2019-07-09
P.479 - அன்பிலாலந்துறை (அன்பில்) - (வண்ணவிருத்தம்)
-----------------
(வண்ணவிருத்தம்;
தந்த தானந் .. தனதான)
1)
அங்க ணாசங் கரனேநீ .. அன்றி யாரென் துணையாவார்
செங்க ணேறொன் றமர்வோனே .. திங்க ளேறுஞ் சடைமீது
பொங்க ராவும் புனைவோனே .. பொன்றி னார்தம் பொடிபூசீ
அங்கம் ஓதுந் திருநாவா .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
அங்கணா; சங்கரனே; நீ .. அன்றி யார் என் துணை ஆவார்?
செங்கண்-ஏறு ஒன்று அமர்வோனே; .. திங்கள் ஏறும் சடைமீது
பொங்கு-அராவும் புனைவோனே; .. பொன்றினார்தம் பொடி பூசீ;
அங்கம் ஓதும் திருநாவா .. அன்பில் ஆலந்துறையானே.
அங்கணா; சங்கரனே - அருட்கண்ணுடையவனே; சங்கரனே;
நீ அன்றி யார் என் துணை ஆவார் - உன்னையல்லால் எனக்குத் துணை ஆவார் வேறு யார்?
செங்கண்-ஏறு ஒன்று அமர்வோனே - சிவந்த கண்ணுடைய (= சினம் மிக்க) இடபத்தை வாகனமாக விரும்பியவனே; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
திங்கள் ஏறும் சடைமீது பொங்கு-அராவும் புனைவோனே - சந்திரனை அணிந்த சடைமேல் சீறும் பாம்பையும் அணிந்தவனே;
பொன்றினார்தம் பொடி பூசீ - இறந்தவர்களது சாம்பலைப் பூசியவனே; (பொன்றுதல் - சாதல்);
அங்கம் ஓதும் திருநாவா - (வேதம்,) ஆறங்கம் பாடியருளியவனே;
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
2)
வஞ்ச னேனென் கலிதீர .. மண்டு வாரந் தருவாயே
செஞ்சொ லாலுன் புகழ்பாடு .. சிந்தை யாரஞ் சிடுமாறு
துஞ்சு நாளென் றடைகாலன் .. துஞ்சு மாறங் கழல்வீசி
அஞ்ச லேதந் தருள்வோனே .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
வஞ்சனேன் என் கலி தீர .. மண்டு வாரம் தருவாயே;
செஞ்சொலால் உன் புகழ் பாடு .. சிந்தையார் அஞ்சிடுமாறு
துஞ்சு-நாள் என்று அடை-காலன் .. துஞ்சுமாறு அங்கழல் வீசி
அஞ்சலே தந்து அருள்வோனே .. அன்பில் ஆலந்துறையானே.
வஞ்சனேன் என் கலி தீர மண்டு-வாரம் தருவாயே - வஞ்சம் உடைய என் துன்பம் தீர மிகும் பக்தியை அருள்வாயாக; (மண்டுதல் - மிகுதல்); (வாரம் - அன்பு);
செஞ்சொலால் உன் புகழ் பாடு சிந்தையார் அஞ்சிடுமாறு துஞ்சு-நாள் என்று அடை-காலன் துஞ்சுமாறு அங்கழல் வீசி அஞ்சலே தந்து அருள்வோனே - வேதம் பாமாலை முதலியன ஓதி உன் துதி பாடிய மனத்தரான மார்கண்டேயர் அஞ்ச அவர் சாகும் நாள் என்று அவரை நெருங்கிய காலனே இறக்கும்படி அழகிய திருவடியை வீசி (நமனை உதைத்து) மார்க்கண்டேயருக்கு அபயம் அளித்தவனே; (துஞ்சுதல் - சாதல்); (அம் - அழகு);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
3)
மிண்டு பேசுஞ் சிறியோரை .. விண்டு நாளுந் தமிழாலே
இண்டை போல்வெண் பிறைசூடீ .. என்று பாடுங் குணமீயாய்
பண்டு மாதுன் துணையாகப் .. பன்றி மேலம் பெறிவேடா
அண்டம் ஆளும் பெரியோனே .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
மிண்டு பேசும் சிறியோரை .. விண்டு நாளும் தமிழாலே,
"இண்டை போல் வெண்பிறை சூடீ" .. என்று பாடும் குணம் ஈயாய்;
பண்டு மாது உன் துணை ஆகப் .. பன்றிமேல் அம்பு எறி வேடா;
அண்டம் ஆளும் பெரியோனே .. அன்பில் ஆலந்துறையானே.
மிண்டு பேசும் சிறியோரை விண்டு நாளும் தமிழாலே, "இண்டை போல் வெண்பிறை சூடீ" என்று பாடும் குணம் ஈயாய் - செருக்கிப் பேசும் இழிந்தவர்களை நீங்கித் தினமும் தமிழ்ப்பாமாலைகளால், "வெண்திங்களை இண்டைமாலை போல அணிந்தவனே" என்று உன்னைத் துதிக்கும் அன்பை அருள்வாயாக; (மிண்டு - செருக்கிக் கூறும் மொழி); (விள்தல் - நீங்குதல்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
பண்டு மாது உன் துணை ஆகப் பன்றிமேல் அம்பு எறி வேடா; - முன்பு உமாதேவியோடு சென்று ஒரு பன்றியை எய்த வேடனே; (* அர்ஜுனனுக்கு அருளக் காட்டில் வேடனாகச் சென்று பன்றியை எய்த வரலாற்றைச் சுட்டியது);
அண்டம் ஆளும் பெரியோனே - அகிலம் ஆளும் மகாதேவனே;
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
4)
சந்தம் ஆர்செந் தமிழ்பாடித் .. தஞ்ச(ம்) நீயென் றடைவார்தம்
பந்த பாசங் களைவோனே .. பைங்க ணேறொன் றுடையானே
வந்தி யாநெஞ் சினர்காணா .. மைந்த னேசெஞ் சடையானே
அந்தி போலுந் திருமேனி .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
சந்தம் ஆர் செந்தமிழ் பாடித், .. "தஞ்சம் நீ" என்று அடைவார்தம்
பந்த-பாசம் களைவோனே; .. பைங்கண்-ஏறு ஒன்று உடையானே;
வந்தியா நெஞ்சினர் காணா .. மைந்தனே; செஞ்சடையானே;
அந்தி போலும் திருமேனி .. அன்பில் ஆலந்துறையானே.
சந்தம் ஆர் செந்தமிழ் பாடித், "தஞ்சம் நீ" என்று அடைவார்தம் பந்தபாசம் களைவோனே - சந்தம் பொருந்திய தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி, "நீயே என் புகல்" என்று அடைந்தவர்களது பற்றுகளை நீக்குபவனே; (சந்தம் - செய்யுளின் ஓசைநயம்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.11 - "சம்பந்தன்சொல் சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லாரெலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே");
பைங்கண்-ஏறு ஒன்று உடையானே - பசியகண் உடைய இடபத்தை வாகனமாக உடையவனே; (அப்பர் தேவாரம் - 6.10.8 - "பைங்க ணேற்றார் பலியேற்றார்");
வந்தியா நெஞ்சினர் காணா மைந்தனே - வணங்காதவர்களால் அறியப்படாத இளையோனே (/வீரனே); (வந்தியா - வந்தித்தல் செய்யாத - வணங்காத); (மைந்தன் - இளையோன்; வீரன்);
செஞ்சடையானே - சிவந்த சடை உடையவனே;
அந்தி போலும் திருமேனி - செவ்வானம் போன்ற செம்மேனி உடைய;
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
5)
வம்பு நாறும் புதுவீயால் .. மங்கை பாகந் திகழ்மேனிச்
செம்பி ரானுன் கழல்பேணும் .. சிந்தை நானும் பெறுவேனோ
உம்பர் வாழும் படிமாவில் .. ஒன்றி னால்வெந் தழலாரும்
அம்பை ஏவும் பெருவீரா .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
வம்பு நாறும் புது வீயால் .. மங்கை பாகம் திகழ் மேனிச்
செம்பிரான் உன் கழல் பேணும் .. சிந்தை நானும் பெறுவேனோ?
உம்பர் வாழும்படி மா-வில் .. ஒன்றினால் வெந்தழல் ஆரும்
அம்பை ஏவும் பெருவீரா; .. அன்பில் ஆலந்துறையானே.
வம்பு நாறும் புது வீயால் மங்கை பாகம் திகழ்- மேனிச் செம்பிரான் உன் கழல் பேணும் சிந்தை நானும் பெறுவேனோ - மணம் கமழும் நாண்மலரால் உமைபங்கனான செம்மேனிப் பெருமானே உன் திருவடியைப் போற்றும் மனத்தை நானும் அடைவேனோ? (அடைய அருள்க); (வம்பு - வாசனை); (வீ - பூ);
உம்பர் வாழும்படி மா-வில் ஒன்றினால் வெந்தழல் ஆரும் அம்பை ஏவும் பெருவீரா - தேவர்கள் உய்யும்படி (முப்புரங்கள் அழியப்) பெரிய (மேருமலை)வில்லால் சுட்டெரிக்கும் அம்பை எய்த பெரிய வீரனே; (உம்பர் - தேவர்); (வெந்தழல் - வெம்மையான தீ);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
6)
கன்றி வாடுந் தமியேனைக் .. கண்டு நீயின் றருளாயே
மன்றில் ஆடும் பெருமானே .. மங்கை பாகம் புரிவோனே
குன்றை ஓர்வெஞ் சிலையாகக் .. கொண்டு பாணந் தொடுவோனே
அன்றி னார்தம் புரம்வேவ .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
கன்றி வாடும் தமியேனைக் .. கண்டு நீ இன்று அருளாயே;
மன்றில் ஆடும் பெருமானே; .. மங்கை பாகம் புரிவோனே;
குன்றை ஓர் வெஞ்சிலையாகக் .. கொண்டு பாணம் தொடுவோனே,
அன்றினார்தம் புரம் வேவ; .. அன்பில் ஆலந்துறையானே.
கன்றி வாடும் தமியேனைக் கண்டு நீ இன்று அருளாயே - மிகவும் வருந்தும் என்னைக் கண்டு நீ இன்று இரங்கியருள்வாயாக; (கன்றுதல் - வருந்துதல்; வாடுதல்); ((கன்றி வாடும் - ஒருபொருட்பன்மொழி);
மன்றில் ஆடும் பெருமானே - அம்பலக் கூத்தனே;
மங்கை பாகம் புரிவோனே - மாதொருபாகம் விரும்பியவனே; (புரிதல் - விரும்புதல்);
குன்றை ஓர் வெஞ்சிலையாகக் கொண்டு பாணம் தொடுவோனே, அன்றினார்தம் புரம் வேவ - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையை ஒரு வில்லாக ஏந்திக் கணை எய்தவனே; (சிலை - வில்); (அன்றினார் - பகைவர்);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
7)
சங்கை தீரும் படிநானும் .. தஞ்ச(ம்) நீயென் றடைவேனே
கங்கை ஆருஞ் சடையானே .. கந்த(ம்) நாறுங் குழலாரும்
மங்கை சேருந் திருமேனி .. மஞ்சு லாவுங் கயிலாயா
அங்கை ஆருந் தழலானே .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
சங்கை தீரும்படி நானும் .. தஞ்சம் நீ என்று அடைவேனே;
கங்கை ஆரும் சடையானே; .. கந்தம் நாறும் குழல் ஆரும்
மங்கை சேரும் திருமேனி, .. மஞ்சு உலாவும் கயிலாயா;
அங்கை ஆரும் தழலானே; .. அன்பில் ஆலந்துறையானே.
சங்கை தீரும்படி நானும் தஞ்சம் நீ என்று அடைவேனே - அச்சம் தீரும்படி அடியேனும் உன்னைத் தஞ்சம் என்று சரண்புகுவேன்; (சங்கை - அச்சம்);
கங்கை ஆரும் சடையானே - கங்கையை அணிந்த சடையானே; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);
கந்தம் நாறும் குழல் ஆரும் மங்கை சேரும் திருமேனி, மஞ்சு உலாவும் கயிலாயா - வாசனை கமழும் கூந்தலையுடைய உமாதேவி (பாகமாக) இணைந்த திருமேனியுடைய, மேகம் சூழ்ந்த கயிலைமலை நாதனே; (குழல் - கூந்தல்); (மஞ்சு - மேகம்);
அங்கை ஆரும் தழலானே - கையில் தீயை ஏந்தியவனே;
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
8)
முன்பு நாலஞ் சணிதோளன் .. மொய்ம்பு தீர்மென் கழல்நாதா
என்பின் ஆரம் புனைவோனே .. எங்கு(ம்) நாகந் திகழ்வோனே
இன்ப னேவெண் பொடியானே .. என்று தாழுஞ் சுரர்வாழ
அன்பி னால்நஞ் சணிவோனே .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
முன்பு நாலஞ்சு அணி-தோளன் .. மொய்ம்பு தீர் மென்- கழல் நாதா
என்பின் ஆரம் புனைவோனே; .. எங்கும் நாகம் திகழ்வோனே;
"இன்பனே வெண்பொடியானே" .. என்று தாழும் சுரர் வாழ,
அன்பினால் நஞ்சு அணிவோனே; .. அன்பில் ஆலந்துறையானே.
முன்பு நாலஞ்சு அணி-தோளன் மொய்ம்பு தீர் மென்-கழல் நாதா - முன்பு இருபது அழகிய (= வலிமை மிகுந்த) புஜங்களை உடைய இராவணனது வலிமையை அழித்த மென்மையான திருப்பாதம் உடைய நாதனே; (மொய்ம்பு - வலிமை); (தீர்த்தல் - அழித்தல்);
என்பின் ஆரம் புனைவோனே - எலும்பை மாலையாக அணிந்தவனே; (என்பு - எலும்பு); (ஆரம் - மாலை);
எங்கும் நாகம் திகழ்வோனே - திருமேனியில் பல்லிடங்களில் பாம்புகள் திகழ அணிந்தவனே;
"இன்பனே; வெண்பொடியானே" என்று தாழும் சுரர் வாழ, அன்பினால் நஞ்சு அணிவோனே - "இன்பனே; திருநீற்றைப் பூசியவனே" என்று இறைஞ்சிய தேவர்கள் உய்ய, அன்போடு ஆலகாலத்தை (உண்டு கண்டத்தில்) அணிந்தவனே;
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
* போற்றி என்பது குறிப்பு;
9)
கஞ்சன் மாலென் றிவர்நேடிக் .. கண்டி லாவெஞ் சுடரானாய்
பஞ்ச காலம் படியீயும் .. பண்ப னேசெந் தமிழ்நேயா
குஞ்சி மேலொண் பிறையானே .. கும்ப லாய்வந் தழுதேவர்
அஞ்சு மாநஞ் சமுதாகும் .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
கஞ்சன் மால் என்றிவர் நேடிக் .. கண்டிலா வெஞ்சுடர் ஆனாய்;
பஞ்சகாலம் படி ஈயும் .. பண்பனே; செந்தமிழ் நேயா;
குஞ்சிமேல் ஒண்-பிறையானே; .. கும்பலாய் வந்து அழு-தேவர்
அஞ்சு மா-நஞ்சு அமுது ஆகும் .. அன்பில் ஆலந்துறையானே.
கஞ்சன் மால் என்றிவர் நேடிக் கண்டிலா வெஞ்சுடர் ஆனாய் - பிரமன் திருமால் என்ற இவ்விருவராலும் தேடியும் காண ஒண்ணாத ஜோதி ஆனவனே; (கஞ்சன் - தாமரையில் இருக்கும் பிரமன்); (நேடுதல் - தேடுதல்);
பஞ்சகாலம் படி ஈயும் பண்பனே; செந்தமிழ் நேயா - ; பஞ்சம் நேர்ந்தபொழுது படிக்காசு ஈந்தவனே; (அப்படிச்) செந்தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவனே; (* திருவீழிமிழலையில் சம்பந்தருக்கும் அப்பருக்கும் படிக்காசு அளித்த வரலாற்றைச் சுட்டியது);
குஞ்சிமேல் ஒண்-பிறையானே - தலைமேல் ஒளிவீசும் சந்திரனைச் சூடியவனே; (குஞ்சி - தலை);
கும்பலாய் வந்து அழு-தேவர் அஞ்சு மா-நஞ்சு அமுது ஆகும் - கூட்டமாகத் திரண்டு வந்து அழுது தொழுத தேவர்கள் அஞ்சிய ஆலகாலமும் அமுதம் ஆன (= விஷத்தை உண்டருளிய);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே;
* போற்றி என்பது குறிப்பு;
10)
எந்த நாளும் புறனேசொல் .. என்று வாழுங் கலர்பேணேல்
வந்து நாறுங் கணையேவும் .. வம்பன் ஆகஞ் சுடுமீசன்
தந்தை யாய்நந் துணையாவான் .. தண்டு சூலந் தரிதேவன்
அந்தம் ஆகும் பொடியாடி .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
எந்த நாளும் புறனே சொல் .. என்று வாழும் கலர் பேணேல்;
வந்து நாறும் கணை ஏவும் .. வம்பன் ஆகம் சுடும் ஈசன்;
தந்தையாய் நம் துணை ஆவான்; .. தண்டு சூலம் தரி-தேவன்;
அந்தம் ஆகும் பொடி-ஆடி; .. அன்பில் ஆலந்துறையானே.
எந்த நாளும் புறனே சொல் என்று வாழும் கலர் பேணேல் - என்றும் பழிமொழியே பேச்சு என்று வாழும் கீழோர்களை மதிக்கவேண்டா; (புறன் - பழிச்சொல்); (கலர் - கீழோர்); (குறிப்பு: உயர்திணையில் இரண்டாம்வேற்றுமைத் தொகையில், "கலரைப் பேணேல்" என்பது "கலர்ப்பேணேல்" என்று ஒற்று மிக்கு வரும்; இங்கே ஓசை கருதி ப் மிகாது வந்தது);
வந்து நாறும் கணை ஏவும் வம்பன் ஆகம் சுடும் ஈசன் - நெருங்கி வந்து மலர்க்கணை எய்த விஷமம் செய்யும் காமனது உடம்பைச் சுட்டெரித்த ஈசன்;
தந்தையாய் நம் துணை ஆவான் - நமக்குத் தந்தை ஆகிக் காப்பவன்;
தண்டு சூலம் தரி-தேவன் - தண்டாயுதம் சூலாயுதம் இவற்றை ஏந்திய தேவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.116.3 - "இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர்");
அந்தம் ஆகும் பொடி-ஆடி - (முதலும்) முடிவும் ஆனவன், அழகாகும் திருநீற்றைப் பூசியவன்; (அந்தம் - முடிவு; அழகு);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமான்; (ஏ - ஈற்றசை);
11)
சம்பு வேபொங் கிளநாகம் .. தங்கும் ஆகந் தனில்நூலாய்
எம்பி ரானென் றடைவார்பால் .. என்றும் ஆரன் புடையீசன்
கொம்ப னாள்பங் கமர்கோமான் .. கொன்றை வானின் றிழிவேணி
அம்பு பூணுஞ் சடைநாதன் .. அன்பி லாலந் துறையானே.
பதம் பிரித்து:
"சம்புவே; பொங்கு-இளநாகம் .. தங்கும் ஆகம்தனில் நூலாய்;
எம்பிரான்" என்று அடைவார்பால் .. என்றும் ஆரன்பு உடை-ஈசன்;
கொம்பனாள் பங்கு அமர்-கோமான்; .. கொன்றை, வானின்று இழி-வேணி
அம்பு பூணும் சடை-நாதன்; .. அன்பில் ஆலந்துறையானே.
"சம்புவே; பொங்கு-இளநாகம் தங்கும் ஆகம்தனில் நூலாய் - "சம்புவே, சீறும் இளம்பாம்பு தங்கும் மார்பில் பூணூல் அணிந்தவனே;
எம்பிரான்" என்று அடைவார்பால் என்றும் ஆரன்பு உடை-ஈசன் - எம்பெருமானே" என்று துதித்துச் சரண்புகுந்த அன்பர்களிடம் பேரன்பு உடைய ஈசன்;
கொம்பு-அனாள் பங்கு அமர்-கோமான் - பூங்கொம்பு போன்ற உமையைத் திருமேனியில் ஒரு பங்காக விரும்பிய தலைவன்; (அனாள் - அன்னாள் - போன்றவள்); (அமர்தல் - விரும்புதல்); (கோமான் - அரசன்);
கொன்றை, வானின்று இழி வேணி அம்பு பூணும் சடை-நாதன் - கொன்றைமலர், வானிலிருந்து பாய்ந்த கங்கையின் நீர் இவற்றை அணிந்த சடையை உடைய நாதன்; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு); (வேணி - ஆறு); (அம்பு - நீர்);
அன்பில் ஆலந்துறையானே - அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளிய சிவபெருமான்; (ஏ - ஈற்றசை);
* ஈசனைப் படர்க்கையில் பரவும் பாடல்; அவனை வணங்கி உய்வோம் என்பது குறிப்பு;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment