Showing posts with label தனதான தந்தனத் தனதான. Show all posts
Showing posts with label தனதான தந்தனத் தனதான. Show all posts

Wednesday, March 4, 2026

T.215 - புறம்பயம் - இனலே மிகும்

2019-04-22

T.215 - புறம்பயம் - இனலே மிகும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்தனத் .. தனதான)

(அபகார நிந்தைபட் டுழலாதே - திருப்புகழ் - பழநி)


இனலேமி கும்பவப் .. பிணியாலே

.. இருஞாலம் வந்திளைத் .. துழலாதே

உனைநாளும் இன்தமிழ்த் .. தொடைபாடி

.. உலவாத இன்பமுற் .. றிடுவேனோ

சினமார்ந மன்றனைச் .. செறுகாலா

.. திரிமூவ ரண்களைச் .. சுடுவீரா

புனலோடு குஞ்சியிற் .. பிறையானே

.. பொழிலார்பு றம்பயப் .. பெருமானே.


பதம் பிரித்து:

இனலே மிகும் பவப்-பிணியாலே

.. இரு-ஞாலம் வந்து இளைத்து உழலாதே,

உனை நாளும் இன்தமிழ்த்-தொடை பாடி,

.. உலவாத இன்பம் உற்றிடுவேனோ?

சினம் ஆர் நமன்றனைச் செறு-காலா;

.. திரி-மூவரண்களைச் சுடு-வீரா;

புனலோடு குஞ்சியிற் பிறையானே;

.. பொழில் ஆர் புறம்பயப் பெருமானே.


இனலே மிகும் பவப்-பிணியாலே இரு-ஞாலம் வந்து இளைத்து ழலாதே - துன்பமே மிகும் பிறவிப்பிணியால் இந்தப் பெரிய பூமியில் வந்து (=பிறந்து) வருந்தி உழலாமல்; (இனலே - இன்னலே; இடைக்குறை விகாரம்); (பவம் - பிறவி); (இருமை - பெருமை); (ஞாலம் - பூமி);

உனை நாளும் இன்தமிழ்த்-தொடை பாடி, உலவாத இன்பம் உற்றிடுவேனோ - உன்னைத் தினமும் இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடிப் போற்றி வணங்கிப் பேரின்பத்தை அடைய அருள்வாயாக; (தொடை - மாலை); (உலத்தல் - அழிதல்);

சினம் ஆர் நமன்-தனைச் செறு காலா - கோபம் மிக்க கூற்றுவனை உதைத்து அழித்த காலகாலா;

திரி-மூ-அரண்களைச் சுடு வீரா - எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களை எரித்து அழித்த வீரனே;

புனல் ஓடு குஞ்சியில் பிறையானே - கங்கையாறு ஓடுகின்ற தலையின்மேல் பிறையைச் சூடியவனே;

பொழில் ஆர் புறம்பயப் பெருமானே - சோலைகள் நிறைந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------