Showing posts with label தத்தத்தன தத்தத் தனதன x3 தனதான. Show all posts
Showing posts with label தத்தத்தன தத்தத் தனதன x3 தனதான. Show all posts

Monday, April 3, 2023

T.185 - பொது - துட்டத்தனம் மிக்குப்

2007-05-01

T.185 - பொது - துட்டத்தனம் மிக்குப்

--------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன .. தனதான)

(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)


துட்டத்தன(ம்) மிக்குப் பலதினம்

.. .. .. அற்பச்செய லிற்புக் கவைதரு

.. .. துக்கத்தினில் இக்கட் டினில்நிலை .. குலையாமல்

.. சுற்றிப்பிணி பற்றுக் கெடமனம்

.. .. .. ஒட்டித்தமிழ் செப்பிச் சுகமது

.. .. துய்க்கப்பரி வுற்றுத் திருவருள் .. புரியாயே

வட்டப்படை நச்சிக் கரியவன்

.. .. .. நித்தற்கடி மிக்குத் திகழ்மலர்

.. .. இட்டுத்தொழ அற்றைக் கொருமலர் .. குறைவாக

.. வைக்கத்தன தக்கத் தினையிட

.. .. .. அப்பத்தித னக்குப் பரிசென

.. .. வைப்பற்றிகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே

மட்டற்றசெ ருக்குற் றிருபது

.. .. .. மற்கைத்தல(ம்) மெச்சிச் சிலையெறி

.. .. மட்டிக்கொரு பத்துத் தலையிற .. நெரிபாதா

.. மத்தத்தொடெ ருக்குற் றிடுமுடி

.. .. .. எற்றித்திரை சுற்றக் கதிர்மதி

.. .. வைத்துப்பெரு நச்சுப் பணியையும் .. அணிவோனே

எட்டுத்திசை சுட்டுப் பெருவிடம்

.. .. .. எட்டிற்றென அச்சத் தொடுசுரர்

.. .. எய்ப்புற்றடி பற்றிப் பரவிட .. அமுதாக

.. இட்டத்தொடு துற்றிக் களனிடை

.. .. .. நிற்பித்தரை யிற்புற் றரவுற

.. .. இற்பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.


பதம் பிரித்து:

துட்டத்தன(ம்) மிக்குப், பல தினம்

.. .. .. அற்பச்செயலிற் புக்கு, அவை தரு

.. .. துக்கத்தினில் இக்கட்டினில் நிலை .. குலையாமல்,

.. சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம்

.. .. .. ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது

.. .. துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் .. புரியாயே;

வட்டப்படை நச்சிக் கரியவன்

.. .. .. நித்தற் கடி மிக்குத் திகழ் மலர்

.. .. இட்டுத் தொழ, அற்றைக்கு ஒரு மலர் .. குறைவு ஆக

.. வைக்கத், தனது அக்கத்தினை இட,

.. .. .. அப்பத்தி-தனக்குப் பரிசு என

.. .. வைப்-பற்-றிகழ் வெற்றித் திகிரியை .. அருள்வோனே; (* = வைப்-பல்-திகழ்)

மட்டு-அற்ற செருக்கு உற்று, இருபது

.. .. .. மற்-கைத்தல(ம்) மெச்சிச், சிலை எறி

.. .. மட்டிக்கு ஒரு பத்துத் தலை இற .. நெரி பாதா;

.. மத்தத்தொடு எருக்கு உற்றிடு முடி

.. .. .. எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி

.. .. வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் .. அணிவோனே;

எட்டுத்-திசை சுட்டுப் பெருவிடம்

.. .. .. எட்டிற்று என அச்சத்தொடு சுரர்

.. .. எய்ப்பு-உற்று அடி பற்றிப் பரவிட, .. அமுதாக

.. இட்டத்தொடு துற்றிக் களனிடை

.. .. நிற்பித்து, அரையிற் புற்றரவு-உற

.. .. இற்-பிச்சையை நச்சித் திரிதரு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

துட்டத்தன(ம்) மிக்குப், பல தினம் அற்பச்செயலிற் புக்கு - துஷ்டத்தனம் மிகுந்து, பலநாளும் இழிந்த செயல்களில் ஈடுபட்டு; (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (புக்கு - புகுந்து);

வை தரு துக்கத்தினில் க்கட்டினில் நிலைகுலையாமல் - அவை தரும் துக்கத்திலும் கஷ்டத்திலும் நிலைகுலைந்து அழியாமல்; (இக்கட்டு - இடுக்கண் - கஷ்டம்);

சுற்றிப் பிணி பற்றுக் கெட, மனம் ஒட்டித் தமிழ் செப்பிச் சுகமது துய்க்கப், பரிவுற்றுத் திருவருள் புரியாயே - என்னைச் சுற்றிக் கட்டியுள்ள பந்தம் அழிய, என் மனம் ஒன்றித் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி நான் இன்பம் அனுபவிக்க, நீ இரங்கித் திருவருள் செய்க; (பிணித்தல் - கட்டுதல்); (சுகமது - சுகம்; அது - பகுதிப்ப்பொருள்விகுதி); (துய்த்தல் - அனுபவித்தல்); (பரிவு - அன்பு; இரக்கம்);

வட்டப்படை நச்சிக் கரியவன் நித்தல் கடி மிக்குத் திகழ் மலர் இட்டுத் தொழ – வட்டமான ஆயுதத்தை (= சக்கராயுதத்தை) விரும்பித் திருமால் தினமும் வாசனை மிகுந்து திகழும் (ஆயிரம்) தாமரைமலர்களைத் தூவி அர்ச்சிக்க; (படை - ஆயுதம்); (கரியவன் - விஷ்ணு); (நித்தல் - தினமும்); (கடி - வாசனை);

அற்றைக்கு ஒரு மலர் குறைவு கவைக்கத், தனது அக்கத்தினை – அன்று ஒரு நாள் நீ ஒரு பூவைக் குறையச்செய்தபொழுது, அவன் தனது கண்ணையே தோண்டித் தாமரைப்பூவாக இட்டு வழிபாடு செய்ய; (அற்றைக்கு - அன்றைக்கு - அந்தத் தினம்); (அக்கம் - அக்ஷம் - கண்);

அப்பத்தி-தனக்குப் பரிசு என வைப்-ல்-திகழ் வெற்றித் திகிரியை அருள்வோனே - அந்தப் பக்திக்குப் பரிசாகக் கூர்மையான பற்கள் திகழும் வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளியவனே; (பத்தி - பக்தி); (வை - கூர்மை); (வைப்பற்றிகழ் = வைப்-பல்-திகழ்); (திகிரி - சக்கரம்);

மட்டு-ற்ற செருக்கு ற்று, ருபது மற்-கைத்தல(ம்) மெச்சிச், சிலை றி மட்டிக்கு ஒரு பத்துத் தலை ற நெரி பாதா - அளவில்லாத ஆணவம் கொண்டு, இருபது வலிய கைகளை மிகவும் எண்ணிக், கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற மூடனுக்கு அவனது பத்துத்தலையும் அழியும்படி நசுக்கிய திருப்பாதனே; (மட்டு - அளவு); (மல் - வலிமை); (மெச்சுதல் - புகழ்தல்; மதித்தல்); (சிலை - மலை); (மட்டி - மூடன்); (இறுதல் - முரிதல்; கெடுதல்); (நெரித்தல் - நசுக்குதல்);

மத்தத்தொடு எருக்கு ற்றிடு முடி எற்றித் திரை சுற்றக், கதிர்-மதி வைத்துப், பெரு-நச்சுப் பணியையும் அணிவோனே - ஊமத்தமலரோடு எருக்கமலரும் இருக்கும் திருமுடியில், அலைமோதிக் கங்கை சுற்றிவர, ஒளிவீசும் திங்களை அணிந்து, பெரிய விஷப்பாம்பையும் அணிந்தவனே; (மத்தம் - ஊமத்தமலர்); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை; நதி); (பணி - பாம்பு);

எட்டுத்-திசை சுட்டுப் பெருவிடம் எட்டிற்று என அச்சத்தொடு சுரர் எய்ப்பு-ற்று அடி பற்றிப் பரவிட – எல்லாத் திசைகளையும் சுட்டுப் பெரிய விஷம் (ஆலகாலம்) எட்டியது என்று பயந்து வருந்தித் தேவர்கள் உன் திருவடியைச் சரணடைந்து துதிக்க; (எட்டுதல் - நெருங்குதல்); (சுரர் - தேவர்); (எய்ப்பு - இளைப்பு; மெய்வருத்தம்); (பரவுதல் - துதித்தல்);

முதாக இட்டத்தொடு துற்றிக் களனிடை நிற்பித்து - (அவர்களுக்கு இரங்கி) அமுதம்போல அந்த நஞ்சை விரும்பி உண்டு கண்டத்தில் நிறுத்தி; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (துற்றுதல் - உண்ணுதல்); (களன் - களம் - கண்டம்);

அரையிற் புற்றரவு-உற, இற்-பிச்சையை நச்சித் திரிதரு பெருமானே - அரையில் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு (நாணாக) இருக்க, இல்லங்களில் இடும் பிச்சையை விரும்பித் திரிகின்ற பெருமானே; (நச்சுதல் - விரும்புதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Friday, March 31, 2023

T.184 - கச்சி ஏகம்பம் - கொற்றத்தினை அத்தத்தினை

2007-05-01

T.184 - கச்சி ஏகம்பம் - கொற்றத்தினை அத்தத்தினை

--------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன .. தனதான)

(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)


கொற்றத்தினை அத்தத் தினைமிக

.. .. .. இச்சித்துல கத்திற் பலபல

.. .. குற்றத்தினை மிக்குச் செயவரு .. வினைகூடக்

.. கொட்டத்தொடு சுற்றிப் பெரியவர்

.. .. .. திட்டத்திரி துட்டச் சிறுமதி

.. .. கொச்சைத்தனம் அற்றுத் திருவடி .. தொழுவேனோ

புற்றுப்பணி சுற்றித் திகழ்தர

.. .. .. அச்சைத்தரு மற்பற் புலியுரி

.. .. பொற்பட்டென நச்சித் தரிதிரு .. உடையானே

.. பொய்த்தத்துவ மட்டர்க் கவ(ம்)மலி

.. .. .. பிட்டர்க்கறி வற்றுப் புறனுரை

.. .. பொக்கத்தின ருக்குப் பழவினை .. களையானே

பற்றற்றுள பத்தர்க் கருளிடு

.. .. .. பக்கத்தின தட்பத் திரையடை

.. .. பட்டுச்சடை நிற்கப் பனிமதி .. புனைவோனே

.. பக்கத்தினில் வெற்புக் கிறைமகள்

.. .. .. வைத்துக்கலை பற்றிச் சுரரடி

.. .. பற்றிப்புகழ் செப்பக் கடல்விடம் .. அணிவோனே

பெற்றக்கொடி கட்டித் திகழ்தளி

.. .. .. பெற்றுத்திரு வுற்றுப் பொலிதரு

.. .. பெற்றிப்புரி கச்சிப் பதிதனில் .. உறைவோனே

.. பிச்சைக்குழல் அத்தத் தினஅவை

.. .. .. உற்றுத்தரு மிக்குப் பரிசது

.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவிமொழி .. பெருமானே.


பதம் பிரித்து:

கொற்றத்தினை அத்தத்தினை மிக

.. .. .. இச்சித்து, உலகத்திற் பலபல

.. .. குற்றத்தினை மிக்குச் செய, அருவினை கூடக்,

.. கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர்

.. .. .. திட்டத் திரி துட்டச் சிறுமதி,

.. .. கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ;

புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர,

.. .. .. அச்சைத் தரு மற்-பற்-புலியுரி

.. .. பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே;

.. பொய்த்-தத்துவ மட்டர்க்கு, அவ(ம்) மலி

.. .. .. பிட்டர்க்கு, அறிவு அற்றுப் புறன் உரை

.. .. பொக்கத்தினருக்குப் பழவினை களையானே;

பற்றற்று உள பத்தர்க்கு அருளிடு

.. .. .. பக்கத்தின; தட்பத்-திரை அடை-

.. .. பட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே;

.. பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள்

.. .. .. வைத்துக், கலை பற்றிச், சுரர் அடி

.. .. பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே;

பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி

.. .. .. பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு

.. .. பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் உறைவோனே;

.. பிச்சைக்கு உழல் அத்தத்தின; அவை

.. .. .. உற்றுத் தருமிக்குப் பரிசது

.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவி மொழி பெருமானே.


கொற்றத்தினை அத்தத்தினை மிக இச்சித்து, லகத்திற் பலபல குற்றத்தினை மிக்குச் செய, ருவினை கூடக் - வெற்றியையும் பொருளையும் மிகவும் விரும்பி, உலகில் பற்பல குற்றங்களை மிகுந்து செய்ய, அதனால் வருகின்ற அரிய வினைகள் பெருக; (கொற்றம் - வெற்றி); (அத்தம் - அர்த்தம் - பொருள்); (இச்சித்தல் - விரும்புதல்); (செய வருவினை = 1. செய்ய அருவினை; 2. செய்ய வரு வினை);

கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர் திட்டத் திரி துட்டச் சிறுமதி, கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ - ஆணவத்தோடு சுற்றி, ஆன்றோர்கள் பழிக்கும்படி அலைகின்ற, கொடிய சிற்றறிவும் இழிவும் நீங்கி, உன் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (கொட்டம் - செருக்கு; ஆணவம்); (திரிதல் - சுற்றுதல்; கெடுதல்); (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (சிறுமை - அற்பத்தனம்; குற்றம்); (மதி - அறிவு); (கொச்சை - இழிவு);

புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர, அச்சைத் தரு மற்-பற்-புலியுரி பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு சுற்றி இருக்க, அச்சத்தைத் தரும் வலிய பற்களையுடைய புலியின் தோலைச் சிறந்த பட்டாடை போல விரும்பி அணிந்த திரு உடையவனே; (பணி - பாம்பு); (தருதல் - ஒரு துணைவினை); (அச்சு - அச்சம்); (மல் - வலிமை); (மற்பற்புலி - மல் பல் புலி - வலிய பல்லை உடைய புலி); (பொற்பட்டு - அழகிய பட்டு; "பொற்றுகில்" என்று இலக்கியங்களில் வருவதை ஒத்த பிரயோகம்); (குலோத்துங்க சோழனுலா - 218. "நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள்"); (நச்சுதல் - விரும்புதல்); (தரித்தல் - அணிதல்; உடுத்தல்);

பொய்த்-தத்துவ மட்டர்க்கு, (ம்) மலி பிட்டர்க்கு, றிவு அற்றுப் புறன் உரை பொக்கத்தினருக்குப் பழவினை களையானே - பொருளற்ற பொய்த்தத்துவங்களைப் போற்றும் மூடர்களுக்கு, நெறிக்குப் புறம்பான வீணர்களுக்கு, அறிவின்றிப் பழிமொழிகளைப் பேசும் வஞ்சகர்களுக்கு, அவர்களது பழைய வினையைத் தீர்த்தல் செய்யாதவனே; (மட்டன் - மூடன்); (அவம் - பயனின்மை; கேடு); (பிட்டன் - பிரஷ்டன் - நெறியிலிருந்து வழுவியவன்); (பொக்கம் - குற்றம்; வஞ்சகம்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

பற்றற்று ள பத்தர்க்கு அருளிடு பக்கத்தின – பற்றற்று இருக்கும் பக்தர்களுக்கு அருளும் அன்புடையவனே; (பக்கம் - பக்ஷம் - அன்பு);

தட்பத்-திரை டைபட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே - குளிர்ந்த கங்கையைத் தடுத்து நிறுத்திய சடையில் குளிர்ந்த திங்களை அணிந்தவனே; (தட்பம் - குளிர்ச்சி); (திரை - அலை; நதி); (பனி - குளிர்ச்சி);

பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள் வைத்துக், கலை பற்றிச் - திருமேனியில் இடப்பக்கத்தில் இமவான் மகளைப் பாகமாக வைத்து, மானை ஏந்தி; (இறை - அரசன்); (கலை - மான்);

சுரர் அடி பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே - தேவர்கள் திருவடியைப் பற்றித் துதிக்கப், பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவனே; ( சுரர் - தேவர்);

பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் றைவோனே - இடபக்கொடி கட்டப்பெற்று விளங்குகின்ற கோயில்கள் பல இருக்கப்பெற்றுச், செல்வமும் சிறப்பும் பொலியும் பெருமையுடைய ஊரான காஞ்சிபுரத்தில் கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவனே; (பெற்றம் - எருது); (தளி - கோயில்); (திரு - சிறப்பு; நன்மை; செல்வம்); (பொலிதல் - விளங்குதல்); (பெற்றி - பெருமை); (புரி - நகரம்; ஊர்); (பதி - தலம்);

பிச்சைக்கு உழல் அத்தத்தின - பிச்சைக்காக உழலும் செல்வனே; (அத்தம் - அர்த்தம் - பொருள்; செல்வம்); (சம்பந்தர் தேவாரம் - 3.46.7 - "சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்");

அவை உற்றுத் தருமிக்குப் பரிசது பெற்றுத் தரு பெட்பைப் புவி மொழி பெருமானே - (மதுரையில் பாண்டிய மன்னனது) சபையை அடைந்து, தருமிக்குப் பரிசைப் பெற்றுத் தந்த அன்பையும் பெருமையையும் உலகம் சொல்லித் துதிக்கின்ற பெருமானே; (அவை - சபை); (தருமி - மதுரையில் வாழ்ந்த சிவபக்தர்; திருவிளையாடற் புராணத்தில் காண்க); (பெட்பு - அன்பு; பெருமை; தன்மை);


வி. சுப்பிரமணியன்

----------- -----------