Saturday, May 2, 2026

T.219 - ஆமாத்தூர் - பரியாநமன் வருநாள்

2019-07-03

T.219 - ஆமாத்தூர் - பரியாநமன் வருநாள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதானன தனனா தாத்தா .. தனதான)


பரியாநமன் வருநா ளாய்க்கூ .. டழியாமுன்

.. பதமேபணி அடியார் கூட்டே .. அருளாயே

கரிகாடது மகிழ்மா கூத்தா .. மதன்வேவக்

.. கணையேவிய உடனே பார்த்தாய் .. நுதலாலே

அரியோடயன் அறியா மூர்த்தீ .. மதிசூடீ

.. அழகார்வயல் அணியா மாத்தூர் .. உறைவோனே

எரிமாவிடம் அமுதா ஏற்றாய் .. உமைபாகா

.. எருதூர்பவ தொழுவா னாட்டார் .. பெருமானே.


பதம் பிரித்து:

பரியா-நமன் வரு-நாளாய்க், கூடு .. அழியாமுன்,

.. பதமே பணி அடியார் கூட்டே .. அருளாயே;

கரிகாடது மகிழ்-மா கூத்தா; .. மதன் வேவக்

.. கணை ஏவிய உடனே பார்த்தாய் .. நுதலாலே;

அரியோடு அயன் அறியா மூர்த்தீ; .. மதிசூடீ;

.. அழகு ஆர் வயல் அணி ஆமாத்தூர் .. உறைவோனே;

எரி-மா-விடம் அமுதா ஏற்றாய்; .. உமைபாகா;

.. எருது-ஊர்-பவ; தொழு-வான்-நாட்டார் .. பெருமானே.


பரியா-நமன் வரு-நாளாய்க் கூடு அழியாமுன் - இரங்காத கூற்றுவன் என்னை நெருங்கி வரும் அந்திமதினம் வந்து, நான் இறந்து, இந்த உடம்பு அழிவதன் முன்பே; (பரிதல் - இரங்குதல்; அன்புகொள்தல்); (கூடு - உயிருக்குக் கூடு போன்ற உடம்பு); (சுந்தரர் தேவாரம் - 7.99.3 - "பாலன தாருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த காலனை வீடுவித்து"); (அப்பர் தேவாரம் - 5.84.2 - "கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே");

பதமே பணி அடியார் கூட்டே அருளாயே - உன் திருவடிகளையே வணங்குகின்ற அடியார்-குழாத்தில் சேரும்படி அருள்வாயாக; (கூட்டு - சினேகம்; உறவு; கூட்டம்);

கரிகாடுஅது மகிழ் மா-கூத்தா - சுடுகாட்டை இடமாக விரும்பி ஆடுகின்ற பெருங்கூத்தனே;

மதன் வேவக் கணை ஏவிய உடனே பார்த்தாய் நுதலாலே - மன்மதன் மலரம்பை ஏவியவுடன் அவன் வெந்து சாம்பலாகும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனே;

அரியோடு அயன் அறியா மூர்த்தீ - திருமால் பிரமன் இருவராலும் அறிய ஒண்ணாத இறைவனே;

மதிசூடீ - சந்திரனைச் சூடியவனே;

அழகு ஆர் வயல் அணி ஆமாத்தூர் உறைவோனே - அழகிய வயல்களால் சூழப்பெற்ற திருவாமாத்தூரில் உறையும் பெருமானே;

எரி-மா-விடம் அமுதா ஏற்றாய் - சுட்டெரித்த ஆலகாலத்தை அமுது போல உண்டருளியவனே; (அமுதா - அமுதாக);

உமைபாகா - உமைபங்கனே;

எருது-ஊர்-பவ - இடபவாகனம் உடைய பவனே; (ஊர்தல் - ஏறுதல்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் உள்ளவன்);

தொழு-வான்-நாட்டார் பெருமானே - வணங்கும் தேவர்கள் பெருமானே; (வானாட்டார் - வான் நாட்டார் - வானுலகில் வாழ்வோர் - தேவர்); ("வானாட்டார் தொழு பெருமானே" - என்றும் இயைக்கலாம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment