Showing posts with label வழுவூர். Show all posts
Showing posts with label வழுவூர். Show all posts

Saturday, August 1, 2026

P.506 - வழுவூர் - இலைமூன்று

2020-06-17

P.506 - வழுவூர்

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

இலைமூன் றுடைவேல் தனையேந்தி

மலைபோல் மதமா உரிமூடி

அலையார் சடையான் இடமென்பர்

மலரார் பொழில்சூழ் வழுவூரே.


இலை-மூன்றுடை வேல்தனைந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;

மலை போல் மதமா உரிமூடி - மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);

அலை ஆர் சடையான் இடம் என்பர் - அலை நிறைந்த (= கங்கையை அணிந்த) சடையை உடையவன் உறையும் தலம்;

மலர் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்;


2)

மதவேள் உடலைப் பொடிசெய்தான்

மதியோ டரவைச் சடைவைத்தான்

முதலாய்க் கடையாம் பெருமானூர்

மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.


மதவேள் உடலைப் பொடிசெய்தான் - மன்மதனைச் சாம்பலாக்கியவன்;

மதியோடு அரவைச் சடை வைத்தான் - சந்திரனையும் பாம்பையும் சடையில் ஒன்றாகச் சேர்த்தவன்;

முதலாய்க் கடை-ம் பெருமான் ஊர் - ஆதியும் அந்தமும் ஆன பெருமான் உறையும் தலம்;

மது-வீப்-பொழில் சூழ் வழுவூரே - தேன்மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்; (வீ - பூ);


3)

அணையார் புர(ம்)மூன் றெரிசெய்தாய்

துணைநீ எனவே தொழுவார்க்குப்

புணையாய் வருவான் இடமென்பர்

மணமார் பொழில்சூழ் வழுவூரே.


"அணையார் புரம் மூன்று எரிசெய்தாய் - "பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (அணையார் - பகைவர்);

துணை நீ" எனவே தொழுவார்க்குப் - நீயே துணை" என்று தொழும் அன்பர்களுக்கு;

புணையாய் வருவான் இடம் என்பர் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாக வருபவன் உறையும் தலம்; (புணை - தெப்பம்);

மணம் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மணம் மிக்க சோலை சூழ்ந்த வழுவூர்;


4)

குளமாய் இருகண் கசியன்பர்

உளமே தளியா மகிழண்ணல்

இளமா விடையான் இடமென்பர்

வளமார் வயல்சூழ் வழுவூரே.


குளமாய் இருகண் கசி அன்பர் உளமே தளியா மகிழ் அண்ணல் - இருகண்களும் குளமாகிக் கசிகின்ற பக்தர்களது உள்ளமே கோயிலாக மகிழ்கின்ற பெருமான்;

இள-மா-விடையான் இடம் என்பர் - இளைய பெரிய எருதினை ஊர்தியாக உடையவன் உறையும் தலம்;

வளம் ஆர் வயல் சூழ் வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்;


5)

அருமா விடமுண் டமுதீந்த

பெருமான் சடைமேற் பிறைசூடி

அருவாய் உருவாம் அரனூராம்

வருவார் மகிழும் வழுவூரே.


அரு-மா-விடம் உண்டு அமுது ஈந்த பெருமான் - கொடிய பெரிய ஆலகாலத்தை உண்டு தேவர்களுக்கு அமுதத்தை அளித்த பெருமான்;

சடைமேல் பிறைசூடி - சடையில் சந்திரனைச் சூடியவன்;

அருவாய் உருவாம் அரன் ஊர் ஆம் - அருவும் உருவும் ஆகும் அரன் உறையும் தலம்; (அரு - உருவமின்மை);

வருவார் மகிழும் வழுவூரே - வந்து தொழும் பக்தர்கள் வரம் பெற்று மகிழ்கின்ற வழுவூர்;


6)

பண்டங் கழலைத் தொழுதேத்தும்

வெண்டிங் களைவே ணியில்வைத்தான்

கண்டங் கரியான் இடமென்பர்

வண்டின் னிசைசெய் வழுவூரே.


பண்டு அங்-கழலைத் தொழுதேத்தும் வெண்-திங்களை வேணியில் வைத்தான் - முன்பு அழகிய திருவடியை வழிபட்ட வெண்பிறையைச் சடையில் தரித்தவன்; (பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);

கண்டம் கரியான் இடம் என்பர் - நீலகண்டன் உறையும் தலம்;

வண்டு இன்னிசை செய் வழுவூரே - வண்டுகள் இனிய இசை பாடுகின்ற (சோலை சூழ்ந்த) வழுவூர்;


7)

பறிமா மலரால் பணிவார்தம்

செறிதீ வினைதீர்த் தருள்தேவன்

பொறியார் அரவம் திகழ்மார்பன்

மறியார் கரனூர் வழுவூரே.


பறி-மா-மலரால் பணிவார்தம் செறி-தீவினை தீர்த்தருள் தேவன் - பறித்த அழகிய பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்களது செறிந்த தீவினையையெல்லாம் தீர்த்து அருளும் தேவன்;

பொறி ஆர் அரவம் திகழ் மார்பன் - புள்ளிகள் திகழும் பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்; (பொறி - புள்ளி);

மறி ஆர் கரன் ஊர் வழுவூரே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் வழுவூர்; (மறி - மான்கன்று);


8)

செழுமா மலைபேர்த் தவன்வாடி

அழுமா றுநெரித் திசைகேட்டான்

தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்

மழுவாட் பரனூர் வழுவூரே.


செழு-மா-மலை பேர்த்தவன் வாடி அழுமாறு நெரித்து இசை கேட்டான் - செழுமையான கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடி அழும்படி அவனை நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டவன்;

தொழுவார்க்கு அருளும் தொழில்-ஏந்தல் - தொழுவார்க்கு அருள்கின்ற தொழிலை உடைய அரசன்; (ஏந்தல் - அரசன்; பெருமையிற் சிறந்தோன்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே" - உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில்);

மழுவாட் பரன் ஊர் வழுவூரே - மழுவாளை ஏந்திய பரமன் உறையும் தலம் வழுவூர்;


9)

நறைமா மலரான் அரிகாணா

இறையான் எழிலார் உமைபங்கன்

கறையார் மிடறன் கயிலாயன்

மறைநா வினனூர் வழுவூரே.


நறை-மா-மலரான் அரி காணா இறையான் - வாசனையுடைய தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாத இறைவன்; (இறையான் - இறைவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.46.5 - "நாலூர் மயானத்தெம் இறையான்");

எழில் ஆர் உமைபங்கன் - அழகிய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;

கறை ஆர் மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

கயிலாயன் - கயிலைமலையில் இருப்பவன்;

மறை-நாவினன் ஊர் வழுவூரே - வேதங்களைப் பாடியருளிய பெருமான் உறையும் தலம் வழுவூர்;


10)

மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்

மதியா தடைமின் மகிழ்வெய்த

கொதியா வருகூற் றுதைசெய்தான்

மதிசூ டியிடம் வழுவூரே.


மதியீனர்கள் சொல் புறன்-எல்லாம் மதியாது, அடைமின் மகிழ்வு எய்த - அறிவீனர்கள் சொல்லும் பழிச்சொற்களையெல்லாம் மதிக்கவேண்டா; இன்பம் எய்த அடையுங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

கொதியா வரு கூற்று உதைசெய்தான் - மார்கண்டேயரைக் கொல்லக் கோபத்தோடு வந்த காலனை உதைத்தவன்; (கொதியா வரு - கொதித்து வந்த - சினந்து வந்த); (சம்பந்தர் தேவாரம் - 1.30.1 - "கொதியா வருகூற்றை யுதைத்தவர்");

மதிசூடி இடம் வழுவூரே - சந்திரசேகரன் உறையும் தலமான வழுவூரை;


11)

பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்

பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்

துணிவெண் பிறையன் சுடுநீற்றன்

மணிகண் டனிடம் வழுவூரே.


பணிகின்றவர்தம் பய(ம்) நீக்கிப் - வணங்கும் அடியார்களது அச்சத்தைப் போக்கி;

பிணி வல்வினை தீர்த்தருள் பெம்மான் - அவர்களது உடல்நோய்களையும் அவர்களைப் பிணித்துள்ள வலிய வினையையும் தீர்த்தருளும் பெருமான்; (பிணிவல்வினை - 1. உடற்பிணியும் வலிய வினையும்; 2. பிணித்துள்ள வலிய வினை);

துணி-வெண்-பிறையன் - ஒளிவீசும் நிலாத்துண்டத்தைச் சூடியவன்;

சுடுநீற்றன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன்;

மணிகண்டன் இடம் வழுவூரே - நீலகண்டன் உறையும் தலம் வழுவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Sunday, June 28, 2026

P.504 - வழுவூர் - வானோர்க்கு இரங்கி

2020-05-11

P.504 - வழுவூர்

--------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தனதான தான, தனதான தான, தனதான தான தனனா - சந்தம்; முதற்சீர் "தானான" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


வானோர்க்கு இரங்கி மலைவில்லை ஏந்தி மதில்-மூன்று எரித்த ஒருவன் - தேவர்களுக்கு இரங்கி, மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்த ஒப்பற்றவன்;

தேன் ஆர்க்கும் வாச-மலரோடு, பாம்பு, திரை ஆரும் ஆறு புனைவான் - வண்டுகள் ஒலிக்கும் மணம் மிக்க பூக்களோடு, நாகம், அலை மிகுந்த கங்கை இவற்றைச் சூடியவன்; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

தான் நோக்கும் அன்பர் வினை தீருமாறு தயை செய்யும் நல்ல தலைவன் - தன்னைத் தியானிக்கும் பக்தர்களது வினை தீரும்படி அருள்செய்யும் நல்ல தலைவன்; (தான் - அவன்); (நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.49.3 - "தானோக்குந் தன்னடியவர் நாவினில் தேனோக்குந் திருவெண்கா டடைநெஞ்சே");

மான்-நோக்கி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மான் போன்ற பார்வையை உடைய உமை அஞ்சும்படி யானையைத் தோலுரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 3.58.3 - "நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி மானன நோக்கிதன்னோ டுடனாவது");

(மானோக்கி - முற்பிரயோக உதாரணம் - திருவிளையாடற் புராணம் - பழிஅஞ்சின படலம் - "வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்"; / அகநானூறு - 91 - "மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே");


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


மதன் ஆகம் வேவ நுதலால் விழித்த மணிகண்டன் - மன்மதனது உடம்பு வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் விழித்த நீலகண்டன்; (நுதல் - நெற்றி; இங்கே, நெற்றிக்கண்ணைச் சுட்டியது);

ஆறுமுகம் ஆர் சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர் தீர்த்த நல்ல துணைவன் - ஆறுமுகங்கள் உடைய பிள்ளையை அருளித் தேவர்களது துன்பத்தைத் தீர்த்த நல்ல துணைவன்; (சுதன் - மகன்);

கதநாகம் ஆறு தரி சென்னி மீது கடி நாறு கொன்றை புனைவான் - சீறும் பாம்பையும் கங்கையையும் தரித்த திருமுடிமேல் மணம் கமழும் கொன்றையையும் அணிந்தவன்; (கதம் - கோபம்); (கடி - வாசனை);

மத-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - மதயானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (வாரணம் - யானை); (உரிசெய்தல் - தோலை உரித்தல்);


3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


நலியாத வண்ணம் அடியார்க்கு நாளும் நலம் நல்குகின்ற பெருமான் - அடியவர்கள் துன்புறாதபடி அவர்களுக்கு எப்பொழுதும் நலங்களை அருள்கின்ற பெருமான்;

பொலி-ஆரமாக அரவம் புனைந்த புரிநூலன் - திகழ்கின்ற மாலையாகப் பாம்பை அணிந்தவன், மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்; (ஆரம் - மாலை);

இண்டை-மதியம், ஒலி ஆர் தரங்கம் உடை ஆறு சூடி - தலையில் அணியும் இண்டைமாலை போலத் திங்களையும் ஒலி மிக்க அலைகளையுடைய கங்கையையும் சூடியவன்; (இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);

ஒளிநீறு பூசும் ஒருவன் - ஒளியுடைய திருநீற்றைப் பூசும் ஒப்பற்றவன்;

வலி ஆர் களிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிமை மிக்க யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பல தேவர் வேண்ட அவர்தம் ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன் - இருதிருவடிகளை ஏத்தி வழிபட்டுப் பல தேவர்கள் வேண்டவும் அவர்களுக்கு இரங்கி, அவர்களுடைய துன்பமெல்லாம் தீரும்படி வடிவேலை ஏந்துகின்ற முருகனை அருளிய இறைவன்; (ஏதம் - துன்பம்);

வாதங்கள் செய்த அமண் மாய வைகை நதி ஏடு நீந்த வருவான் - பலவகை வாதுகள் செய்த சமணர்கள் அழியும்படி வைகைநதியில் சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றை எதிர்த்து நீந்திச் செல்லும்படி அருள்புரிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் 3.113.12 - "பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே");

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - யானை ஒன்றை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


கல்-ஆனை முன்பு பலர்முன் கரும்பு களியோடு தின்ன வருவான் - முன்னொரு சமயத்தில் பலரும் காணும்படி கல்-யானை கரும்பை மகிழ்ந்து தின்னும்படி சித்தராக வந்தவன்; (திருவிளையாடற் புராணத்தில் "கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்" காண்க);

கொல்-ஆனை முன்னர் உழவார-அன்பர்தமை நீங்கி ஓட அருள்வான் - உழவாரப்பணி செய்த அன்பரான திருநாவுக்கரசரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை அவரைவிட்டு விலகி ஓடிச்செல்லும்படி அருள்செய்தவன்; (பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றைக் காண்க); (அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" - இப்பதிகக் குறிப்பைக் காண்க);

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படை ஈந்த நாதன் உமைகோன் - நல்லவனான சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்த அர்ஜுனனுக்கு அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அளித்த தலைவன், உமாபதி; (படை - ஆயுதம்);

வல்-ஆனைதன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


இன-வீ எடுத்து மண-மாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார் - சிறந்த மலர்களைத் தேர்ந்தெடுத்து வாசனை மிக்க மாலைகள் கட்டி இருதிருவடியில் இட்டு மகிழும் பக்தர்கள்; (வீ - பூ);

இன(ம்) மாநிலத்தில் இடர் ஆர் பிறப்பில் இளையாத வண்ணம் அருள்வான் - இன்னும் இவ்வுலகில் துன்பம் மிக்க பிறப்புகளில் உழன்று வருந்தாதபடி அருள்பவன்; (இனம் - இன்னம்; இடைக்குறை விகாரம்); (இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

முனம் ஓர் பொருப்பை வளைவித்து மூன்று புரம் வேவ நக்க முதல்வன் - முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சிரித்த முதல்வன்; (பொருப்பு - மலை); (சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன்");

வன-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - காட்டில் திரியும் இயல்புடைய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


7)

நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்

கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்

பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ

மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


நெய் ஆர்ந்த தீபம், மணம் ஆர்ந்த தூபம், நிறை அன்பு கொண்டு, மலரும் கை ஏந்தி, வாழ்த்தும் ஒரு மாணி கண்டு கருமேதியானை முனிவான் - கையில் நெய்த்தீபம், வாசப்புகை, பூக்கள் இவற்றையெல்லாம் ஏந்தி மிகுந்த அன்போடு வழிபாடு செய்த ஒப்பற்ற மார்க்கண்டேயரது பக்தியைக் கண்டு மகிழ்ந்து, கரிய எருமையை வாகனமாக உடைய காலனைச் சினந்து உதைத்தவன்; (மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);

பை ஆர்ந்த பாம்பை அணி மார்பன் எந்தை - படமுடைய பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன், எம் தந்தை; (பை - பாம்பின் படம்);

பனிவெற்பு மங்கை வெருவ, மை ஆர்ந்த மேனி மதமா உரித்து, வழுவூரில் நின்ற பரனே - இமவான் மகளான உமை அஞ்சும்படி, கரிய உடலையுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (மை - கருநிறம்); (மதமா - யானை);


8)

கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்

நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்

உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்

வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


கரையற்ற கோபம் எழ, வானில் ஓங்கு கயிலாயம் வீச வரு-கோன் - எல்லையற்ற சினம் பொங்க, வானில் ஓங்கிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்த இலங்கை மன்னனான இராவணனது; (வீசுதல் - எறிதல்);

நிரை உற்ற பத்துமுடி-வாய் அரற்ற விரல் ஒன்றை ஊன்று நிமலன் - வரிசையாக அமைந்த பத்துத்தலைகளில் இருக்கும் வாய்கள் எல்லாம் ஓலமிட்டு அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய தூயன்; (நிரை - வரிசை);

உரை அற்ற மோன நிலை உற்று நால்வர் உடன் ஆன ஆலநிழலன் - பேசாத மௌனநிலையில் இருந்து சனகாதியர்களோடு கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.38.7 - "இருந்து நால்வரொ டானிழல்லறம் உரைத்ததும்");

வரை ஒத்த மேனி மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (வரை - மலை);


9)

அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா

உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்

இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்

மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


அலைமேல் கிடந்த திருமாலும் நாறும் அலர்மேலினானும் அறியா - பாற்கடல்மேல் பள்ளிகொண்ட திருமாலாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனாலும் அறியப்படாத; (அலர் - மலர்);

உலவாத சோதி உருவோடு உயர்ந்த ஒருவன் - அழிவற்ற ஒளிப்பிழம்பு வடிவில் ஓங்கிய ஒப்பற்றவன்;

சிவந்த சடையன் - செஞ்சடையை உடையவன்;

இலை மூன்று காட்டும் அயில்வேலும் மானும் எரியும் தரித்த இறைவன் - கூர்மையான திரிசூலம், மான், தீ, இவற்றையெல்லாம் கையில் ஏந்திய இறைவன்; (அயில் - கூர்மை);

மலை போல் எதிர்ந்த மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடையதும் போர் செய்ததுமான யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்;


10)

பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்

கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்

மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


பொய்க்கு என்றும் நாணம் இலர் ஆகி நீறு புனையார்க்கு நன்மை புரியான் - என்றும் கூசாமல் பொய் பேசித் திருநீறு பூசாமல் உழல்கின்றவர்களுக்கு அருள் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறை ஆர்ந்த கண்டம் உடையான் - கசக்கின்ற ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அருளிய நீலகண்டன்; (கைத்தல் - கசத்தல்);

கைக்கொண்ட போது கழல் இட்ட அன்பர் கலி தீர நல்கு வரதன் - கைகளில் பூக்களை ஏந்தித் திருவடியில் தூவிய பக்தர்களது துன்பம் தீரும்படி வரம் அருள்கின்ற வரதன்; (போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);

மைக்-கண்ணி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மை அணிந்த கரிய கண்களை உடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


11)

படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்

கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்

மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


படம் அஞ்சு கொண்ட அரைநாண் அணிந்து, "பலி அட்டும்" என்று திரிவான் - ஐந்து படங்களையுடைய பாம்பை (= ஐந்தலை நாகத்தை) அரைநாணாகக் கட்டிப், "பிச்சை இடுங்கள்" என்று உழல்பவன்; (பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);

கடல்-நஞ்சை உண்டு மணி போல் இலங்கு கறை ஏற்ற கண்டம் உடையான் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு, நீலமணி போல ஒளிவீசும் கறையைக் கண்டத்தில் உடையவன்;

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன் - கூத்துகள் ஆடுவதற்குச் சிறந்த இடமாகச் சுடுகாட்டை விரும்பும் இறைவன்;

மடமங்கை அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - அழகிய இளமையுடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, May 28, 2026

P.497 - வழுவூர் - இளங்கிளை நாயகி

2020-02-12

P.497 - வழுவூர்

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தனதான - சந்தம்;

விளம் விளம் புளிமாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


முற்குறிப்பு: இந்தப் பதிகத்தில் அடியீற்றுச்சீர் "தனதான" என்ற சந்தம். (மேலே சுட்டிய சம்பந்தர் தேவாரத்தில் அடியீற்றுச்சீர் "தானதனா" என்ற சந்தம்).

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

இளங்கிளை நாயகி இடமானான்

களங்கறை திகழிறை கழல்பேணி

உளங்குளிர் அடியவர் உறுமூராம்

வளங்கிளர் குளமணி வழுவூரே.


இளங்கிளை நாயகி இடம் ஆனான் - இளங்கிளை நாயகி என்ற திருநாமத்தை உடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (* இளங்கிளை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

களம் கறை திகழ் இறை கழல் பேணி உளம் குளிர் அடியவர் உறும் ஊர் ஆம் - கண்டத்தில் கறை திகழும் இறைவனது திருவடியைப் போற்றி உள்ளம் மகிழும் பக்தர்கள் அடையும் ஊர் ஆவது; (களம் - கழுத்து); (உறுதல் - அடைதல்);

வளம் கிளர் குளம் அணி வழுவூரே - வளமும் அழகும் மிகுந்த குளம் திகழும் வழுவூர்; (கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்);


2)

மானையும் ஏந்திய மணிகண்டன்

தேனலர் சூடிய சிவனெம்மான்

ஆனையை உரிசெய்த அரனூராம்

வானணை கோபுர வழுவூரே.


மானையும் ஏந்திய மணிகண்டன் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய நீலகண்டன்; (மானையும் - உம் - எச்சவும்மை);

தேன்-அலர் சூடிய சிவன் எம்மான் - தேன்மலர்களைச் சூடிய சிவன், எம் தலைவன்;

ஆனையை உரிசெய்த அரன் ஊர் ஆம் - யானையைத் தோலுரித்த ஹரன் உறையும் ஊர் ஆவது;

வான் அணை கோபுர வழுவூரே - வானத்தைச் சென்றடையுமாறு உயர்ந்த (/ மேகம் அடைகின்ற உயர்ந்த) கோபுரம் திகழும் வழுவூர்; (வான் - ஆகாயம்; மேகம்);


3)

உணவிடும் எனமிக உழல்தேவன்

கணைதொடு மதனுடல் பொடிசெய்தான்

பண(ம்)மதி சூடிய பரனூராம்

மண(ம்)மலி பொழிலணி வழுவூரே.


"உணவு இடும்" என மிக உழல் தேவன் - (கையில் மண்டையோட்டை ஏந்தி) "உணவு இடுங்கள்" என்று பிச்சைக்குத் திரியும் தேவன்;

கணை தொடு மதன் உடல் பொடிசெய்தான் - மலர்க்கணையை ஏவிய மன்மதனது உடலைச் சாம்பலாக்கியவன்; (மதன் - காமன்);

பணம் மதி சூடிய பரன் ஊர் ஆம் - நாகத்தையும் சந்திரனையும் சூடிய பரமன் உறையும் ஊர் ஆவது; (பணம் - பாம்பின் படம்; நாகம்);

மண(ம்)மலி பொழில் அணி வழுவூரே - மணம் கமழும் சோலை திகழும் வழுவூர்;


4)

எரியன நிறமணி எழில்மேனிப்

பெரியவன் இணையிலி பிணியில்லான்

கரியதன் அதளுரி கரனூராம்

வரியளி அறைபொழில் வழுவூரே.


எரி அன நிறம் அணி எழில் மேனிப் பெரியவன் - தீப் போன்ற நிறம் திகழும் அழகிய திருமேனியை உடைய பெரியவன்; (எரி - நெருப்பு); (அன - அன்ன - போன்ற);

இணையிலி - ஒப்பற்றவன்;

பிணி இல்லான் - பந்தங்களும் நோய்களும் இல்லாதவன்;

கரியதன் அதள் உரிரன் ஊர் ஆம் - யானையின் தோலை உரித்த கையினன் உறையும் தலம் ஆவது; (கரி - யானை); (அதள் - தோல்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "பெருவலியினன் நலமலிதரு கரன்");

வரி-அளி அறை பொழில் வழுவூரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலை திகழும் வழுவூர்; (அளி - வண்டு); (அறைதல் - ஒலித்தல்);


5)

புயலன மணியது புனைகண்டன்

அயிலுறு வேலினன் அடையாதார்

எயிலெரி சிலைவளை இறையூராம்

வயலிடைக் கயலுகள் வழுவூரே.


புயல் அமணியது புனை-கண்டன் - மேகம் போன்ற கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (புயல் - மேகம்); (அன - அன்ன - போன்ற);(மணியது - மணி; அது - பகுதிப்பொருள்விகுதி); (புனைதல் - அணிதல்);

அயில் உறு வேலினன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);

அடையாதார் எயில் எரி சிலை வளை இறை ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை வளைத்த இறைவன் உறையும் தலம் ஆவது; (அடையாதார் - பகைவர்); (எயில் - கோட்டை); (சிலை - மலை; வில்);

வயலிடைக் கயல் உகள் வழுவூரே - வயலில் கயல்மீன்கள் பாய்கின்ற வழுவூர்; (உகளுதல் - தாவுதல்; ஓடித்திரிதல்);


6)

வெண்மழு வாளினன் விடையேறி

உண்மையில் உள்ளவன் ஒளிர்திங்கள்

அண்மையில் அரவணி அரனூராம்

வண்வயல் சூழ்தரு வழுவூரே.


வெண்மழு வாளினன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;

விடையேறி - இடபவாகனன்;

உண்மையில் உள்ளவன் - என்றும் இருப்பவன்; மெய்ப்பொருள்;

ஒளிர்-திங்கள் அண்மையில் அரவு அணி அரன் ஊர் ஆம் - ஒளிர்கின்ற சந்திரனுக்குப் பக்கத்தில் பாம்பை அணிந்த ஹரன் உறையும் தலம் ஆவது; (அண்மை - சமீபம்);

வண்வயல் சூழ்தரு வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்; (வண்மை - வளம்);


7)

மழவிடை ஊர்தியன் மணிநீரை

அழலன சடையிடை அடையண்ணல்

அழகிய மிடறுடை அரனூராம்

மழைநுழை பொழிலணி வழுவூரே.


மழவிடை ஊர்தியன் - இளைய எருதினை வாகனமாக உடையவன்;

மணிநீரை அழல் அன சடையிடை அடை அண்ணல் - தெளிந்த கங்கையாற்றைத் தீப் போன்ற செஞ்சடையில் அடைத்த பெருமான்; (மணிநீர் - பளிங்கு போலத் தெளிந்த நீர்); (அழல் - தீ);

அழகிய மிடறுடை அரன் ஊர் ஆம் - அழகிய நீலகண்டத்தை உடைய ஹரன் உறையும் தலம் ஆவது; (மிடறு - கண்டம்);

மழை நுழை பொழில் அணி வழுவூரே - மேகம் நுழைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மழை - மேகம்);


8)

கண்டிகழ் நெற்றியன் கயிலாயம்

பண்டிகழ் தசமுகன் படவூன்றிப்

பண்டிகழ் இசைமகிழ் பரனூராம்

வண்டறை பொழிலணி வழுவூரே.


கண் திகழ் நெற்றியன் கயிலாயம் - நெற்றிக்கண்ணனது கயிலைமலையை; (கண் + திகழ் = கண்டிகழ்);

பண்டு இகழ் தசமுகன் பட ஊன்றிப் - முன்பு இகழ்ந்து பேசிப் பெயர்த்து எறிய முயன்ற பத்துத்தலை இராவணனை அவன் மிகவும் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (பண்டு - பண்டை - முன்னாள்); (தசமுகற் பட ஊன்றிப் - தசமுகனைப் பட ஊன்றி; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

பண் திகழ் இசை மகிழ் பரன் ஊர் ஆம் - (பின் இராவணன் பாடிய) பண் பொருந்திய இனிய கீதத்தை விரும்பிக் கேட்ட பரமன் உறையும் தலம் ஆவது; (பண் + திகழ் = பண்டிகழ்);

வண்டு அறை பொழில் அணி வழுவூரே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வழுவூர்;


9)

பதியென அயனரி பகர்நாள்தாம்

துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன்

அதிசயன் நதிபுனை அரனூராம்

மதிதொடு பொழிலணி வழுவூரே.


"பதி" ன அயன் அரி பகர்-நாள் தாம் துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன் - "நானே தலைவன்" என்று பிரமனும் திருமாலும் சொல்லி வாதுசெய்த அன்று அவர்கள் இருவரும் துதிக்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதி-வடிவினன்; (பகர்தல் - சொல்தல்); (தாம் - அவர்);

அதிசயன், நதி புனை அரன் ஊர் ஆம் - அதிசயனும் கங்கையைச் சடையில் அணிந்தவனுமான ஹரன் உறையும் தலம் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 3.23.3 - "ஐயன்நல் லதிசயன்");

மதி தொடு பொழில் அணி வழுவூரே - சந்திரன் தொடுமாறு உயர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர்;


10)

வஞ்சகர் சொல்நெறி மதியேன்மின்

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே

அஞ்சல ளித்தருள் அரனூராம்

மஞ்சடை பொழிலணி வழுவூரே.


வஞ்சகர் சொல் நெறி மதியேன்மின் - வஞ்சகர்கள் சொல்லும் மார்க்கங்களை நீங்கள் மதிக்கவேண்டா; (சொன்னெறி - சொல் நெறி); (மின் - ஏவற்பன்மை விகுதி);

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே அஞ்சல் அளித்தருள் அரன் ஊர் ஆம் - மனத்தில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் ஹரன் உறையும் தலம் ஆவது;

மஞ்சு அடை பொழில் அணி வழுவூரே - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மஞ்சு - மேகம்);


11)

காமனைக் காய்ந்தவன் கழல்போற்றித்

தூமலர் இட்டவர் துயர்தீர்த்துச்

சேமம ளித்தருள் சிவனூராம்

மாமதில் சூழ்தரு வழுவூரே.


காமனைக் காய்ந்தவன் கழல் போற்றித் - மன்மதனைச் சுட்டெரித்தவனது திருவடியைப் போற்றித்;

தூ-மலர் இட்டவர் துயர் தீர்த்துச் - தூய மலர்களை இட்டு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து;

சேமம் அளித்தருள் சிவன் ஊர் ஆம் - அவர்களைக் காக்கின்ற சிவன் உறையும் தலம் ஆவது; (சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; இன்பம்; காவல்);

மா மதில் சூழ்தரு வழுவூரே - பெரிய மதிலால் சூழப்பெற்ற வழுவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------