Saturday, May 2, 2026

P.477 - ஒற்றியூர் - காம்பன தோளிதன்

2019-07-04

P.477 - ஒற்றியூர்

--------------------

(கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா;

தானனா என்பது தனதனா / தானன / தனதன என்றும் சில சீர்களில் வரும்)

(விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - "முன்னைநான் மறையவை")

* (x) - புணர்ச்சி பிரித்த வடிவம்;


1)

காம்பன தோளிதன் காதலன் கொன்றையை

ஆம்பலைத் திங்களை அஞ்சடைச் சூடினான்

பாம்பரை ஆர்த்தவன் பால்தயிர் ஆடினான்

ஓம்பினார்க் கன்பினான் ஒற்றியூர்ப் புற்றனே.


காம்பு அன தோளிதன் காதலன் - மூங்கில் போன்ற புஜம் உடைய உமைக்குக் கணவன்; (காம்பு - மூங்கில்);

கொன்றையை ஆம்பலைத் திங்களை அஞ்சடைச் சூடினான் - அழகிய சடைமேல் கொன்றைமலர், அல்லிமலர், சந்திரன் இவற்றையெல்லாம் அணிந்தவன்; (ஆம்பல் - அல்லி); (அம் - அழகு);

பாம்பு அரை ஆர்த்தவன் - பாம்பை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

பால் தயிர் ஆடினான் - பாலாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

ஓம்பினார்க்கு அன்பினான் - விரும்பி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.11.4 - "புற்றானைப் புற்றரவம் அரையின்மிசைச் சுற்றானை");


2)

ஒருமலை மத்தினால் ஒண்கடல் கடைசுரர்

வெருவுறப் பெருகிய வெவ்விடம் அமுதெனப்

பருகிய பண்பினான் பதமலர்க் கன்பராய்

உருகினார்க் கருள்பவன் ஒற்றியூர்ப் புற்றனே.


ஒரு மலை-மத்தினால் ஒண்-கடல் கடை-சுரர் - மேருமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த தேவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.81.3 - "அரவ ஒண்கடலின் நஞ்சம் அமுதுண்ட கடவுள்");

வெருவுறப் பெருகிய வெவ்விடம் அமுதெனப் பருகிய பண்பினான் - அஞ்சும்படி பெருகிய கொடிய நஞ்சை அமுதம்போல் உண்ட பண்பன்; (வெரு - அச்சம்);

பதமலர்க்கு அன்பராய் உருகினார்க்கு அருள்பவன் - அவன் திருவடித்தாமரைக்கு அன்பர்கள் ஆகி உருகுகின்றவர்களுக்கு அருள்புரிபவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


3)

கள்ளுகும் கொன்றையும் கதிர்மதித் துண்டமும்

வெள்ளமும் சூடிய விரிசடை வேதியன்

கள்ளமொன் றின்றியே கழலிணை அனுதினம்

உள்கினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கள்கும் கொன்றையும் கதிர்மதித் துண்டமும் வெள்ளமும் சூடிய விரிசடை வேதியன் - தேன் சொரியும் கொன்றைமலரையும் கதிர் வீசும் பிறையையும் கங்கையையும் சூடிய விரிந்த சடையை உடைய வேதியன்; (வேதியன் - வேத முதல்வன்);

கள்ளம் ஒன்று இன்றியே கழலிணை அனுதினம் உள்கினார்க்கு உள்ளவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் இரு-திருவடிகளைத் தினமும் எண்ணி வழிபடும் அன்பர்களுக்கு அருள் உள்ளவன்; (உள்குதல் - எண்ணுதல்);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


4)

ஆதியாய் அந்தமாம் அளவிலாப் பெருமையன்

பாதிமா தாயவன் பாய்புலித் தோலினன்

தீதிலா நெஞ்சராய்த் திருப்புகழ் நாள்தொறும்

ஓதினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


ஆதியாய் அந்தம் ஆம் அளவு இலாப் பெருமையன் - முதலும் முடிவுமாக விளங்குகின்ற அளவில்லாத பெருமை உடையவன்;

பாதி மாது ஆயவன் - உமைபங்கன்;

பாய்-புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

தீது இலா நெஞ்சராய்த் திருப்புகழ் நாள்தொறும் ஓதினார்க்கு உள்ளவன் - குற்றமற்ற நெஞ்சர்கள் ஆகித் தினமும் பெருமானது புகழைப் பாடும் பக்தர்களுக்கு அருள் உள்ளவன்; (சுந்தரர் தேவாரம் - 7.69.4 - "திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற்கு அருளாய்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


5)

கன்னலோர் வில்லெனக் கையினில் ஏந்துவேள்

தன்னுடல் பொடிசெய்த சங்கரன் பொங்கழல்

அன்னசெம் மேனியன் அடியிணை அன்பினால்

உன்னினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கன்னல் ஓர் வில்னக் கையினில் ஏந்து வேள்தன் உடல் பொடிசெய்த சங்கரன் - கரும்பை ஓர் வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய சங்கரன்; (கன்னல் - கரும்பு); (வேள் - காமன்);

பொங்கு-அழல் அன்ன செம்மேனியன் - பொங்கியெழும் தீப் போன்ற செம்மேனியை உடையவன்;

அடியிணை அன்பினால் உன்னினார்க்கு உள்ளவன் - இரு-திருவடிகளை அன்போடு எண்ணும் பக்தர்களுக்கு அருள் உள்ளவன்; (உன்னுதல் - எண்ணுதல்);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


6)

கயலன கண்ணுமை காதலன் இமையவர்

துயர்கெட முப்புரம் சுடுசரம் தொட்டவன்

பெயர்பல உடையவன் பேணிடும் பத்தருக்(கு)

உயர்வினை நல்குவான் ஒற்றியூர்ப் புற்றனே.


கயல் அன கண்-மை காதலன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமைக்குக் கணவன்;

இமையவர் துயர் கெட முப்புரம் சுடுசரம் தொட்டவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (சரம் - அம்பு);

பெயர் பல உடையவன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

பேணிடும் பத்தருக்கு உயர்வினை நல்குவான் - போற்றும் பக்தர்களுக்கு நற்கதியை அளிப்பவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


7)

கம்பமா கரியுரி கண்டனே காரணா

செம்பொனார் மேனியாய் தீவினை தீரென

வம்புநாண் மலர்கொடு வழிபடும் அன்பரை

உம்பரில் வைப்பவன் ஒற்றியூர்ப் புற்றனே.


"கம்ப-மா-கரி உரி-கண்டனே - "அசையும் இயல்புடைய பெரிய யானையைத் தோலுரித்த வீரனே; (கம்பம் - அசைவு); (கண்டன் - வீரன்); (சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "கம்பமா கரியுரித்த காபாலி");

காரணா - எல்லாவற்றிற்கும் முதற்காரணம் ஆனவனே; (அப்பர் தேவாரம் - 5.65.10 - "பூவனூர் மேவிய காரணன்");

செம்பொன் ஆர் மேனியாய் - செம்பொன் போன்ற திருமேனியனே; (ஆர்தல் - ஒத்தல்);

தீவினை தீர்" என - தீவினையைத் தீர்த்தருள்க" என்று;

வம்பு நாண்மலர்கொடு வழிபடும் அன்பரை உம்பரில் வைப்பவன் - வாசம் மிக்க புதுமலர்களால் வழிபடும் பக்தர்களைச் சிவலோகத்தில் இருத்துபவன்; (வம்பு - வாசனை); (உம்பர் - வானுலகு);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


8)

கருவனாய்க் கயிலையைக் கைகளால் பேர்த்தவன்

குருதியா றோடவே ஒருவிரல் ஊன்றினான்

கருதிமா மலர்களால் கழல்தொழும் பத்தருக்(கு)

ஒருதுணை ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கருவனாய்க் கயிலையைக் கைகளால் பேர்த்தவன் - கர்வத்தோடு கயிலைமலையை இருபது கைகளால் பேர்த்த இராவணனது; (கருவன் - கர்வன் - கர்வம் உடையவன்);

குருதி-ஆறு ஓடவே ஒரு விரல் ஊன்றினான் - இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி திருப்-பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்;

கருதி மா-மலர்களால் கழல் தொழும் பத்தருக்கு ஒரு துணை ஆனவன் - சிறந்த பூக்களால் திருவடியை விரும்பித் தொழும் பக்தர்களுக்கு ஒப்பற்ற துணைவன் ஆனவன்; (ஒரு - ஒப்பற்ற);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


9)

நறுமலர் மேலினான் நாரணன் காண்கிலார்

அறுமுகத் தழகனை அருளிய முக்கணன்

செறுவினை தீர்த்தருள் செய்யெனும் அன்பருக்(கு)

உறுதுணை ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


நறுமலர் மேலினான் நாரணன் காண்கிலார் - வாசனை மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்;

அறுமுகத்து அழகனை அருளிய முக்கணன் - முருகனை அருளிய நெற்றிக்கண்ணன்;

செறு-வினை தீர்த்து-ருள்செய் எனும் அன்பருக்கு உறுதுணை ஆனவன் - "வருத்துகின்ற வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிக" என்று தொழும் பக்தர்களுக்கு உற்ற துணை ஆனவன்; (செறுதல் - சினத்தல்; வருத்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.7.9 - "செறு தீவினை கடிய கூற்றமும் கண்டகலும்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


10)

பொய்திகழ் நாவுடைப் புல்லர்சொல் போற்றிடேல்

மைதிகழ் மிடறினன் மார்பினில் நூலினன்

நெய்திகழ் வேலினன் நீறணி நேயருக்(கு)

உய்தியை நல்குவான் ஒற்றியூர்ப் புற்றனே.


பொய் திகழ் நாவுடைப் புல்லர் சொல் போற்றிடேல் - பொய்களையே பேசும் கீழோர்களது சொற்களை மதிக்கவேண்டா;

மை திகழ் மிடறினன் - நீலகண்டன்; (மை - கருமை); (மிடறு - கண்டம்);

மார்பினில் நூலினன் - மார்பில் பூணூல் அணிந்தவன்;

நெய் திகழ் வேலினன் - நெய் பூசப்பெற்ற சூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்கள் துருப்பிடித்தலைத் தடுக்க எண்ணெய் பூசி வைப்பது மரபு); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழுவும்");

நீறு அணி நேயருக்கு உய்தியை நல்குவான் - திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்களுக்கு நற்கதியைக் கொடுப்பவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


11)

மறைபுகழ் வான்பொருள் மாதவர் ஏத்திடும்

கறைதிகழ் மிடறினன் கரியுரி போர்த்தவன்

அறைகழல் போற்றிடும் அடியவர் நெஞ்சகம்

உறைவிடம் ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


மறை புகழ் வான்பொருள் - வேதங்கள் துதிக்கும் சிறந்த மேலான பொருள் ஆனவன்;

மா-தவர் ஏத்திடும் கறை திகழ் மிடறினன் - சிறந்த தவம் உடையவர்கள் போற்றும் நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

கரி-உரி போர்த்தவன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கரி - யானை); (உரி - தோல்);

அறை-கழல் போற்றிடும் அடியவர் நெஞ்சகம் உறைவிடம் ஆனவன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைப் போற்றும் அடியார்களது மனமே தங்கும் இடம் ஆனவன்; (அறைதல் - ஒலித்தல்); (நெஞ்சகம் - மனம்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment