2019-07-25
T. 228 - கழுமலம் (சீகாழி) - முடிவிலதான துயர்
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தான தனதன தான
தனதன தான .. தனதான)
(இருமலு ரோக - திருப்புகழ் - திருத்தணிகை)
(அகரமு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)
முடிவில தான துயர்தரு மாறு
.. .. முனைவினை மூடி .. அழியாமுன்
.. முனிவரர் நாளு(ம்) நினைதிரு நாம(ம்)
.. .. மொழிதரு நாவை .. அருளாயே
கொடியிடை மாது பிரிதலி லாது
.. .. குலவிடு மேனி .. உடையானே
.. குளிர்புனல் நாகம் இளமதி யோடு
.. .. குரவமும் ஏறு .. சடையானே
அடிதொழு மாணி உயிர்கொல ஓடும்
.. .. அடல்நமன் வீழ .. அவன்மார்பில்
.. அழகிய பாதம் அதுபட வீசி
.. .. அருளிய நேய .. கருதார்தம்
கடியரண் வேவ நகைபுரி தேவ
.. .. கரியுரி மூடு .. மணிமார்பா
.. கடிகமழ் சோலை தனிலளி பாடு
.. .. கழுமல(ம்) மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
முடிவு-இலதான துயர் தருமாறு
.. .. முனை-வினை மூடி .. அழியாமுன்,
.. முனிவரர் நாளு(ம்) நினை-திருநாம(ம்)
.. .. மொழிதரு நாவை .. அருளாயே;
கொடி-இடை மாது பிரிதல் இலாது
.. .. குலவிடு மேனி .. உடையானே;
.. குளிர்-புனல், நாகம், இள-மதியோடு,
.. .. குரவமும் ஏறு .. சடையானே;
அடிதொழு மாணி உயிர்-கொல ஓடும்
.. .. அடல்-நமன் வீழ .. அவன்-மார்பில்
.. அழகிய பாதம் அது பட வீசி
.. .. அருளிய நேய; .. கருதார்தம்
கடி-அரண் வேவ நகை-புரி தேவ;
.. .. கரி-உரி மூடு .. மணி-மார்பா;
.. கடி கமழ் சோலைதனில் அளி பாடு
.. .. கழுமலம் மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;
முடிவு இலது ஆன துயர் தருமாறு முனை-வினை மூடி அழியாமுன் - முடிவின்றித் தொடர்கின்ற துன்பத்தைத் தரும்படி பழவினை என்னை மூடி நான் அழிவதன்முன்; (முனை - முன்னை - பழைய);
முனிவரர் நாளும் நினை திருநாமம் மொழிதரு நாவை அருளாயே - முனிசிரேஷ்டர்கள் எப்பொழுதும் தியானிக்கும் உன் திருநாமத்தைச் சொல்லும் நாக்கை எனக்கு அருள்வாயாக; (தருதல் - ஒரு துணைவினை);
கொடியிடை மாது பிரிதல் இலாது குலவிடு மேனி உடையானே - கொடி போன்ற இடையை உடைய உமை பிரியாமல் இணைந்திருக்கும் திருமேனியனே;
குளிர்-புனல், நாகம், இளமதியோடு, குரவமும் ஏறு சடையானே - குளிர்ந்த கங்கை, பாம்பு, இளந்திங்கள், இவற்றோடு குராமலரையும் சடையில் அணிந்தவனே;
அடிதொழு மாணி உயிர் கொல ஓடும் அடல்-நமன் வீழ அவன் மார்பில் அழகிய பாதம் அதுபட வீசி அருளிய நேய - வணங்கிய மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல விரைந்த வலிய கூற்றுவன் தரையில் விழுந்து மாளும்படி அந்த இயமனது மார்பில் உன் அழகிய திருவடியால் உதைத்து அருளிய அன்புடையவனே;
கருதார்தம் கடி-அரண் வேவ நகை புரி தேவ - பகைவர்களது காவல் மிக்க முப்புரங்களும் வெந்து அழியும்படி சிரித்த தேவனே; (கருதார் - பகைவர்); (கடி - காவல்); (நகை - சிரிப்பு);
கரி-உரி மூடு மணி-மார்பா - யானைத்தோல் மூடுகின்ற அழகிய பவளம் போன்ற மார்பை உடையவனே; (கரி - யானை); (உரி - தொல்); (மணி - அழகு; பவளம்);
கடி கமழ் சோலைதனில் அளி பாடு கழுமலம் மேய பெருமானே - வாசனை கமழும் சோலையில் வண்டுகள் இசை பாடுகின்ற கழுமலத்தில் (சீகாழியில்) உறைகின்ற பெருமானே; (கடி - வாசனை); (அளி - வண்டு);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment