2019-06-29
P.475 - பராய்த்துறை
---------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அந்தாதி - "ஆவினில்" என்று தொடங்கி "ஆகுமே" என்று முடிந்து மண்டலித்துவரும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
ஆவினில் ஐந்துகந் தாடி நான்மறை
நாவினன் முடிமிசை நாறு கொன்றையன்
தேவியொர் பங்கினன் திருப்ப ராய்த்துறைக்
கோவினைத் தொழுதெழக் குறைகள் தீருமே.
ஆவினில் ஐந்து உகந்து ஆடி - பசுவிடமிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;
நான்மறை நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;
முடிமிசை நாறு கொன்றையன் - சென்னிமேல் மணம் கமழும் கொன்றையைச் சூடியவன்;
தேவி ஒர் பங்கினன் - உமைபங்கன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
திருப்பராய்த்துறைக் கோவினைத் தொழுதெழக் குறைகள் தீருமே - திருப்பராய்த்துறையில் உறையும் தலைவனான அப்பெருமானை வழிபட்டால் குறைகள் தீரும்;
2)
தீர்வதற் கருவினை தீர்க்க வல்லவன்
நீர்மலி கங்கையும் நிலவும் நாகமும்
சேர்திரு முடியினன் திருப்ப ராய்த்துறை
ஓர்பவர்க் கின்பங்கள் ஓங்கும் உண்மையே.
தீர்வதற்கு அருவினை தீர்க்க வல்லவன் - தீராத வினைகளைத் தீர்ப்பவன்;
நீர் மலி கங்கையும் நிலவும் நாகமும் சேர் திருமுடியினன் - கங்கை, சந்திரன், பாம்பு இவற்றைத் திருமுடிமேல் அணிந்தவன்;
திருப்பராய்த்துறை ஓர்பவர்க்கு இன்பங்கள் ஓங்கும் உண்மையே - அப்பெருமான் உறைகின்ற திருப்பராய்த்துறையைத் தியானிப்பவர்களுக்கு இன்பம் மிகும், இது நிச்சயம். (ஓர்தல் - எண்ணுதல்);
3)
உண்மையன் எவ்வித ஒப்பும் அற்றவன்
தண்மையன் வெம்மையன் தடவெற் பேந்திய
திண்மலி தோளினன் திருப்ப ராய்த்துறை
ஒண்மதி சூடியை ஓம்பல் இன்பமே.
உண்மையன் - மெய்ப்பொருள்;
எவ்வித ஒப்பும் அற்றவன் - இணையற்றவன்;
தண்மையன் வெம்மையன் - குளிர்ச்சியும் வெம்மையும் ஆயவன்;
தட-வெற்பு ஏந்திய திண்-மலி தோளினன் - பெரிய மேருமலையை (வில்லாக) ஏந்திய வலிமைமிக்க புஜங்களை உடையவன்; (வெற்பு - மலை);
திருப்பராய்த்துறை ஒண்மதி சூடியை ஓம்பல் இன்பமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற அந்தச் சந்திரசேகரனைப் போற்றுதல் இன்பமே; (ஒண்மதி - ஒளியுடைய சந்திரன்); (ஓம்பல் - ஓம்புதல் - பேணுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "சிற்றம்பலம் மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே");
4)
இன்பினை அடியவர்க் கீயும் முக்கணன்
என்பினைப் பூண்டவன் ஏர்கொள் காவிரித்
தென்கரைத் திகழ்தரு திருப்ப ராய்த்துறைப்
புன்சடை யான்கழல் போற்று நெஞ்சமே.
இன்பினை அடியவர்க்கு ஈயும் முக்கணன் - அடியார்களுக்கு இன்பத்தைத் தரும் நெற்றிக்கண்ணன்; (இன்பு - இன்பம்);
என்பினைப் பூண்டவன் - எலும்பை அணிந்தவன்; (என்பு - எலும்பு);
ஏர்கொள் காவிரித் தென்கரைத் திகழ்தரு திருப்பராய்த்துறைப் - அழகிய காவிரியின் தென்கரையில் திகழ்கின்ற திருப்பராய்த்துறையில் உறைகின்ற; (ஏர் - அழகு); (தருதல் - ஒரு துணைவினை);
புன்சடையான் கழல் போற்று நெஞ்சமே - செஞ்சடையானது திருவடியை, மனமே நீ வழிபடுவாயாக;
5)
நெஞ்சினில் அன்பொடு நினைந்த மார்க்கண்டர்
உஞ்சிடக் கூற்றினை உதைத்த சங்கரன்
செஞ்சடைப் புண்ணியன் திருப்ப ராய்த்துறை
நஞ்சடை மிடறினன் நாமம் ஓதுமே.
நெஞ்சினில் அன்பொடு நினைந்த மார்க்கண்டர் உஞ்சிடக் - நெஞ்சில் அன்போடு எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உய்யும்படி; (உஞ்சிட - உய்ந்திட என்பதன் போலி); (அப்பர் தேவாரம் - 5.50.3 - "உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்");
கூற்றினை உதைத்த சங்கரன் - காலனை உதைத்த சங்கரன்;
செஞ்சடைப் புண்ணியன் - செஞ்சடையை உடைய புண்ணியமூர்த்தி;
திருப்பராய்த்துறை நஞ்சு அடை மிடறினன் நாமம் ஓதுமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற ஆலகாலத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டன் திருநாமத்தை ஓதுங்கள்; (மிடறு - கண்டம்);
6)
ஓதிவான் ஏத்தநஞ் சுண்ட அண்ணலோர்
பாதிமா தாயவன் பால்வெண் ணீற்றினன்
தீதிலாப் புகழினன் திருப்ப ராய்த்துறைச்
சோதியான் கழல்தொழத் துன்பம் நீங்குமே.
ஓதி வான் ஏத்த நஞ்சு உண்ட அண்ணல் - தேவர்கள் துதித்து வழிபட, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட பெருமான்;
ஓர் பாதி மாது ஆயவன் - ஒரு பாதி பெண் ஆனவன்;
பால்வெண்ணீற்றினன் - பால் போன்ற வெண்ணிறமுடைய திருநீற்றைப் பூசியவன்;
தீது இலாப் புகழினன் - குற்றமற்ற புகழை உடையவன்;
திருப்பராய்த்துறைச் சோதியான் கழல் தொழத் துன்பம் நீங்குமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற ஒளிவடிவினனான சிவபெருமானது திருவடியை வழிபட்டால் துன்பம் விலகும்; (அப்பர் தேவாரம் - 5.90.10 - "மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்");
7)
நீங்குதற் கருவினை நீக்க வல்லவன்
பூங்கழல் போற்றிடப் பொன்னித் தண்புனல்
தேங்கிடு வயலணி திருப்ப ராய்த்துறைக்
கோங்கொடு சடைமிசைக் கொன்றை சூடியே.
நீங்குதற்கு அருவினை நீக்க வல்லவன், பூங்கழல் போற்றிடப் - அழகிய திருவடியை வணங்கினால் தீராத தீவினையையும் தீர்ப்பவன்;
பொன்னித் தண்புனல் தேங்கிடு வயல் அணி திருப்பராய்த்துறைக் - (திருவடியைப் போற்றுகின்ற அந்தக்) காவிரியின் குளிர்ந்த நீர் தேங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் உறைகின்ற; (அப்பர் தேவாரம் - 5.2.10 - "தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்"); (குறிப்பு : "பூங்கழல் போற்றிடப்" - என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாய் இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலும் ஆம். இங்கே, - "பூங்கழல் போற்றிடு அப்-பொன்னித் தண்புனல்");
கோங்கொடு சடைமிசைக் கொன்றை சூடியே - சடையின்மேல் கோங்கமலரையும் கொன்றைமலரையும் சூடியவன்; (அப்பர் தேவாரம் - 6.52.10 - "கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணியான் காண்");
8)
சூடெழு நெஞ்சுடைத் தூர்த்தன் பத்துவாய்
பாடிட ஊன்றிய பரமன் நஞ்சணி
சேடியல் மிடறினன் திருப்ப ராய்த்துறை
நாடிய நாதனை நம்பி ஏத்துமே.
சூடு எழு நெஞ்சுடைத் தூர்த்தன் பத்துவாய் பாடிட ஊன்றிய பரமன் - மனம் கொதித்துக் கயிலையைப் பெயர்த்த கொடியவனான இராவணனது பத்து-வாய்களும் பாடும்படி ஒரு விரலை ஊன்றிய பரமன்; (தூர்த்தன் - கொடியோன்);
நஞ்சு அணி சேடு இயல் மிடறினன் - ஆலகாலத்தை அணிந்த பெருமை திகழும் கண்டத்தை உடையவன்; (சேடு - பெருமை; அழகு); (இயல்தல் - பொருந்துதல்); (மிடறு - கண்டம்);
திருப்பராய்த்துறை நாடிய நாதனை நம்பி ஏத்துமே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை விரும்பித் துதியுங்கள்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);
9)
ஏத்திய அடியவர் இடரைத் தீர்ப்பவன்
மூத்தவன் அரியொடு முளரி யான்தொழத்
தீத்திரள் ஆயவன் திருப்ப ராய்த்துறை
நேத்திரம் மூன்றுடை நிமலன் நீர்மையே.
ஏத்திய அடியவர் இடரைத் தீர்ப்பவன் - போற்றும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;
மூத்தவன் - அனாதியே உள்ளவன்;
அரியொடு முளரியான் தொழத் தீத்திரள் ஆயவன் - திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் தொழுமாறு எல்லையின்றி நீண்ட ஜோதி ஆனவன்; (முளரி - தாமரை);
திருப்பராய்த்துறை - திருப்பராய்த்துறையில் உறைகின்ற;
நேத்திரம் மூன்றுடை நிமலன் நீர்மையே - முக்கண்ணுடைய தூயன் தன்மைகள் (/பெருமை); (நீர்மை - தன்மை);
10)
நீர்மலி வேணியன் நீற்றைப் பூசிடார்
நேர்மையி லார்உரை நீங்கி வம்மினீர்
சீர்மிக அருளிடும் திருப்ப ராய்த்துறைக்
கார்மலி கண்டனைக் கருதி உய்ம்மினே.
நீர் மலி வேணியன் நீற்றைப் பூசிடார் - கங்காதரனது திருநீற்றைப் பூசாதவர்கள்;
நேர்மை இலார் உரை நீங்கி வம்மின் நீர் - நேர்மையில்லாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கி வாருங்கள் நீங்கள்;
சீர் மிக அருளிடும் - செல்வம், புகழ், முதலியனவெல்லாம் மிக அருள்கின்ற; (சீர் - செல்வம்; சிறப்பு; புகழ்);
திருப்பராய்த்துறைக் கார் மலி கண்டனைக் கருதி உய்ம்மினே - திருப்பராய்த்துறையில் உறைகின்ற நீலகண்டனை விரும்பித் தியானித்து வழிபட்டு உய்யுங்கள்; (கார் - கருநிறம்);
11)
உய்தியை நல்கிடும் ஒருவன் உத்தமன்
மைதிகழ் மிடறினன் மலையை வில்லெனச்
செய்தவன் செய்யணி திருப்ப ராய்த்துறை
கைதொழக் கடுவினை கழலல் ஆகுமே.
உய்தியை நல்கிடும் ஒருவன் - முக்தியை அளிக்கும் ஒப்பற்றவன்;
உத்தமன் - மிகவும் சிறந்தவன்;
மை திகழ் மிடறினன் - கருநிறம் திகழும் கண்டம் உடையவன்; (மை - கருநிறம்); (மிடறு - கண்டம்);
மலையை வில் எனச் செய்தவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;
செய் அணி திருப்பராய்த்துறை - அப்பெருமான் உறையும் தலமான வயல் சூழ்ந்த திருப்பராய்த்துறையை; (செய் - வயல்);
கைதொழக் கடுவினை கழலல் ஆகுமே - கையால் தொழுது வணங்கினால் நம் கொடிய வினையெல்லாம் நீங்கும்; (கடுமை - கொடுமை); (கழலல் - கழல்தல் - நீங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.32.3 - "ஏடகம் கண்டு கைதொழுதலுங் கவலைநோய் கழலுமே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment