2020-01-27
P. 495 - சேத்திரக்கோவை
-----------------
(2019 டிசம்பர் மாதத்தில் தரிசித்த தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)
(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.41.1 - "வகையெலா முடையாயும் நீயே யென்றும்")
1)
வண்டிரைகள் வந்தெறியும் மயிலாப் பூரில்,
.. வான்புறவார் வலிதாயம் தன்னில், பாடிக்
கண்டருக எனப்பரவை கேள்வர் வேண்டிக்
.. கைதொழுத திருமுல்லை வாயில் தன்னில்,
மண்டியஅன் பால்மனத்திற் கோயில் செய்து
.. மகிழ்பூச லார்வாழ்ந்த நின்ற வூரில்,
அண்டியவர் வினைதீர்க்கும் ஆலங் காட்டில்,
.. அங்கணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
* மயிலாப்பூர், திருவலிதாயம் (பாடி), (வட)திருமுல்லைவாயில், திருநின்றவூர், திருவாலங்காடு - (இவை தொண்டைநாட்டுத் தலங்கள்);
வண்-திரைகள் வந்து எறியும் மயிலாப்பூரில் - வளம் மிக்க அலைகள் மோதுகின்ற மயிலாப்பூரில்; (வண் + திரைகள் = வண்டிரைகள்);
வான் புறவு ஆர் வலிதாயம்-தன்னில் - அழகிய புறாக்கள் நிறைந்த திருவலிதாயத்தில்; (வான் - வானம்; அழகு); (புறவு - புறா); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
பாடிக், "கண் தருக" எனப் பரவை-கேள்வர் வேண்டிக் கைதொழுத திருமுல்லைவாயில்-தன்னில் - "கண்ணில் பார்வையைத் தந்தருள்க" என்று பரவையார் கணவரான சுந்தரர் பதிகம் பாடி வழிபட்ட வடதிருமுல்லைவாயிலில்; (கண் + தருக = கண்டருக); (சுந்தரர் தேவாரம் - 7.69.3 - "சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப நின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே");
மண்டிய அன்பால் மனத்தில் கோயில் செய்து மகிழ் பூசலார் வாழ்ந்த நின்றவூரில் - பேரன்பால் மனத்தில் ஈசனுக்குக் கோயில் கட்டிய பூசலார் நாயனார் வாழ்ந்த திருநின்றவூரில்;
அண்டியவர் வினை தீர்க்கும் ஆலங்காட்டில் - சரணடைந்தவர்களுடைய வினையைத் தீர்க்கும் திருவாலங்காட்டில்;
அங்கணனைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - (மேற்சொன்ன தலங்களிலெல்லாம்) அருள்நோக்கமுடைய சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
2)
கடிபொழில்சூழ் வேற்காட்டில், குன்றத் தூரில்,
.. கழுக்குன்றத் துருத்திர கோடி தன்னில்
நெடியமலை உச்சிதனில், தமிழ்ப்பா மாலை
.. நித்தலொலி திருவான்மி யூரில், இந்தப்
படிமிசைவாழ் மாந்தருய்ய ஞானப் பாலைப்
.. பருகியவர் வாழ்ந்ததிருக் கழும லத்தில்,
முடிவிலின்பம் அருள்நல்லூர்ப் பெரும ணத்தில்,
.. முக்கணனைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.
* திருவேற்காடு, குன்றத்தூர் (கந்தழீஸ்வரர் கோயில்), திருக்கழுக்குன்றம் (ருத்ரகோடீஸ்வரர் கோயில், மலைக்கோயில், தாழக்கோயில்), திருவான்மியூர் - (இவை தொண்டைநாட்டுத் தலங்கள்);
* கழுமலம் (சீர்காழி), நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்) - (இவை காவிரி வடகரைத் தலங்கள்);
கடிபொழில் சூழ் வேற்காட்டில் குன்றத்தூரில் - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவேற்காட்டில், குன்றத்தூரில் கந்தழீஸ்வரர் கோயிலில்; (கடி - வாசனை);
கழுக்குன்றத்து உருத்திரகோடி-தன்னில் நெடியமலை உச்சிதனில் - திருக்கழுக்குன்றத்தில் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில், திருக்கழுக்குன்றத்தில் உயர்ந்த மலையின்மேல் இருக்கும் கோயிலில்;
தமிழ்ப்-பாமாலை நித்தல் ஒலி திருவான்மியூரில் - நாள்தோறும் தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகள் ஒலிக்கின்ற திருவான்மியூரில்; (நித்தல் - எந்நாளும்); (அப்பர் தேவாரம் - 5.57.9 - "நீலகண்டனை நித்தல் நினைமினே");
இந்தப் படிமிசை வாழ் மாந்தர் உய்ய ஞானப்பாலைப் பருகியவர் வாழ்ந்த திருக்கழுமலத்தில் - இவ்வுலகில் வாழும் மக்களெல்லாம் உய்யும்படி உமாதேவி ஊட்டிய ஞானப்பாலை உண்டருளிய திருஞானசம்பந்தர் வாழ்ந்த சீகாழியில்; (படி - பூமி);
முடிவு இல் இன்பம் அருள் நல்லூர்ப்-பெருமணத்தில் - எல்லையில்லாத பேரின்பத்தை அருளும் நல்லூர்ப்-பெருமணத்தில் (ஆச்சாள்புரத்தில்);
முக்கணனைக் கண்டுதொழக் கருது நெஞ்சே - முக்கட் பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக;
3)
சீலர்தொழும் தில்லைச்சிற் றம்ப லத்தில்,
.. சிறைவண்டின் அறையோவா நாரை யூரில்,
கோலமிகு பொழில்சூழ்ந்த கடம்பூர் தன்னில்,
.. குறைதீர்க்கும் திருவோமாம் புலியூர் தன்னில்,
காலைமுதல் மாலைவரை பலர்வந் தேத்தும்
.. கங்கைகொண்ட சோழபுரம் தன்னில், ஓர்பால்
சேலனைய கண்ணுமையைப் பாகம் வைத்த
.. தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
* கோயில் (சிதம்பரம்), திருநாரையூர், கடம்பூர் (மேலக்-கடம்பூர்), ஓமாம்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம்; - (இவை சோழநாட்டுத் தலங்கள்);
சீலர் தொழும் தில்லைச் சிற்றம்பலத்தில் - ஒழுக்கம் மிக்க தில்லைவாழ் அந்தணர்கள் வழிபாடு செய்யும் சிதம்பரத்தில்;
சிறைவண்டின் அறை ஓவா நாரையூரில் - அழகிய சிறகுகளை உடைய வண்டுகளின் ரீங்காரம் எப்பொழுதும் கேட்கும் திருநாரையூரில்; (சிறை - சிறகு); (ஓவுதல் - நீங்குதல்; முடிதல்);
கோலம் மிகு பொழில் சூழ்ந்த கடம்பூர்-தன்னில் - அழகு மிக்க சோலை சூழ்ந்த (மேலக்) கடம்பூரில்;
குறை தீர்க்கும் திருஓமாம்புலியூர்-தன்னில் - குறைகளைத் தீர்க்கும் திருஓமாம்புலியூரில்;
காலைமுதல் மாலைவரை பலர் வந்து ஏத்தும் கங்கைகொண்ட சோழபுரம் தன்னில் - நாள்முழுதும் பலர் வந்து போற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில்;
ஓர்பால் சேல் அனைய கண் உமையைப் பாகம் வைத்த - சேல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியை திருமேனியின் ஒரு பக்கம் பாகமாக வைத்த;
தீவணனைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - தீப் போன்ற நிறம் திகழும் செம்மேனிச் சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
4)
அழகாரும் கயம்சூழ்ந்த வழுவூர் தன்னில்,
.. அடைகின்ற வழிகாட்டும் மூவ லூரில்,
தழையாரும் பொழில்சூழ்ந்த பேர ளத்தில்,
.. சார்ந்தார்க்கு வானருளும் மீயச் சூரில்,
பிழையேசெய் தக்கன்செய் வேள்வி செற்ற
.. பீடுடைய பறியல்வீ ரட்டம் தன்னில்,
கழல்போற்றும் மாணிதனைக் காத்துக் கூற்றைக்
.. காய்ந்தானைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.
* வழுவூர், மூவலூர், பேரளம், திருமீயச்சூர், பறியலூர் வீரட்டம் (பரசலூர்); - (இவை சோழநாட்டுத் தலங்கள்);
அழகு ஆரும் கயம் சூழ்ந்த வழுவூர்-தன்னில் - அழகிய குளம் சூழ்ந்த வழுவூரில்; (கயம் - குளம், ஏரி முதலிய நீர்நிலை);
அடைகின்ற வழிகாட்டும் மூவலூரில் - செல்லும் நெறியைக் காட்டும் மூவலூரில்; (* வழித்துணைநாதர் - மூவலூரில் ஈசன் திருநாமம்);
தழை ஆரும் பொழில் சூழ்ந்த பேரளத்தில் - இலைகள் மிக்க சோலை சூழ்ந்த பேரளத்தில்;
சார்ந்தார்க்கு வான் அருளும் மீயச்சூரில் - அடைந்தவர்களுக்கு வானுலகை அருளும் திருமீயச்சூரில்;
பிழையே செய் தக்கன் செய் வேள்வி செற்ற பீடு உடைய பறியல் வீரட்டம்-தன்னில் - குற்றமே செய்த தக்கன் செய்த வேள்வியை அழித்த பெருமையை உடைய திருப்பறியலூர் வீரட்டத்தில் (பரசலூரில்);
கழல் போற்றும் மாணிதனைக் காத்துக் கூற்றைக் காய்ந்தானைக் கண்டு தொழக் கருது நெஞ்சே - திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரைக் காத்துக் காலனை உதைத்த பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக;
5)
திருவாரும் திருச்செம்பொன் பள்ளி தன்னில்,
.. செவ்வழிவண் டிசைக்கு(ம்)நனி பள்ளி தன்னில்,
வருவார்க்கு வரையின்றித் தந்து கந்த
.. வள்ளல்சிறப் புலிவாழ்ந்த ஆக்கூர் தன்னில்,
ஒருவாளை ஏந்தியுடன் சென்று காத்த
.. ஒப்பிலியற் பகைக்கருள்செய் திருச்சாய்க் காட்டில்,
அருளால்வல் விடந்தன்னை அமுது செய்த
.. அம்மானைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
* திருச்செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்), திருநனிபள்ளி (புஞ்சை), ஆக்கூர், சாய்க்காடு (சாயாவனம்); - (இவை சோழநாட்டுத் தலங்கள்);
திரு ஆரும் திருச்செம்பொன்பள்ளி-தன்னில் - திரு மிக்க திருச்செம்பொன்பள்ளியில் (செம்பொனார் கோயிலில்);
செவ்வழி வண்டு இசைக்கு(ம்) நனிபள்ளி-தன்னில் - வண்டுகள் செவ்வழி என்ற பண்ணை ஒலிக்கின்ற திருநனிபள்ளியில் (புஞ்சையில்); (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);
வருவார்க்கு வரை இன்றித் தந்து உகந்த வள்ளல் சிறப்புலி வாழ்ந்த ஆக்கூர்-தன்னில் - வந்தார்க்கெல்லாம் வாரி வழங்கி மகிழ்ந்த வள்ளலான சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஆக்கூரில்; (வரை - எல்லை; அளவு);
ஒரு வாளை ஏந்தி உடன் சென்று காத்த ஒப்பு-இல் இயற்பகைக்கு அருள்செய் திருச்சாய்க்காட்டில் - மறையவர் வேடத்தில் வந்த சிவபெருமானுக்குத் துணையாகக் கையில் ஒரு வாளை ஏந்திச் சென்று அவரைக் காத்த இயற்பகை நாயனாருக்கு அவன் அருள்செய்த திருச்சாய்க்காட்டில் (சாயாவனத்தில்);
அருளால் வல்விடந்தன்னை அமுது செய்த அம்மானைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - வலிய நஞ்சை அருளால் உண்டு காத்த பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
6)
பைம்பொழில்சூழ் பல்லவ னீச்ச ரத்தில்,
.. பணிந்தவர்தம் வினைதீர்க்கும் நீடூர் தன்னில்,
வம்புலவு மலர்நாடி வண்டு பாடும்
.. மயிலாடு துறைதன்னில், அயனும் மாலும்
எம்பெருமான் என்றேத்த எல்லை யில்லா
.. எரியாகி நின்றவண்ணா மலையில், தேவர்
கம்பலைதீர்த் தரண்மூன்றைச் சிரித்தெ ரித்த
.. கண்ணுதலைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.
* பல்லவனீச்சரம் (சாயாவனத்தின் அருகே உள்ள தலம்), நீடூர், மயிலாடுதுறை - (இவை சோழநாட்டுத் தலங்கள்);
* திருவண்ணாமலை - (நடுநாட்டுத் தலம்);
பைம்பொழில் சூழ் பல்லவனீச்சரத்தில் - அழகிய சோலை சூழ்ந்த பல்லவனீச்சரத்தில்;
பணிந்தவர்தம் வினை தீர்க்கும் நீடூர்-தன்னில் - வணங்கியவர்களது வினையைத் தீர்க்கும் நீடூரில்;
வம்பு உலவு மலர் நாடி வண்டு பாடும் மயிலாடுதுறை-தன்னில் - வாசமலர்களை நாடி வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில்; (வம்பு - வாசனை);
அயனும் மாலும் எம்பெருமான் என்று ஏத்த எல்லை இல்லா எரி ஆகி நின்ற அண்ணாமலையில் - பிரமனும் திருமாலும் "எம்பெருமானே" என்று போற்றும்படி அளவற்ற ஜோதியாகி நின்ற திருவண்ணாமலையில்;
தேவர் கம்பலை தீர்த்து அரண் மூன்றைச் சிரித்து எரித்த கண்ணுதலைக் கண்டு தொழக் கருது நெஞ்சே - தேவர்களது துன்பத்தைத் தீர்த்து முப்புரங்களைச் சிரித்தே எரித்த நெற்றிக்கண்ணனைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக; (கம்பலை - அச்சம்; துன்பம்);
7)
அந்தகனைச் சூலத்தால் அழுத்திச் செற்ற
.. அணியாரும் திருக்கோவல் வீரட் டத்தில்,
சுந்தரரை ஆவணத்தால் அடிமை கொண்ட
.. சோலைபுடை சூழ்வெண்ணெய் நல்லூர் தன்னில்,
அந்த(ம்)மலி வயலணிந்த ஆமாத் தூரில்,
.. அண்டனவன் கண்டம்போல் மேகம் சூழ்ந்து
வந்துபொழி வீரவநல் லூரில், துண்ட
.. மதியானைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
* திருக்கோவலூர் வீரட்டம் (திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில்), திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர் - (இவை நடுநாட்டுத் தலங்கள்);
* வீரவநல்லூர் - (பாண்டிநாட்டுத் தலம்);
அந்தகனைச் சூலத்தால் அழுத்திச் செற்ற அணி ஆரும் திருக்கோவல் வீரட்டத்தில் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்த அழகிய திருக்கோவல் வீரட்டத்தில் (திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில்);
சுந்தரரை ஆவணத்தால் அடிமை-கொண்ட சோலை புடைசூழ் வெண்ணெய்நல்லூர்-தன்னில் - நம்பி-ஆரூரரை அடிமைஓலை காட்டி ஆட்கொண்ட, சோலை சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில்;
அந்த(ம்) மலி வயல் அணிந்த ஆமாத்தூரில் - அழகு மிக்க வயல் திகழும் திருவாமாத்தூரில்; (அந்தம் - அழகு);
அண்டன்அவன் கண்டம் போல் மேகம் சூழ்ந்து வந்து பொழி வீரவநல்லூரில் - இறைவனது கண்டத்தைப் போலக் கறுத்த மேகம் சூழ்ந்துவந்து மழை பொழியும் வீரவநல்லூரில்;
துண்ட-மதியானைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - பிறையைச் சூடிய பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
8)
வானத்து மதிதீண்டு கோபு ரஞ்சூழ்
.. மாபிரம்ம தேசத்தில், ஆடி னார்தம்
ஊனத்தைத் தீர்பொருநை ஆற்றின் பாங்கர்
.. உயர்பாவ நாசத்தில், தென்னி லங்கைக்
கோனைத்தன் பாதவிரல் ஒன்றை ஊன்றிக்
.. கூக்குரலிட் டழவைத்த தேவ தேவை,
ஏனத்தின் எயிறணிந்த கண்டத் தானை,
.. எம்மானைக் கண்டுதொழ எண்ணு நெஞ்சே.
* பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம் அருகே உள்ள தலம்), பாவநாசம் (பாபநாசம் - தாமிரபரணிக்கரைத் தலம்); - (இவை பாண்டிநாட்டுத் தலங்கள்);
வானத்து மதி தீண்டு கோபுரம் சூழ் மா பிரம்மதேசத்தில் - வானில் செல்லும் சந்திரன் தீண்டுமாறு ஓங்கிய கோபுரம் சூழ்ந்த அழகிய பிரம்மதேசத்தில்; (பிரம்மதேசம் - அம்பாசமுத்திரம் அருகே உள்ள தலம்);
ஆடினார்தம் ஊனத்தைத் தீர் பொருநை-ஆற்றின் பாங்கர் உயர் பாவநாசத்தில் - குளித்தவர்களது குற்றங்களைப் போக்கும் தாமிரபரணி நதியின் அருகே உயர்ந்த பாபநாசத்தில்; (பொருநை - தாமிரபரணிஆறு); (பாங்கர் - பாங்கு - பக்கம்);
தென்னிலங்கைக்கோனைத் தன் பாதவிரல் ஒன்றை ஊன்றிக் கூக்குரலிட்டு அழவைத்த தேவதேவை - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனைத் தன் திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கி அவனைக் கூக்குரலிட்டு அழச்செய்த தேவதேவனை;
ஏனத்தின் எயிறு அணிந்த கண்டத்தானை - பன்றிக்கொம்பைக் கழுத்தில் அணிந்தவனை; (ஏனம் - பன்றி); (எயிறு - பல்; தந்தம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.80.6 - "கண்டத்து இலங்கும் ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே");
எம்மானைக் கண்டு தொழ எண்ணு நெஞ்சே - எம்பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
9)
கரியானும் நான்முகனும் எங்கும் நேடிக்
.. காணொண்ணா வண்ணமொரு தழல தான
பெரியானை, நவகயி லாயத் தொன்றாப்
.. பேணுதிரு வைகுந்தம் தன்னில், அன்பர்
விரிபோதிட் டடிபரவு பேரூர் தன்னில்,
.. வெள்ளியங் கிரிதன்னில், காசூழ் முட்டம்
திருநாகேச் சரந்தன்னில், நீற ணிந்த
.. தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
* ஸ்ரீவைகுண்டம் (தாமிரபரணிக் கரையிலுள்ள நவகயிலாயக் கோயில்களுள் ஒன்று); - (பாண்டிநாட்டுத் தலம்);
* பேருர், வெள்ளியங்கிரி, முட்டத்து நாகேஸ்வரர் கோயில்; - (இவை கொங்குநாட்டுத் தலங்கள்);
கரியானும் நான்முகனும் எங்கும் நேடிக் காணொண்ணா வண்ணம் ஒரு தழலது ஆன பெரியானை - திருமால் பிரமன் இவர்கள் மேலும் கீழும் தேடியும் அவர்களால் அறிய ஒண்ணாத ஒப்பற்ற ஜோதியாகிய பெரியவனை;
நவகயிலாயத்து ஒன்றாப் பேணு திருவைகுந்தம்-தன்னில் - (தாமிரபரணிக் கரையிலுள்ள) நவகயிலாயக் கோயில்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்ற ஸ்ரீவைகுண்டத்தில்;
அன்பர் விரி-போது இட்டு அடி பரவு பேரூர்-தன்னில் - பக்தர்கள் மலர்கின்ற பூக்களைத் தூவித் திருவடியை வணங்கும் பேரூரில்;
வெள்ளியங்கிரி-தன்னில் - வெள்ளியங்கிரியில்;
கா சூழ் முட்டம் திருநாகேச்சரம்-தன்னில் - சோலை சூழ்ந்த முட்டம் என்ற இடத்தில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலில்;
நீறு அணிந்த தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே - திருநீற்றைப் பூசிய செந்தீ-வண்ணனான சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
10)
மறைநெறியை எந்நாளும் பழித்து ரைக்கும்
.. வன்னெஞ்சர் கண்ணிருந்தும் குருடர் ஆனார்;
நறைமலரை நாடிவந்து வண்டி னங்கள்
.. நல்லிசைசெய் திருமுருகன் பூண்டி தன்னில்,
பிறையணிந்தான் தோழரால் முதலை உண்ட
.. பிள்ளையுயிர் பெற்றஅவி நாசி தன்னில்,
கறைதிகழும் மிடற்றானைக், காமன் வேவக்
.. கண்டானைக், கண்டுதொழக் கருது நெஞ்சே.
* திருமுருகன்பூண்டி, அவிநாசி; - (இவை கொங்குநாட்டுத் தலங்கள்);
மறைநெறியை எந்நாளும் பழித்து உரைக்கும் வன்னெஞ்சர் கண் இருந்தும் குருடர் ஆனார் - வைதிக-சமயத்தை எப்பொழுதும் பழித்துப் பேசுகின்ற கொடியவர்கள் கண் இருந்தும் குருடர்களே;
நறைமலரை நாடிவந்து வண்டினங்கள் நல்லிசைசெய் திருமுருகன்பூண்டி-தன்னில் - தேன்மலர்களைத் தேடிவந்து வண்டுகள் இணிய இசையை ஒலிக்கின்ற திருமுருகன்பூண்டியில்;
பிறை அணிந்தான் தோழரால் முதலை உண்ட பிள்ளை உயிர் பெற்ற அவிநாசி-தன்னில் - முன்பு முதலை உண்ட பாலகனைத் தம்பிரான் தோழரான சுந்தரர் பதிகம் பாடி உயிர்ப்பித்த அவிநாசியில்;
கறை திகழும் மிடற்றானைக் - நீலகண்டனை;
காமன் வேவக் கண்டானைக் கண்டுதொழக் கருது நெஞ்சே - காமனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
11)
கூவிளம்பூங் கொன்றைவன்னி குரவம் சூடும்
.. குஞ்சிமிசைக் குளிர்திங்கட் கண்ணி யானோர்
சேவினையே ஊர்தியென விரும்பும் ஈசன்,
.. தேவரெலாம் அமுதுண்ண நஞ்சை உண்டான்,
பூவினையிட் டனுதினமும் போற்றி செய்து
.. புகழ்பாடி உருகுகின்ற அடியார் தங்கள்
தீவினையைத் தீர்த்தருளும் செல்வன் மேய
.. திருத்தலங்கள் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.
கூவிளம், பூங்கொன்றை, வன்னி, குரவம் சூடும் குஞ்சிமிசைக் குளிர்திங்கட்-கண்ணியான் - வில்வம், அழகிய கொன்றைமலர், வன்னியிலை, குராமலர் இவற்றை அணிந்த திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைக் கண்ணிமாலை போல் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (குரவம் - குராமலர்); (கண்ணி - தலையில் அணியும் ஒருவகை மாலை);
ஓர் சேவினையே ஊர்தி என விரும்பும் ஈசன் - ஒப்பற்ற எருதினையே வாகனமாக விரும்பிய ஈசன்; (சே - எருது);
தேவரெலாம் அமுது உண்ண நஞ்சை உண்டான் - தேவர்களெல்லாம் அமுதத்தை உண்ணத் தான் ஆலகாலத்தை உண்டவன்;
பூவினை இட்டு அனுதினமும் போற்றிசெய்து புகழ் பாடி உருகுகின்ற அடியார்-தங்கள் தீவினையைத் தீர்த்தருளும் செல்வன் மேய - பூக்களைத் தூவித், தினமும் வணங்கி, ஈசன் புகழைப் பாடி, மனம் கசியும் பக்தர்களது பாவங்களைத் தீர்த்து அருளும் செல்வனான சிவபெருமான் உறைகின்ற;
திருத்தலங்கள் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - திருத்தலங்களைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment