Saturday, May 2, 2026

N.056 - மாணிக்க வாசகர் துதி - குருவாய் நால்வர்க்கு

2019-07-04

N.056 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2019

-------------

1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

குருவாய் நால்வர்க் கருளும்

பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்

திருவா சகமது பாடிய

அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.


பதம் பிரித்து:

குருவாய் நால்வர்க்கு அருளும்

பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்

திருவாசகம்-அது பாடிய

அரு-மணிவாசகர் இரு-மலரடிகள் போற்றி.


பீடு - பெருமை;


2) ----- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ------

குருந்தடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று

வருந்தமிழ்நாட் டமைச்சரென வணங்கிநின்று மறைப்பொருள்கேட்

டருந்தமிழை நாமுய்ய அளித்ததிரு வாதவூர்ப்

பெருந்தகையார் மலரனைய திருந்துகழல் இணைபோற்றி.


பதம் பிரித்து:

குருந்து-அடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று

வரும் தமிழ்நாட்டு அமைச்சர் என வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு

அரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப்

பெருந்தகையார் மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி.


குருந்து-டியில் வீற்றிருந்த குருபரன்முன் "மதுரைநின்று வரும் தமிழ்நாட்டு அமைச்சர்" ன வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு - குருந்தமரத்தின்கீழ் இருந்த மேலான குருவின்முன் "மதுரையிலிருந்து வரும் பாண்டியநாட்டு மந்திரி" என்று வணங்கி ஞானோபதேசம் பெற்று; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);

ரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப் பெருந்தகையார் - நாம் உய்யும்படி அரிய தமிழான திருவாசகத்தைப் பாடியருளிய, திருவாதவூரில் அவதரித்த அண்ணலார் மாணிக்கவாசகரது;

மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி - மலர் போன்ற அழகிய இரு-திருவடிகளுக்கு வணக்கம்; (குறிப்பு - "திருந்தடி" என்பதுபோல் "திருந்துகழல்"; திருந்துதல் - அழகாதல்; கழல் - ஆகுபெயராய்ப் பாதத்தைக் குறித்தது);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment