2019-09-13
P.482 - அவிநாசி
-----------------
(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தான தான தனதான தான தனதான தான தனனா)
(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - "வேயுறு தோளிபங்கன்")
(அப்பர் தேவாரம் - 4.14.1 - "பருவரை யொன்றுசுற்றி")
* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
* படிப்போர் வசதி கருதிச், சந்தம் கெடாத சில இடங்களில் சொற்களை ஒத்துச் சீர் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;
1)
மணிமுடி உம்பர் ஏத்த மறிவேலை நஞ்சை மகிழ்வோ டருந்தி மணிபோல்
அணிதரு கண்டன் எந்தை அலையார்ந்த கங்கை நிலையாக நின்ற சடையன்
அணிமயில் அன்ன சாயல் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைப்
பணிபவர் முன்பு செய்த வினையான மாய்ந்து பரலோகம் ஆள்வர் திடனே.
மணி-முடி உம்பர் ஏத்த மறி-வேலை நஞ்சை மகிழ்வோடு அருந்தி மணி போல் அணிதரு கண்டன் - இரத்தினங்கள் பதித்த கிரீடம் அணிந்த தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி, அலையெழும் கடலில் தோன்றிய ஆலகாலத்தை விரும்பி உண்டு அதனை நீலமணி போலக் கண்டத்தில் அணிந்தவன்; (உம்பர் - தேவர்); (மறிதல் - கிளர்தல்); (வேலை - கடல்); (தருதல் - ஒரு துணைவினை);
எந்தை - எம் தந்தை;
அலை ஆர்ந்த கங்கை நிலையாக நின்ற சடையன் - அலை மிக்க கங்கை என்றும் தங்கிய சடையை உடையவன்;
அணி-மயில் அன்ன சாயல் உமைமங்கை பங்கன் - அழகிய மயில் போன்ற சாயலை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
அவிநாசி அப்பன் அடியைப் பணிபவர் முன்பு செய்த வினையான மாய்ந்து பரலோகம் ஆள்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை வழிபடுவர்களது பழவினையெல்லாம் அழிந்து அவர்கள் சிவலோகத்தில் இருக்கும் உயர்கதியைப் பெறுவது நிச்சயம்; (அவிநாசி - 1. அழிவில்லாதவன்; 2. அவிநாசி என்ற தலம்); (அப்பர் தேவாரம் - 6.73.7 - "அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய்"); (வினையான - வினையானவை; சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85-இல் வரும் வினையான, இடரான, முதலிய பிரயோகங்களைக் காண்க); (திடன் - திடம் - நிச்சயம்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.2 - "சிவபுரம் அடையநம் இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே");
2)
பிளிறிடும் ஆனை தன்னை உரிசெய்து போர்த்த பெருமான் நலிந்த மதியை
ஒளிவிடு மாறு வேணி அதன்மீத ணிந்த ஒருவன் கரத்தில் உழையன்
அளியிசை பாடு கூந்தல் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைத்
துளியுறு கண்ண ராகி மிகவேத்தும் அன்பர் துயரான தீர்வர் திடனே.
பிளிறிடும் ஆனைதன்னை உரிசெய்து போர்த்த பெருமான் - பிளிறிய யானையின் தோலை உரித்துப் போர்த்த பெருமான்;
நலிந்த மதியை ஒளிவிடுமாறு வேணி அதன்மீது அணிந்த ஒருவன் - தேய்ந்த சந்திரனை என்றும் பிரகாசிக்கும்படி சடையின்மேல் சூடிய ஒப்பற்றவன்; (வேணி - சடை);
கரத்தில் உழையன் - கையில் மானை ஏந்தியவன்; (உழை - மான்);
அளி இசை பாடு கூந்தல் உமைமங்கை பங்கன் - வண்டுகள் ஒலிக்கின்ற (மலர் சூடிய) கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
அவிநாசி அப்பன் அடியைத் துளியுறு கண்ணராகி மிக ஏத்தும் அன்பர் துயரான தீர்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியைக் கண்ணீர் கசிந்து மிகவும் துதித்து வழிபடும் அன்பர்கள் துயர் நீங்குவது நிச்சயம்; (சம்பந்தர் தேவாரம் - 2.86.1 - "மிகவேத்தி நித்த(ம்) நினைமின்");
3)
அஞ்சிய தேவர் வேண்ட மலைவில்லை ஏந்தி அரணங்கள் எய்த பரமன்
வெஞ்சினம் ஆர்ந்த கூற்றின் உயிர்வீட்டு காலன் விடையேறு கின்ற விமலன்
அஞ்சனம் ஆர்ந்த கண்ணி உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைச்
செஞ்சொலின் மாலை கொண்டு தினமேத்தும் அன்பர் சிவலோகம் ஆள்வர் திடனே.
அஞ்சிய தேவர் வேண்ட மலைவில்லை ஏந்தி அரணங்கள் எய்த பரமன் - (அசுரர்கள் செய்த கொடுமையைக் கண்டு) பயந்த தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்திக் கோட்டைகள் மூன்றைக் கணையெய்து அழித்த பரமன்;
வெஞ்சினம் ஆர்ந்த கூற்றின் உயிர் வீட்டு காலன் - கோபம் மிக்க நமனை உதைத்து அவனது உயிரை அழித்த காலகாலன்; (வீட்டுதல் - கொல்தல்; அழித்தல்);
விடை ஏறுகின்ற விமலன் - இடபவாகனம் உடைய தூயன்;
அஞ்சனம் ஆர்ந்த கண்ணி உமைமங்கை பங்கன் - மை அணிந்த கண்களை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
அவிநாசி அப்பன் அடியைச் செஞ்சொலின் மாலைகொண்டு தினம் ஏத்தும் அன்பர் சிவலோகம் ஆள்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியைப் பாமாலைகளைப் பாடித் தினமும் வழிபடும் பக்தர்கள் சிவலோகத்தில் இருக்கும் உயர்கதியைப் பெறுவது நிச்சயம்; (கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);
4)
சிர(ம்)மலி மாலை சூடி திருநீறு பூசி திகழ்வெள்ளை ஓடு கலனாக்
கரமுற ஊணி ரந்து திரிவள்ளல் வெய்ய கனலேந்தி ஆடும் இறைவன்
அரவினை ஆர்த்த ஐயன் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைப்
பரவிடும் அன்பர் பண்டை வினையான தீர்ந்து பரலோகம் ஆள்வர் திடனே.
சிரம் மலி மாலை சூடி - மண்டையோட்டு மாலையைச் சூடியவன்;
திருநீறு பூசி - விபூதியைப் பூசியவன்;
திகழ்-வெள்ளை ஓடு கலனாக் கரம் உற ஊண் இரந்து திரி-வள்ளல் - விளங்கும் வெள்ளை மண்டையோடு உண்கலனாகக் கையில் இருக்கப், பிச்சையேற்று உழலும் வள்ளல்; (ஓடு - மண்டையோடு); (கலனா - கலனாக); (ஊண் - உணவு); (இரத்தல் - யாசித்தல்);
வெய்ய கனல் ஏந்தி ஆடும் இறைவன் - வெப்பம் மிகுந்த தீயைக் கையில் ஏந்தி ஆடுகின்ற இறைவன்; (அப்பர் தேவாரம் - 6.87.7 - "வெய்யகனல் ஏந்தினான்காண்");
அரவினை ஆர்த்த ஐயன் - பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
உமைமங்கை பங்கன் - உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
அவிநாசி அப்பன் அடியைப் பரவிடும் அன்பர் பண்டை வினையான தீர்ந்து பரலோகம் ஆள்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியைப் போற்றி வழிபடும் பக்தர்களது பழவினை தீர்ந்து அவர்கள் சிவலோகத்தில் இருக்கும் உயர்கதியைப் பெறுவது நிச்சயம்;
5)
செங்கணை இட்டு வாழ்த்து திருமால் நயந்த திறலாழி ஈந்த வரதன்
கங்குலில் நட்டம் ஆடி கணையேவு காமன் உடல்நீறு செய்த கடவுள்
அங்கயல் அன்ன கண்ணி உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைப்
பொங்கிய அன்பி னோடு புகழ்கின்ற தொண்டர் பொலிவானில் வாழ்வர் திடனே.
செங்கணை இட்டு வாழ்த்து திருமால் நயந்த திறல்-ஆழி ஈந்த வரதன் - தனது சிவந்த கண்களில் ஒன்றை இடந்து திருவடியில் மலர் போல இட்டு வழிபாடு செய்த திருமால் விரும்பிய வெற்றி மிக்க சக்கராயுதத்தை அருளிய வரதன்; (செங்கணை - செங்கண்ணை); (நயத்தல் - விரும்புதல்); (திறல் - வலிமை; வெற்றி); (ஆழி - சக்கரம்);
கங்குலில் நட்டம் ஆடி - இரவில் கூத்தாடுபவன்; (கங்குல் - இரவு);
கணை ஏவு காமன் உடல் நீறு செய்த கடவுள் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய பெருமான்;
அங்கயல் அன்ன கண்ணி உமைமங்கை பங்கன் - அழகிய கயல்மீன் போன்ற கண்களை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (அம் - அழகு);
அவிநாசி அப்பன் அடியைப் பொங்கிய அன்பினோடு புகழ்கின்ற தொண்டர் பொலிவானில் வாழ்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை அன்பு பொங்கத் துதிக்கும் பக்தர்கள் பொலிகின்ற வானுலகில் இருக்கும் உயர்கதியைப் பெறுவது நிச்சயம்; (பொலிதல் - விளங்குதல்; சிறத்தல்);
6)
அந்தகன் வீழ மார்பில் அயிலார்ந்த மூன்று நுனைவேல் செலுத்தும் அடிகள்
செந்தழல் மேனி மீது திருநீறு பூசி சினவேறு கந்த பெருமான்
அந்துவர் அன்ன வாயள் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைச்
சந்ததம் எண்ணி நைந்து தமிழ்பாடும் அன்பர் தளைநீங்கி உய்வர் திடனே.
அந்தகன் வீழ மார்பில் அயில் ஆர்ந்த மூன்று நுனைவேல் செலுத்தும் அடிகள் - அந்தகாசுரன் அழியுமாறு அவன் மார்பில் கூர்மை மிக்க திரிசூலத்தைப் பாய்ச்சிய சுவாமி; (அந்தகன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (நுனை - முனை);
செந்தழல் மேனிமீது திருநீறு பூசி - செந்தீப் போன்ற செம்மேனியின்மேல் திருநீற்றைப் பூசியவன்;
சின-ஏறு உகந்த பெருமான் - சினம் மிகுந்த இடபத்தை வாகனமாக உடைய பெருமான்;
அந்துவர் அன்ன வாயள் உமைமங்கை பங்கன் - அழகிய பவளம் போன்ற வாயை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (அம் - அழகு); (துவர் - பவளம்); (சம்பந்தர் தேவாரம் - திருநீற்றுப் பதிகம் - 2.66.1 - "செந்துவர் வாயுமை பங்கன் திரு-ஆலவாயான் திருநீறே");
அவிநாசி அப்பன் அடியைச் சந்ததம் எண்ணி நைந்து, தமிழ் பாடும் அன்பர் தளை நீங்கி உய்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் எண்ணி உருகித், தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்கும் பக்தர்கள் தமது பந்தங்கள் (பாசம் - மும்மலக்கட்டு) நீங்கி உய்தி பெறுவது நிச்சயம்;
7)
ஒருதவ மாணி உய்ய நமன்வீழ மார்பில் உதைசெய்த பாதம் உடையான்
தருநிழல் வீற்றி ருந்து தருமத்தை ஓது குருவான செய்ய சடையன்
அருமலர் ஆர்ந்த கூந்தல் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியை
உருகிய நெஞ்ச ராகி உரைசெய்யும் அன்பர் உயர்வான் இருப்பர் திடனே.
ஒரு தவ-மாணி உய்ய, நமன் வீழ மார்பில் உதைசெய்த பாதம் உடையான் - ஒப்பற்ற தவமுடைய மார்க்கண்டேயர் உய்யுமாறு காலன் இறந்து தரையில் விழும்படி காலனை மார்பில் உதைத்த திருப்பாதம் உடையவன்; (ஒரு - ஒப்பற்ற); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);
தருநிழல் வீற்றிருந்து தருமத்தை ஓது குருவான செய்ய சடையன் - (சனகாதியர் நால்வரும் தொழக்) கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்து (அவர்களுக்கு) மறைப்பொருளை உபதேசித்த குரு ஆன செஞ்சடையன்; (தரு - மரம் - இங்கே கல்லாலமரம்); (செய்ய - சிவந்த);
அருமலர் ஆர்ந்த கூந்தல் உமைமங்கை பங்கன் - அரிய மலர்கள் பொருந்திய கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;
அவிநாசி அப்பன் அடியை உருகிய நெஞ்சராகி உரைசெய்யும் அன்பர் உயர்-வான் இருப்பர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை மனம் உருகிப் போற்றித் துதிக்கும் பக்தர்கள் சிவலோகத்தில் வாழ்வது நிச்சயம்; (உயர் வான் - உயர்ந்த வானுலகம் - சிவலோகம்);
8)
துணிவொடு வெற்பு தன்னை எறிவான் முயன்ற துரிசார் அரக்கன் அழவே
மணிமுடி பத்த டர்த்த மழுவாளன் என்று(ம்) மறையாத கீர்த்தி உடையான்
அணிதிகழ் கின்ற கொங்கை உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைப்
பணிபவர் தங்கள் வெய்ய வினையான தீர்ந்து பரலோகம் ஆள்வர் திடனே.
துணிவொடு வெற்பு-தன்னை எறிவான் முயன்ற துரிசு ஆர் அரக்கன் அழவே - சிறிதும் அஞ்சாமல் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற குற்றம் மிக்க அரக்கனான இராவணன் அழும்படி; (துரிசு - குற்றம்); (எறிவான் - எறிய; வான் - வினையெச்ச விகுதி);
மணிமுடி பத்து அடர்த்த மழுவாளன் - (திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி) அவனது கிரீடம் அணிந்த பத்துத்தலைகளையும் நசுக்கியவன், மழுவை ஏந்தியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
என்றும் மறையாத கீர்த்தி உடையான் - என்றும் நிலைத்த புகழை உடையவன்;
அணி திகழ்கின்ற கொங்கை உமைமங்கை பங்கன் - ஆபரணங்கள் அணிந்த, அழகு திகழ்கின்ற முலைகளை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (அணி - ஆபரணம்; அழகு); (சம்பந்தர் தேவாரம் - 3.87.10 - "அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறும் அதிசயச் சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்");
அவிநாசி அப்பன் அடியைப் பணிபவர் தங்கள் வெய்ய வினையான தீர்ந்து பரலோகம் ஆள்வர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியைப் பணியும் பக்தர்கள் தங்களது கொடிய வினைகளெல்லாம் தீர்ந்து சிவலோகத்தில் வாழ்வது நிச்சயம்;
9)
பங்கயம் அன்ன கண்ணன் அயன்நேட நின்ற பரமன் படங்கொ ளரவன்
கங்கையின் நீரு லாவு சடைமீது கொன்றை கதிரார்ந்த திங்கள் அணிவான்
அங்கொடி போல்ம ருங்குல் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியைக்
கொங்கலர் தூவி வாழ்த்தும் அடியார்கள் உம்பர் குடியாய் இருப்பர் திடனே.
பங்கயம் அன்ன கண்ணன் அயன் நேட நின்ற பரமன் - தாமரைமலர் போன்ற கண்ணை உடைய திருமாலும் பிரமனும் தேடுமாறு எல்லையற்ற ஜோதியாகி நின்ற பரமன்; (நேடுதல் - தேடுதல்);
படங்கொள் அரவன் - படம் உடைய பாம்பை அணிந்தவன்;
கங்கையின் நீர் உலாவு சடைமீது கொன்றை கதிர் ஆர்ந்த திங்கள் அணிவான் - கங்கை உலவும் சடையின்மேல் கொன்றைமலர், கதிர் நிறைந்த சந்திரன் இவற்றை அணிந்தவன்; (கதிர் - ஒளி; கிரணம்);
அங்கொடி போல் மருங்குல் உமைமங்கை பங்கன் - அழகிய கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (அம் - அழகு);
அவிநாசி அப்பன் அடியைக் கொங்கு-அலர் தூவி வாழ்த்தும் அடியார்கள் உம்பர் குடியாய் இருப்பர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை வாசமலர் தூவி வணங்கும் பக்தர்கள் வானுலகில் (சிவலோகத்தில்) என்றும் வாழ்வது நிச்சயம்; (உம்பர் - வானுலகம்); (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்");
10)
இருள்மலி நெஞ்சர் வெற்று மொழிபேசு வீணர் இருமைக்கும் என்றும் உதவா
மருள்மலி சொல்லை நீங்கு(ம்) மணிமார்பில் நூலன் மதிசூடி வெள்ளை விடையன்
அருள்வடி வாய்வி ளங்கும் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியை
மருமலர் கொண்டு வாழ்த்தும் அடியார்கள் என்று(ம்) மகிழ்வான் இருப்பர் திடனே.
இருள் மலி நெஞ்சர் - வஞ்சம் மிக்க மனத்தை உடையவர்கள்;
வெற்றுமொழி பேசு வீணர் - பொருளற்ற பேச்சுப் பேசும் பயனற்றவர்கள்;
இருமைக்கும் என்றும் உதவா - இம்மை மறுமை என்ற இரண்டிற்கும் எந்நாளும் உதவாத; (இச்சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு, "இருமைக்கும் என்றும் உதவா வெற்றுமொழி பேசு வீணர்" என்றும், "இருமைக்கும் என்றும் உதவா மருள்மலி சொல்லை நீங்கும்" என்றும் இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);
மருள் மலி சொல்லை நீங்கும் - அறியாமை மிக்க பேச்சை நீங்குங்கள்; (மருள் - மயக்கம்; அறியாமை);
மணி-மார்பில் நூலன் - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (மணி - அழகு; பவளம்);
மதிசூடி - சந்திரனைச் சூடியவன்;
வெள்ளை விடையன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;
அருள்வடிவாய் விளங்கும் உமைமங்கை பங்கன் - அருளின் வடிவமாகித் திகழும் உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (* அருள்வடிவாய் விளங்கும் உமை - கருணாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);
அவிநாசி அப்பன் அடியை மருமலர் கொண்டு வாழ்த்தும் அடியார்கள் என்றும் மகிழ் வான் இருப்பர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை வாசமலர் தூவி வணங்கும் பக்தர்கள் என்றும் இன்பம் திகழும் வானுலகில் (சிவலோகத்தில்) என்றும் வாழ்வது நிச்சயம்; (மரு - வாசனை); (மகிழ் - இன்பம்); (மகிழ்தல் - விரும்புதல்; மகிழ் வான் - விரும்பும் வானுலகம்);
11)
விசையுறும் ஏனம் எய்து விறலார்ந்த வாளி விசயற்கு நல்கு விகிர்தன்
அசைவறு பத்தி வேடர் அவர்கண்ணை அப்ப அருநாமம் ஒன்றை அருள்வான்
அசைகொடி போல்ம ருங்குல் உமைமங்கை பங்கன் அவிநாசி அப்பன் அடியை
இசைமலி பாட லோடு தொழுமன்பர் வானில் இனிதேயி ருப்பர் திடனே.
விசை உறும் ஏனம் எய்து, விறல் ஆர்ந்த வாளி விசயற்கு நல்கு விகிர்தன் - விரைந்து ஓடிய பன்றியை எய்து, வெற்றி மிகுந்த பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு அருளியவன், விகிர்தன் என்ற திருநாமத்தை உடையவன்; (விசை - வேகம்); (ஏனம் - பன்றி); (விறல் - வெற்றி; வலிமை); (வாளி - அம்பு); (விசயற்கு - விஜயனுக்கு); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்); (சம்பந்தர் தேவாரம் - 3.98.7 - "விசையுறு புனல்வயல் மிழலையுளீர்");
அசைவறு பத்தி வேடர் அவர்கண்ணை அப்ப அருநாமம் ஒன்றை அருள்வான் - அசையாத (திட)பக்தி உடைய வேடர் (திண்ணனார்) தம் கண்ணைத் தோண்டியெடுத்து ஈசனுக்கு அப்பவும், அவருக்குக் கண்ணப்பர் என்ற அரிய திருப்பெயரை அருளியவன்;
அசை-கொடி போல் மருங்குல் உமைமங்கை பங்கன் - அசையும் கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (மருங்குல் - இடை);
அவிநாசி அப்பன் அடியை இசை மலி பாடலோடு தொழும் அன்பர் வானில் இனிதே இருப்பர் திடனே - அழிவற்றவனும், அவிநாசி என்ற தலத்தில் உறைபவனும், எல்லார்க்கும் அப்பனுமான, சிவபெருமான் திருவடியை இசை மிகுந்த பாமாலைகளைப் பாடி வணங்கும் பக்தர்கள் வானுலகில் (சிவலோகத்தில்) இனிதே உறைவது நிச்சயம்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment