2020-02-12
P.497 - வழுவூர்
--------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தனதான - சந்தம்;
விளம் விளம் புளிமாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")
முற்குறிப்பு: இந்தப் பதிகத்தில் அடியீற்றுச்சீர் "தனதான" என்ற சந்தம். (மேலே சுட்டிய சம்பந்தர் தேவாரத்தில் அடியீற்றுச்சீர் "தானதனா" என்ற சந்தம்).
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
இளங்கிளை நாயகி இடமானான்
களங்கறை திகழிறை கழல்பேணி
உளங்குளிர் அடியவர் உறுமூராம்
வளங்கிளர் குளமணி வழுவூரே.
இளங்கிளை நாயகி இடம் ஆனான் - இளங்கிளை நாயகி என்ற திருநாமத்தை உடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (* இளங்கிளை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);
களம் கறை திகழ் இறை கழல் பேணி உளம் குளிர் அடியவர் உறும் ஊர் ஆம் - கண்டத்தில் கறை திகழும் இறைவனது திருவடியைப் போற்றி உள்ளம் மகிழும் பக்தர்கள் அடையும் ஊர் ஆவது; (களம் - கழுத்து); (உறுதல் - அடைதல்);
வளம் கிளர் குளம் அணி வழுவூரே - வளமும் அழகும் மிகுந்த குளம் திகழும் வழுவூர்; (கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்);
2)
மானையும் ஏந்திய மணிகண்டன்
தேனலர் சூடிய சிவனெம்மான்
ஆனையை உரிசெய்த அரனூராம்
வானணை கோபுர வழுவூரே.
மானையும் ஏந்திய மணிகண்டன் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய நீலகண்டன்; (மானையும் - உம் - எச்சவும்மை);
தேன்-அலர் சூடிய சிவன் எம்மான் - தேன்மலர்களைச் சூடிய சிவன், எம் தலைவன்;
ஆனையை உரிசெய்த அரன் ஊர் ஆம் - யானையைத் தோலுரித்த ஹரன் உறையும் ஊர் ஆவது;
வான் அணை கோபுர வழுவூரே - வானத்தைச் சென்றடையுமாறு உயர்ந்த (/ மேகம் அடைகின்ற உயர்ந்த) கோபுரம் திகழும் வழுவூர்; (வான் - ஆகாயம்; மேகம்);
3)
உணவிடும் எனமிக உழல்தேவன்
கணைதொடு மதனுடல் பொடிசெய்தான்
பண(ம்)மதி சூடிய பரனூராம்
மண(ம்)மலி பொழிலணி வழுவூரே.
"உணவு இடும்" என மிக உழல் தேவன் - (கையில் மண்டையோட்டை ஏந்தி) "உணவு இடுங்கள்" என்று பிச்சைக்குத் திரியும் தேவன்;
கணை தொடு மதன் உடல் பொடிசெய்தான் - மலர்க்கணையை ஏவிய மன்மதனது உடலைச் சாம்பலாக்கியவன்; (மதன் - காமன்);
பணம் மதி சூடிய பரன் ஊர் ஆம் - நாகத்தையும் சந்திரனையும் சூடிய பரமன் உறையும் ஊர் ஆவது; (பணம் - பாம்பின் படம்; நாகம்);
மண(ம்)மலி பொழில் அணி வழுவூரே - மணம் கமழும் சோலை திகழும் வழுவூர்;
4)
எரியன நிறமணி எழில்மேனிப்
பெரியவன் இணையிலி பிணியில்லான்
கரியதன் அதளுரி கரனூராம்
வரியளி அறைபொழில் வழுவூரே.
எரி அன நிறம் அணி எழில் மேனிப் பெரியவன் - தீப் போன்ற நிறம் திகழும் அழகிய திருமேனியை உடைய பெரியவன்; (எரி - நெருப்பு); (அன - அன்ன - போன்ற);
இணையிலி - ஒப்பற்றவன்;
பிணி இல்லான் - பந்தங்களும் நோய்களும் இல்லாதவன்;
கரியதன் அதள் உரி கரன் ஊர் ஆம் - யானையின் தோலை உரித்த கையினன் உறையும் தலம் ஆவது; (கரி - யானை); (அதள் - தோல்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "பெருவலியினன் நலமலிதரு கரன்");
வரி-அளி அறை பொழில் வழுவூரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலை திகழும் வழுவூர்; (அளி - வண்டு); (அறைதல் - ஒலித்தல்);
5)
புயலன மணியது புனைகண்டன்
அயிலுறு வேலினன் அடையாதார்
எயிலெரி சிலைவளை இறையூராம்
வயலிடைக் கயலுகள் வழுவூரே.
புயல் அன மணியது புனை-கண்டன் - மேகம் போன்ற கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (புயல் - மேகம்); (அன - அன்ன - போன்ற);(மணியது - மணி; அது - பகுதிப்பொருள்விகுதி); (புனைதல் - அணிதல்);
அயில் உறு வேலினன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);
அடையாதார் எயில் எரி சிலை வளை இறை ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை வளைத்த இறைவன் உறையும் தலம் ஆவது; (அடையாதார் - பகைவர்); (எயில் - கோட்டை); (சிலை - மலை; வில்);
வயலிடைக் கயல் உகள் வழுவூரே - வயலில் கயல்மீன்கள் பாய்கின்ற வழுவூர்; (உகளுதல் - தாவுதல்; ஓடித்திரிதல்);
6)
வெண்மழு வாளினன் விடையேறி
உண்மையில் உள்ளவன் ஒளிர்திங்கள்
அண்மையில் அரவணி அரனூராம்
வண்வயல் சூழ்தரு வழுவூரே.
வெண்மழு வாளினன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;
விடையேறி - இடபவாகனன்;
உண்மையில் உள்ளவன் - என்றும் இருப்பவன்; மெய்ப்பொருள்;
ஒளிர்-திங்கள் அண்மையில் அரவு அணி அரன் ஊர் ஆம் - ஒளிர்கின்ற சந்திரனுக்குப் பக்கத்தில் பாம்பை அணிந்த ஹரன் உறையும் தலம் ஆவது; (அண்மை - சமீபம்);
வண்வயல் சூழ்தரு வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்; (வண்மை - வளம்);
7)
மழவிடை ஊர்தியன் மணிநீரை
அழலன சடையிடை அடையண்ணல்
அழகிய மிடறுடை அரனூராம்
மழைநுழை பொழிலணி வழுவூரே.
மழவிடை ஊர்தியன் - இளைய எருதினை வாகனமாக உடையவன்;
மணிநீரை அழல் அன சடையிடை அடை அண்ணல் - தெளிந்த கங்கையாற்றைத் தீப் போன்ற செஞ்சடையில் அடைத்த பெருமான்; (மணிநீர் - பளிங்கு போலத் தெளிந்த நீர்); (அழல் - தீ);
அழகிய மிடறுடை அரன் ஊர் ஆம் - அழகிய நீலகண்டத்தை உடைய ஹரன் உறையும் தலம் ஆவது; (மிடறு - கண்டம்);
மழை நுழை பொழில் அணி வழுவூரே - மேகம் நுழைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மழை - மேகம்);
8)
கண்டிகழ் நெற்றியன் கயிலாயம்
பண்டிகழ் தசமுகன் படவூன்றிப்
பண்டிகழ் இசைமகிழ் பரனூராம்
வண்டறை பொழிலணி வழுவூரே.
கண் திகழ் நெற்றியன் கயிலாயம் - நெற்றிக்கண்ணனது கயிலைமலையை; (கண் + திகழ் = கண்டிகழ்);
பண்டு இகழ் தசமுகன் பட ஊன்றிப் - முன்பு இகழ்ந்து பேசிப் பெயர்த்து எறிய முயன்ற பத்துத்தலை இராவணனை அவன் மிகவும் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (பண்டு - பண்டை - முன்னாள்); (தசமுகற் பட ஊன்றிப் - தசமுகனைப் பட ஊன்றி; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);
பண் திகழ் இசை மகிழ் பரன் ஊர் ஆம் - (பின் இராவணன் பாடிய) பண் பொருந்திய இனிய கீதத்தை விரும்பிக் கேட்ட பரமன் உறையும் தலம் ஆவது; (பண் + திகழ் = பண்டிகழ்);
வண்டு அறை பொழில் அணி வழுவூரே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வழுவூர்;
9)
பதியென அயனரி பகர்நாள்தாம்
துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன்
அதிசயன் நதிபுனை அரனூராம்
மதிதொடு பொழிலணி வழுவூரே.
"பதி" என அயன் அரி பகர்-நாள் தாம் துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன் - "நானே தலைவன்" என்று பிரமனும் திருமாலும் சொல்லி வாதுசெய்த அன்று அவர்கள் இருவரும் துதிக்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதி-வடிவினன்; (பகர்தல் - சொல்தல்); (தாம் - அவர்);
அதிசயன், நதி புனை அரன் ஊர் ஆம் - அதிசயனும் கங்கையைச் சடையில் அணிந்தவனுமான ஹரன் உறையும் தலம் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 3.23.3 - "ஐயன்நல் லதிசயன்");
மதி தொடு பொழில் அணி வழுவூரே - சந்திரன் தொடுமாறு உயர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர்;
10)
வஞ்சகர் சொல்நெறி மதியேன்மின்
நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே
அஞ்சல ளித்தருள் அரனூராம்
மஞ்சடை பொழிலணி வழுவூரே.
வஞ்சகர் சொல் நெறி மதியேன்மின் - வஞ்சகர்கள் சொல்லும் மார்க்கங்களை நீங்கள் மதிக்கவேண்டா; (சொன்னெறி - சொல் நெறி); (மின் - ஏவற்பன்மை விகுதி);
நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே அஞ்சல் அளித்தருள் அரன் ஊர் ஆம் - மனத்தில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் ஹரன் உறையும் தலம் ஆவது;
மஞ்சு அடை பொழில் அணி வழுவூரே - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மஞ்சு - மேகம்);
11)
காமனைக் காய்ந்தவன் கழல்போற்றித்
தூமலர் இட்டவர் துயர்தீர்த்துச்
சேமம ளித்தருள் சிவனூராம்
மாமதில் சூழ்தரு வழுவூரே.
காமனைக் காய்ந்தவன் கழல் போற்றித் - மன்மதனைச் சுட்டெரித்தவனது திருவடியைப் போற்றித்;
தூ-மலர் இட்டவர் துயர் தீர்த்துச் - தூய மலர்களை இட்டு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து;
சேமம் அளித்தருள் சிவன் ஊர் ஆம் - அவர்களைக் காக்கின்ற சிவன் உறையும் தலம் ஆவது; (சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; இன்பம்; காவல்);
மா மதில் சூழ்தரு வழுவூரே - பெரிய மதிலால் சூழப்பெற்ற வழுவூர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment