Tuesday, May 26, 2026

P.493 - கோவலூர் - பொய்ப்பொருளைப் பொருளாக

2019-12-31

P.493 - கோவலூர் (திருக்கோவிலூர்)

-----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")


முற்குறிப்புகள்: கோவலூர் - ஊரின் பெயர்; வீரட்டம் - கோயிலின் பெயர்; சம்பந்தர் தேவாரம் - 2.100.1 - "கோவலூர்தனுள் விடையதேறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே";

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

பொய்ப்பொருளைப் பொருளாகப் போற்றாத புண்ணியனார்

மெய்ப்பொருளார் வழிபட்ட கோவல்வீ ரட்டத்தாய்;

ஒப்பொருவர் இல்லாதாய்; உன்னன்பர் தமக்கென்றும்

வைப்புநிதி ஆயவனே; மலரடியை மறவேனே.


பொய்ப்பொருளைப் பொருளாகப் போற்றாத புண்ணியனார் - நிலையற்றவற்றை நிலையென்று மயங்காத புண்ணியம் உடையவரான;

மெய்ப்பொருளார் வழிபட்ட கோவல் வீரட்டத்தாய் - மெய்ப்பொருள் நாயனார் வழிபாடு செய்த கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே; (* மெய்ப்பொருள் நாயனார் வாழ்ந்த தலம் திருக்கோவலூர்); (அப்பர் தேவாரம் - 4.69.1 - "கொத்தையேன் செய்வதென்னே கோவல் வீரட்டனீரே");

ஒப்பு ஒருவர் இல்லாதாய் - ஒப்பாக எவரும் இல்லாதவனே;

உன் அன்பர் தமக்கு என்றும் வைப்புநிதி ஆயவனே - பக்தர்களுக்குச் சேமநிதி போன்று திகழ்பவனே;

மலரடியை மறவேனே - உன் மலர்ப்பாதத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்;


2)

அந்தகன்றன் அகலத்தில் அயில்வேலைச் சேர்த்தவனே;

வெந்தபொடி மேனியனே; கோவல்வீ ரட்டத்தாய்;

கந்தமலர் கமழ்சடைமேற் கண்ணியெனக் கதிர்வீசும்

சந்திரனைத் தரித்தவனே; தாள்மலரை மறவேனே.


அந்தகன்-தன் அகலத்தில் அயில்வேலைச் சேர்த்தவனே - அந்தகாசுரன் மார்பில் கூரிய சூலத்தால் குத்தியவனே; (* அட்டவீரட்டத் தலங்களில் அந்தகாசுரனை அழித்த தலம் கோவலூர் வீரட்டம்);

வெந்தபொடி மேனியனே - மேனிமேல் சுட்ட திருநீற்றைப் பூசியவனே;

கோவல் வீரட்டத்தாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே;

கந்தமலர் கமழ் சடைமேல் கண்ணி எனக் கதிர் வீசும் சந்திரனைத் தரித்தவனே - வாசமலர்கள் மணக்கின்ற சடையின்மீது கிரணங்கள் வீசும் திங்களைக் கண்ணிமாலை போலச் சூடியவனே;

தாள்மலரை மறவேனே - உன் பாதமலரை நான் என்றும் மறக்கமாட்டேன்;


3)

ஓரட்ட காசத்தால் ஒன்னலர்தம் கடியார்மூ

வூரட்ட பெருமையினாய்; ஓங்குமதில் சூழ்கோவல்

வீரட்ட(ம்) மேயவனே; விரிசடையில் கங்கையலை

சேரட்ட மூர்த்தியனே; திருவடியை மறவேனே.


ஓர் அட்டகாசத்தால் ஒன்னலர்தம் கடி ஆர் மூ-ஊர் அட்ட பெருமையினாய் - ஒரு பெருஞ்சிரிப்பால் பகைவர்களது காவல் மிக்க முப்புரங்களையும் எரித்த பெருமை உடையவனே; (அட்டஹாஸம் - பெரும்சிரிப்பு); (ஒன்னலர் - பகைவர்); (கடி - காவல்); (ஊர் - புரம்); (அடுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.48.6 - "ஊர்மூன் றெய்த சிலையவன்காண்");

ஓங்கு மதில்சூழ் கோவல் வீரட்ட(ம்) மேயவனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே;

விரிசடையில் கங்கை அலை சேர் அட்ட-மூர்த்தியனே - விரிந்த சடையில் கங்கையைத் தாங்குகின்ற, அட்டமூர்த்தியே; (அட்டமூர்த்தியன் - அட்டமூர்த்தி - ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு உருவங்களை உடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.51.4 - "சிட்டனே திருஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே");

திருவடியை மறவேனே - உன் திருவடியை நான் என்றும் மறக்கமாட்டேன்;


4)

தக்கனது வேள்விதனைத் தகர்த்தவனே; முடிமீது

கொக்கிறகைப் புனைந்தவனே; கோவல்வீ ரட்டத்து

முக்கணனே; வண்டினங்கள் மொய்குழலி தன்னையொரு

பக்க(ம்)மகிழ் பண்பினனே; பாதமலர் மறவேனே.


தக்கனது வேள்விதனைத் தகர்த்தவனே - தக்கன் செய்த வேள்வியை அழித்தவனே;

முடிமீது கொக்கிறகைப் புனைந்தவனே - தலைமேல் கொக்கிறகைச் சூடியவனே; (கொக்கிறகு - 1. ஒரு பூ; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

கோவல் வீரட்டத்து முக்கணனே - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;

வண்டினங்கள் மொய்-குழலி-தன்னை ஒரு பக்க(ம்) மகிழ் பண்பினனே - வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமாதேவியை இடப்பக்கம் பாகமாக விரும்பியவனே;

பாதமலர் மறவேனே - உன் திருவடித்தாமரையை நான் என்றும் மறக்கமாட்டேன்;


5)

அஞ்சுகணை மன்மதனை அனங்கனெனப் பார்த்தவனே;

நஞ்சுதனை நயந்துண்டு நல்லமணி செய்தவனே;

குஞ்சிமிசைக் குளிர்மதியாய்; கோவல்வீ ரட்டத்துச்

செஞ்சடையாய்; வாசமலர்த் திருவடியை மறவேனே.


அஞ்சு-கணை மன்மதனை அனங்கன் எனப் பார்த்தவனே - (எல்லாரும்) அஞ்சுகின்ற ஐந்து அம்புகளை உடைய மன்மதனைக் கண்ணால் நோக்கி எரித்து அவனை உடலற்றவன் ஆக்கியவனே;

நஞ்சுதனை நயந்து உண்டு நல்ல மணி செய்தவனே - ஆலகாலத்தை விரும்பி உண்டு அதனைக் கண்டத்தில் அழகிய நீலமணி ஆக்கியவனே;

குஞ்சிமிசைக் குளிர்மதியாய் - தலைமேல் குளிந்த சந்திரனைச் சூடியவனே; (குஞ்சி - தலை);

கோவல் வீரட்டத்துச் செஞ்சடையாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைகின்ற செஞ்சடைப் பெருமானே;

வாசமலர்த் திருவடியை மறவேனே - மணம் மிகுந்த தாமரைமலர் போன்ற உன் திருவடியை நான் என்றும் மறக்கமாட்டேன்;


6)

ஆறுதிகழ் அணிசடைமேல் அரவணிந்தாய்; ஆயிழையோர்

கூறுதிகழ் மேனியினாய்; கோவல்வீ ரட்டத்து

நாறுமலர்க் கொன்றையினாய்; நச்சரவக் கச்சுடையாய்;

ஏறுதிகழ் கொடியுடையாய்; இணையடியை மறவேனே.


ஆறு திகழ் அணி சடைமேல் அரவு அணிந்தாய் - கங்கையைத் தாங்கிய அழகிய சடையின்மீது பாம்பை அணிந்தவனே;

ஆயிழை ஓர் கூறு திகழ் மேனியினாய் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஆயிழை - பெண்);

கோவல் வீரட்டத்து நாறுமலர்க் கொன்றையினாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைகின்ற, வாசக்கொன்றைமலரை அணிந்தவனே;

நச்சு-அரவக் கச்சு உடையாய் - விஷப்பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனே;

ஏறு திகழ் கொடி உடையாய் - இடபக்கொடி உடையவனே;

இணையடியை மறவேனே - உன் இரு-திருவடிகளை நான் என்றும் மறக்கமாட்டேன்;


7)

சூல(ம்)மழுப் படையானே; தோலாடை உடையானே;

கோலமதிச் சடையானே; கோவல்வீ ரட்டத்து

நீலமணி கண்டத்தாய்; நேய(ம்)மலி மாணிக்காக்

காலனைமுன் காய்ந்தவனே; கழலிணையை மறவேனே.


சூல(ம்) மழுப்-படையானே - சூலாயுதத்தையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனே;

தோல்-ஆடை உடையானே - புலித்தோலை ஆடையாக உடையவனே;

கோல மதிச் சடையானே - அழகிய திங்களைச் சடையில் அணிந்தவனே;

கோவல் வீரட்டத்து நீலமணி கண்டத்தாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைகின்ற நீலகண்டனே; (நீலமணிகண்டம் - 1. கரிய மணி திகழும் கண்டம்; 2. கருமையை அணிந்த கண்டம்);

நேய(ம்) மலி மாணிக்காக் காலனை முன் காய்ந்தவனே - மிகுந்த அன்பு உடைய மார்க்கண்டேயருக்காகக் கூற்றுவனை முன்பு உதைத்தவனே; (காய்தல் - அழித்தல்; கோபித்தல்);

கழலிணையை மறவேனே - கழல் அணிந்த உன் இரு-திருவடிகளை நான் என்றும் மறக்கமாட்டேன்;


8)

அன்றுமலை பேர்த்தானை அழவைத்தாய்; மதகரியைக்

கொன்றுரிவை போர்த்தவனே; கோவல்வீ ரட்டத்தில்

என்று(ம்)மகிழ்ந் திருப்பவனே; இடுகாடே நடமாடு(ம்)

மன்றமெனக் கொண்டவனே; மலரடியை மறவேனே.


அன்று மலை பேர்த்தானை அழவைத்தாய் - முன்பு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி அழவைத்தவனே;

மதகரியைக் கொன்று உரிவை போர்த்தவனே - ஆண்யானையை அழித்து அதன் தோலைத் திருமார்பு சூழப் போர்த்தவனே;

கோவல் வீரட்டத்தில் என்றும் மகிழ்ந்து இருப்பவனே - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் என்றும் நீங்காமல் விரும்பி உறைபவனே;

இடுகாடே நடம் ஆடு(ம்) மன்றம் எனக் கொண்டவனே - சுடுகாட்டையே கூத்தாடும் அரங்கமாக உடையவனே;

மலரடியை மறவேனே - உன் மலர்ப்பாதத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்;


9)

கண்ணனயன் என்றிருவர் காணாத பரஞ்சோதீ;

பெண்ணையதன் தென்கரையிற் கோவல்வீ ரட்டத்தாய்;

தண்ணதியைச் சடைக்கரந்த சங்கரனே; ஆணோடு

பெண்ணலியும் ஆயவனே; பெய்கழலை மறவேனே.


கண்ணன் அயன் என்றிருவர் காணாத பரஞ்சோதீ - திருமால் பிரமன் என்ற இருவரால் காண இயலாத மேலான ஜோதியே; (சோதீ - ஜோதியே);

பெண்ணையதன் தென்கரையில் கோவல் வீரட்டத்தாய் - பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கும் கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே;

தண்-நதியைச் சடைக்-கரந்த சங்கரனே - குளிர்ந்த கங்கையைச் சடையில் ஒளித்த சங்கரனே; (கரத்தல் - மறைத்தல்);

ஆணோடு பெண் அலியும் ஆயவனே - ஆண், பெண், அலி என்று எல்லாமும் ஆனவனே;

பெய்-கழலை மறவேனே - உன் கழல் கட்டப்பெற்ற பாதத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்; (பெய்தல் - கட்டுதல்; அணிதல்); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-7: "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க");


10)

பொய்ம்மொழிசொல் நாவினர்தம் புன்னெறிகட் கெட்டாதாய்;

கொய்ம்மலரார் முடியினனே; கோவல்வீ ரட்டத்தாய்;

செம்மனத்துத் தொண்டரவர் சிந்தைதனை நீங்காத

எம்மிறையே; ஏரார்ந்த இணையடியை மறவேனே.


பொய்ம்மொழி சொல் நாவினர்தம் புன்னெறிகட்கு எட்டாதாய் - பொய்களைப் பேசுகின்றவர்களது இழிந்த சமயங்களால் அறியப்படாதவனே;

கொய்ம்மலர் ஆர் முடியினனே - கொய்த மலர்களைத் திருமுடியில் சூடியவனே;

கோவல் வீரட்டத்தாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே;

செம்மனத்துத் தொண்டர்அவர் சிந்தைதனை நீங்காத எம் இறையே - செம்மையான மனத்தை உடைய அடியவர்களது நெஞ்சில் என்றும் உறைகின்ற எம்பெருமானே;

ஏர் ஆர்ந்த இணையடியை மறவேனே - உன் அழகிய இரு-திருவடிகளை நான் என்றும் மறக்கமாட்டேன்; (ஏர் - அழகு; நன்மை);


11)

அரவையரை நாணாக ஆர்த்தவனே; கொன்றையுடன்

குரவமலர் அணிந்தவனே; கோவல்வீ ரட்டத்தாய்;

பிரமனது தலையேந்திப் பிச்சைமகிழ் பெருந்தகையே;

உர(ம்)மலியெண் டோளுடையாய்; உன்னடியை மறவேனே.


அரவை அரைநாணாக ஆர்த்தவனே - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);

கொன்றையுடன் குரவமலர் அணிந்தவனே - கொன்றைமலர், குராமலர் இவற்றைச் சூடியவனே;

கோவல் வீரட்டத்தாய் - கோவலூர் வீரட்டம் என்ற தலத்தில் உறைபவனே;

பிரமனது தலை ஏந்திப் பிச்சை மகிழ் பெருந்தகையே - பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சையை விரும்பும் பெருமை உடையவனே; (தலை - கபாலம்);

உர(ம்) மலி எண்-தோள் உடையாய் - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடையவனே; (உரம் - வலிமை);

உன் அடியை மறவேனே - உன் திருவடியை நான் என்றும் மறக்கமாட்டேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment