2020-02-17
M.073 - அஞ்சக்கரம் - கரமங்கை - மடக்கு
-----------------
அஞ்சக் கரமாற் கருள்செய்தான் மார்க்கண்டர்
அஞ்சக் கரமோச்சு கூற்றுதைத்தான் - அஞ்சக்
கரமங்கை கூப்பியுரை அன்பரன்பன் சங்கக்
கரமங்கை கூறன்நம் காப்பு.
சொற்பொருள்:
அஞ்சக்கரம் - 1. அம் சக்கரம்; 2. அஞ்சக் கரம்; 3. அஞ்சு அக்கரம்;
அஞ்சக்கரமங்கை - அஞ்சு அக்கரம் அங்கை;
சங்கக்கரமங்கை - சங்கக் கர மங்கை;
அம்-சக்கரம் மாற்கு அருள்செய்தான் - அழகிய சக்கரத்தைத் திருமாலுக்கு அருளியவன்; (மாற்கு - மால்+கு - மாலுக்கு)
மார்க்கண்டர் அஞ்சக் கரம் ஓச்சு கூற்று உதைத்தான் - மார்கண்டேயர் அஞ்சுமாறு அவர் உயிரைக் கவரக் (காலபாசத்தைப் பிடித்த) கையை ஓங்கிய காலனை உதைத்தவன்; (ஓச்சுதல் - உயர்த்துதல்; ஓங்குதல்);
அஞ்சு அக்கரம் அங்கை கூப்பி உரை அன்பர் அன்பன் - திருவைந்தெழுத்தைக் கைகளைக் கூப்பி ஓதும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (அக்கரம் - அக்ஷரம் - எழுத்து);
சங்கக்-கர-மங்கை கூறன் நம் காப்பு - வளையல் அணிந்த கையுடைய உமையை ஒரு கூறாக உடைய பெருமான் நம் துணை; (சங்கம் - வளையல்); (காப்பு - பாதுகாவல்);
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment