2020-01-30
P.496 - வீரவநல்லூர்
(தாமிரபரணிக்-கரையில் உள்ள ஊர்)
-----------------
(அறுசீர் விருத்தம் - மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் - வாய்பாடு;
முதற்சீர் ஈற்றில் குறில் / குறில்+ஒற்று)
(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியம் செய்தனை");
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
பூமி டைந்தநன் மாலைகள் புனைந்தவர் புகழ்மலி திருநாமம்
நாமி டைந்திட நாள்தொறும் தொழுதெழ நம்வினை அவைதீர்ப்பார்
பூமி நாதனார் மரகதக் கொடியுடன் புரிந்துறை பதியென்பர்
வீமி கும்பொழில் தனிற்சிறை வண்டறை வீரவ நல்லூரே.
பூ மிடைந்த நன்மாலைகள் புனைந்து, அவர் புகழ் மலி திருநாமம் நா மிடைந்திட - பூக்கள் செறிந்த நல்ல மாலைகளைத் தொடுத்துச் சூட்டி, அவரது புகழ் மிக்க திருப்பெயரை நாவில் அணிந்து; (மிடைதல் - செறிதல்; நிறைதல்; கலத்தல்);
நாள்தொறும் தொழுதெழ நம் வினை-அவை தீர்ப்பார் - தினமும் வழிபட்டால் நம் வினைகளையெல்லாம் தீர்ப்பவரான;
பூமிநாதனார் மரகதக்கொடியுடன் புரிந்து உறை பதி என்பர் - பூமிநாதர் மரகதவல்லியுடன் விரும்பி உறைகின்ற தலம் என்பர்; (புரிதல் - விரும்புதல்); (கொடி - கொடி போன்ற பெண்); (* பூமிநாதர், மரகதாம்பிகை - வீரவநல்லூரில் இறைவன் இறைவி திருநாமங்கள்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.379 - "மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப் பவளவெற்பென இடப்பாகம் கொள்ளு மாமலையாளுடன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.9.6 - "மழபாடியைப் புரிந்து கைதொழுமின்");
வீ மிகும் பொழில்தனில் சிறைவண்டு அறை வீரவநல்லூரே - மலர்கள் நிறைந்த சோலையில் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற வீரவநல்லூர்; (வீ - மலர்; பூ); (சிறை - சிறகு); (அறைதல் - ஒலித்தல்);
2)
தீதி லாமலர் மாலைகள் இட்டவர் சேவடிப் புகழ்நாமம்
ஓதி நாள்தொறும் உருகிடும் அன்பருக் குறுதுணை எனநிற்பார்
காதி னிற்குழை தோடணி சுந்தரர் கருதிடும் பதியென்பர்
மேதி னிப்பசி தீர்வயல் புடையணி வீரவ நல்லூரே.
தீது இலா மலர்மாலைகள் இட்டு, அவர் சேவடிப்-புகழ் நாமம் ஓதி நாள்தொறும் உருகிடும் அன்பருக்கு உறுதுணை என நிற்பார் - சிறந்த பூமாலைகளைச் சூட்டி, அவரது சிவந்த திருவடிப் புகழையும் திருநாமத்தையும் தினமும் ஓதி மனம் உருகுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணையாகிக் காப்பவர்; (புகழ்நாமம் - புகழும் நாமமும் - உம்மைத்தொகை);
காதினில் குழை தோடு அணி சுந்தரர் கருதிடும் பதி என்பர் - ஒரு காதில் குழையும், ஒரு காதில் தோடும் அணிந்த அழகரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்;
மேதினிப்-பசி தீர் வயல் புடை அணி வீரவநல்லூரே - உலகின் பசியைத் தீர்க்கின்ற வயல்கள் சூழ்ந்த வீரவநல்லூர்; (மேதினி - பூமி);
3)
பறிம லர்த்தொடை பதமலர் இட்டவர் பழவினை அவைதீர்ப்பார்
மறியை வன்னியை ஏந்திய மாண்பினர் மலைமகள் ஒருபங்கர்
பொறிய ராவினைப் புலியதள் மிசையசை புகழினர் பதியென்பர்
வெறிக மழ்ந்திடும் பொழில்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.
பறி-மலர்த்தொடை பதமலர் இட்டவர் பழவினை-அவை தீர்ப்பார் - அன்று பறித்த புதிய மலர்களால் தொடுத்த மாலையைத் திருவடித்தாமரையில் சூட்டியவர்களது பழைய வினையைத் தீர்ப்பவர்; (பறிமலர் - பறித்த மலர்; வினைத்தொகை);
மறியை வன்னியை ஏந்திய மாண்பினர் - மான்கன்றையும் நெருப்பையும் கையில் ஏந்தியவர்; (மறி - மான் முதலியவற்றின் கன்று); (வன்னி - தீ);
மலைமகள் ஒரு பங்கர் - உமையை ஒரு பாகமாக உடையவர்;
பொறி-அராவினைப் புலி-அதள்மிசை அசை புகழினர் பதி என்பர் - புள்ளிகளையுடைய பாம்பைப் புலித்தோல் ஆடையின்மேல் கட்டிய புகழுடைய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (பொறி - புள்ளி); (அரா - பாம்பு); (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்); (அப்பர் தேவாரம் - 4.35.6 - "பொறியர வரையில் ஆர்த்து");
வெறி கமழ்ந்திடும் பொழில் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்ற வீரவநல்லூர்; (வெறி - வாசனை); (தருதல் - ஒரு துணைவினை);
4)
அக(ம்)ம கிழ்ந்தடி தொழுதெழும் அடியவர் அருவினை அவைதீர்ப்பார்
உகளு(ம்) மான்மறி ஒண்மழு ஏந்தினார் உம்பர்கள் இடர்தீர
இகலி யார்புர(ம்) மூன்றையும் எய்தவர் இனிதுறை பதியென்பர்
மிகுவ ளந்தரும் பொருநையின் தென்கரை வீரவ நல்லூரே.
அக(ம்)மகிழ்ந்து அடி தொழுதெழும் அடியவர் அருவினைஅவை தீர்ப்பார் - உளம் மகிழ்ந்து திருவடியை வழிபடும் பக்தர்களது அரிய வினைகளையெல்லாம் தீர்ப்பவர்;
உகளும் மான்மறி ஒண்-மழு ஏந்தினார் - தாவுகின்ற மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் ஏந்தியவர்; (உகள்தல் - தாவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.109.4 - "நீள்வயற் கயலுகள் கோட்டூர்");
உம்பர்கள் இடர் தீர இகலியார் புரம் மூன்றையும் எய்தவர் இனிது உறை பதி என்பர் - தேவர்களது துன்பம் தீரும்படி, அவர்களைப் பகைத்த அசுரர்களது முப்புரங்களையும் ஒரு கணையால் எய்து அழித்தவரான சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (உம்பர் - தேவர்); (இகலியார் - பகைவர்);
மிகுவளம் தரும் பொருநையின் தென்கரை வீரவநல்லூரே - மிகுந்த வளத்தைத் தருகின்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள வீரவநல்லூர்;
5)
கரவி லாதடி கைதொழு காதலர் கருதிய வரமீவார்
அரவை நாணென வில்லினில் ஆர்த்தவர் அணிகழல் அவையார்ப்ப
இரவில் ஆடிடும் எல்லையில் கூத்தினர் இனிதுறை பதியென்பர்
விரைக மழ்ந்திடும் பொழில்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.
கரவு இலாது அடி கைதொழு காதலர் கருதிய வரம் ஈவார் - வஞ்சம் இன்றித் திருவடியை வணங்கும் அன்பர்கள் விரும்பிய வரங்களை அருள்பவர்; (கரவு - வஞ்சம்); (காதலர் - அன்பர்);
அரவை நாண் என வில்லினில் ஆர்த்தவர் - முப்புரத்தை எரித்த நாளில், மேருமலை என்ற வில்லில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டியவர்;
அணிகழல்அவை ஆர்ப்ப இரவில் ஆடிடும் எல்லை-இல் கூத்தினர் இனிது உறை பதி என்பர் - அணிந்த அழகிய கழல்கள் ஒலிசெய்ய நள்ளிருளில் அளவில்லாத திருநடம் செய்யும் சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (அணி - அழகு; அணிதல் - பூண்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (எல்லை - அளவு; முடிவு);
விரை கமழ்ந்திடும் பொழில் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்ற வீரவநல்லூர்; (விரை - வாசனை);
6)
களையி ழந்துகண் குழிவதன் முன்னமே கழல்தொழும் அடியார்தம்
தளையை மாய்த்துயர் செல்வமும் தருபவர் சடைமிசை மதிசூடி
இளைய வெள்விடை ஏறிய இறையவர் இனிதுறை பதியென்பர்
விளையு(ம்) நெல்திகழ் வயல்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.
களை இழந்து கண் குழிவதன் முன்னமே கழல் தொழும் அடியார்தம் தளையை மாய்த்து உயர் செல்வமும் தருபவர் - தங்கள் உடல் பொலிவிழந்து கண்கள் குழியும் முதுமைக்காலம் வருவதன் முன்னரே திருவடியை வழிபடுகின்ற அடியவர்களுடைய பந்தங்களை அழித்து உயர்ந்த செல்வத்தையும் தருபவர்;
சடைமிசை மதிசூடி - சடையின்மேல் பிறைச்சந்திரனைச் சூடியவர்;
இளைய வெள்விடை ஏறிய இறையவர் இனிது உறை பதி என்பர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (சம்பந்தர் தேவாரம் - 3.18.6 - "நீள்சடை இறையவர்");
விளையும் நெல் திகழ் வயல் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - நெற்பயிர் செழித்து வளரும் வயல்களால் சூழப்பெற்ற வீரவநல்லூர்;
7)
தங்க ரங்களைக் கூப்பிய அடியவர் தாழ்வற அருள்செய்வார்
மங்கை மாரிடும் உண்பலி தேர்ந்துழல் மாசுண அரைநாணார்
கங்கை நுங்கிய சடையினர் விடையினர் கருதிடும் பதியென்பர்
வெங்க ளைச்சிறை வண்டுகள் உண்டறை வீரவ நல்லூரே.
தம் கரங்களைக் கூப்பிய அடியவர் தாழ்வு அற அருள்செய்வார் - தம் கைகளைக் குவித்து வணங்கிய அடியவர்களது குறைகளெல்லாம் தீர அருள்செய்பவர்;
மங்கைமார் இடும் உண்பலி தேர்ந்துழல் மாசுண அரைநாணார் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்று உழலும், பாம்பை அரைநாணாகக் கட்டியவர்; ("பிச்சையேற்று உழலும், திகம்பரராகிப் பாம்பை அரையில் கட்டிய, நாணமற்றவர்" என்றும் பொருள்கொள்ள நின்றது); (பலி - பிச்சை); (மாசுணம் - பாம்பு); (நாணார் - 1. நாணாக உடையவர்; 2. வெட்கப்படாதவர்);
கங்கை நுங்கிய சடையினர் - கங்கையை விழுங்கிய சடையை உடையவர்; (நுங்குதல் - விழுங்குதல்; ஆரப் பருகுதல்);
விடையினர் கருதிடும் பதி என்பர் - இடபவாகனரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்;
வெங்களைச் சிறைவண்டுகள் உண்டு அறை வீரவநல்லூரே - விரும்பத்தக்க தேனை அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் உண்டு ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) வீரவநல்லூர்; (வெம்மை - விருப்பம்); (களை - கள்ளை - இடைக்குறை; கள் - பூவிலிருக்கும் தேன்); (சம்பந்தர் தேவாரம் - 1.26.1 - "வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை");
8)
வேக மாய்மலை பேர்த்தவன் வீரிட விரல்கொடு நெரிபாதர்
நாக(ம்) மாமதி செஞ்சடை வைத்தவர் நான்மறை மொழிநாவர்
பாக(ம்) மாதமர் பண்பினர் வெண்மழுப் படையினர் பதியென்பர்
மேக(ம்) நல்கிய புனலடை வயலணி வீரவ நல்லூரே.
வேகமாய் மலை பேர்த்தவன் வீரிட விரல்கொடு நெரி-பாதர் - சினம் உடையவனாகிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் பெரிதும் கத்தி அழும்படி திருப்பாதவிரலால் அவனை நசுக்கியவர்; (வேகம் - கோபம்); (வீரிடுதல் - திடீரென்று கத்துதல்); (கொடு - மூன்றாம்வேற்றுமை உருபு); (நெரித்தல் - நசுக்குதல்);
நாகம் மாமதி செஞ்சடை வைத்தவர் - பாம்பையும் அழகிய திங்களையும் சிவந்த சடையின்மேல் ஒன்றாக வைத்தவர்;
நான்மறை மொழி நாவர் - நால்வேதங்களைப் பாடியருளியவர்;
பாகம் மாது அமர் பண்பினர் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பியவர்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
வெண்மழுப் படையினர் பதி என்பர் - வெண்மையான மழுவாயுதத்தை ஏந்திய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்;
மேகம் நல்கிய புனல் அடை வயல் அணி வீரவநல்லூரே - மேகம் பொழிந்த நீர் அடைகின்ற வயல்கள் நிறைந்த வீரவநல்லூர்;
9)
முன்ம யக்கொடு மாலயன் நேடிட மூளெரி எனநீண்டார்
தென்மொ ழித்தொடை கொண்டடி போற்றிடும் சீலர்தம் வினைதீர்ப்பார்
புன்ச டைப்பிறை புற்றர வம்புனை புண்ணியர் பதியென்பர்
மென்சி றைக்கரு வண்டறை பொழிலணி வீரவ நல்லூரே.
முன் மயக்கொடு மால் அயன் நேடிட மூள் எரி என நீண்டார் - முன்னொருநாள் அறிவின் மயக்கத்தால் திருமாலும் பிரமனும் தேடும்படி மூண்டெழுந்த ஜோதிப்பிழம்பாகி ஓங்கியவர்; (நேடுதல் - தேடுதல்);
தென்மொழித்தொடை-கொண்டு அடி போற்றிடும் சீலர்தம் வினை தீர்ப்பார் - இனிய தமிழ்ப்பாமாலைகளால் திருவடியை வழிபடும் சீலர்களது வினையைத் தீர்ப்பவர்; (தென் - இனிமை; தெற்கு); (தென்மொழி - தமிழ்); (தொடை - செய்யுள்; மாலை);
புன்சடைப் பிறை புற்றரவம் புனை புண்ணியர் பதி என்பர் - செஞ்சடையில் பிறையையும் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த புண்ணியமூர்த்தியான சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (புன்மை - புகர் நிறம்); (புனைதல் - அணிதல்);
மென்சிறைக்- கருவண்டு அறை பொழில் அணி வீரவநல்லூரே - மெல்லிய சிறகுகளையுடைய கரிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வீரவநல்லூர்; (சிறை - சிறகு); (சம்பந்தர் தேவாரம் - 2.78.11 - "மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய");
10)
மிண்டு நெஞ்சினர் வெற்றுரை பேசிடும் வீணர்சொல் விடுவீரே
மண்டும் அன்புடை மாணியைக் காத்திட மறலியை உதைபாதர்
அண்ட நாயகர் அடியவர் இடர்களை அங்கணர் பதியென்பர்
விண்ட போதமர் வண்டறை பொழிலணி வீரவ நல்லூரே.
மிண்டு-நெஞ்சினர் வெற்றுரை பேசிடும் வீணர் சொல் விடுவீரே - கல்நெஞ்சர்களும் பொருளற்ற சொற்களைப் பேசுபவர்களுமான வீணர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (மிண்டு - திண்மை; குற்றம்); (விடுவீர் - இங்கே, விடுமின் - விடுங்கள் - என்ற பொருளில்);
மண்டும் அன்புடை மாணியைக் காத்திட மறலியை உதை-பாதர் - மிகுகின்ற அன்புடைய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த திருப்பாதர்; (மண்டுதல் - அதிகமாதல்); (மறலி - இயமன்); (அப்பர் தேவாரம் - 6.74.10 - "வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான்தன்னை");
அண்ட-நாயகர் - அண்டங்களுக்கெல்லாம் தலைவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.120.10 - "அண்டநாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த");
அடியவர் இடர் களை அங்கணர் பதி என்பர் - அடியார்களது துன்பத்தைத் தீர்க்கும் அருட்கண்ணுடைய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (அங்கணன் - அருட்கண்ணுடையவன் - சிவன்);
விண்ட போது அமர் வண்டு அறை பொழில் அணி வீரவநல்லூரே - மலர்ந்த பூக்களை விரும்பும் வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வீரவநல்லூர்; (விள்ளுதல் - மலர்தல்); (போது - பூ); (அமர்தல் - விரும்புதல்);
11)
வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் விண்ணவர் தொழுதேத்த
வேலை நஞ்சணி மிடறினர் வேள்பட நோக்கிய பெருமானார்
காலை ஞாயிறு காட்டிய மேனியர் கருதிடும் பதியென்பர்
மேலை வெற்பினில் வீழ்புனல் அடைவயல் வீரவ நல்லூரே.
வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் - வேலை ஏந்திய முருகனை மகனாகப் பெற்றவர்;
விண்ணவர் தொழுதேத்த வேலை-நஞ்சு அணி மிடறினர் - தேவர்கள் வணங்கி ஏத்தப் பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவர்; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);
(இலக்கணக் குறிப்பு : "விண்ணவர் தொழுதேத்த" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இருபுறமும் இயைத்தும் பொருள்கொள்ளலாம்; விண்ணவர் தொழுதேத்த வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் & விண்ணவர் தொழுதேத்த வேலை-நஞ்சு அணி மிடறினர்);
வேள் பட நோக்கிய பெருமானார் - மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்த பெருமானார்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");
காலை-ஞாயிறு காட்டிய மேனியர் கருதிடும் பதி என்பர் - விடியற்காலத்து இளஞ்சூரியன் போன்ற செம்மேனியரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்; (காலை - விடியற்காலம்); (அப்பர் தேவாரம் - 6.97.2 - "எரிகின்ற இளஞாயி றன்ன மேனி");
மேலை-வெற்பினில் வீழ்-புனல் அடை-வயல் வீரவநல்லூரே - மேற்கே உள்ள மலையில் விழுந்த மழைநீர் (தாமிரபரணி ஆறாகி) வந்து அடைகின்ற வயல் சூழ்ந்த வீரவநல்லூர்; (மேலை - மேற்கில் உள்ள); (வெற்பு - மலை); (வீழ்தல் - விழுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment