Wednesday, September 16, 2026

P.514 - நாரையூர் - ஆடினார் கழல்கள்

2020-08-22

P.514 - நாரையூர்

-----------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞால மெல்லாம்")

(சுந்தரர் தேவாரம் - 7.8.1 - "இறைகளோ டிசைந்த இன்பம்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

ஆடினார் கழல்கள் ஏத்தி .. அவருறை தலங்கள் தோறும்

பாடினார் மூவர் அந்தப் .. பாடல்கள் நமக்குக் கிட்டத்

தேடினார் வேண்டக் கேட்ட .. திருச்செவிப் பிள்ளைக் கத்தர்

நாடினார்க் கருள்கள் செய்வார் .. நாரையூர் அழக னாரே


ஆடினார் கழல்கள் ஏத்தி அவர் உறை தலங்கள் தோறும் பாடினார் மூவர் - கூத்தாடும் பெருமானாரது திருவடியைப் போற்றி அவர் உறையும் தலங்கள் பலவும் சென்று தேவார மூவர் பாடினார்கள்;

அந்தப் பாடல்கள் நமக்குக் கிட்டத் தேடினார் வேண்டக் கேட்ட திருச்செவிப் பிள்ளைக்கு அத்தர் - அப்பாடல்கள் எங்கு உள்ளன என்று தேடிய சோழமன்னனுக்கு இரங்கி நம்பியாண்டார் நம்பிகள் வேண்ட அவ்வேண்டுகோளை ஏற்றருளிய திருச்செவியையுடைய விநாயகனுக்குத் தந்தையார்; (அத்தர் - தந்தையார்);

நாடினார்க்கு அருள்கள் செய்வார் - விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்; (* அழகனார் - இத்தலத்து இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர்);


2)

உம்பரார் துன்பம் தீர .. ஒன்னலர் புரங்கள் வேவ

அம்பினால் எய்த வீரர் .. அன்பினால் பூசை செய்த

நம்பியாண் டார்நம் பிக்கு .. நன்றருள் பிள்ளைக் கத்தர்

நம்பினார் வினைகள் தீர்ப்பார் .. நாரையூர் அழக னாரே.


உம்பரார் துன்பம் தீர ஒன்னலர் புரங்கள் வேவ அம்பினால் எய்த வீரர் - தேவர்கள் பட்ட துன்பம் தீருமாறு, பகைத்த அசுரர்களது முப்புரங்களும் வெந்து அழிய, அவற்றை ஒரு கணையால் எய்த வீரர்; (ஒன்னலர் - பகைவர்);

அன்பினால் பூசை செய்த நம்பியாண்டார்-நம்பிக்கு நன்று அருள் பிள்ளைக்கு அத்தர் - மிகுந்த பக்தியோடு பூசித்த சிறுவரான நம்பியாண்டார்-நம்பிக்கு இன்னருள் செய்த விநாயகனுக்குத் தந்தையார்; (* நம்பியாண்டார்நம்பி விநாயகரை வழிபாடு செய்த தலம் இது);

நம்பினார் வினைகள் தீர்ப்பார் - விரும்பி வழிபடுபவர்களது தீவினையத் தீர்ப்பவர்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


3)

மீனினை உண்ணும் நாரை .. விருப்பொடு போற்றி செய்ய

வானினை நல்கும் வள்ளல் .. மான்விழி மங்கை பங்கர்

ஆனிலைந் தாடும் ஐயர் .. அருமறை ஓது நாவர்

ஞானியர் நெஞ்சில் உள்ளார் .. நாரையூர் அழக னாரே.


மீனினை உண்ணும் நாரை விருப்பொடு போற்றி செய்ய வானினை நல்கும் வள்ளல் - மீனை உண்ணும் இயல்புடைய நாரை அன்போடு வழிபடக் கண்டு அருள்புரிந்த வள்ளல்; (* நாரை வழிபாடு செய்த தலம் திருநாரையூர்);

மான்விழி மங்கை பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

ஆனில்-ஐந்து ஆடும் ஐயர் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் தலைவர்; (ஆனில்ஐந்து - பஞ்சகவ்வியம்);

அருமறை ஓது நாவர் - அரிய வேதங்களைப் பாடியருளியவர்;

ஞானியர் நெஞ்சில் உள்ளார் - ஞானியர் உள்ளத்தில் உறைபவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


4)

வெற்றியை எண்ணி அம்பு .. விட்டமன் மதனைச் சுட்டார்

கற்றையஞ் சடையில் கங்கை .. கதிர்மதி அரவம் வைத்தார்

ஒற்றைவெள் விடையர் நாளும் .. உள(ம்)நெகிழ்ந் தேத்தும் பத்தர்

நற்றமிழ்க் கிரங்கு(ம்) நம்பர் .. நாரையூர் அழக னாரே.


வெற்றியை எண்ணி அம்பு விட்ட மன்மதனைச் சுட்டார் - வெற்றி நிச்சயம் என்று எண்ணி மலர்க்கணையை ஏவிய மன்மதனைச் சுட்டெரித்தவர்;

கற்றை-அஞ்சடையில் கங்கை கதிர்மதி அரவம் வைத்தார் - அழகிய கற்றைச்சடையில் கங்கை, கிரணங்களையுடைய சந்திரன், பாம்பு இவற்றை அணிந்தவர்; (அஞ்சடை - அம் சடை; அம் - அழகு);

ஒற்றை வெள்விடையர் - ஒப்பற்ற வெள்ளை ஏற்றை வாகனமாக உடையவர்; (ஒற்றை - ஒப்பற்ற);

நாளும் உளம் நெகிழ்ந்து ஏத்தும் பத்தர் நற்றமிழ்க்கு இரங்கும் நம்பர் - தினமும் உள்ளம் நெகிழ்ந்து துதிக்கும் பக்தர்கள் பாடும் நல்ல தமிழ்ப்பாமாலைகளைக் கேட்டு இரங்கி அருளும் பெருமானார்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


5)

அஞ்செழுத் தோதி நாளும் .. அடியிணை பரவி னாரை

அஞ்சலென் றருளு(ம்) நாதர் .. அன்றடற் கூற்று தன்னை

நெஞ்சினில் உதைத்த பாதர் .. நிழல்மழு வாளர் நீற்றர்

நஞ்சினை உண்ட கண்டர் .. நாரையூர் அழக னாரே.


அஞ்செழுத்து ஓதி நாளும் அடியிணை பரவினாரை - திருவைந்தெழுத்தை ஓதித் தினமும் இருதிருவடிகளைப் போற்றும் பக்தர்களை;

அஞ்சல் என்று அருளும் நாதர் - "அஞ்சாதே" என்று அருளிக் காக்கும் தலைவர்;

அன்று அடல்-கூற்றுதன்னை நெஞ்சினில் உதைத்த பாதர் - முன்பு, (மார்க்கண்டேயரைக் காத்து), வலிய காலனை மார்பில் உதைத்தவர்; (அடல் - கொலை; வலிமை);

நிழல்-மழுவாளர், நீற்றர் - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவர், திருநீற்றைப் பூசியவர்; (நிழல் - ஒளி);

நஞ்சினை உண்ட கண்டர் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


6)

பொறுமையைப் பூண்டு பாதம் .. போற்றினார் தங்கட் கிம்மை

மறுமையின் பங்கள் நல்கும் .. வள்ளலார் தனதன் தோழர்

அறுபதம் பலவும் கூடி .. ஆர்த்திசை பாடு கின்ற

நறுமலர்ச் சோலை சூழ்ந்த .. நாரையூர் அழக னாரே.


பொறுமையைப் பூண்டு பாதம் போற்றினார்-தங்கட்கு - சினத்தைத் துறந்து தணிந்த மனத்தோடு திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - "ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித்");

இம்மை மறுமை இன்பங்கள் நல்கும் வள்ளலார் - இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் இன்பங்களை வழங்கியருளும் வள்ளல்; (அப்பர் தேவாரம் - 5.87.5 - "மணஞ்சேரி எம் வள்ளலார்கழல் வாழ்த்தல் வாழ்வாவதே");

தனதன் தோழர் - குபேரன் தோழர்; (தனதன் - குபேரன்); (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா");

அறுபதம் பலவும் கூடி ஆர்த்து இசை பாடுகின்ற நறுமலர்ச் சோலை சூழ்ந்த - வண்டுகள் பல திரண்டு ஒலித்து இன்னிசை பாடும் வாசமலர் நிறைந்த சோலை சூழ்ந்த;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


7)

அரிபணிந் தேத்த முன்னம் .. ஆழியை ஈந்த ஈசர்

திரிபுர சுந்த ரிக்குத் .. திருவுடம் பதனிற் பாதி

பரிவொடு தந்த பண்பர் .. பாய்புலித் தோலர் அல்லில்

நரிதிரி கானிற் கூத்தர் .. நாரையூர் அழக னாரே.


அரி பணிந்து ஏத்த முன்னம் ஆழியை ஈந்த ஈசர் - முன்பு வழிபாடு செய்து வேண்டிய திருமாலுக்குச் சக்கராயுதத்தைத் தந்தருளிய ஈசனார்; (ஆழி - சக்கரம்);

திரிபுரசுந்தரிக்குத் திருவுடம்பு-அதனில் பாதி பரிவொடு தந்த பண்பர் - திரிபுரசுந்தரி என்ற திருநாமத்தையுடைய உமைக்குத் திருமேனியில் பாதியை அன்போடு தந்தவர்; (பரிவு - அன்பு); (* திரிபுரசுந்தரி - இத்தலத்து இறைவி திருநாமம்);

பாய்புலித் தோலர் - பாயும் இயல்புடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவர்;

அல்லில் நரி திரி கானில் கூத்தர் - நரிகள் திரியும் சுடுகாட்டில், இரவில் கூத்து ஆடுபவர்; (அல் - இரவு);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


8)

மடம்பெரி துடையி லங்கை .. மன்னவன் மலையெ டுக்கத்

தடம்புயம் பத்தி ரட்டி .. தலைகள்பத் தடர்த்த ஈசர்

விடம்பெரு மணிபோற் பூணு(ம்) .. மிடறினர் அம்ப லத்தில்

நடம்புரி கின்ற பாதர் .. நாரையூர் அழக னாரே.


மடம் பெரிதுடை இலங்கை-மன்னவன் மலை எடுக்கத் - அறியாமை மிக்க இலங்கை-மன்னனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது;

தடம்-புயம் பத்து-இரட்டி தலைகள் பத்து அடர்த்த ஈசர் - அவனுடைய பெரிய இருபது புஜங்களையும் பத்துத் தலைகளையும் நசுக்கிய ஈசனார்; (பத்திரட்டி = 10x2 = 20);

விடம் பெருமணி போல் பூணும் மிடறினர் - ஆலகாலத்தைப் பெரிய மணிபோல் அணியும் கண்டத்தை உடையவர்;

அம்பலத்தில் நடம் புரிகின்ற பாதர் - மன்றில் கூத்தாடும் திருப்பாதர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


9)

அச்சுதன் பன்றி யாகி .. அடிதனை நேட வேதன்

உச்சியை நேட அன்றோர் .. ஒள்ளெரித் தூணாய் நின்றார்

கச்சியில் வன்றொண் டர்க்கோர் .. கண்ணருள் செய்யே கம்பர்

நச்சராப் பூண்ட மார்பர் .. நாரையூர் அழக னாரே.


அச்சுதன் பன்றியாகி அடிதனை நேட - திருமால் பன்றி வடிவில் சென்று திருவடியைத் தேடுமாறும்;

வேதன் உச்சியை நேட - பிரமன் (அன்னப்பறவை வடிவில்) உச்சியைத் தேடுமாறும்;

அன்று ஓர் ஒள்-எரித் தூணாய் நின்றார் - முன்னர் ஒப்பற்ற ஒளித்தூண் ஆகி நின்றவர்;

கச்சியில் வன்தொண்டர்க்கு ஓர் கண் அருள்செய் ஏகம்பர் - கச்சியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண்ணில் பார்வையைத் தந்தருளிய ஏகம்பர்;

நச்சு-அராப் பூண்ட மார்பர் - திருமார்பில் விஷப்பாம்பை மாலைபோல் அணிந்தவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


10)

கொடுமொழி பலவும் கூறிக் .. குழிதனில் வீழ்த்து கின்ற

கெடுமதி யாளர் செய்யும் .. கிறிதனை நீங்கி வாரீர்

தொடுமலர் கொண்டு வாழ்த்தில் .. துயரறுப் பார்கன் றாப்பில்

நடுதறி ஆகி நின்ற .. நாரையூர் அழக னாரே.


கொடுமொழி பலவும் கூறிக் குழிதனில் வீழ்த்துகின்ற - கொடிய வார்த்தைகள் பல பேசிக் குழியில் தள்ளுகின்ற;

கெடுமதியாளர் செய்யும் கிறிதனை நீங்கி வாரீர் - தீயவர்கள் செய்யும் வஞ்சனையை நீங்கி வாருங்கள்; (கிறி - வஞ்சனை; மாயம்);

தொடுமலர் கொண்டு வாழ்த்தில் துயர் அறுப்பார் - தொடுத்த பூக்களைக் கொண்டு (மாலைகளை இட்டு) வழிபாடு செய்தால் நம் துயரத்தைத் தீர்ப்பவர்;

கன்றாப்பில் நடுதறி ஆகி நின்ற - திருக்கன்றாப்பூரில் நடுதறி உருவில் நின்ற பெருமானாரான; (அப்பர் தேவாரம் - 6.79.8 - "கனியைத் தேனைக் கன்றாப்பில் நடுதறியைக்"); (அப்பர் தேவாரம் - 6.61.2 - "கடிமலர்தூய்த் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே"); (கன்றாப்பூர் நடுதறி - திருக்கன்றாப்பூரில் கன்று கட்டுதற்கு நடப்பட்ட தறியே சிவனுரு ஆயிற்று);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


11)

பொலிவுறத் திங்கள் தன்னைப் .. பொற்சடை மீது வைத்தார்

கலிகடல் உமிழ்ந்த நஞ்சைக் .. கவினுறக் கண்டம் இட்டார்

பலிபெற ஓடொன் றேந்தும் .. பரமனார் பத்தர்க் கென்றும்

நலிவற நல்கு(ம்) நாதர் .. நாரையூர் அழக னாரே.


பொலிவுறத் திங்கள்-தன்னைப் பொற்சடை மீது வைத்தார் - திகழுமாறு பிறையைப் பொன் போன்ற சடையின்மேல் அணிந்தார்;

கலி-கடல் உமிழ்ந்த நஞ்சைக் கவினுறக் கண்டம் இட்டார் - ஒலிக்கின்ற பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை அழகுறக் கண்டத்தில் தாங்கினார்; (கலித்தல் - ஒலித்தல்);

பலி பெற ஓடு ஒன்று ஏந்தும் பரமனார் - பிச்சைக்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்தும் பரமர்;

பத்தர்க்கு என்றும் நலிவு அற நல்கும் நாதர் - அடியவர்களுக்கு என்றும் துன்பம் இல்லாதபடி அருள் வழங்கும் தலைவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment