Showing posts with label தனதன தய்யா தனதான. Show all posts
Showing posts with label தனதன தய்யா தனதான. Show all posts

Wednesday, May 6, 2026

T.224 - அறையணிநல்லூர் - நலமலி சொல்லார்

2019-07-17

T. 224 - அறையணிநல்லூர் - நலமலி சொல்லார்

(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தய்யா .. தனதான)


நல(ம்)மலி சொல்லார் .. தமிழ்பாடி

.. நலிவினை எல்லாம் .. அழிவாகி

அலமரல் இல்லா .. நிலைகூட

.. அருளது செய்யாய் .. உமைகோனே

அலையரண் வில்லால் .. அடுதீரா

.. அறையணி நல்லூர் .. உறைவோனே

அலைமதி பையார் .. அரவாரும்

.. அவிர்சடை ஐயா .. பெருமானே.


பதம் பிரித்து:

நல(ம்) மலி சொல் ஆர் தமிழ் பாடி,

.. நலி-வினை எல்லாம் அழிவாகி,

அலமரல் இல்லா நிலை கூட

.. அருளது செய்யாய், உமைகோனே;

அலை-அரண் வில்லால் அடு-தீரா;

.. அறையணிநல்லூர் உறைவோனே;

அலை, மதி, பை ஆர் அரவு ஆரும்

.. அவிர்-சடை ஐயா; பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

நல(ம்) மலி சொல் ஆர் தமிழ் பாடி, நலி-வினை எல்லாம் அழிவாகி - நன்மை மிகுந்த சொற்கள் நிறைந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, (என்னை) வருத்தும் வினையெல்லாம் தீர்ந்து; (நலித்தல் - வருத்துதல்);

அலமரல் இல்லா நிலை கூட அருளது செய்யாய், உமைகோனே - துன்பமற்ற நிலை எய்த, உமாபதியே, அருள்வாயாக; (அலமரல் - அச்சம்; துக்கம்);

அலை-அரண் வில்லால் அடு-தீரா - எங்கும் திரிந்து தேவர்களை வருத்திய முப்புரங்களை (மேருமலை என்ற) வில்லால் எய்து அழித்த வீரனே; (அலைதல் - திரிதல்; அலைத்தல் - வருத்துதல்); (அடுதல் - அழித்தல்); (தீரன் - வீரன்);

அறையணிநல்லூர் உறைவோனே - அறையணிநல்லூரில் உறைகின்றவனே;

அலை, மதி, பை ஆர் அரவு ஆரும் அவிர்-சடை ஐயா - கங்கைநதி, திங்கள், படமுடைய பாம்பு இவற்றையெல்லாம் அணிந்த ஒளிவீசும் சடையுடைய தலைவனே; (அலை - 1. நதி; 2. அலைதல் - வருந்துதல்); (பை - பாம்பின் படம்); (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (அவிர்தல் - ஒளிவீசுதல்);

பெருமானே - பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.222 - அறையணிநல்லூர் - பழவினை எல்லாம்

2019-07-16

T. 222 - அறையணிநல்லூர் - பழவினை எல்லாம்

(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தய்யா .. தனதான)


பழவினை எல்லாம் .. அடராமுன்

.. பலமலர் கையால் .. இடுவேனோ

நிழலுடை வையார் .. மழுவாளா

.. நெடுவரை வில்லா .. வளைவீரா

அழலன செய்யா .. அழகாரும்

.. அறையணி நல்லூர் .. உறைவோனே

மழவிடை ஐயா .. மறைநாவா

.. மதியணி செல்வா .. பெருமானே.


பதம் பிரித்து:

பழவினை எல்லாம் .. அடராமுன்

.. பலமலர் கையால் .. இடுவேனோ?

நிழலுடை வை ஆர் .. மழுவாளா;

.. நெடு-வரை வில்லா .. வளை-வீரா;

அழல் அன செய்யா; .. அழகு ஆரும்

.. அறையணிநல்லூர் .. உறைவோனே;

மழவிடை ஐயா; .. மறைநாவா;

.. மதி அணி செல்வா; .. பெருமானே.


பழவினை எல்லாம் டராமுன் பலமலர் கையால் இடுவேனோ - பழவினையெல்லாம் என்னைச் சூழ்ந்து தாக்குவதன்முன் கையால் பல பூக்களை உன் திருவடியில் இட்டு வழிபடுவேனோ? (அப்படி வழிபடும் அன்பை அருள்வாயாக); (அடர்த்தல் - நசுக்குதல்; தாக்குதல்);

நிழலுடை வை ஆர் மழுவாளா - ஒளியும் கூர்மையும் பொருந்திய மழுவை ஏந்தியவனே; (நிழல் - ஒளி); (வை - கூர்மை);

நெடு-வரை வில்லா வளை வீரா - பெரிய மேருமலையை வில்லாக வளைத்த வீரனே; (வரை - மலை); (வில்லா - வில்லாக);

அழல் அன செய்யா - தீப் போல் செம்மேனி உடையவனே; (செய்யன் - சிவந்த நிறத்தை உடையவன்);

அழகு ஆரும் அறையணிநல்லூர் உறைவோனே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனே;

மழவிடை ஐயா - இளைய இடபத்தை வாகனமாக உடையவனே;

மறைநாவா - வேதங்களைப் பாடியருளியவனே;

மதிணி செல்வா - சந்திரனை அணிந்த செல்வனே;

பெருமானே - பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------