2020-02-26
P.500 - பாவநாசம் (பாபநாசம்)
(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)
--------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
* (x) - படிப்போர் வசதி கருதிப் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பெற்றுள்ள இடம்;
1)
கிரணம திக்கயல் அரவை வைத்தவன்
சரணடை சுரருயச் சாபம் ஏந்திமூ
அரணெரி அரனிடம் அலம்பு தாமிர
பரணியின் கரையினில் பாவ நாசமே.
கிரண-மதிக்கு அயல் அரவை வைத்தவன் - கதிர்களை உடைய சந்திரன் அருகே பாம்பைத் தன் திருமுடிமேல் அணிந்தவன்; (அயல் - அருகிடம்); (பெரியபுராணம் - 12.10.94 - "குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்தபொன் முகலி என்றான்");
சரண் அடை சுரர் உயச் சாபம் ஏந்தி மூ-அரண் எரி அரன் இடம் - தஞ்சமடைந்த தேவர்கள் உய்யும்படி மேருவில்லை ஏந்தி முப்புரங்களை எரித்த ஹரன் உறையும் தலம் ஆவது; (உய - உய்ய; இடைக்குறை விகாரம்); (சாபம் - வில்);
அலம்பு தாமிரபரணியின் கரையினில் பாவநாசமே - ஒலிக்கின்ற நீரையுடைய தாமிரபரணி-நதியின் கரையில் உள்ள பாபநாசம்; (அலம்புதல் - ஒலித்தல்); ("அலம்புதல் = கழுவுதல்" என்று பொருள்கொண்டு, "நம் பாவங்களைக் கழுவும் புண்ணியநதியான தாமிரபரணி" என்றும் பொருள்கொள்ளலாம்);
2)
தனிச்சிலை கொண்டெயில் சாய எய்தவன்
முனிச்சகம் படைத்தவன் முடிவில் முக்கணன்
முனிச்சிறு வருக்கென முன்பு கூற்றுதை
பனிச்சடைப் பரனிடம் பாவ நாசமே.
தனிச்-சிலை கொண்டு எயில் சாய எய்தவன் - ஒப்பற்ற மேருவில்லால் முப்புரங்களும் அழிய ஒரு கணையை எய்தவன்; (தனி - ஒப்பற்ற); (சிலை - வில்); (எயில் - கோட்டை); (சாய்தல் - அழிதல்);
முன் இச்-சகம் படைத்தவன் - முன்பு இவ்வுலகத்தைப் படைத்தவன்; (முனிச்சகம் - முன்னிச்சகம்; தொகுத்தல் விகாரம்); (சகம் - ஜகத் - உலகம்);
முடிவு-இல் முக்கணன் - அழிவின்றி இருப்பவன், நெற்றிக்கண்ணன்;
முனிச்-சிறுவருக்கென முன்பு கூற்று உதை பனிச்சடைப் பரன் இடம் பாவநாசமே - மார்க்கண்டேயருக்காக முன்பு காலனை உதைத்தவனும், சடையில் கங்கையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (முனி - முனிவர்); (கூற்று - காலன்); (பனி - நீர்);
3)
கடலிடைத் தோன்றிய கரிய நஞ்சது
சுடர்விடு மணியெனத் தோன்ற உண்டவன்
அடல்விடை உடையவன் அகத்தி யர்க்கருள்
படர்சடைப் பரனிடம் பாவ நாசமே.
கடலிடைத் தோன்றிய கரிய நஞ்சு-அது சுடர்விடு மணி எனத் தோன்ற உண்டவன் - பாற்கடலில் தோன்றிய கரிய ஆலகாலமானது ஒளிவீசும் நீலமணி போலக் கண்டத்தில் காட்சியளிக்கும்படி அதனை உண்டவன்;
அடல்-விடை உடையவன் - வெற்றியையுடைய வலிய இடபத்தை வாகனமாக உடையவன்; (அடல் - வெற்றி; வலிமை);
அகத்தியர்க்கு அருள் படர்சடைப் பரன் இடம் பாவநாசமே - அகத்திய முனிவருக்கு அருள்புரிந்தவனும் படரும் சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;
(* அகத்தியருக்குத் தன் திருமணக்-கோலத்தைக் காட்டியருளிய வரலாற்றைத் இத்தலபுராணத்தில் காண்க);
4)
சாம்பலை விரைகமழ் சாந்து போற்புனைந்(து)
ஓம்பிடும் அன்பருக்(கு) உவகை நல்குவான்
காம்பன தோளியைக் கலந்த மேனியன்
பாம்பணி பரனிடம் பாவ நாசமே.
சாம்பலை விரை கமழ் சாந்து போல் புனைந்து ஓம்பிடும் அன்பருக்கு உவகை நல்குவான் - திருநீற்றை மணம் கமழும் சந்தனம் போல் அணிந்து வணங்கும் பக்தர்களுக்கு இன்பம் தருபவன்; (சாம்பல் - திருநீறு); (விரை - வாசனை); (சாந்து - கலவைச் சந்தனம்); (அப்பர் தேவாரம் - 4.102.1 - "ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே");
காம்பு அன தோளியைக் கலந்த மேனியன் - மூங்கில் போன்ற புஜத்தை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவன்; (காம்பு - மூங்கில்); (அன - அன்ன - போன்ற); (சம்பந்தர் தேவாரம் - 1.4.7 - "காம்பன தோளியொடும் கலந்து");
பாம்பு அணி பரன் இடம் பாவநாசமே - நாகாபரணனான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;
5)
மதுமலர்க் கணைதொடு மதனைச் சுட்டவன்
புதியவன் பழையன் போற்றித் தாள்தொழும்
மதியணி சடையினன் மன்னு யிர்க்கெலாம்
பதியவன் உறைவிடம் பாவ நாசமே.
மதுமலர்க் கணைதொடு மதனைச் சுட்டவன் - தேன்மலர்களை அம்பாக எய்யும் மன்மதனைச் சுட்டெரித்தவன்; (மதன் - காமன்);
புதியவன் பழையன் - என்றும் புதியவன், மிகத் தொன்மையானவன்;
போற்றித் தாள் தொழும் மதி அணி சடையினன் - திருவடியை வணங்கிய சந்திரனைச் சடைமேல் அணிந்தவன்;
மன்னுயிர்க்கெலாம் பதி அவன் உறைவிடம் பாவநாசமே - எல்லா உயிர்களுக்கும் தலைவனான பசுபதி உறையும் தலம் பாபநாசம்; (மன்னுயிர் - ஜீவாத்மா - பசு);
6)
உடைதலை கலனென உண்ப லிக்குழல்
உடையவன் விடையவன் உலக நாயகி
இட(ம்)மகிழ் இனியவன் இலகு கூர்மழுப்
படையுடைப் பரனிடம் பாவ நாசமே.
உடைதலை கலன் என உண்பலிக்கு உழல் உடையவன் - பிரமனது மண்டையோடே உண்கலன் என்று ஏந்திப் பிச்சைக்கு உழலும் சுவாமி; (உடைதலை - உடைந்த கபாலம்); (பலி - பிச்சை); (உடையவன் - எல்லாம் உடையவன் - சுவாமி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.3 - "உடைதலை இடுபலி கொண்டுழல்வான்");
விடையவன் - இடபவாகனன்;
உலகநாயகி இடம் மகிழ் இனியவன் - உலகம்மையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய இனிமையுடையவன்; (* உலகநாயகி - உலகம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);
இலகு கூர் மழுப்படையுடைப் பரன் இடம் பாவநாசமே - பிரகாசிக்கின்ற கூர்மை மிக்க மழுவாயுதத்தை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (இலகுதல் - திகழ்தல்; ஒளிவீசுதல்);
7)
பொங்கழல் உருவினன் பொருத மும்மத
வெங்கரி உரித்தவன் வெந்த நீறணி
சங்கரன் கானகம் தன்னில் ஆடிய
பைங்கழற் பரனிடம் பாவ நாசமே.
பொங்கு-அழல் உருவினன் - ஓங்கி எரியும் தீப் போன்ற செம்மேனியன்;
பொருத மும்மத வெங்கரி உரித்தவன் - போர் செய்த கொடிய ஆண்யானையின் தோலை உரித்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை);
வெந்த நீறு அணி சங்கரன் - சுட்ட திருநீற்றைப் பூசிய சங்கரன்; (சங்கரன் - நன்மை செய்பவன்);
கானகம்-தன்னில் ஆடிய பைங்கழற் பரன் இடம் பாவநாசமே - சுடுகாட்டில் கூத்து ஆடிய அழகிய கழல் அணிந்த திருவடியுடைய சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (கானகம் - காடு - சுடுகாடு); (பை - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 3.34.9 - "ஆடினார் கானகத்து"); (சம்பந்தர் தேவாரம் - 2.55.7 - "அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்ப");
8)
சேடியல் கயிலையைத் திட்டிப் பேர்த்தவன்
வாடிட ஓர்விரல் வைத்த தாளினன்
நீடிய புகழினன் நிமலன் நான்மறை
பாடிய பரனிடம் பாவ நாசமே.
சேடு இயல் கயிலையைத் திட்டிப் பேர்த்தவன் வாடிட ஓர் விரல் வைத்த தாளினன் - பெருமையும் உயரமும் உடைய கயிலைமலையை இகழ்ந்து பேசிப் பெயர்த்த இராவணன் வாடும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்; (சேடு - பெருமை; உயரம்); (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்);
நீடிய புகழினன் - எல்லையற்ற புகழுடையவன்; (நீடுதல் - நீள்தல்);
நிமலன் - பரிசுத்தன்;
நான்மறை பாடிய பரன் இடம் பாவநாசமே - நால்வேதங்களைப் பாடியருளிய (/ நால்வேதங்களூம் போற்றிப் பாடுகின்ற) சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;
9)
அரியயன் அடிமுடி அறியொ ணாததோர்
எரியவன் படைபெற எண்ணிப் பாண்டவன்
புரிதவம் கண்டருள் புனிதன் நஞ்சையுண்
பரிவினன் உறைவிடம் பாவ நாசமே.
அரி அயன் அடிமுடி அறியொணாததோர் எரி-அவன் - அடியையும் முடியையும் தேடிய திருமால் பிரமன் இவர்களால் அறியப்படாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்; (அறியொணாத - அறிய ஒண்ணாத; தொகுத்தல் விகாரம்); (எரி - தீ); (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.95 - "வானநாடரும் அறியொணாத நீ");
படை பெற எண்ணிப் பாண்டவன் புரி தவம் கண்டு அருள் புனிதன் - பாசுபதாஸ்திரத்தைப் பெற விரும்பி அர்ஜுனன் செய்த தவத்தைக் கண்டு அவனுக்கு அருளிய தூயன்;
நஞ்சை உண் பரிவினன் உறைவிடம் பாவநாசமே - ஆலகாலத்தை உண்ட இரக்கம் மிக்க சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;
10)
தூற்றிடும் வாயினர் சொல்லும் புன்னெறிச்
சேற்றினைத் தள்ளுமின் செல்வன் வெண்திரு
நீற்றினைப் பூசிய நேயர் வல்வினை
பாற்றிடும் பரனிடம் பாவ நாசமே.
தூற்றிடும் வாயினர் சொல்லும் புன்னெறிச் சேற்றினைத் தள்ளுமின் - வேதநெறியைத் தூற்றுகின்றவர்கள் சொல்கின்ற புன்மார்க்கச் சேற்றை மதியாமல் விலகுங்கள்; (தள்ளுதல் - விலகுதல்; கைவிடுதல்; நிராகரித்தல்);
செல்வன் - திருவுடையவன்;
வெண்-திருநீற்றினைப் பூசிய நேயர் வல்வினை பாற்றிடும் பரன் இடம் பாவநாசமே - வெண்மையான திருநீற்றைப் பூசிய அன்பர்களது வலிய வினையை அழிக்கும் சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (பாற்றுதல் - அழித்தல்);
11)
அணியுமை அவள்பதி ஆல நீழலன்
துணிமதிச் சடையினன் சூல பாணியன்
மணியணி மிடறினன் மார்பில் நூலொடு
பணியணி பரனிடம் பாவ நாசமே.
அணி உமை அவள் பதி - அழகிய உமைக்குக் கணவன் - உமாபதி;
ஆல-நீழலன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;
துணிமதிச் சடையினன் - துண்டத்-திங்களைச் சடையில் அணிந்தவன்; (துணி - துண்டம்; துணிமதி - நிலாத்துண்டம்);
சூலபாணியன் - திரிசூலத்தைக் கையில் ஏந்தியவன்; (பாணி - கை); (சம்பந்தர் தேவாரம் - 3.112.1 - "பரசுபாணியர்");
மணி அணி மிடறினன் - கண்டத்தில் நீலமணியை அணிந்தவன் - நீலகண்டன்;
மார்பில் நூலொடு பணி அணி பரன் இடம் பாவநாசமே - மார்பில் பூணூலையும் நாகத்தையும் அணிந்த சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (பணி - நாகம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment