2019-11-09
P.490 - பொது - "சொல்லைக் கடந்த சுகம்"
-----------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு )
(அப்பர் தேவாரம் - 5.2.1 - "பனைக்கை மும்மத வேழம்")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
ஈடி லாதவன் ஈரச் சடையினன்
வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச்
சூடி சொல்லைக் கடந்த சுகம்பெற
நாடி நெஞ்சே நினையவன் நாமமே.
ஈடு இலாதவன் - இணையற்றவன்;
ஈரச் சடையினன் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;
வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச் சூடி - தேய்ந்து வருந்தி வழிபட்ட சந்திரனை நீள்சடையில் சூடியவன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, நாடி நெஞ்சே நினை அவன் நாமமே - பேரின்பத்தைப் பெற, நெஞ்சமே, அவன் திருநாமத்தை விரும்பி எண்ணுவாயாக;
2)
காதில் ஓர்குழை காட்டிய கண்ணுதல்
தீதி லாமறை ஓதி எருதமர்
சோதி சொல்லைக் கடந்த சுகம்பெற
ஆதி நாமம் அதுநினை நெஞ்சமே.
காதில் ஓர் குழை காட்டிய கண்ணுதல் - ஒரு காதில் குழை அணிந்த நெற்றிக்கண்ணன்;
தீது இலா மறை ஓதி - குற்றமற்ற வேதங்களை ஓதியவன்;
எருது அமர் சோதி - இடபவாகனத்தை விரும்பிய ஒளிவடிவினன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆதி நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, ஆதிமூர்த்தியான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;
3)
தாயின் நல்லவன் தன்னடி யார்கட்குத்
தீயின் வண்ணன் திகழ்சடை ஆறணி
தூயன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நேய மாகி நினையவன் நாமமே.
தாயின் நல்லவன் தன் அடியார்கட்குத் - தன் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவன்;
தீயின் வண்ணன் - தீப் போன்ற நிறமுடைய திருமேனியன்;
திகழ்-சடை ஆறு அணி தூயன் - விளங்கும் சடையில் கங்கையை அணிந்த பரிசுத்தன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, நேயமாகி நினை அவன் நாமமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, அப்பெருமானது திருநாமத்தை அன்போடு நினைவாயாக;
4)
தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள்
முக்கண் மூர்த்தி முடிமிசைப் பாம்பணி
சொக்கன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நக்கன் நாமத்தை நாளும் நினைநெஞ்சே.
தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள் முக்கண் மூர்த்தி - தக்கன் செய்த அவவேள்வியை முன்பு அழித்த முக்கட்பெருமான்;
முடிமிசைப் பாம்பு அணி சொக்கன் - தலைமேல் பாம்பை அணிந்த அழகன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, நக்கன் நாமத்தை நாளும் நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, திகம்பரனான ஈசனது திருநாமத்தைத் தினமும் நினைவாயாக;
5)
பித்தன் என்ற பெயரும் உடையவன்
நித்தன் நெற்றியில் நேத்திரன் நீறணி
சுத்தன் சொல்லைக் கடந்த சுகம்பெற
அத்தன் நாமம் அதுநினை நெஞ்சமே.
பித்தன் என்ற பெயரும் உடையவன் - பித்தன் (பேரருளாளன்) என்ற பெயரும் உடையவன்;
நித்தன் - அழ்விவற்றவன்;
நெற்றியில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;
நீறு அணி சுத்தன் - திருநீற்றைப் பூசிய தூயன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, அத்தன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நம் தந்தையான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;
6)
காலன் மார்பில் கழலால் உதைத்தவன்
வேலன் தாதை விடையினன் மூவிலைச்
சூலன் சொல்லைக் கடந்த சுகம்பெற
ஆலன் நாமம் அதுநினை நெஞ்சமே.
காலன் மார்பில் கழலால் உதைத்தவன் - காலனை மார்பில் திருவடியால் உதைத்தவன்;
வேலன் தாதை - முருகனுக்குத் தந்தை;
விடையினன் - இடபவாகனன்;
மூவிலைச் சூலன் - திரிசூலன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆலன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் ஈசனது திருநாமத்தை நினைவாயாக;
7)
வேழந் தன்னை உரித்தவன் விண்ணவர்
வாழ வல்விடம் உண்டவன் வன்றொண்டர்
தோழன் சொல்லைக் கடந்த சுகம்பெற
ஏழை பங்கன்பேர் எண்ணு மடநெஞ்சே.
வேழம்-தன்னை உரித்தவன் - யானையின் தோலை உரித்தவன்;
விண்ணவர் வாழ வல்விடம் உண்டவன் - தேவர்கள் வாழுமாறு கொடிய விஷத்தை உண்டவன்;
வன்-தொண்டர் தோழன் - சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்தவன்;
சொல்லைக் கடந்த சுகம் பெற, ஏழைபங்கன் பேர் எண்ணு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, உமைபங்கனது திருநாமத்தை நினைவாயாக;
8)
மடமை யால்மலை பேர்த்தவன் சென்னிபத்(து)
அடர ஊன்றிய அண்ணல் அராப்புனை
கடவுள் சொல்லைக் கடந்த சுகம்பெறச்
சுடலை நீற்றன்பேர் சொல்லு மடநெஞ்சே.
மடமையால் மலை பேர்த்தவன் சென்னி பத்து அடர ஊன்றிய அண்ணல் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளும் நெரியும்படி திருப்பாதவிரலை ஊன்றிய தலைவன்; (5.44.11 - "விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி அடர ஓர்விரல் ஊன்றிய");
அராப்புனை
கடவுள் - இறைவன்;
சொல்லைக் கடந்த சுகம் பெறச், சுடலை-நீற்றன் பேர் சொல்லு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய ஈசனது திருநாமத்தைச் சொல்வாயாக;
9)
பங்க யத்தினன் பன்னகப் பள்ளியான்
எங்கும் நேடியும் எய்தற் கரியதோர்
துங்கன் சொல்லைக் கடந்த சுகம்பெறச்
சங்க ரன்பேர் தனைநினை நெஞ்சமே.
பங்கயத்தினன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
பன்னகப் பள்ளியான் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமால்;
எங்கும் நேடியும் எய்தற்கு அரியதோர் துங்கன் - அவ்விருவரும் மண்ணை அகழ்ந்து தேடியும் வானில் பறந்துசென்று தேடியும் அடிமுடி அடைய ஒண்ணாத மேலானவன்; (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.18.4 - "குஞ்சரத் தும்பியது உரிசெய்த துங்கர்");
சொல்லைக் கடந்த சுகம் பெறச், சங்கரன்-பேர்தனை நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சங்கரனது திருநாமத்தை நினைவாயாக;
10)
நாளும் பொய்யுரை நாணிலார்க் கன்பிலான்
வேளை வெண்பொடி செய்த விமலனெண்
தோளன் சொல்லைக் கடந்த சுகம்பெறக்
காள கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.
நாளும் பொய் உரை நாண் இலார்க்கு அன்பு இலான் - எந்நாளும் பொய்களையே பேசுகின்ற வெட்கமற்றவர்களுக்கு அன்பு இல்லாதவன்;
வேளை வெண்பொடி செய்த விமலன் - மன்மதனைச் சாம்பலாக்கிய தூயன்;
எண்தோளன் - எட்டுப் புஜங்களை உடையவன்;
சொல்லைக் கடந்த சுகம் பெறக், காளகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்");
11)
ஏல வார்குழல் ஏந்திழை பங்கினன்
பால னார்பயம் பாற அருள்கால
காலன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நீல கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.
ஏல-வார்-குழல் ஏந்திழை பங்கினன் - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.1 - "ஏல வார்குழலாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனை");
பாலனார் பயம் பாற அருள் காலகாலன் - மார்க்கண்டேயரது அச்சம் நீங்கும்படி அருளிய காலகாலன்; (பாறுதல் - அழிதல்);
சொல்லைக் கடந்த சுகம் பெற, நீலகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment