Showing posts with label தானந்த தானத்தந் தனதான. Show all posts
Showing posts with label தானந்த தானத்தந் தனதான. Show all posts

Tuesday, May 12, 2026

T.235 - நின்றியூர் - பாதங்கள் நான் நற்செந்தமிழ்

2019-08-22

T.235 - நின்றியூர் - பாதங்கள் நான் நற்செந்தமிழ்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானந்த தானத்தந் .. தனதான)

(நீலங்கொள் மேகத்தின் - திருப்புகழ் - பொது)


பாதங்கள் நானற்செந் .. தமிழ்பாடிப்

.. பாவங்கள் தீரக்கும் .. பிடுவேனாய்

வேதங்கள் நாடற்கும் .. பெரியாய்நின்

.. மேலன்பு பூணத்தந் .. தருளாயே

கீதங்கள் ஓதிக்கண் .. புனல்வாரக்

.. கேளென்று நாடிச்சென் .. றடைவார்தம்

ஏதங்கள் தீர்முக்கண் .. திகழ்தேவா

.. ஏர்நின்றி யூர்நச்சும் .. பெருமானே.


பதம் பிரித்து:

பாதங்கள் நான் நற்செந்தமிழ் பாடிப்,

.. பாவங்கள் தீரக் கும்பிடுவேனாய்,

வேதங்கள் நாடற்கும் பெரியாய், நின்

.. மேல் அன்பு பூணத் தந்தருளாயே;

கீதங்கள் ஓதிக், கண் புனல் வாரக்,

.. "கேள்" என்று நாடிச் சென்று அடைவார்தம்

ஏதங்கள் தீர் முக்கண் திகழ்-தேவா;

.. ஏர்-நின்றியூர் நச்சும் பெருமானே.


பாதங்கள் நான் நற்செந்தமிழ் பாடிப், பாவங்கள் தீரக் கும்பிடுவேனாய் - நான் நல்ல செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி, என் வினைகள் தீரத் திருவடிகளை வணங்குபவன் ஆகி;

வேதங்கள் நாடற்கும் பெரியாய், நின்மேல் அன்பு பூணத் தந்தருளாயே - வேதங்களாலும் அறிவதற்கு அரிய பெருமை உடையவனே, உன்மேல் பக்தி கொள்ளுமாறு எனக்கு அருள்வாயாக; (நாடுதல் - அறிதல்; கிட்டுதல்); (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.1.11 - "மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி");

கீதங்கள் ஓதிக், கண் புனல் வாரக் "கேள்" என்று நாடிச் சென்று அடைவார்தம் ஏதங்கள் தீர் முக்கண் திகழ்-தேவா - பாடல்கள் பாடிக், கண்ணீர் சொரிய, "எம் உறவு நீ; எம் குறை கேட்டருள்" என்று வழிபடும் பக்தர்களது குறைகளைத் தீர்க்கும் முக்கண்ணுடைய தேவனே; (வார்தல் - சொரிதல்; ஒழுகுதல்); (கேள் - 1. உறவு; நண்பன்; 2. கேள் என்ற ஏவல்வினை); (ஏதம் - துன்பம்; குற்றம்);

ஏர்-நின்றியூர் நச்சும் பெருமானே - அழகிய திருநின்றியூரை விரும்பும் (= விரும்பி உறையும்) பெருமானே; (ஏர் - அழகு); (நச்சுதல் - விரும்புதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Wednesday, May 6, 2026

T.229 - வான்மியூர் - ஊனங்கள் தீர

2019-08-08

T. 229 - வான்மியூர் - னங்கள் தீர

-----------------

(வண்ணவிருத்தம்;

தானந்த தானத்தந் .. தனதான)

(நீலங்கொள் மேகத்தின் - திருப்புகழ் - பொது)


ஊனங்கள் தீரச்செந் .. தமிழ்பாடி

.. ஓர்கின்ற நேயர்க்கன் .. புடையேனாய்

நானைந்து தாளைக்கும் .. பிடுமாறு

.. ஞானங்கொ டாய்நட்டம் .. புரிவோனே

ஆனந்த மாதைப்பங் .. கமர்வோனே

.. ஆர்வங்க வான்மிச்செஞ் .. சடையானே

வானன்று வாடிச்சென் .. றடிவீழ

.. மாநஞ்சை வாயிட்டுண் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஊனங்கள் தீரச் செந்தமிழ் பாடி

.. ஓர்கின்ற நேயர்க்கு அன்பு உடையேனாய்,

நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு

.. ஞானங் கொடாய், நட்டம் புரிவோனே;

ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே;

.. ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே;

வான் அன்று வாடிச் சென்று அடிவீழ,

.. மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே.


னங்கள் தீரச் செந்தமிழ் பாடி ஓர்கின்ற நேயர்க்கு அன்புடையேனாய் - குற்றமெல்லாம் தீரும் பொருட்டுத் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி உன்னைத் தியானிக்கின்ற அன்பர்களுக்கு அன்புடையவன் ஆகி; (ஊனம் - குற்றம்); (ஓர்தல் - எண்ணுதல்);

நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு ஞானம் கொடாய், நட்டம் புரிவோனே - (அவர்கள் போல) நானும் மனம் உருகி உன் திருவடியை வணங்கும்படி ஞானத்தைத் தருவாயாக, கூத்து ஆடுபவனே; (நான் - நானும்; உம்மை தொக்கது); (நைதல் - மனம் உருகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்"); (நட்டம் - கூத்து);

ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே - இன்பனே; உமாதேவியை ஒரு பங்காக விரும்பியவனே; (ஆனந்த - 1. இன்பனே; 2. இன்பவடிவான); (அமர்தல் - விரும்புதல்);

ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே - ஒலிக்கின்ற அலையுடைய (= கடலின் அருகே உள்ள) திருவான்மியூரில் உறையும் சிவந்த சடையினனே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வங்கம் - அலை); (வான்மி - திருவான்மியூர்); (சம்பந்தர் தேவாரம் - 3.55.4 - "திருவான்மிதன்னில் அன்பா");

வான் அன்று வாடிச் சென்று அடிவீழ, மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே - தேவர்கள் முன்பு வருந்திச் சென்று உன் திருவடியில் விழுந்து வணங்க, அவர்களுக்கு இரங்கிக், கொடிய ஆலகாலத்தை வாயில் இட்டு உண்டருளிய பெருமானே; (வான் - தேவர்கள்); (அடிவீழ்தல் - தண்டனிடுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------