Monday, April 27, 2026

P.476 - பொது - பரம்பொருளு(ம்)நீ

2019-06-30

P.476 - பொது

--------------------

(வஞ்சித்துறை - தனாதனதனா தனாதனதனா)

(சந்தக் கலிவிருத்தம் - தனான தனனா தனான தனனா)

(Sanskrit Meter - ஜலோத்ததகதி (जलोद्धतगतिः) (jalōddhatagatiḥ)

முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

பரம்பொருளு(ம்)நீ பனிச்சடையினாய்

பெரும்புகழினாய் பிரான்அருளெனக்

கரம்குவிதரக் கழற்குருகினால்

வரம்தருபவன் வலஞ்சுழியனே.


"பரம்பொருளும் நீ; பனிச்-சடையினாய்; பெரும்-புகழினாய்; பிரான்; அருள்" னக் - "நீயே பரம்பொருள்; கங்கையைச் சடையில் அணிந்தவனே; பெரும்புகழ் உடையவனே; பெருமானே; அருள்க" என்று;

கரம் குவிதரக் கழற்கு உருகினால் - கைகளைக் குவித்து உருகித் திருவடியை வழிபட்டால்; (தருதல் - ஒரு துணைவினை);

வரம் தருபவன் வலஞ்சுழியனே - வரம் அருள்பவன் திருவலஞ்சுழியில் உறைகின்ற ஈசன்;


2)

மடந்தை பிரியா மணாள அளவைக்

கடந்த புகழாய் கரந்தை புனைவாய்

குடந்தை உறைவாய் குவிந்து தொழுதேன்

தொடர்ந்த வினையைத் துரத்தி அருளே!


மடந்தை பிரியா மணாள - உமை ஒரு பாகம் ஆன மணவாளனே; (மடந்தை - பெண்);

அளவைக் கடந்த புகழாய் - எல்லையற்ற புகழ் உடையவனே;

கரந்தை புனைவாய் - கரந்தையை அணிந்தவனே;

குடந்தை உறைவாய் - குடமூக்கில் (கும்பகோணத்தில்) உறைகின்றவனே;

குவிந்து தொழுதேன் - மனம் ஒன்றி வழிபட்டேன்;

தொடர்ந்த வினையைத் துரத்தி அருளே - என்னைத் தொடரும் வினைகளை அழித்து அருள்வாயாக;


3)

தராய்நகரிலும் தவத்துறையிலும்

பராய்த்துறையிலும் பயில்பரமனே

குராமுடியினாய் கொடும்பழவினை

இராவணமெனக் கிரங்கியருளே.


தராய்நகரிலும் தவத்துறையிலும் பராய்த்துறையிலும் பயில்-பரமனே - பூந்தராயிலும் (சீகாழி), திருத்தவத்துறையிலும் (லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயில்), திருப்பராய்த்துறையிலும் உறையும் பரமனே; (தராய் - பூந்தராய் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

குரா-முடியினாய் - குராமலரைச் சூடிய திருமுடியினனே;

கொடும்-பழவினை இராவணம் எனக்கு இரங்கி அருளே - கொடிய பழைய வினைகளெல்லாம் தீரும்படி எனக்கு இரங்கி அருள்க;


4)

எதிர்த்தமதமா உரித்தவிறலாய்

நதிச்சடையிலே நடுக்கமதிலாக்

கதிர்ப்பிறையினாய் கறுத்தமிடறா

துதித்தவரிடர் துடைத்தருளவே.


எதிர்த்த மதமா உரித்த விறலாய் - தாக்கிய மதயானையைத் தோலுரித்த வெற்றியினனே; (மதமா - யானை); (விறல் - வெற்றி; வீரம்);

நதிச்சடையிலே நடுக்கமது இலாக் கதிர்ப்-பிறையினாய் - கங்கையைத் தரித்த சடையில் பயம் தீர்ந்த வெண்பிறையைச் சூடியவனே; (நடுக்கம் - அச்சம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (கதிர் - ஒளி; கிரணம்);

கறுத்த மிடறா - கரிய கண்டனே; (அப்பர் தேவாரம் - 4.93.3 - "கறுத்த மிடறுடையான்");

துதித்தவர் இடர் துடைத்து அருளவே - துதிக்கும் அன்பர்களது இடர்களை நீக்கி அருள்வாயாக;

(அருள - அருள்க; - வியங்கோள் விகுதி); (- ஈற்றசை);


5)

மடக்கொடியனாள் தனைப்பிரிகிலாய்

விடைப்பிரியனே மிகப்புனிதனே

கடற்பெருவிடம் களத்திடவலாய்

அடைக்கலமெனக் களித்தருளிடே.


மடக்கொடி அனாள்-தனைப் பிரிகிலாய் - இளங்கொடி போன்ற உமையைப் பிரியாதவனே; (அனாள் - அன்னாள்);

விடைப்-பிரியனே - இடபத்தை ஊர்தியாக விரும்பியவனே;

மிகப் புனிதனே - பரிசுத்தனே;

கடற்-பெருவிடம் களத்து இட வலாய் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் இட்டவனே; (களம் - கண்டம்); (வலாய் - வல்லாய் - வல்லவனே);

அடைக்கலம் எனக்கு அளித்து அருளிடே - எனக்கு அடைக்கலம் தந்து காப்பாயாக;


6)

அணங்கையொருபால் அமர்ந்தபதியே

கணங்களிடையே நடங்கருதினாய்

மணங்கமழு(ம்)மா மலர்த்தொடையினாய்

வணங்குமடியேன் தனக்குமருளே.


அணங்கை ஒருபால் அமர்ந்த பதியே - உமையை ஒரு பக்கம் கூறாக விரும்பிய தலைவனே;

கணங்களிடையே நடம் கருதினாய் - பூதகணங்கள் சூழக் கூத்தாடுபவனே;

மணம் கமழு(ம்) மா-மலர்த்தொடையினாய் - வாசம் கமழும் அழகிய மலர்மாலையை அணிந்தவனே;

வணங்கும் அடியேன்-தனக்கும் அருளே - வணங்குகின்ற எனக்கும் அருள்வாயாக;


7)

செழும்பவளமார் திருச்சடையினாய்

எழும்பொழுதுநின் இணைக்கழல்நினை

தொழும்புடையவர்க் கருந்துணைவனே

அழுந்துவினையேற் கருள்புரிகவே.


செழும்-பவளம் ஆர் திருச்சடையினாய் - செழுமையான பவளம் போன்ற சடையை உடையவனே;

எழும் பொழுது நின் இணைக்கழல் நினை - துயிலெழும்பொழுது உன் இரு-திருவடிகளை நினைக்கின்ற; (இணைக்கழனினை - இணைக்கழல் நினை);

தொழும்பு உடையவர்க்கு அரும்-துணைவனே - அடிமை உடைய பக்தர்களுக்கு அரிய துணை ஆனவனே; (தொழும்பு - அடிமை);

அழுந்து வினையேற்கு அருள்புரிகவே - வினையில் ஆழும் எனக்கு அருள்வாயாக;


8)

விரித்தசடைமேல் விளங்கமதியைத்

தரித்தசதுரா தகாதவரெயில்

எரித்தநகையாய் இராவணனழ

நெரித்தகழலே நினைக்கவருளே.


விரித்த சடைமேல் விளங்க மதியைத் தரித்த சதுரா - விரித்த சடையின்மேல் சந்திரனை ஒளிவீசும்படி அணிந்த வல்லவனே;

தகாதவர் எயில் எரித்த நகையாய் - அசுரர்களது முப்புரங்களைச் சிரித்து எரித்தவனே;

இராவணன் அழ நெரித்த கழலே நினைக்க அருளே - இராவணன் அழும்படி அவனை நசுக்கிய உன் திருவடியையே நான் நினைக்கும்படி அருள்வாயாக; (நெரித்தல் - நசுக்குதல்);


9)

அயன்முகில்நிறத் தரிக்கரியவன்

புயங்கனொளிரும் பொடிப்புனைபவன்

கயம்புரிசடைக் கரந்தருளினான்

சுயம்புதனைநீர் தொழீர்மகிழவே.


அயன் முகில்-நிறத்து அரிக்கு அரியவன் - பிரமனாலும் மேகம் போன்ற நிறமுடைய திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்; (முகினிறத்தரி - முகில் நிறத்து அரி; சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையைக் காண்க);

புயங்கன் - பாம்புகளை அணிந்தவன்; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு);

ஒளிரும் பொடிப் புனைபவன் - ஒளியுடைய திருநீற்றைப் பூசியவன்; (இலக்கணக் குறிப்பு : குறிலிணைச் சொற்கள் வருமிடத்தில் வல்லொற்று மிகுவதும் உண்டு; தேவாரத்தில் "பொடிப்பூசி" என்று பல இடங்களில் வரக் காணலாம். அப்பர் தேவாரம் - 5.14.8 - "வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்");

கயம் புரிசடைக் கரந்து அருளினான் - கங்கையை முறுக்கிய சடையில் ஒளித்தவன்; (கயம் - நீர்நிலை); (கரத்தல் - மறைத்தல்);

சுயம்புதனை நீர் தொழீர் மகிழவே - சுயம்புமூர்த்தியாகிய அப்பெருமானை நீங்கள் தொழுங்கள்; இன்புறலாம்;


10)

தொழாத்துரிசினர் சொலைக்கருதிடேல்

விழாமலிதரும் வியன்மயிலையான்

குழாம்புகிலினிக் கொடும்பிறவிகள்

எழாவண(ம்)நமக் கிரங்குமவனே.


தொழாத் துரிசினர் சொலைக் கருதிடேல் - ஈசனை வழிபடாத குற்றமுடையவர்கள் பேசும் பேச்சை மதிக்கவேண்டா; (துரிசு - குற்றம்); (சொலை - சொல்லை);

விழா மலிதரும் வியன் மயிலையான் குழாம் புகில் - பல விழாக்கள் கொண்டாடப்பெறும் பெருமைமிக்க மயிலாப்பூரில் உறையும் பெருமானது அடியார்-குழாத்தைச் சேர்ந்தால்; (வியன் - பெருமை; சிறப்பு);

இனிக் கொடும்-பிறவிகள் எழாவண(ம்) நமக்கு இரங்கும் அவனே - இனிமேல் கொடிய பிறவிகள் வாராதபடி நமக்கு இரங்கி வினைகளைத் தீர்த்து அருள்வான் அப்பெருமான்; (வணம் - வண்ணம்); (இரங்கும் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


11)

அழற்சடையில்நீர் அடைத்தசதுரன்

மழுப்படையினான் மலைச்சிலையினான்

கழுத்ததனிலோர் கறுத்தமணியான்

வழுத்துமடியார் மனத்துறைவனே.


அழற்சடையில் நீர் அடைத்த சதுரன் - தீப் போன்ற செஞ்சடையில் கங்கையை அடைத்த ஆற்றலுடையவன்; (சடையினீர் - சடையில் நீர்);

மழுப்படையினான் - மழுவை ஏந்தியவன்;

மலைச்சிலையினான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 2.73.8 - "திரிபுரங்கள் செற்ற மலைச்சிலையனூரே");

கழுத்து அதனில் ஓர் கறுத்த மணியான் - கண்டத்தில் ஒப்பற்ற நீலமணியை உடையவன்;

வழுத்தும் அடியார் மனத்து உறைவனே - அப்பெருமான் துதிக்கும் பக்தர்களது நெஞ்சில் உறைவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.475 - பராய்த்துறை - ஆவினில் ஐந்துகந்து

2019-06-29

P.475 - பராய்த்துறை

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அந்தாதி - "ஆவினில்" என்று தொடங்கி "ஆகுமே" என்று முடிந்து மண்டலித்துவரும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

ஆவினில் ஐந்துகந் தாடி நான்மறை

நாவினன் முடிமிசை நாறு கொன்றையன்

தேவியொர் பங்கினன் திருப்ப ராய்த்துறைக்

கோவினைத் தொழுதெழக் குறைகள் தீருமே.


ஆவினில் ஐந்து உகந்து ஆடி - பசுவிடமிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

நான்மறை நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

முடிமிசை நாறு கொன்றையன் - சென்னிமேல் மணம் கமழும் கொன்றையைச் சூடியவன்;

தேவி ஒர் பங்கினன் - உமைபங்கன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

திருப்பராய்த்துறைக் கோவினைத் தொழுதெழக் குறைகள் தீருமே - திருப்பராய்த்துறையில் உறையும் தலைவனான அப்பெருமானை வழிபட்டால் குறைகள் தீரும்;


2)

தீர்வதற் கருவினை தீர்க்க வல்லவன்

நீர்மலி கங்கையும் நிலவும் நாகமும்

சேர்திரு முடியினன் திருப்ப ராய்த்துறை

ஓர்பவர்க் கின்பங்கள் ஓங்கும் உண்மையே.


தீர்வதற்கு அருவினை தீர்க்க வல்லவன் - தீராத வினைகளைத் தீர்ப்பவன்;

நீர் மலி கங்கையும் நிலவும் நாகமும் சேர் திருமுடியினன் - கங்கை, சந்திரன், பாம்பு இவற்றைத் திருமுடிமேல் அணிந்தவன்;

திருப்பராய்த்துறை ஓர்பவர்க்கு இன்பங்கள் ஓங்கும் உண்மையே - அப்பெருமான் உறைகின்ற திருப்பராய்த்துறையைத் தியானிப்பவர்களுக்கு இன்பம் மிகும், இது நிச்சயம். (ஓர்தல் - எண்ணுதல்);


3)

உண்மையன் எவ்வித ஒப்பும் அற்றவன்

தண்மையன் வெம்மையன் தடவெற் பேந்திய

திண்மலி தோளினன் திருப்ப ராய்த்துறை

ஒண்மதி சூடியை ஓம்பல் இன்பமே.


உண்மையன் - மெய்ப்பொருள்;

எவ்வித ஒப்பும் அற்றவன் - இணையற்றவன்;

தண்மையன் வெம்மையன் - குளிர்ச்சியும் வெம்மையும் ஆயவன்;

தட-வெற்பு ஏந்திய திண்-மலி தோளினன் - பெரிய மேருமலையை (வில்லாக) ஏந்திய வலிமைமிக்க புஜங்களை உடையவன்; (வெற்பு - மலை);

திருப்பராய்த்துறை ஒண்மதி சூடியை ஓம்பல் இன்பமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற அந்தச் சந்திரசேகரனைப் போற்றுதல் இன்பமே; (ஒண்மதி - ஒளியுடைய சந்திரன்); (ஓம்பல் - ஓம்புதல் - பேணுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "சிற்றம்பலம் மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே");


4)

இன்பினை அடியவர்க் கீயும் முக்கணன்

என்பினைப் பூண்டவன் ஏர்கொள் காவிரித்

தென்கரைத் திகழ்தரு திருப்ப ராய்த்துறைப்

புன்சடை யான்கழல் போற்று நெஞ்சமே.


இன்பினை அடியவர்க்கு ஈயும் முக்கணன் - அடியார்களுக்கு இன்பத்தைத் தரும் நெற்றிக்கண்ணன்; (இன்பு - இன்பம்);

என்பினைப் பூண்டவன் - எலும்பை அணிந்தவன்; (என்பு - எலும்பு);

ஏர்கொள் காவிரித் தென்கரைத் திகழ்தரு திருப்பராய்த்துறைப் - அழகிய காவிரியின் தென்கரையில் திகழ்கின்ற திருப்பராய்த்துறையில் உறைகின்ற; (ஏர் - அழகு); (தருதல் - ஒரு துணைவினை);

புன்சடையான் கழல் போற்று நெஞ்சமே - செஞ்சடையானது திருவடியை, மனமே நீ வழிபடுவாயாக;


5)

நெஞ்சினில் அன்பொடு நினைந்த மார்க்கண்டர்

உஞ்சிடக் கூற்றினை உதைத்த சங்கரன்

செஞ்சடைப் புண்ணியன் திருப்ப ராய்த்துறை

நஞ்சடை மிடறினன் நாமம் ஓதுமே.


நெஞ்சினில் அன்பொடு நினைந்த மார்க்கண்டர் உஞ்சிடக் - நெஞ்சில் அன்போடு எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உய்யும்படி; (உஞ்சிட - உய்ந்திட என்பதன் போலி); (அப்பர் தேவாரம் - 5.50.3 - "உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்");

கூற்றினை உதைத்த சங்கரன் - காலனை உதைத்த சங்கரன்;

செஞ்சடைப் புண்ணியன் - செஞ்சடையை உடைய புண்ணியமூர்த்தி;

திருப்பராய்த்துறை நஞ்சு அடை மிடறினன் நாமம் ஓதுமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற ஆலகாலத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டன் திருநாமத்தை ஓதுங்கள்; (மிடறு - கண்டம்);


6)

ஓதிவான் ஏத்தநஞ் சுண்ட அண்ணலோர்

பாதிமா தாயவன் பால்வெண் ணீற்றினன்

தீதிலாப் புகழினன் திருப்ப ராய்த்துறைச்

சோதியான் கழல்தொழத் துன்பம் நீங்குமே.


ஓதி வான் ஏத்த நஞ்சு உண்ட அண்ணல் - தேவர்கள் துதித்து வழிபட, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட பெருமான்;

ஓர் பாதி மாது ஆயவன் - ஒரு பாதி பெண் ஆனவன்;

பால்வெண்ணீற்றினன் - பால் போன்ற வெண்ணிறமுடைய திருநீற்றைப் பூசியவன்;

தீது இலாப் புகழினன் - குற்றமற்ற புகழை உடையவன்;

திருப்பராய்த்துறைச் சோதியான் கழல் தொழத் துன்பம் நீங்குமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற ஒளிவடிவினனான சிவபெருமானது திருவடியை வழிபட்டால் துன்பம் விலகும்; (அப்பர் தேவாரம் - 5.90.10 - "மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்");


7)

நீங்குதற் கருவினை நீக்க வல்லவன்

பூங்கழல் போற்றிடப் பொன்னித் தண்புனல்

தேங்கிடு வயலணி திருப்ப ராய்த்துறைக்

கோங்கொடு சடைமிசைக் கொன்றை சூடியே.


நீங்குதற்கு அருவினை நீக்க வல்லவன், பூங்கழல் போற்றிடப் - அழகிய திருவடியை வணங்கினால் தீராத தீவினையையும் தீர்ப்பவன்;

பொன்னித் தண்புனல் தேங்கிடு வயல் அணி திருப்பராய்த்துறைக் - (திருவடியைப் போற்றுகின்ற அந்தக்) காவிரியின் குளிர்ந்த நீர் தேங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் உறைகின்ற; (அப்பர் தேவாரம் - 5.2.10 - "தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்"); (குறிப்பு : "பூங்கழல் போற்றிடப்" - என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாய் இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலும் ஆம். இங்கே, - "பூங்கழல் போற்றிடு அப்-பொன்னித் தண்புனல்");

கோங்கொடு சடைமிசைக் கொன்றை சூடியே - சடையின்மேல் கோங்கமலரையும் கொன்றைமலரையும் சூடியவன்; (அப்பர் தேவாரம் - 6.52.10 - "கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணியான் காண்");


8)

சூடெழு நெஞ்சுடைத் தூர்த்தன் பத்துவாய்

பாடிட ஊன்றிய பரமன் நஞ்சணி

சேடியல் மிடறினன் திருப்ப ராய்த்துறை

நாடிய நாதனை நம்பி ஏத்துமே.


சூடு எழு நெஞ்சுடைத் தூர்த்தன் பத்துவாய் பாடிட ஊன்றிய பரமன் - மனம் கொதித்துக் கயிலையைப் பெயர்த்த கொடியவனான இராவணனது பத்து-வாய்களும் பாடும்படி ஒரு விரலை ஊன்றிய பரமன்; (தூர்த்தன் - கொடியோன்);

நஞ்சு அணி சேடு இயல் மிடறினன் - ஆலகாலத்தை அணிந்த பெருமை திகழும் கண்டத்தை உடையவன்; (சேடு - பெருமை; அழகு); (இயல்தல் - பொருந்துதல்); (மிடறு - கண்டம்);

திருப்பராய்த்துறை நாடிய நாதனை நம்பி ஏத்துமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை விரும்பித் துதியுங்கள்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);


9)

ஏத்திய அடியவர் இடரைத் தீர்ப்பவன்

மூத்தவன் அரியொடு முளரி யான்தொழத்

தீத்திரள் ஆயவன் திருப்ப ராய்த்துறை

நேத்திரம் மூன்றுடை நிமலன் நீர்மையே.


ஏத்திய அடியவர் இடரைத் தீர்ப்பவன் - போற்றும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

மூத்தவன் - அனாதியே உள்ளவன்;

அரியொடு முளரியான் தொழத் தீத்திரள் ஆயவன் - திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் தொழுமாறு எல்லையின்றி நீண்ட ஜோதி ஆனவன்; (முளரி - தாமரை);

திருப்பராய்த்துறை - திருப்பராய்த்துறையில் உறைகின்ற;

நேத்திரம் மூன்றுடை நிமலன் நீர்மையே - முக்கண்ணுடைய தூயன் தன்மைகள் (/பெருமை); (நீர்மை - தன்மை);


10)

நீர்மலி வேணியன் நீற்றைப் பூசிடார்

நேர்மையி லார்உரை நீங்கி வம்மினீர்

சீர்மிக அருளிடும் திருப்ப ராய்த்துறைக்

கார்மலி கண்டனைக் கருதி உய்ம்மினே.


நீர் மலி வேணியன் நீற்றைப் பூசிடார் - கங்காதரனது திருநீற்றைப் பூசாதவர்கள்;

நேர்மை இலார் உரை நீங்கி வம்மின் நீர் - நேர்மையில்லாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கி வாருங்கள் நீங்கள்;

சீர் மிக அருளிடும் - செல்வம், புகழ், முதலியனவெல்லாம் மிக அருள்கின்ற; (சீர் - செல்வம்; சிறப்பு; புகழ்);

திருப்பராய்த்துறைக் கார் மலி கண்டனைக் கருதி உய்ம்மினே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற நீலகண்டனை விரும்பித் தியானித்து வழிபட்டு உய்யுங்கள்; (கார் - கருநிறம்);


11)

உய்தியை நல்கிடும் ஒருவன் உத்தமன்

மைதிகழ் மிடறினன் மலையை வில்லெனச்

செய்தவன் செய்யணி திருப்ப ராய்த்துறை

கைதொழக் கடுவினை கழலல் ஆகுமே.


உய்தியை நல்கிடும் ஒருவன் - முக்தியை அளிக்கும் ஒப்பற்றவன்;

உத்தமன் - மிகவும் சிறந்தவன்;

மை திகழ் மிடறினன் - கருநிறம் திகழும் கண்டம் உடையவன்; (மை - கருநிறம்); (மிடறு - கண்டம்);

மலையை வில் எனச் செய்தவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;

செய் அணி திருப்பராய்த்துறை - அப்பெருமான் உறையும் தலமான வயல் சூழ்ந்த திருப்பராய்த்துறையை; (செய் - வயல்);

கைதொழக் கடுவினை கழலல் ஆகுமே - கையால் தொழுது வணங்கினால் நம் கொடிய வினையெல்லாம் நீங்கும்; (கடுமை - கொடுமை); (கழலல் - கழல்தல் - நீங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.32.3 - "ஏடகம் கண்டு கைதொழுதலுங் கவலைநோய் கழலுமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.217 - இடையாறு - தடுமாற்றைத் தருபாவ

2019-06-27

T.217 - இடையாறு - தடுமாற்றைத் தருபாவ

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதாத்தத் .. தனதான)


தடுமாற்றைத் .. தருபாவத்

.. தளைநீக்கிப் .. புரவாயே

படுகூற்றைக் .. குமைகாலா

.. பலியேற்றுத் .. திரிவோனே

சுடுநீற்றைப் .. புனைவோனே

.. தொழுவார்க்குத் .. துணையானாய்

இடுகாட்டிற் .. சுழல்பாதா

.. இடையாற்றுப் .. பெருமானே.


பதம் பிரித்து:

தடுமாற்றைத் தரு-பாவத்

.. தளை நீக்கிப் புரவாயே;

படு-கூற்றைக் குமை-காலா;

.. பலியேற்றுத் திரிவோனே;

சுடுநீற்றைப் புனைவோனே;

.. தொழுவார்க்குத் துணை ஆனாய்;

இடுகாட்டிற் சுழல்-பாதா;

.. இடையாற்றுப் பெருமானே.


தடுமாற்றைத் தரு-பாவத் தளை நீக்கிப் புரவாயே - மனக்கலக்கத்தைத் தரும் தீவினை என்ற தளையை அழித்துக் காத்தருள்க; (தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 1.105.6 - "ஆரூர் தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே"); (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);

படு-கூற்றைக் குமைகாலா - கொல்லும் கூற்றுவனை உதைத்து அழித்த காலனே; (படுத்தல் - கொல்லுதல்); (படு - கொடிய); (குமைத்தல் - அழித்தல்);

பலி ஏற்றுத் திரிவோனே - பிச்சையேற்றுத் திரிபவனே; (பலி - உணவு; பிச்சை);

சுடுநீற்றைப் புனைவோனே - சுட்ட திருநீற்றைப் பூசியவனே;

தொழுவார்க்குத் துணை ஆனாய் - வணங்கியவர்களுக்குத் துணை ஆனவனே;

இடுகாட்டில் சுழல்-பாதா - சுடுகாட்டில் சுழன்று ஆடும் பாதத்தை உடையவனே;

இடையாற்றுப் பெருமானே - இடையாறு என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.474 - சேத்திரக்கோவை - ஓடம் மல்கும்

2019-06-27

P. 474 - சேத்திரக்கோவை

------------------

(2017 டிசம்பர் மாதத்தில் தரிசித்த தலங்களில் பல தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)

(கலிவிருத்தம் - மா மா மா மா - வாய்பாடு)

(கலிவிருத்தம் - விளம் மா மா மா - வாய்பாடு)

(கலிவிருத்தம் - மாங்காய் மா மா மா - வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.91.1 - "பாட்டும் பாடிப் பரவித் திரிவார்")


முற்குறிப்பு: கலிவிருத்தப் பாடல்கள்; முதற்சீர் பொதுவாக மாச்சீர்; சில பாடல்களில் அச்சீர் விளம் / மாங்காய் என்ற அமைப்பில் வருவன;


1)

ஓடம் மல்கும் ஒற்றி யூரும்

மாடம் மல்கும் மயிலாப் பூரும்

வாடல் தீர்க்கும் வான்மி யூரும்

ஆடல் வல்லான் அமரும் பதியே.


* திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவான்மியூர்;


ஓடம் மல்கும் ஒற்றியூரும் - படகுகள் நிறைந்த (கடலோரத்தில் உள்ள தலமான) திருவொற்றியூரும்; (ஓடம் - தோணி; படகு);

மாடம் மல்கும் மயிலாப்பூரும் - மாடிவீடுகள் நிறைந்த மயிலாப்பூரும்; (மாடம் - மாடிவீடுகள்);

வாடல் தீர்க்கும் வான்மியூரும் - துன்பத்தைத் தீர்க்கும் திருவான்மியூரும்; (வாடல் - வாடுதல்; வருத்தம்);

ஆடல் வல்லான் அமரும் பதியே - கூத்தாடும் பெருமான் விரும்பி உறையும் தலங்கள்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (பதி - தலம்);


2)

வாவி திகழும் மாடம் பாக்கம்

பூவிற் பொலியும் மதுவுண் டளிகள்

காவிற் பாடும் கழுக்குன் றம்கண்

பாவும் நெற்றிக் கடவுள் பதியே.


* மாடம்பாக்கம், திருக்கழுக்குன்றம்;


வாவி திகழும் மாடம்பாக்கம் - குளம் சூழ்ந்த மாடம்பாக்கமும்; (வாவி - குளம்);

பூவில் பொலியும் மது உண்டு அளிகள் காவில் பாடும் கழுக்குன்றம் - பூவில் திகழும் தேனை உண்டு வண்டுகள் சோலையில் பாடும் திருக்கழுக்குன்றமும்; (அளி - வண்டு); (கா - சோலை);

கண் பாவும் நெற்றிக்-கடவுள் பதியே - (கண் பரவிய நெற்றியையுடைய கடவுள் = ) நெற்றிக்கண்ணை உடைய கடவுள் உறையும் தலங்கள்; (அப்பர் தேவாரம் - 7.94.9 - "திருப்பாதிரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே");


3)

எட்டுத் திக்கில் இலிங்கம் இலங்க

மட்டில் இன்பம் வழங்கும் இடமாம்

சுட்ட நீறு துதையப் பூசும்

அட்ட மூர்த்தி அண்ணா மலையே


* திருவண்ணாமலை


எட்டுத்-திக்கில் இலிங்கம் இலங்க - எட்டுத் திசைகளிலும் லிங்கங்கள் விளங்க;

மட்டு இல் இன்பம் வழங்கும் இடம் ஆம் - அளவற்ற இன்பத்தை அருளும் தலம் ஆகும்; (மட்டு - அளவு);

சுட்ட நீறு துதையப் பூசும் அட்டமூர்த்தி அண்ணாமலையே - வெந்த திருநீற்றை அழுந்தப் பூசியவனும் எட்டு வடிவங்களை உடையவனுமான சிவபெருமான் உறையும் திருவண்ணாமலை;


4)

பொல்லா மனிதர் மனத்தைப் போலக்

கல்லாய் மரங்கள் காண அயலே

கல்லால் நிழலாய் காவென் றேத்திச்

செல்வார்க் கருளும் திருவக் கரையே.


* திருவக்கரை;


பொல்லாதவர்களது மனத்தைப் போல ஊரின் ஒரு பகுதியில் கல்லாகிய மரங்கள் காணக்கிடக்க, ஊரின் இன்னொரு பகுதியில், "கல்லாலமரத்தின் அடியில் வீற்றிருப்பவனே! காத்தருளாய்" என்று போற்றிச் சென்று வழிபடும் அன்பர்களுக்கு அருளும் தலம் திருவக்கரை;


5)

அறையணி நல்லூர் அடியார் தங்கள்

குறையறு கோவல் வீரட் டம்தேன்

நிறைமலர்ச் சோலை நிலவும் இடையா

றறைகடல் நஞ்சுண் அடிகள் பதியே.


* அறையணிநல்லூர் (அரகண்ட-நல்லூர்), கோவல் வீரட்டம் (திருக்கோயிலூர்), திரு-இடையாறு;


அறையணி நல்லூர் - அறையணிநல்லூரும்;

அடியார்-தங்கள் குறை அறு கோவல் வீரட்டம் - பக்தர்களது குறைகளைத் தீர்க்கின்ற திருக்கூவலூர் வீரட்டமும்;

தேன் நிறை-மலர்ச்சோலை நிலவும் இடையாறு - மது நிறைந்த மலர்ப்பொழில் திகழும் திருவிடையாறும்;

அறை-கடல் நஞ்சு உண் அடிகள் பதியே - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட இறைவன் உறையும் தலங்கள்;


6)

பித்தன் நாமம் பெற்று கந்த

அத்தன் வெண்ணெய் நல்லூர் அனாதி

முத்தன் முண்டீச் சரமா மாத்தூர்

மத்தம் அணிந்தான் மகிழும் பதியே.


* திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஆமாத்தூர்;


குறிப்பு: "வெண்ணெய்நல்லூர், முண்டீச்சரம், ஆமாத்தூர், பித்தன் நாமம் பெற்று உகந்த அத்தன், அனாதிமுத்தன், மத்தம் அணிந்தான் மகிழும் பதியே" என்று இயைத்துப் பொருள்கொள்க;

பித்தன் நாமம் பெற்று கந்த அத்தன் வெண்ணெய்நல்லூர் - பித்தன் என்ற பெயரை ஏற்று மகிழ்ந்த தந்தை உறையும் திருவெண்ணெய்நல்லூரும்;

அனாதி-முத்தன் முண்டீச்சரம் - அனாதியாகவே முக்திநிலையில் இருப்பவன் உறையும் திருமுண்டீச்சரமும்;

ஆமாத்தூர் - திருவாமாத்தூரும்

மத்தம் அணிந்தான் மகிழும் பதியே - ஊமத்தமலரை அணிந்தவனுமான சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;


7)

நம்பியா ரூரர் நாவ லூர்தண்

அம்பொழில் சூழ்ந்த ஆமூர் எதிர்த்த

கம்பமா உரித்தான் கச்சூர் தேவர்

தம்பிரான் செம்பொற் சடையன் பதியே.


* திருநாவலூர், திருவாமூர், திருக்கச்சூர்;


நம்பி-ஆரூரர் நாவலூர் - சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூரும்;

தண்-அம்-பொழில் சூழ்ந்த ஆமூர் - குளிர்ந்த அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரும்;

கச்சூர் - திருக்கச்சூரும்;

எதிர்த்த கம்ப-மா உரித்தான் - போர்செய்த யானையின் தோலை உரித்தவனும்; (கம்ப மா - அசையும் இயல்புடைய விலங்கான யானை);

தேவர்தம் பிரான் - தேவர்கள் தலைவனும்;

செம்பொற்-சடையன் பதியே - செஞ்சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலங்கள்;


8)

பத்தணி முடியும் பாற எய்த

அத்திரத் தான்செய் இராமேச் சுரம்தென்

உத்தர கோச மங்கை ஓம்பும்

பத்தரைக் காக்கும் பரமன் பதியே.


* இராமேச்சுரம் (ராமேஸ்வரம்), உத்தரகோசமங்கை;


பத்து அணி முடியும் பாற எய்த அத்திரத்தான் செய் இராமேச்சுரம் - இராவணனது பத்து அழகிய கிரீடங்களை அணிந்த தலைகளும் அழியும்படி அம்பு எய்த இராமன் ஸ்தாபித்து வழிபட்ட ராமேஸ்வரமும்; (பாறுதல் - அழிதல்);

தென் உத்தரகோசமங்கை - அழகிய உத்தரகோசமங்கையும்;

ஓம்பும் பத்தரைக் காக்கும் பரமன் பதியே - போற்றும் பக்தர்களைக் காக்கின்ற பரமன் உறையும் தலங்கள்;


9)

சேணார் சோலைத் திருவா டானை

தூணார் சிற்பம் துலங்கும் பேரூர்

பேணா திருவர் பெரிதும் நேடிக்

காணா ஒருவன் கருதும் பதியே.


* திருவாடானை, பேரூர் (கோயம்புத்தூர் அருகே உள்ள தலம்);


சேண் ஆர் சோலைத் திருவாடானை - உயர்ந்த சோலை சூழ்ந்த திருவாடானையும்;

தூண் ஆர் சிற்பம் துலங்கும் பேரூர் - தூணில் அழகிய சிற்பங்கள் விளங்கும் பேரூரும்;

பேணாது இருவர் பெரிதும் நேடிக் காணா ஒருவன் கருதும் பதியே - தொழ எண்ணாத பிரமன் விஷ்ணு இவ்விருவரும் மிகவும் தேடியும் அவர்களால் அறிய ஒண்ணாத ஒப்பற்ற சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;


10)

அவிநாசி அழகார் முருகன் பூண்டி

புவிபோற்றும் பொன்னி பாய்ந ணாகை

குவியாத குற்ற நெஞ்சர்க் கில்லான்

அவிர்வேணி அண்ணல் அமரும் பதியே.


* அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா (பவானி);


அவிநாசி, அழகு ஆர் முருகன்பூண்டி - அவிநாசியும் அழகிய திருமுருகன்பூண்டியும்;

புவி போற்றும் பொன்னி பாய் நணா - உலகம் போற்றும் காவிரி பாயும் திருநணா என்ற பெயரையுடைய பவானியும்;

கை குவியாத குற்ற-நெஞ்சர்க்கு இல்லான் - கைகூப்பி வழிபடாத வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவனும்;

அவிர்-வேணி அண்ணல் அமரும் பதியே - பிரகாசமான சடையை உடைய தலைவனுமான சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;


11)

செடியறு திருச்செங் கோடு சீரார்

குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி

தடவரை நீங்கித் தவழ்ந்து வளையும்

கொடுமுடி முக்கட் குழகன் பதியே.


* திருச்செங்கோடு, கொடுமுடி;


செடி அறு திருச்செங்கோடு - துன்பத்தையும் பாவத்தையும் தீர்க்கும் திருச்செங்கோடும்; (செடி - துன்பம்; பாவம்);

சீர் ஆர் குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி - அழகும் பெருமையும் உடைய குடகுமலையில் தோன்றிய குளிர்ச்சி பொருந்திய காவிரியாறு;

தட-வரை நீங்கித் தவழ்ந்து வளையும் கொடுமுடி - பெரிய மலையை நீங்கித் தரையில் தவழ்ந்து (தெற்கிலிருந்து கிழக்குநோக்கி) வளைகின்ற இடமான கொடுமுடியும்; (தடம் - பெருமை); (வரை - மலை);

முக்கட்-குழகன் பதியே - முக்கண்ணனும் இளமையும் அழகும் உடையவனுமான சிவபெருமான் உறைகின்ற தலங்கள்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------