் கக்கிய கொடிய விஷத்தைத் தாங்கிய மேகம் போல் திகழும் நீலகண்டத்தை உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);
ஓர் வெள்ளை-ஏறு ஏறினான் - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;
நாகநாண் ஆர்த்தவன் - நாகத்தை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
5)
மால்விரும் பாழியைத் தந்தருள் வானவன்
வால்விடைப் பாகனீர் வார்சடைத் தாங்கினான்
நால்வர்தம் நற்றமிழ் நாம்பெறக் காட்டிய
நால்கரன் தாதையெம் நாரையூர் நாதனே.
மால் விரும்பு ஆழியைத் தந்தருள் வானவன் - திருமால் விரும்பிய சக்கராயுதத்தை (வீழிமிழலை என்ற தலத்தில்) அருள்புரிந்த தேவன்; (ஆழி - சக்கரம்);
வால்விடைப் பாகன் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்; (வால் - வெண்மை); (அப்பர் தேவாரம் - 4.63.9 - "வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே");
நீர் வார்சடைத் தாங்கினான் - கங்கையை நீள்சடையில் தாங்கியவன்; (வார்தல் - நீள்தல்);
நால்வர்தம் நற்றமிழ் நாம் பெறக் காட்டிய நால்கரன் தாதை - தேவாரமும் திருவாசகமும் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்று நமக்குக் கிட்டுமாறு, தேவார-ஏடுகள் இருந்த இடத்தை நம்பியாண்டார்-நம்பிக்குக் காட்டியருளிய, தொங்கும் கையையுடைய (தும்பிக்கை) விநாயகனுக்குத் தந்தை; (நால்தல் - தொங்குதல்); (தாதை - தந்தை); (சுப்ரமணிய சுவாமிகள் அருளிய திருப்பேரூர் பதிற்றுப்பத்தந்தாதி - 43 - "தனி நால்கரன் அயிற்கரக் கந்தவேள் தந்தையம் பேரை" - நால்கரன் = தூங்குகின்ற கையன் = விநாயகக் கடவுள்);
எம் நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் எங்கள் சிவபெருமான்;
6)
சங்கரா காவெனத் தாள்தொழும் பத்தர்தம்
சங்கைதீர் பண்பினன் சாகையோர் ஆயிரம்
அங்கமா றோதினான் ஆவிலைந் தாடினான்
நங்கையோர் பங்கினன் நாரையூர் நாதனே.
"சங்கரா கா" எனத் தாள் தொழும் பத்தர்தம் சங்கை தீர் பண்பினன் - "சங்கரனே காத்தருளாய்" என்று திருவடியை வணங்கும் பக்தர்களது அச்சத்தைத் தீர்ப்பவன்; (சங்கை - அச்சம்);
சாகை ஓர் ஆயிரம், அங்கம் ஆறு ஓதினான் - வேதத்தின் பிரிவுகளான சாகைகள் பலவற்றையும், ஆறு-அங்கங்களையும் பாடியருளியவன்; (சாகை - வேதத்தின் பகுதி; வேதம்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.1 - "சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவ துடையார்");
ஆவில் ஐந்து ஆடினான் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;
நங்கையோர் பங்கினன் - உமைபங்கன்;
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
7)
கச்சியே கம்பமும் காழியும் மேயவன்
பிச்சையூண் இச்சையாய்ப் பெற்றமூர் பெற்றியன்
உச்சிமேல் நொச்சியம் பச்சிலை சூடினான்
நச்சராத் தாரினன் நாரையூர் நாதனே.
கச்சி ஏகம்பமும் காழியும் மேயவன் - திருக்கச்சி ஏகம்பம், சீகாழி முதலிய தலங்களில் எழுந்தருளிய பெருமான்;
பிச்சை-ஊண் இச்சையாய்ப் பெற்றம் ஊர் பெற்றியன் - பிச்சையெடுத்துக் கிட்டும் உணவை விரும்பி எருதின்மேல் ஏறிவரும் பெருமையுடையவன்; (ஊண் - உணவு); (பெற்றம் - எருது); (ஊர்தல் - ஏறுதல்); (பெற்றி - பெருமை; தன்மை);
உச்சிமேல் நொச்சியம் பச்சிலை சூடினான் - திருமுடிமேல் நொச்சியிலையை அணிந்தவன்;
(சுந்தரர் தேவாரம் - 7.98.3 - நொச்சியம் பச்சிலையான் நுரை தீர்புனலால் தொழுவார் நச்சிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே);
நச்சு-அராத் தாரினன் - விஷப்பாம்பை மாலை போல அணிந்தவன்;
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
8)
திட்டிவெற் பேந்தினான் தேம்புமா றூன்றினான்
மட்டுவார் பூவினால் வார்கழல் போற்றினால்
மட்டிலா இன்பமார் வாழ்வருள் செய்பவன்
நட்டமா டும்பரன் நாரையூர் நாதனே.
திட்டி வெற்பு ஏந்தினான் தேம்புமாறு ஊன்றினான் - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணன் புலம்பி அழும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (வெற்பு - மலை); (ஏந்துதல் - தூக்குதல்); (தேம்புதல் - வருந்துதல்; விம்மியழுதல்); (வெற்பேந்தினாற் றேம்புமாறு - வெற்பு ஏந்தினானைத் தேம்புமாறு; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்); (அப்பர் தேவாரம் - 5.77.10 - "பொருந்து நீண்மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி மலரடி வாங்கினான்");
மட்டு வார் பூவினால் வார்கழல் போற்றினால் மட்டு இலா இன்பம் ஆர் வாழ்வு அருள் செய்பவன் - தேன் சொரியும் பூக்களால் கழல் அணிந்த திருவடியை வழிபாடு செய்தால், அளவில்லா இன்பம் நிறைந்த வாழ்வை அருள்பவன்; (மட்டு - 1. தேன். 2. அளவு; எல்லை); (வார்தல் - 1. சொரிதல்; 2. நீள்தல்);
நட்டம் ஆடும் பரன் - கூத்தாடும் பரமன்; (நட்டம் - கூத்து);
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
9)
வான்மிசைச் செல்லயன் மண்ணகழ் மால்தொழும்
கோன்மலர்த் தாளினால் கூற்றினைச் செற்றவன்
மான்மறிக் கையினன் வன்புலித் தோலினன்
நான்மறைச் செம்பொருள் நாரையூர் நாதனே.
வான்மிசைச் செல் அயன், மண் அகழ் மால் தொழும் கோன் - (அடிமுடி தேடி) வான்மீது ஏறிச் சென்ற பிரமனும் மண்ணை அகழ்ந்த திருமாலும் வணங்கும் தலைவன்;
மலர்த்தாளினால் கூற்றினைச் செற்றவன் - மலர்ப்பாதத்தால் காலனை உதைத்து அழித்தவன்; (செறுதல் - அழித்தல்);
மான்மறிக் கையினன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்; (மறி - மான்கன்று);
வன்-புலித் தோலினன் - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;
நான்மறைச் செம்பொருள் - நால்வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருள்;
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
10)
குற்றமார் நெஞ்சர்பொய்க் கூற்றுகள் நீங்குமின்
ஒற்றையே றேறினான் உம்பரார் தம்பிரான்
பற்றிலான் பாதமே பற்றெனப் பற்றிடும்
நற்றவர்க் குற்றவன் நாரையூர் நாதனே.
குற்றம் ஆர் நெஞ்சர் பொய்க்கூற்றுகள் நீங்குமின் - குற்றம் நிறைந்த வஞ்ச-நெஞ்சர்கள் சொல்லும் பொய்ம்மொழிகளைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (ஆர்தல் - நிறைதல்); (மின் - ஏவற்பன்மை விகுதி);
ஒற்றை ஏறு ஏறினான் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்; (ஒற்றை - ஒப்பின்மை);
உம்பரார்தம் பிரான் - தேவர்கள் தலைன்;
பற்று-இலான் பாதமே பற்று எனப் பற்றிடும் நற்றவர்க்கு உற்றவன் - எப்பற்றும் இல்லாதவனான ஈசன் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றிய நல்ல தவம் உடையவர்களுக்கு உறுதுணையாக உடன் இருப்பவன்; (உற்றவன் - சுற்றத்தான்);
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
11)
வீறுசேர் வீக்களே விட்டவேள் தன்னுடல்
நீறுசெய் கண்ணமர் நெற்றியன் கொற்றவன்
சீறுநா கந்திகழ் சென்னிமேல் கூவிளம்
நாறுபூங் கொன்றையான் நாரையூர் நாதனே.
வீறு சேர் வீக்கள்-ஏ விட்ட வேள்தன் உடல் நீறுசெய் கண் அமர் நெற்றியன் - அழகு மிகுந்த மலர்க்கணைகளைத் தொடுத்த மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்; (வீறு - சிறப்பு; அழகு); (வீ - பூ); (ஏ - அம்பு); (விடுதல் - பாணம் பிரயோகித்தல்; எறிதல்);
கொற்றவன் - அரசன்; வெற்றியுடையவன்;
சீறு-நாகம் திகழ் சென்னிமேல் கூவிளம் நாறு பூங்கொன்றையான் - சீறும் பாம்பு இருக்கும் திருமுடிமேல் வில்வம், மணம் கமழும் கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
நாரையூர் நாதனே - திருநாரையூரில் உறையும் சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment