Showing posts with label தத்தந் தத்தந் தனதான. Show all posts
Showing posts with label தத்தந் தத்தந் தனதான. Show all posts

Monday, June 15, 2026

T.239 - பொது - கட்டுண்டு எய்க்கும்

2020-05-09

T. 239 - பொது - கட்டுண்டு எய்க்கும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தந் தத்தந் .. தனதான)


கட்டுண் டெய்க்குந் .. தமியேனும்

.. கற்றுன் பற்றென் .. றடைவேனோ

துட்டம் பொக்கம் .. புரிதீயர்

.. துக்கந் துய்க்கும் .. பலனீவாய்

கட்டுங் கச்சும் .. பணியாகும்

.. கட்டங் கத்தொண் .. படையானே

பட்டங் கட்டுந் .. தனிஞானா

.. பைக்கம் பெற்றுண் .. பெருமானே.


பதம் பிரித்து:

கட்டுண்டு எய்க்கும் தமியேனும்

.. கற்று உன் பற்று என்று அடைவேனோ?

துட்டம் பொக்கம் புரி-தீயர்

.. துக்கம் துய்க்கும் பலன் ஈவாய்;

கட்டும் கச்சும் பணி ஆகும்

.. கட்டங்கத்து ஒண்- படையானே;

பட்டம் கட்டும் தனி-ஞானா;

.. பைக்கம் பெற்று உண் பெருமானே.


கட்டுண்டு எய்க்கும் தமியேனும் கற்று உன் பற்று என்று அடைவேனோ - பிணித்துள்ள வினைகளால் வருத்தமுறும் நானும் உன்னை ஓதக் கற்று உன்மேல் அன்பை என்று அடைவேன்? அருள்வாயாக; (எய்த்தல் - வருந்துதல்); (தமியேன் - தனித்திருக்கும் நான்);

துட்டம் பொக்கம் புரி-தீயர் துக்கம் துய்க்கும் பலன் ஈவாய் - தீமைகளையும் வஞ்சனையையும் விரும்பிச் செய்கின்ற தீயவர்கள் துக்கம் அனுபவிக்கும்படி அவர்களுக்கு வினைப்பலனைத் தருபவனே; (புரிதல் - விரும்புதல்; செய்தல்); (துய்த்தல் - அனுபவித்தல்);

கட்டும் கச்சும் பணி ஆகும், கட்டங்கத்து ஒண்-படையானே - (மார்பில் அணியும் மாலையும்) அரையில் கட்டுகின்ற கச்சும் பாம்பே ஆக, ஒளியுடைய கட்வாங்கம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனே; (கச்சும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளலாம்); (பணி - பாம்பு); (கட்டங்கம் - கட்டுவாங்கம் - खट्वाङ्गः khaṭvāṅgaḥ - a club or staff with a skull at the top considered as the weapon of Śiva); (அப்பர் தேவாரம் - 6.9.3 - "கட்டங்கந் தாமொன்று கையில் ஏந்தி"); (சுந்தரர் தேவாரம் - 7.56.7 - "கட்டுவாங்கந் தரித்த பிரானை");

பட்டம் கட்டும் தனி-ஞானா - நெற்றிப்பட்டம் கட்டும் ஒப்பற்ற ஞானனே; (பட்டம் - சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு); (தனி - ஒப்பற்ற); (சம்பந்தர் தேவாரம் - 3.1.2 - "நுதற் பட்டமே புனைவாய்");

பைக்கம் பெற்று உண் பெருமானே - பிச்சையேற்று உண்ணும் பெருமானே; (பைக்கம் - பயிக்கம் - பிச்சை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------