2019-11-09
P.492 - பழனம்
(திருவையாறு அருகே உள்ள தலம்)
--------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
நிசியில் நடமா டியநாதா
சசியைச் சடைமேல் உடையானே
பசிதீர் வயல்சூழ் பழனத்தாய்
நசியா வினைதீர்த் தருளாயே.
நிசியில் நடம் ஆடிய நாதா - இருளில் திருக்கூத்து ஆடும் நாதனே;
சசியைச் சடைமேல் உடையானே - சந்திரனைச் சடைமேல் தரித்தவனே;
பசி தீர் வயல் சூழ் பழனத்தாய் - உலகின் பசியைத் தீர்க்கும் வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
நசியா வினை தீர்த்து அருளாயே - என் தீரா-வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
2)
பிறவா இறவாப் பெருமானே
நறவார் இதழிச் சடையானே
பறவைப் பொழில்சூழ் பழனத்தாய்
அறவா வினைதீர்த் தருளாயே.
பிறவா இறவாப் பெருமானே - பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே;
நறவு ஆர் இதழிச் சடையானே - தேன் பொருந்திய கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனே; (நறவு - தேன்); (இதழி - கொன்றை);
பறவைப்-பொழில் சூழ் பழனத்தாய் - பறவைகள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
அறவா - அறவடிவினனே;
வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
3)
குழையோர் செவியிற் புனைவானே
நிழலார் மழுவாட் படையானே
பழமார் பொழில்சூழ் பழனத்தாய்
பழவல் வினைதீர்த் தருளாயே.
குழை ஓர் செவியில் புனைவானே - ஒரு காதில் குழையை அணிந்தவனே;
நிழல் ஆர் மழுவாள்-படையானே - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவனே;
பழம் ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - பழங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
பழ-வல்வினை தீர்த்து அருளாயே - என் பழைய வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
4)
அடையார் புர(ம்)மூன் றவைதீயில்
உடன்வெந் தறவோர் கணையுய்த்தாய்
படர்கா விரிநீர்ப் பழனத்தாய்
தொடர்வல் வினைதீர்த் தருளாயே.
அடையார் புர(ம்) மூன்று அவை தீயில் உடன் வெந்து அற ஓர் கணை உய்த்தாய் - பகைவர்களது முப்புரங்களும் நெருப்பில் ஒரே சமயத்தில் உடனே வெந்து அழியும்படி ஒரு கணையை ஏவியவனே;
படர்-காவிரிநீர்ப் பழனத்தாய் - பரவிய காவிரியின் நீர் வளம் செய்கின்ற திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
தொடர்-வல்வினை தீர்த்து அருளாயே - என்னைத் தொடர்கின்ற வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
5)
முனிவார் நமனைச் செறுகாலா
புனிதா புரிநூல் திகழ்மார்பா
பனியார் பொழில்சூழ் பழனத்தாய்
இனியாய் வினைதீர்த் தருளாயே.
முனிவு ஆர் நமனைச் செறு-காலா - கோபம் மிக்க காலனை அழித்த காலகாலனே; (முனிவு - கோபம்);
புனிதா - தூயனே;
புரிநூல் திகழ் மார்பா - முப்புரிநூலை மார்பில் அணிந்தவனே;
பனி ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
இனியாய் - இனியவனே;
வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
6)
தயிர்பால் இவையா டியநாதா
உயிராய் உடலாய்த் திகழ்தேவா
பயிரார் வயல்சூழ் பழனத்தாய்
துயரார் வினைதீர்த் தருளாயே.
தயிர் பால் இவை ஆடிய நாதா - தயிர் பால் இவற்றால் அபிஷேகம் மகிழ்ந்த நாதனே;
உயிராய் உடலாய்த் திகழ் தேவா - உயிரும் உடலும் ஆன தேவனே; (சுந்தரர் தேவாரம் - 7.1.7 - "ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்");
பயிர் ஆர் வயல் சூழ் பழனத்தாய் - பயிர்கள் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
துயர் ஆர் வினை தீர்த்து அருளாயே - துயரில் பிணிக்கின்ற வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக; (ஆர்த்தல் - கட்டுதல்);
7)
கண்ணார் நுதலாய் கயிலாயா
அண்ணா மலையாய் அளிபாடும்
பண்ணார் பொழில்சூழ் பழனத்தாய்
திண்ணார் வினைதீர்த் தருளாயே.
கண் ஆர் நுதலாய் - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);
கயிலாயா - கயிலைமலையானே;
அண்ணாமலையாய் - அண்ணாமலையானே;
அளி பாடும் பண் ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - வண்டுகள் பாடும் இசை பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே; (அளி - வண்டு);
திண் ஆர் வினை தீர்த்து அருளாயே - என் வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக; (திண் - வலிமை; உறுதி); (சம்பந்தர் தேவாரம் - 1.116.4 - "திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்");
8)
பத்துத் தலையான் பலகாலம்
கத்தித் தொழவோர் விரல்வைத்தாய்
பத்தர்க் கருளும் பழனத்தாய்
அத்தா வினைதீர்த் தருளாயே.
பத்துத்-தலையான் பல காலம் கத்தித் தொழ ஓர் விரல் வைத்தாய் - பத்துத்தலை அரக்கனான இராவணன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது தொழும்படி ஒரு திருப்பாதவிரலை ஊன்றியவனே;
பத்தர்க்கு அருளும் பழனத்தாய் - அன்பர்களுக்கு அருளும் திருப்பழனப் பெருமானே;
அத்தா - தந்தையே;
வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
9)
பணியா அயன்மாற் கறிவொண்ணாத்
துணிமா மதியச் சடையானே
பணிமா லையினாய் பழனத்தாய்
பிணிவல் வினைதீர்த் தருளாயே.
பணியா அயன்-மாற்கு அறிவு ஒண்ணாத் - வழிபடாத பிரமன் திருமால் இவர்களால் அறியப்படாத; (மாற்கு - மால்+கு - திருமாலுக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.4 - "நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற்றார் அங்கு இருவரே"); (சம்பந்தர் தேவாரம் - 1.3.9 - "இருவர்க்கு அறிவொண்ணா வடிவாகும்");
துணி-மா-மதியச் சடையானே - சடைமேல் நிலாத்துண்டத்தை அணிந்தவனே; (துணி - துண்டம்);
பணி-மாலையினாய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (பணி - நாகம்);
பழனத்தாய் - திருப்பழனப் பெருமானே;
பிணி வல்வினை தீர்த்து அருளாயே - என் நோய்களையும் என்னைப் பிணித்துள்ள வலிய வினையையும் தீர்த்து அருள்வாயாக; (பிணி வல்வினை - 1. பிணியும் வல்வினையும் (உம்மைத்தொகை); 2. பிணித்துள்ள வல்வினை (வினைத்தொகை));
10)
நாகா பரணா அருளென்னா
ஆகா தவருக் கிலனானாய்
பாய்கா விரிநீர்ப் பழனத்தாய்
போகா வினைதீர்த் தருளாயே.
"நாகாபரணா அருள்" என்னா ஆகாதவருக்கு இலன் ஆனாய் - "நாகாபரணனே, அருள்வாயாக" என்று போற்றி வழிபடாத வீணர்களுக்கு அருள் இல்லாதவனே; (ஆகாதவன் - பகைவன்; பிரயோஜனம் அற்றவன்);
பாய் காவிரிநீர்ப் பழனத்தாய் - காவிரிநீர் பாயும் திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;
போகா வினை தீர்த்து அருளாயே - தீரா வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
11)
தவளப் பொடிபூ சியமார்பா
துவளங் கொடிமா தொருகூறா
பவளச் சடையாய் பழனத்தாய்
அவலப் பிணிதீர்த் தருளாயே.
தவளப்-பொடி பூசிய மார்பா - வெண்ணீற்றை மார்பில் பூசியவனே; (தவளம் - வெண்மை);
துவள் அம் கொடி மாது ஒரு கூறா - துவள்கின்ற அழகிய கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே; (அம் - அழகு);
பவளச்-சடையாய் - பவளம் போன்ற செஞ்சடையானே;
பழனத்தாய் - திருப்பழனப் பெருமானே;
அவலப்-பிணி தீர்த்து அருளாயே - என் துன்பப் பிணியைத் தீர்த்து அருள்வாயாக; (அவலம் - துன்பம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment