2019-08-22
T.234 - நாவலூர் - பாரில்நான் வாதைகள்
-----------------
(வண்ணவிருத்தம்;
தானனா தானன .. தந்ததான)
(வாரிமீ தேயெழு திங்களாலே - திருப்புகழ் - பொது)
பாரில்நான் வாதைகள் .. இன்றிவாழப்
.. பாலியாய் நீறணி .. கின்றமார்பா
நீரினாய் வேணியில் .. இண்டைபோல
.. நீணிலா நாகம .. ணிந்ததேவா
காரினார் மாமணி .. கண்டநேயா
.. காலனார் மாளவெ .. குண்டசீலா
நாரியோர் கூறென .. நின்றநாதா
.. நாவலூர் மேவிய .. எம்பிரானே.
பதம் பிரித்து:
பாரில் நான் வாதைகள் இன்றி வாழப்
.. பாலியாய், நீறு அணிகின்ற மார்பா;
நீரினாய் வேணியில், இண்டை போல
.. நீள்நிலா நாகம் அணிந்த தேவா;
காரின் ஆர் மா-மணி கண்ட; நேயா;
.. காலனார் மாள வெகுண்ட சீலா;
நாரி ஓர் கூறு என நின்றநாதா ;
.. நாவலூர் மேவிய எம்பிரானே.
பாரில் நான் வாதைகள் இன்றி வாழப் பாலியாய் - இவ்வுலகில் துன்பமின்றி நான் வாழ்வதற்கு அருள்வாயாக; (வாதை - துன்பம்); (பாலித்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);
நீறு அணிகின்ற மார்பா - மார்பில் திருநீற்றைப் பூசியவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.46.9 - "பொடியாடு மார்பானை");
நீரினாய் வேணியில் - சடையில் கங்கையை அணிந்தவனே; (வேணி - சடை);
(வேணியில்) இண்டை போல நீள்நிலா நாகம் அணிந்த தேவா - (சடையில்) இண்டைமாலை போலப் பிறையையும், பாம்பையும் அணிந்த தேவனே; ("வேணியில்" - இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைக்க நின்றது); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
காரின் ஆர் மா-மணி-கண்ட - கரிய அழகிய மணி திகழும் கண்டத்தை உடையவனே;
நேயா - அன்பனே; ("மணிகண்ட நேயா = நீலகண்டத்தையுடைய அன்பனே" என்று ஒரே சொற்றொடராகச் சேர்த்தும் பொருள்கொள்ளலாம்);
காலனார் மாள வெகுண்ட சீலா - கூற்றுவன் அழியும்படி அவனைச் சினந்து உதைத்த சீலனே;
நாரி ஓர் கூறு என நின்ற நாதா - உமையை ஒரு கூறாக உடைய தலைவனே; (நாரி - பெண்);
நாவலூர் மேவிய எம்பிரானே - திருநாவலூரில் எழுந்தருளிய எம்பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment