Tuesday, May 5, 2026

T.220 - சிரபுரம் (காழி) - நெருப்பினை நிகர்த்தவல்

2019-07-08

T. 220 - சிரபுரம் (காழி) - நெருப்பினை நிகர்த்தவல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன .. தனதான)

(இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணி)


நெருப்பினை நிகர்த்தவல் வினைத்தொடர் துரத்திட

.. .. நிசத்தினை மறைத்திட .. அதனாலே

.. நினைத்தொழ நினைப்பது(ம்) மறப்புற இறப்பது(ம்)

.. .. நிலத்துடல் எடுப்பதும் .. ஒழியேனோ

கருத்தொடு செருப்பினை முகத்தினில் அழுத்திய

.. .. கணப்பரின் அருத்தியை .. மகிழ்வோனே

.. கலக்குறு சுரர்க்கமு தளித்திட விருப்பொடு

.. .. களத்தினில் விடத்தினை .. அணிவோனே

அருச்சுனன் வனத்துயர் தவத்தினை இயற்றிட

.. .. அவற்கொரு படைக்கலன் .. அருள்வோனே

.. அரைக்கயி றெனப்பணி தனைப்புனை உனைத்தொழு

.. .. தடித்தலம் வழுத்திட .. அறியாமல்

செருக்கொடு பொருப்பினை எடுத்தவன் உரத்தொடு

.. .. சிரக்குலை இறச்சிறி .. தடர்பாதா

.. செழித்துயர் பொழிற்கிளி தமிழ்த்துதி ஒலித்திடு

.. .. திருச்சிர புரத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

நெருப்பினை நிகர்த்த வல்வினைத்தொடர் துரத்திட

.. .. நிசத்தினை மறைத்திட .. அதனாலே

.. நினைத் தொழ நினைப்பது(ம்) மறப்புற இறப்பது(ம்)

.. .. நிலத்து உடல் எடுப்பதும் .. ஒழியேனோ?

கருத்தொடு செருப்பினை முகத்தினில் அழுத்திய

.. .. கணப்பரின் அருத்தியை .. மகிழ்வோனே;

.. கலக்குறு சுரர்க்கு அமுது அளித்திட விருப்பொடு

.. .. களத்தினில் விடத்தினை .. அணிவோனே;

அருச்சுனன் வனத்து உயர் தவத்தினை இயற்றிட

.. .. அவற்கு ஒரு படைக்கலன் .. அருள்வோனே;

.. அரைக்கயிறு எனப் பணிதனைப் புனை உனைத் தொழுது

.. .. அடித்தலம் வழுத்திட .. அறியாமல்,

செருக்கொடு பொருப்பினை எடுத்தவன் உரத்தொடு

.. .. சிரக்குலை இறச் சிறிது .. அடர்-பாதா;

.. செழித்து உயர் பொழிற்-கிளி தமிழ்த்துதி ஒலித்திடு

.. .. திருச்-சிரபுரத்து உறை .. பெருமானே.


*(ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

நெருப்பினை நிகர்த்த வல்வினைத்தொடர் துரத்திட, நிசத்தினை மறைத்திட அதனாலே - தீப் போலச் சுடுகின்ற வலிய வினைப்பந்தம் என்னைத் துரத்திச் சூழ்ந்து (மாயையில் ஆழ்த்தி) உண்மையை மறைத்துவிடுவதால்; (நிகர்த்தல் - ஒத்தல்); (நிசம் - நிஜம்);

நினைத் தொழ நினைப்பது(ம்) மறப்புற, இறப்பது(ம்) நிலத்து உடல் எடுப்பதும் ஒழியேனோ - உன்னை வழிபட நினைப்பதும் மறந்து, உலகில் பிறந்து இறந்து சுழலும் நிலையை நீங்கமாட்டேனோ! சீக்கிரம் அருள்க; (பெரியபுராணம் - 12.29.72 - "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகாகிய தம் கோலம் எதிர் காட்டியருள");

கருத்தொடு செருப்பினை முகத்தினில் அழுத்திய கணப்பரின் அருத்தியை மகிழ்வோனே - (தமது கண்ணைத் தோண்டி உனக்கு அப்பும் எண்ணத்தால்) அன்போடு தம் செருப்புக்காலை உன் முகத்தில் வைத்து அழுத்திய கண்ணப்பரின் பக்தியை மகிழ்ந்தவனே; (கருத்து - எண்ணம்); (கணப்பர் - கண்ணப்பர்; இடைக்குறை விகாரம்); (அருத்தி - அன்பு);

கலக்குறு சுரர்க்கு அமுது அளித்திட விருப்பொடு களத்தினில் விடத்தினை அணிவோனே - அஞ்சிய தேவர்களுக்கு அமுதத்தை அளிக்க, ஆலகாலத்தை விரும்பி உண்டு கண்டத்தில் அணிந்தவனே; (கலக்கு - கலக்கம்); (சுரர் - தேவர்); (களம் - கண்டம்);

அருச்சுனன் வனத்து உயர்-தவத்தினை இயற்றிட அவற்கு ஒரு படைக்கலன் அருள்வோனே - அர்ஜுனன் காட்டில் சிறந்த தவம் புரியக் கண்டு மகிழ்ந்து அவனுக்குப் பாசுபாதாஸ்திரத்தை அருளியவனே; (அவற்கு - அவன்+கு - அவனுக்கு);

அரைக்கயிறு எனப் பணிதனைப் புனை உனைத் தொழுது அடித்தலம் வழுத்திட அறியாமல் - அரைநாணாகப் பாம்பை அணியும் உன்னை வணங்கி உன் திருவடியைத் துதிக்க அறியாமல்; (பணி - நாகம்);

செருக்கொடு பொருப்பினை எடுத்தவன் உரத்தொடு சிரக்குலை இறச் சிறிது அடர்-பாதா - ஆணவத்தால் கயிலைமலையை எடுத்த இராவணனது வலிமையும் குலை போன்ற பத்துத் தலைகளும் அழியும்படி கொஞ்சம் (ஊன்றி) நசுக்கிய திருப்பாதனே; (பொருப்பு - மலை); (உரம் - வலிமை; மார்பு); (குலை - கொத்து); (இறுதல் - முறிதல்; அழிதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

செழித்து உயர்- பொழிற்கிளி தமிழ்த்துதி ஒலித்திடு திருச்சிரபுரத்து உறை பெருமானே - தழைத்து உயர்கின்ற சோலையில் கிளிகள் தேவாரத்தை ஒலிக்கின்ற திருச்சிரபுரத்தில் (சீகாழியில்) உறைகின்ற பெருமானே; (சிரபுரம் - சீகாழியின் பன்னிரு பெயர்களுள் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment