Thursday, May 28, 2026

P.498 - வைகுண்டம் - கழல் நினைந்த மாணி

2020-02-23

P.498 - வைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்)

--------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்);

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")


முற்குறிப்பு: வைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்) - கைலாசநாதர் கோயில் - பாண்டிநாட்டுத் தலம். தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள ஊர்;


1)

கழல்நி னைந்த மாணி தன்னைக்

.. காத்த தேவை உம்பர் ஏத்தும்

மழைநி றத்து மிடறி னானை

.. வன்பு லித்தோல் ஆடை யானை

அழல்நி றத்துச் சடையில் ஆற்றை

.. அணிவல் லானைப் பொருநைப் பாங்கர்க்

கழனி சூழ்ந்த வைகுண் டத்திற்

.. கயிலை மன்னைக் காண லாமே.


கழல் நினைந்த மாணி தன்னைக் காத்த தேவை - திருவடியை எண்ணி வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்த கடவுளை; (மாணி - மார்க்கண்டேயர்); (தே - தெய்வம்);

உம்பர் ஏத்தும் மழை நிறத்து மிடறினானை - தேவர்கள் போற்றும் நீலகண்டனை; (உம்பர் - தேவர்); (மழை - மேகம்); (மிடறு - கண்டம்); (மிடறினானை - மிடற்றினானை; சந்தம் கருதி ற் மிகாது வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.78.4 - "மாசிலாமணி மிடறினார்");

வன்-புலித்தோல் ஆடையானை - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவனை;

அழல் நிறத்துச் சடையில் ஆற்றை அணி வல்லானைப் - தீப் போன்ற செஞ்சடையில் கங்கையை அணிந்த வல்லவனை; (அழல் - தீ);

பொருநைப் பாங்கர்க் கழனி சூழ்ந்த வைகுண்டத்தில் கயிலை-மன்னைக் காணல் ஆமே - தாமிரபரணியின் அருகே வயல் சூழ்ந்த ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் கயிலைநாதனைத் தரிசித்து வழிபடல் ஆம்; (பொருநை - தாமிரபரணியாறு); (பாங்கர் - பக்கம்; அருகு); (கழனி - வயல்); (மன் - தலைவன்; நாதன்; இறைவன்); (ஆம் - ஆகும்); (* கயிலைமன் - கைலாசநாதர் - இத்தலத்து இறைவன் திருநாமம்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.1 - "நாகேச்சுர நகரின் மன்னே எனவல் வினைமாய்ந் தறுமே");


2)

குறையி ரந்த அன்பர் கட்குக்

.. குறைவி லாது நல்கு வானைக்

கறையி லங்கு மிடறி னானைக்

.. கனலை ஏந்தி ஆடு வானை

நறைமி குந்த கொன்றை மத்தம்

.. நாகம் ஆரும் சென்னி யானை

மறைமொ ழிந்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குறையிரந்த அன்பர்கட்குக் குறைவிலாது நல்குவானைக் - வணங்கி வேண்டுகின்ற பக்தர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவனை; (குறையிரத்தல் - தன்குறைகூறி வேண்டுதல்);

கறை இலங்கு மிடறினானைக் - நீலகண்டனை; (இலங்குதல் - திகழ்தல்; ஒளிவீசுதல்);

கனலை ஏந்தி ஆடுவானை - கையில் தீயை ஏந்திக் கூத்தாடுபவனை;

நறை மிகுந்த கொன்றை மத்தம் நாகம் ஆரும் சென்னியானை - தேன் மிகுந்த கொன்றைமலர், ஊமத்தமலர், பாம்பு இவற்றைத் திருமுடிமேல் அணிந்தவனை; (நறை - தேன்; வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (சென்னி - தலை);

மறை மொழிந்த கயிலை-மன்னை - வேதங்களைப் பாடியருளிய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


3)

புதிய பூவின் மாலை கட்டிப்

.. பொன்ன டிக்குச் சூட்டி நாளும்

துதிகள் பாடித் தொழுது நின்ற

.. தொண்டர் துன்பம் தீர்த்த கோனை

நதிக ரந்த சடையின் மீது

.. நறவம் ஆரும் கொன்றை வன்னி

மதிய ணிந்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


புதிய பூவின் மாலை கட்டிப் பொன்னடிக்குச் சூட்டி நாளும் துதிகள் பாடித் தொழுது நின்ற தொண்டர் துன்பம் தீர்த்த கோனை - அன்று பூத்த புதிய பூக்களால் மாலை தொடுத்துப் பொன் போன்ற திருவடிக்கு அணிவித்துத் தினமும் பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் தலைவனை;

நதி கரந்த சடையின் மீது நறவம் ஆரும் கொன்றை வன்னி மதி அணிந்த கயிலை-மன்னை - கங்கையாற்றை மறைத்த சடையின்மேல் தேன் மிக்க கொன்றைமலர், வன்னியிலை, திங்கள் இவற்றையெல்லாம் அணிந்த கயிலைநாதனை; (கரத்தல் - ஒளித்தல்); (நறவம் - தேன்; வாசனை);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


4)

குதிகொள் மானை ஏந்தி னானைக்

.. குமர னுக்குத் தாதை தன்னைப்

பதியி லானைப் பணியும் அன்பர்

.. பாவ(ம்) நாசம் ஆக்கி னானை

எதிரி லானை உம்பர் செய்த

.. இரதம் ஏறி வாளி ஒன்றால்

மதில்கள் எய்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குதிகொள் மானை ஏந்தினானைக் - தாவும் மான்கன்றைக் கையில் ஏந்தியவனை;

குமரனுக்குத் தாதை-தன்னைப் - முருகனுக்குத் தந்தையை;

பதி இலானைப் - தனக்கு ஒரு தலைவன் இல்லாதவனை;

பணியும் அன்பர் பாவம் நாசம் ஆக்கினானை - வழிபடும் பக்தர்களது பாவங்களை அழிப்பவனை;

எதிர் இலானை - ஒப்பற்றவனை; (எதிர் - ஒப்பு);

உம்பர் செய்த இரதம் ஏறி வாளி ஒன்றால் மதில்கள் எய்த கயிலை-மன்னை - தேவர்கள் செய்த தேரில் ஏறி ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த கயிலைநாதனை; (உம்பர் - தேவர்); (வாளி - அம்பு);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


5)

அஞ்செ ழுத்தை நெஞ்சில் வைத்த

.. அன்பி னார்கள் வினைகள் எல்லாம்

எஞ்சல் இன்றி நீக்கு வானை

.. ஏறு காட்டும் கொடியி னானை

வஞ்சி அன்ன இடையி னாளை

.. வாமம் வைத்த மாண்பி னானை

மஞ்சு சூழும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


அஞ்செழுத்தை நெஞ்சில் வைத்த அன்பினார்கள் வினைகள் எல்லாம் எஞ்சல் இன்றி நீக்குவானை - பஞ்சாட்சரத்தைத் தியானிக்கும் பக்தர்களது வினையையெல்லாம் அடியோடு தீர்ப்பவனை; (எஞ்சல் - எஞ்சுதல் - மிஞ்சுதல்);

ஏறு காட்டும் கொடியினானை - இடபக்கொடியை உடையவனை;

வஞ்சி அன்ன இடையினாளை வாமம் வைத்த மாண்பினானை - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பக்கம் பாகமாக உடைய கொள்கையனை; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்); (மாண்பு - பெருமை; அழகு);

மஞ்சு சூழும் கயிலை-மன்னை - மேகம் சூழும் கயிலைமலை நாதனை; (மஞ்சு - மேகம்);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


6)

அருவி போலக் கண்கள் சோர

.. அலர்கள் தூவித் தமிழ்கள் பாடி

உருகும் அன்பர் எண்ணு கின்ற

.. உருவில் வந்து நல்கு வானைப்

பெருவி லங்கல் வில்லி னானைப்

.. பிரிய(ம்) மிக்க பேதை பாகம்

மருவி னானைக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


அருவி போலக் கண்கள் சோர அலர்கள் தூவித் தமிழ்கள் பாடி - அருவிபோல் கண்ணீர் வழியப் பூக்களைத் தூவித் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி; (தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள்); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.10 - "வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா" - "நீர் சோர" என ஒரு சொல் வருவிக்க); (சுந்தரர் தேவாரம் - 7.46.11 - "நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகு ஆள்பவரே");

உருகும் அன்பர் எண்ணுகின்ற உருவில் வந்து நல்குவானைப் - மனம் உருகி வழிபடும் பக்தர்கள் எந்த வடிவத்தை எண்ணி வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் வந்து அருள்புரிபவனை;

பெரு-விலங்கல் வில்லினானைப் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை; (விலங்கல் - மலை);

பிரியம் மிக்க பேதை பாகம் மருவினானைக் - மிகுந்த அன்புடைய உமையை ஒரு பாகமாகக் கலந்தவனை; (பேதை - பெண்); (மருவுதல் - கலந்திருத்தல்);

கயிலை-மன்னை - கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


7)

குழுவி னோடு கெழுமி அன்பர்

.. குழக என்றும் கூத்த என்றும்

தொழுது போற்ற இருள கற்றும்

.. சோதி தன்னைக் கவுணி யர்க்குக்

கழும லத்தில் ஞானம் ஊட்டும்

.. கருணை மிக்க கடவுள் தன்னை

மழுவை ஏந்தும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குழுவினோடு கெழுமி அன்பர், "குழக" என்றும் "கூத்த" என்றும் தொழுது போற்ற - தொண்டர்குழாத்தோடு கூடிப் பக்தர்கள் "குழகனே! கூத்தனே" என்று பல திருநாமங்களைக் கூறி வணங்க; (குழகன் - அழகன்; இளையோன்);

இருள் அகற்றும் சோதி தன்னைக் - அவர்களது அறியாமையை நீக்கியருளும் ஜோதி-வடிவினனை;

கவுணியர்க்குக் கழுமலத்தில் ஞானம் ஊட்டும் கருணை மிக்க கடவுள்-தன்னை - கௌண்டின்ய கோத்திரத்தில் உதித்த திருஞான சம்பந்தர்க்குச் சீகாழியில் பாலோடு ஞானத்தை ஊட்டியருளிய பெருங்கருணை உடைய கடவுளை; (கவுணியர் - கௌண்டின்யகோத்திரத்தில் பிறந்தவர்);

மழுவை ஏந்தும் கயிலை-மன்னை - மழுவாயுதத்தை ஏந்திய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


8)

தரையி றங்கு தேர்க டாவ

.. வரையி டந்த தென்னி லங்கை

அரையன் வாட விரலை ஊன்றி

.. அரிய கீதம் கேட்ட கோனைக்

கரவி லாத நெஞ்ச ராகிக்

.. கழலை வாழ்த்தும் அன்பர் வேண்டு

வரம ளிக்கும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


தரை இறங்கு தேர் கடாவ வரை இடந்த தென்னிலங்கை அரையன் வாட விரலை ஊன்றி - வானில் செல்லும் தேர் ஓடாமல் தரையில் இறங்கிவிடவும், மிகவும் சினந்து கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணன் வாடும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி; (கடாவுதல் - ஏறிச் செலுத்துதல்); (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

அரிய கீதம் கேட்ட கோனைக் - இராவணன் பாடிய இனிய கீதத்தைக் கேட்டு அருள்புரிந்த தலைவனை;

கரவு இலாத நெஞ்சர் ஆகிக் கழலை வாழ்த்தும் அன்பர் வேண்டு வரம் அளிக்கும் - வஞ்சம் இல்லாத மனத்தோடு திருவடியை வாழ்த்தும் பக்தர்கள் வேண்டுகின்ற வரங்களை அளிக்கின்ற; (கரவு - வஞ்சனை);

கயிலை-மன்னை - கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


9)

கண்ணன் வேதன் கீழு(ம்) மேலும்

.. காண ஏனம் அன்னம் ஆயும்

நண்ண ஒண்ணாச் சோதி யானை

.. நம்பும் அன்பர் நெஞ்சு ளானை

எண்ணி றந்த பேரி னானை

.. எழில்மி குந்த அந்தி வான

வண்ண மேனிக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


கண்ணன் வேதன் கீழும் மேலும் காண ஏனம் அன்னம் ஆயும் நண்ண ஒண்ணாச் சோதியானை - திருமாலும் பிரமனும் அடிமுடி காண்பதற்காகப் பன்றியும் அன்னமும் ஆகியும் அறிய ஒண்ணாத ஜோதி-உருவனை; (ஏனம் - பன்றி); (ஆய் - ஆகி);

நம்பும் அன்பர் நெஞ்சு-உளானை - விரும்பும் பக்தர்கள் நெஞ்சில் உள்ளவனை; (நம்புதல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.1.10 - "நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதம் என் நெஞ்சு ளிருக்கவே");

எண்-இறந்த பேரினானை - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனை; (இறத்தல் - கடத்தல்);

எழில் மிகுந்த அந்தி-வான-வண்ண மேனிக் கயிலை-மன்னை - அழகு மிக்க மாலைநேரத்து வானம் போலச் செம்மேனியை உடைய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


10)

கூசி டாமல் பொய்கள் சொல்லும்

.. கொள்கை யாளர் காண மாட்டாத்

தேசி னானைத் திங்கள் ஏறும்

.. சென்னி யானைத் தூய நீறு

பூசி னானை நாண தாகப்

.. புற்ற ராவைக் கட்டி னானை

மாசி லாத கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


கூசிடாமல் பொய்கள் சொல்லும் கொள்கையாளர் காண மாட்டாத் தேசினானைத் - கொஞ்சமும் கூசாமல் பொய்களே பேசும் கொள்கையுடையவர்களால் பார்க்க (/அறிய) முடியாத ஒளிவடிவினனை; (தேசு - ஒளி);

திங்கள் ஏறும் சென்னியானைத் - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனை;

தூய நீறு பூசினானை - தூய திருநீற்றைப் பூசியவனை;

நாணதாகப் புற்றராவைக் கட்டினானை - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவனை;

மாசு-இலாத கயிலை-மன்னை - மும்மலமற்ற புனிதனான கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


11)

பணிகள் செய்து பத்த ராகிப்

.. பரவி னார்கள் மகிழு மாறு

பிணிகள் தீர்க்கும் தொழிலி னானைப்

.. பெற்றம் ஏறும் பெருமை யானைப்

பணிய ணிந்த மார்பி னானைப்

.. பண்டெ ழுந்த நஞ்சை உண்ட

மணிமி டற்றுக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


பணிகள் செய்து பத்தராகிப் பரவினார்கள் மகிழுமாறு பிணிகள் தீர்க்கும் தொழிலினானைப் - தொண்டு செய்து பக்தர்கள் ஆகிப் போற்றி வழிபடுபவர்கள் இன்புறும்படி அவர்களது துன்பங்களையும் பந்தங்களையும் தீர்க்கும் தொழிலுடையவனை; (பிணி - பந்தம்; துன்பம்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே");

பெற்றம் ஏறும் பெருமையானைப் - இடபவாகனத்தை உடைய பெருமை உடையவனை; (பெற்றம் - எருது);

பணி அணிந்த மார்பினானைப் - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனை; (பணி - நாகம்);

பண்டு எழுந்த நஞ்சை உண்ட மணிமிடற்றுக் கயிலை-மன்னை - முற்காலத்தில் பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டத்துக் கயிலைநாதனை; (பண்டு - முன்பு); (மணி - நீலமணி); (மிடறு - கண்டம்);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

  • ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

  • தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

  • தானா - தேமாச்சீர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment