Sunday, September 13, 2026

S.154 - சிவன் - விநாயகன் - சிலேடை

2020-08-22 (விநாயக-சதுர்த்தி நாள்)

S.154 - சிவன் - விநாயகன் - சிலேடை

-----------

இக்கட் டழிப்பவனை எண்ணில் நலஞ்செய்யும்

அக்கர மைந்தனை மூத்தவனைத் - திக்குடை

நாதனை எம்மானை நல்வடிவா னானைமுக்கட்

போதனைவி நாயகனைப் போற்று.


சொற்பொருள்:

இக்கட்டு - 1. இக்-கட்டு (இந்தப் பந்தம், பாசம்); 2. கஷ்டம்; இடுக்கண்;

எண்ணில் - 1. எண்ணற்ற; அளவற்ற; 2. எண்ணினால்; சிந்தித்தால்;

அக்கரமைந்தனை - 1. அக்கரம் ஐந்தனை (திருவைந்தெழுத்தினனை); அக்கர மைந்தனை (அழிவற்ற வீரனை); 2. அக்-கரம் ஐந்தனை (அந்த ஐங்கரனை);

அக்கரம் - அக்ஷரம் (अक्षर akṣara) - 1. எழுத்து; 2. அழிவின்மை;

மைந்தன் - 1. வீரன்; 2.மகன்;

மூத்தவன் - 1. மேலோன்; 2. அண்ணன்;

திக்குடை - 1. திக்கு உடை (திசைகளே ஆடை - திகம்பரன்); 2. எல்லாத் திசைகளையும் உடைய (= ஆளும்);

திகம்பரன் - (दिगम्बर digambara - a. having only the directions for his clothing, stark naked, unclothed);

எம்மானை நல்வடிவானானை - 1. எம்மானை, நல்-வடிவு ஆனானை; 2. எம் ஆனை நல்-வடிவு ஆனானை (ஆனவனை);

வடிவு - 1. அழகு; 2. உருவம்;

ஆனானை - 1. ஆனவனை; 2. நீங்காதவனை; ஆனுதல் - நீங்குதல்;

போதன் - bōdha - ஞானன்;

விநாயகன் - கணபதி;


விநாயகன்:

இக்கட்டு அழிப்பவனை எண்ணில் - தியானித்தால் இடர்களைத் தீர்ப்பவனை;

நலம் செய்யும் அக்-கரம்-ஐந்தனை - நன்மைசெய்யும் அந்த ஐந்து-கரத்தனை;

மூத்தவனைத் - மூத்த பிள்ளையாரை;

திக்குடை நாதனை - எல்லாத் திசைகளையும் உடைய தலைவனை (= அண்டம் முழுதும் ஆள்பவனை);

எம் ஆனை நல்வடிவு ஆனானை - எங்கள் நல்ல யானை-வடிவத்தை உடையவனை;

விநாயகனைப் போற்று - கணபதியைத் துதி;


சிவன்:

இக்-கட்டு அழிப்பவனை - இந்தப் பந்தங்களைப் பாசங்களைப் போக்குபவனை; (மும்மலக்கட்டை நீக்குபவனை);

எண்-இல் நலம்செய்யும் அக்கரமைந்தனை - 1. அளவற்ற நன்மைசெய்யும் அஞ்செழுத்தனை; 2. அளவற்ற நன்மைசெய்யும் அழிவற்ற வீரனை;

மூத்தவனைத் - மேலானவனை; மிகவும் தொன்மையானவனை;

திக்கு-உடை நாதனை - திசைகளையே ஆடையாக உடைய தலைவனை; (திகம்பரனை);

எம்மானை - எம் தலைவனை;

நல்வடிவு ஆனானை - 1. நல்ல அழகுடையவனை; 2. நல்ல அழகிய வடிவுடைய, என்றும் நீங்காதவனை;

முக்கட் போதனைப் போற்று - முக்கண்ணுடைய ஞானனைத் துதி;


வி. சுப்பிரமணியன்

------------


No comments:

Post a Comment