Showing posts with label தந்த தானன தான தனதன x3 தனதான. Show all posts
Showing posts with label தந்த தானன தான தனதன x3 தனதான. Show all posts

Saturday, July 9, 2022

T.145 - நின்றவூர் (திருநின்றவூர்) - தந்தை தாயொடு

2011-04-09

T.145 - நின்றவூர் (திருநின்றவூர்) - தந்தை தாயொடு

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன .. தனதான)

(ஐந்து பூதமும் ஆறு சமயமும் - திருப்புகழ் - விராலிமலை)


தந்தை தாயொடு தாரம் உறவுகள்

.. .. என்று சூழ்தரு பாச வலையது

.. .. தங்கம் ஆர்தளை போல வரவுனை .. நினையாமல்

.. சங்கை வேதனை யான விரவிட

.. .. நொந்து மேதினி மீது துயர்மிகு

.. .. சங்கை யேயில தான பிறவியில் .. உழல்வேனும்

நிந்தை போலுன சீரை மொழிசெயும்

.. .. அன்பர் தோழமை யோடு நினைதரு

.. .. நெஞ்சர் நாவல ஊரர் உரைதமிழ் .. அவைபாடி

.. நின்று தூமலர் தூவி அலையென

.. .. வந்து சேர்வினை யாவும் அழிவுற

.. .. நின்றன் ஆர்கழல் நாடி வழிபட .. அருளாயே

எந்தை யேஇடர் தீரும் எனமுனம்

.. .. உம்ப ராரவர் ஓடி வரவரை

.. .. என்ற மாசிலை யோடு புரமெரி .. அதிவீரா

.. இண்டை மாமதி நாக(ம்) நதியிவை

.. .. குஞ்சி மேலணி ஈச அழகிய

.. .. இஞ்சி சூழ்தளி பூசல் உளமென .. மகிழ்வோனே

வந்தி யார்அறி யாத வடிவின

.. .. அண்டர் நாயக ஆல விடமது

.. .. மஞ்சு போன்மணி ஆக அணிதிரு .. மிடறானே

.. வண்டின் ஓசைய றாத பொழிலணி

.. .. நின்ற வூர்தனில் நேயர் தொழமலை

.. .. மங்கை யோடினி தாக உறைசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

தந்தை தாயொடு தாரம் உறவுகள்

.. .. என்று சூழ்தரு பாச வலை-அது

.. .. தங்கம் ஆர் தளை போல வர, உனை நினையாமல்,

.. சங்கை வேதனையான விரவிட,

.. .. நொந்து, மேதினி-மீது துயர் மிகு

.. .. சங்கையே இலது ஆன பிறவியில் உழல்வேனும்,

நிந்தை போல் உன சீரை மொழிசெயும்

.. .. அன்பர், தோழமையோடு நினைதரு

.. .. நெஞ்சர், நாவல-ஊரர் உரை-தமிழ் அவை பாடி

.. நின்று தூமலர் தூவி, அலை என

.. .. வந்து சேர் வினை யாவும் அழிவுற,

.. .. நின்றன் ஆர்-கழல் நாடி வழிபட அருளாயே;

"எந்தையே; இடர் தீரும்" என முனம்

.. .. உம்பரார்-அவர் ஓடி வர, வரை

.. .. என்ற மா-சிலையோடு புரம் எரி அதிவீரா;

.. இண்டை மாமதி, நாக(ம்), நதி இவை

.. .. குஞ்சிமேல் அணி ஈச; அழகிய

.. .. இஞ்சி சூழ் தளி பூசல் உளம் என மகிழ்வோனே;

வந்தியார் அறியாத வடிவின;

.. .. அண்டர்-நாயக; ஆலவிடம்-அது

.. .. மஞ்சு போல் மணி ஆக அணி திரு-மிடறானே;

.. வண்டின் ஓசை அறாத பொழில் அணி

.. .. நின்றவூர்தனில் நேயர் தொழ, மலை

.. .. மங்கையோடு இனிதாக உறை சிவபெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

தந்தை தாயொடு தாரம் உறவுகள் என்று சூழ்தரு பாசவலை அது தங்கம் ஆர் தளை போல வர, உனை நினையாமல் - தந்தை, தாய், மனைவி, உறவினர் என்று என்னைச் சூழும் பந்தபாசம் என்ற வலை பொன்விலங்கு போல் ஆகி, அதனால் உன்னை நினையாமல்; (சூழ்தர - சூழ); (தருதல் - ஒரு துணைவினை);

சங்கை வேதனையான விரவிட நொந்து, மேதினி மீது துயர்மிகு சங்கையே இலதான பிறவியில் உழல்வேனும் - ஐயம், அச்சம், துன்பம் எல்லாம் வந்தடைய, அதனால் வருந்திப், பூமியின்மேல் எண்ணற்ற, துயரம் மிக்க பிறவிகளில் உழல்கின்ற நானும்; (சங்கை - 1. ஐயம்; அச்சம்; 2. எண்; அளவு); (மேதினி - பூமி);

நிந்தை போல் உன சீரை மொழிசெயும் அன்பர், தோழமையோடு நினைதரு நெஞ்சர், நாவல-ஊரர் உரை-தமிழ் அவை பாடி - பழிப்பது போல உன் புகழைப் பாடும் பக்தரும், நட்போடு நினைக்கும் மனத்தை உடையவரும், நாவலூரரும் ஆன சுந்தரர் அருளிய தேவாரத்தைப் பாடி; (உன - உனது); (- ஆறாம் வேற்றுமை உருபு); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே"); (நாவல ஊரர் - நாவலூரர் - சுந்தரர்; "நாவல" என்பதில் அகரம் சாரியை); (சுந்தரர் தேவாரம் - 7.100.10 - "நாவல ஊரன் சொன்ன");

நின்று தூமலர் தூவி, அலை என வந்து சேர்வினை யாவும் அழிவு உற, நின்றன் ஆர் கழல் நாடி வழிபட அருளாயே - நன்மலர்களைத் தூவி நின்று, அலைபோல முடிவின்றி வந்தடையும் வினைகள் எல்லாம் அழியும்படி, உன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை விரும்பி வழிபட அருள்புரிவாயாக; (ஆர்த்தல் - ஒலித்தல்);

"எந்தையே; இடர் தீரும்" என முனம் உம்பரார் அவர் ஓடி வர, வரை என்ற மா-சிலையோடு புரம் எரி அதிவீரா - "எந்தையே! எம் இடர்களைத் தீருங்கள்" என்று முன்பு தேவர்கள் உன்னிடம் ஓடி வரவும், அவர்களைக் காக்க மேருமலை என்ற பெரிய வில்லால் முப்புரங்களையும் எரித்த மாவீரனே; (உம்பரார் - மேலிடத்து இருப்பவர்; தேவர்); (வரை - மலை); (சிலை - வில்); ("எந்தையே இடர் தீரும்" - ஒருமைபன்மை மயக்கம் என்று கொள்ளலாம்);

இண்டை மாமதி, நாக(ம்), நதி இவை குஞ்சிமேல் அணி ஈச - தலையில் அணியும் மாலைபோல் அழகிய பிறையையும், பாம்பையும், கங்கையையும் திருமுடிமேல் அணிந்த ஈசனே; (இண்டை - தலையில் அணியும் மாலை); (குஞ்சி - தலைமயிர் - தலைக்கு ஆகுபெயர்);

அழகிய இஞ்சி சூழ் தளி பூசல் உளம் என மகிழ்வோனே - அழகிய மதில் சூழ்ந்த கோயிலாகப் பூசலார் நாயனாரின் உள்ளத்தில் விரும்பி வீற்றிருப்பவனே; (இஞ்சி - மதில்); (தளி - கோயில்); (பூசல் - பூசலார் நாயனார்); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

வந்தியார் அறியாத வடிவின - போற்றாதவர்களால் காண இயலாத வடிவம் உடையவனே;

அண்டர்-நாயக - எல்லா அண்டங்களுக்கும் தலைவனே; தேவர்களுக்குத் தலைவனே;

ஆலவிடம்-அது மஞ்சு போல் மணி ஆக அணி திரு மிடறானே - கடல்நஞ்சை மேகம் போன்ற நிறம் திகழும் மணி போலக் கண்டத்தில் அணிந்தவனே; (ஆலம் - கடல்); (ஆலவிடம் - 1. கடல்விஷம்; 2. ஆலமாகிய விஷம்); (மஞ்சு - மேகம்); (மிடறு - கண்டம்); (மிடறானே - மிடற்றானே; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "அன்று ஆலவிட(ம்) நுகர்ந்தான்"); (சுந்தரர் தேவாரம் - 7.70.1 - "பொங்கு மாகடல் விடமிடற்றானே"); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவாள் உடையாய்");

வண்டின் ஓசை அறாத பொழில் அணி நின்றவூர்தனில் நேயர் தொழ, மலைமங்கையோடு இனிதாக உறை சிவபெருமானே - எப்பொழுதும் வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த திருநின்றவூரில் பக்தர்கள் தொழப் பார்வதியோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.144 - நின்றவூர் (திருநின்றவூர்) - என்றும் ஆசைகள்

2011-04-07

T.144 - நின்றவூர் (திருநின்றவூர்) - என்றும் ஆசைகள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன

தந்த தானன தான தனதன .. தனதான)

(ஐந்து பூதமும் ஆறு சமயமும் - திருப்புகழ் - விராலிமலை)


என்றும் ஆசைகள் மோது மடமனம்

.. .. .. இன்ப வாழ்வென மாய வலையினில்

.. .. இங்கு வீழ்வுறு மாறு செயவுனை .. நினையாமல்

.. குன்று போல்வினை கூடி மிகவிடர்

.. .. .. கொண்டு வாடடி யேனு(ம்) மதிபுனை

.. .. .. குஞ்சி யாயுன தாளை வழிபட .. அருளாயே

மன்று போலிடு கானில் இருளது

.. .. .. துன்று வேளையில் ஆடு கழலின

.. .. வன்கை யானையின் ஈர உரிபுனை .. திருமார்பா

.. வம்பு லாவிய வாளி தொடுமதன்

.. .. .. வந்து போர்புரி நாளில் அவனது

.. .. மைந்த தாருடல் நீறு படமுனி .. தவயோகீ

உன்றன் மேனியில் நூலை நிகரிடை

.. .. .. மங்கை பாகம தான அழகின

.. .. உந்தி சூழ்தரும் ஆடை எனவதள் .. உடையானே

.. உம்பர் தானவர் வேலை கடைதினம்

.. .. .. வந்த கார்மலி ஆலம் அமுதென

.. .. உண்டு மாமணி போல அணிதிரு .. மிடறானே

அன்று தாளடை மாணி நிலைபெற

.. .. .. அன்பி லாநம னாரை விழவுதை

.. .. அங்க ணாவழி யாத புகழுடை .. முதலோனே

.. நின்றன் ஏர்மலி பாத(ம்) நினைபவர்

.. .. .. நெஞ்ச மேதளி யாக மகிழ்பவ

.. .. நின்ற வூரிட மாக இனிதுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

என்றும் ஆசைகள் மோது மடமனம்

.. .. .. இன்ப-வாழ்வு-என மாய-வலையினில்

.. .. இங்கு வீழ்வுறுமாறு செய, உனை .. நினையாமல்,

.. குன்று போல் வினை கூடி, மிகவிடர்

.. .. .. கொண்டு வாடு-அடியேனு(ம்) மதி புனை

.. .. .. குஞ்சியாய், உன தாளை வழிபட .. அருளாயே;

மன்று போல் இடுகானில் இருளது

.. .. .. துன்று வேளையில் ஆடு கழலின;

.. .. வன்-கை-யானையின் ஈர-உரி புனை .. திருமார்பா;

.. வம்பு உலாவிய வாளி தொடு மதன்

.. .. .. வந்து போர்புரி நாளில் அவனது

.. .. மைந்தது ஆர் உடல் நீறு-பட முனி .. தவயோகீ;

உன்றன் மேனியில் நூலை நிகர் இடை

.. .. .. மங்கை பாகமது ஆன அழகின;

.. .. உந்தி சூழ்தரும் ஆடை என அதள் .. உடையானே;

.. உம்பர் தானவர் வேலை கடை-தினம்

.. .. .. வந்த கார் மலி ஆலம் அமுது-என

.. .. உண்டு மாமணி போல அணி திரு .. மிடறானே;

அன்று தாள் அடை மாணி நிலைபெற,

.. .. .. அன்பு-இலா நமனாரை விழ உதை

.. .. அங்கணா; அழியாத புகழுடை .. முதலோனே;

.. நின்றன் ஏர் மலி பாத(ம்) நினைபவர்

.. .. .. நெஞ்சமே தளியாக மகிழ்-பவ;

.. .. நின்றவூர் இடமாக இனிதுறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

என்றும் ஆசைகள் மோது மட-மனம் இன்ப-வாழ்வு என மாய-வலையினில் இங்கு வீழ்வுறுமாறு செய - எப்பொழுதும் ஆசைகள் அலைமோதுகின்ற பேதைமனம் இன்பவாழ்வு என்று வஞ்சவலையில் இங்கே விழும்படி செய்ய;

உனை நினையாமல் குன்று போல் வினை கூடி, மிக இடர் கொண்டு வாடு அடியேனும் - உன்னை எண்ணாமல், மலைபோல் வினைகள் கூடி, துன்புற்று மிகவும் வாடுகின்ற அடியேனும்;

மதி புனை குஞ்சியாய், உன தாளை வழிபட அருளாயே - சந்திரனைத் தலைமேல் அணிந்தவனே, உன்னுடைய திருவடிகளை வழிபட அருள்வாயாக; (குஞ்சி - தலைமயிர். தலைக்கு ஆகுபெயர்); ("மதி புனை குஞ்சி ஆய் - அறிவை அணியும் தலை ஆகி" என்று கொண்டு, "நான் அறிவு தெளிந்து" என்றும் கொள்ளலாம்); (உன - உனது; - ஆறாம் வேற்றுமை உருபு);

மன்று போல் இடுகானில் இருளது துன்று வேளையில் ஆடு கழலின - கூத்தாடும் அரங்காகச் சுடுகாட்டில் இருள் செறிந்த வேளையில் கூத்தாடும் திருப்பாதனே; (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);

வன்-கை-யானையின் ஈர-உரி புனை திருமார்பா - வலிய தும்பிக்கையுடைய யானையின் ஈரத்தோலைப் போர்வையாகத் திருமார்பில் அணிந்தவனே; (உரி - தோல்);

வம்பு உலாவிய வாளி தொடு மதன் வந்து போர்புரி நாளில் அவனது மைந்தது ஆர் உடல் நீறு-பட முனி தவயோகீ - வாசனை கமழும் அம்புகளை ஏவும் மன்மதன் வந்து போர்செய்த தினத்தில் அவனது அழகிய உடல் சாம்பலாகும்படி கோபித்த தவயோகியே; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு); (மதன் - காமன்); (மைந்து - அழகு; அது - பகுதிப்பொருள்விகுதி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (முனிதல் - கோபித்தல்);

உன்றன் மேனியில் நூலை நிகர் இடை மங்கை பாகமது ஆன அழகின - உன் திருமேனியில் நூல் போன்ற சிற்றிடையுடைய உமாதேவி ஒரு பாகம் ஆன அழகனே;

உந்தி சூழ்தரும் ஆடை என அதள் உடையானே - அரையில் சூழும் ஆடையாகத் தோலைக் கட்டியவனே; (உந்தி - வயிறு); (தருதல் - ஒரு துணைவினை); (அதள் - தோல்);

உம்பர் தானவர் வேலை கடை-தினம் வந்த கார் மலி ஆலம் அமுது-என உண்டு மாமணி போல அணி திரு மிடறானே - தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த அன்று பொங்கிய கருமை மிகுந்த ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அழகிய மணி போலக் கண்டத்தில் அணிந்தவனே; (உம்பர் - தேவர்); (தானவர் - அசுரர்); (வேலை - கடல்); (கார் - கருமை); (மிடறு - கண்டம்);

அன்று தாள் அடை மாணி நிலைபெற, அன்பு இலா மனாரை விழ உதை அங்கணா - முன்பு உன் திருவடியில் சரண்புகுந்த மார்க்கண்டேயர் என்றும் இறவாமல் வாழ, (அவரைக் கொல்ல வந்த) அன்பு இல்லாத கொடிய காலனை விழுந்து இறக்கும்படி உதைத்த அருட்கண்ணனே; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (நிலைபெறுதல் - நிலைத்தல்; துன்பமற்றநிலை அடைதல்); (நமனார் - நமன் - இயமன்); (அங்கணன் - அருட்கண்ணன்);

அழியாத புகழுடை முதலோனே - என்றும் திகழும் புகழை உடைய ஆதிமூர்த்தியே;

நின்றன் ஏர் மலி பாதம் நினைபவர் நெஞ்சமே தளியாக மகிழ் பவ - உனது அழகிய திருவடியை நினைத்தவர் நெஞ்சத்தையே கோயிலாக மகிழும் பவனே; (ஏர் - அழகு); (தளி - கோயில்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்); (* பூசலார் நாயனாரைக் குறிப்பால் உணர்த்தியது என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.40.8 - "தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே");

நின்றவூர் இடமாக இனிது உறை பெருமானே - திருநின்றவூர் கோயிலாகக்கொண்டு இனிது உறைகின்ற பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 2.24.9 - "நாகேச்சுர நகரே இடமா உறைவாய் என இன்புறுமே");


வி. சுப்பிரமணியன்

----------- -----------