Showing posts with label வல்லம் (திருவலம்). Show all posts
Showing posts with label வல்லம் (திருவலம்). Show all posts

Saturday, May 4, 2024

T.188 - வல்லம் (திருவலம்) - பணநாட்ட மையல்

2016-03-30

T.188 - வல்லம் (திருவலம்) - பணநாட்ட மையல்

--------------

(வண்ணவிருத்தம்;

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய

தனதாத்த தய்ய .. தனதான)

(கலைகோட்டு வல்லி - திருப்புகழ் - பொது)

(இருள்காட்டு செவ்வி - திருப்புகழ் - தில்லை)


பணநாட்ட மையல் அதுவாட்ட வெய்ய

.. .. பழிகூட்ட வல்ல .. செயலான

.. பலவாற்றி அல்லல் உறுவேற்கு நல்ல

.. .. படிவாழ்க்கை வையம் .. இதிலாக

மணியாட்டி நல்ல புகைகாட்டி மல்கு

.. .. மலர்சூட்டி உய்தி .. தருதூய

.. மணிவார்த்தை சொல்லி உனைநோக்கி நையு(ம்)

.. .. மனமாக்கி ஐய .. அருளாயே

அணிநீற்ற கல்லில் அரவார்த்த வில்லின்

.. .. அரண்மாய்க்க வல்ல .. விறலானே

.. அடையார்க்கும் உள்க நினையார்க்கு(ம்) மெய்யை

.. .. அறியார்க்கும் இல்லை .. எனவானாய்

பணிவீக்கி மெய்யில் உமைசேர்த்த செய்ய

.. .. பலர்போற்ற வல்லம் .. உறைவோனே

.. பணிவார்க்கு வெல்லு(ம்) நெறிகாட்டி உள்ள

.. .. பய(ம்)நீக்க வல்ல .. பெருமானே.


பதம் பிரித்து:

பணநாட்ட மையல் அது வாட்ட, வெய்ய

.. .. பழி கூட்ட-வல்ல செயலான

.. பல ஆற்றி, அல்லல் உறுவேற்கு நல்ல

.. .. படி வாழ்க்கை வையம் இதில் ஆக,

மணி ஆட்டி, நல்ல புகை காட்டி, மல்கு

.. .. மலர் சூட்டி, உய்தி தரு தூய

.. மணிவார்த்தை சொல்லி, உனை நோக்கி நையு(ம்)

.. .. மனம் ஆக்கி, ஐய, அருளாயே;

அணி நீற்ற; கல்லில் அரவு ஆர்த்த வில்லின்

.. .. அரண் மாய்க்க வல்ல விறலானே;

.. அடையார்க்கும், உள்க நினையார்க்கு(ம்), மெய்யை

.. .. அறியார்க்கும் இல்லை என ஆனாய்;

பணி வீக்கி, மெய்யில் உமை சேர்த்த செய்ய;

.. .. பலர் போற்ற வல்லம் உறைவோனே;

.. பணிவார்க்கு வெல்லு(ம்) நெறி காட்டி, உள்ள

.. .. பய(ம்) நீக்க வல்ல பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

பணநாட்ட மையல் அது வாட்ட - பணத்தின்மீது ஆசை என்ற மயக்கம் வாட்ட; (நாட்டம் - விருப்பம்; நோக்கம்); (மையல் - பித்து); (வாட்டுதல் - வருத்துதல்);

வெய்ய பழி கூட்ட-வல்ல செயலான பல ஆற்றி - கொடிய பழியைக் கூட்டுகின்ற பல செயல்களைச் செய்து; (வெய்ய- கொடிய);

அல்லல் உறுவேற்கு - துன்பம் அடைகின்ற அடியேனுக்கு;

நல்லபடி வாழ்க்கை வையம் இதில் ஆக - நல்லவாறு இந்த உலகவாழ்க்கை அமையும்படி;

மணி ஆட்டி, நல்ல புகை காட்டி, மல்கு மலர் சூட்டி - மணி அடித்து, (தூபமாகிய) நறும்புகையைக் காட்டி, மிகுந்த பூக்களைச் சூட்டி; (மல்குதல் - மிகுதல்)

உய்தி தரு தூய மணிவார்த்தை சொல்லி - உய்வைத் தரும் தூய அழகிய வாசகங்களைச் சொல்லி; (உய்தி - ஈடேற்றம்; உய்வு); (மணி - அழகு); (மணிவார்த்தை - தேவாரம், திருவாசகம், முதலியன);

உனை நோக்கி நையு(ம்) மனம் ஆக்கி, ஐய, அருளாயே - உன்னை நோக்கி வழிபாடு செய்து கசிகின்ற மனமாக என் மனத்தை ஆக்கி, ஐயனே, அருள்க; (நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்);

அணி நீற்ற - அழகிய திருநீற்றைப் பூசியவனே; (அணி - அழகு); (அணிதல் - அணிந்துகொள்ளுதல்);

கல்லில் அரவு ஆர்த்த வில்லின் அரண் மாய்க்க வல்ல விறலானே - மேருமலையில் பாம்பைக் கட்டிய வில்லினால் முப்புரங்களை அழித்த வெற்றியுடையவனே; (கல் - மலை); (ஆர்த்தல் - கட்டுதல்); (வில்லின் - வில்லினால்; மூன்றாம்வேற்றுமைத்தொகை); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை); (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.2.9 - "செருநெடு மேரு வில்லின் முப்புரந் தீ விரித்த சிற்றம்பலக் கூத்தா"); (அப்பர் தேவாரம் - 4.11.4 - "அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது");

அடையார்க்கும், உள்க நினையார்க்கு(ம்), மெய்யை அறியார்க்கும் இல்லை என ஆனாய் - உன்னைச் சரணடையாதவர்களுக்கும், எண்ண நினையாதவர்களுக்கும், உண்மையை அறியாதவர்களுக்கும் (அருள்) இல்லாதவனே; (அடைதல் - சரண்புகுதல்); (உள்குதல் - எண்ணுதல்); (மெய் - உண்மை);

பணி வீக்கி, மெய்யில் உமை சேர்த்த செய்ய - (அரையில்) பாம்பைக் கட்டி, உமையைக் கூறாக உடைய செம்மேனியனே; (பணி - பாம்பு); (வீக்குதல் - கட்டுதல்); (மெய் - மேனி); (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);

பலர் போற்ற வல்லம் உறைவோனே - பலரும் போற்றத் திருவல்லத்தில் உறைகின்றவனே;

பணிவார்க்கு வெல்லு(ம்) நெறி காட்டி, உள்ள பய(ம்) நீக்க வல்ல பெருமானே - வழிபடும் பக்தர்களுக்கு வினையை வெல்லும் முத்திநெறியைக் காட்டி, அவர்களுக்கு (நெஞ்சில்) இருக்கும் அச்சம் தீர அபயம் தந்து காக்கும் பெருமானே; (உள்ள - இருக்கின்ற);


வி. சுப்பிரமணியன்

--------------

Monday, April 16, 2018

04.27 - வல்லம் (திருவலம்) - வெண்டலை ஏந்தி

04.27 - வல்லம் (திருவலம்) - வெண்டலை ஏந்தி

2013-11-29

வல்லம் (திருதிருவலம்)

------------------

(சந்தக் கலித்துறை - "தானன தான - தானன தான - தனதான";

தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானை")


1)

வெண்டலை ஏந்தி வெள்விடை ஏறி விடநாகம்

வண்டிரை கொன்றை மலரணி ஈசன் மகிழ்கின்ற

தெண்டிரை வந்து திருவடி போற்று திருவல்லம்

கண்டலர் தூவிக் கைதொழு தல்லல் களைவோமே.


வெண்-தலை ஏந்தி - வெள்ளிய மண்டையோட்டை ஏந்தியவன்;

வெள்-விடை ஏறி - வெண்ணிற இடபத்தின்மேல் ஏறியவன்;

விடநாகம் வண்திரை (/வண்டு இரை) கொன்றை மலர் அணி ஈசன் மகிழ்கின்ற - விடம் உடைய நாகப்பாம்பையும், கங்கையையும், வண்டுகள் ஆரவாரிக்கின்ற கொன்றைமலரையும் முடிமேல் அணிகின்ற ஈசன் விரும்பி உறைகின்ற; (வண்டிரை - 1. வண்+திரை (=கங்கை) / 2. வண்டு+இரை (வண்டு ஒலிக்கின்ற)); (சம்பந்தர் தேவாரம் - 2.29.2 - "வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்");

தெண்-திரை வந்து திருவடி போற்று திருவல்லம் கண்டு - தெளிந்த ஆற்றின் அலைகள் வந்து திருவடியை வணங்கும் திருவல்லத்தைத் தரிசித்து;

அலர் தூவிக் கைதொழுது அல்லல் களைவோமே - பூக்கள் தூவிக் கைகளால் தொழுது நம் துன்பத்தைத் தீர்ப்போம்.


2)

பூணுர கங்கள் பொலிதிரு மேனிப் புகழாளன்

வாணுத லாளை வாமமு கந்தான் மகிழ்கின்ற

சேணுயர் கின்ற திண்மதில் சூழ்ந்த திருவல்லம்

பேணுதல் செய்து பேரிடர் தன்னைப் பிரிவோமே.


பூண் உரகங்கள் - பூணுகின்ற பாம்புகள்;

வாணுதலாள் = வாள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை உடையவள் - உமையம்மை;

வாமம் உகந்தான் - இடப்பக்கம் விரும்பியவன்;

சேண் - ஆகாயம்;

திண் மதில் - வலிமை மிகுந்த மதிற்சுவர்;

பேணுதல் - போற்றுதல்;

பேர்-இடர் - பெரிய துன்பம்;


3)

நித்தியன் நெற்றி நேத்திரன் நாகம் நிலவாறு

மத்தம ணிந்த வார்சடை அண்ணல் மகிழ்கின்ற

தெத்தென வென்று தேன்முரல் கின்ற திருவல்லம்

பத்தியொ டுற்றுப் பாதமி ரண்டைப் பணிவோமே.


நித்தியன் - அழிவற்றவன்;

நெற்றி நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;

நாகம் நிலவு ஆறு மத்தம் அணிந்த - பாம்பையும் சந்திரனையும் கங்கையையும் ஊமத்த மலரையும் சூடிய;

தேன் முரல்கின்ற - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற;

பத்தியொடு உற்று - பக்தியோடு சென்றடைந்து; (உறுதல் - அடைதல்);


4)

பூவது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல்

ஏவது வாக்கும் காமனை அங்கம் இலனாக்கி

சேவது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம்

நாவது கொண்டு நற்றமிழ் பாட நலமாமே.


* இத்தலத்தில் இடபம் சுவாமியை நோக்கி இராமல் அவருக்கு எதிர்ப்புறமாகக் கிழக்கு நோக்கியுள்ளது.

பூவது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல் - பூவால் பொன்னடியைப் போற்றாமல்; (அது - பகுதிப்பொருள்விகுதி);

ஏ அது ஆக்கும் காமனை – பூவினை அம்பு ஆக்கும் மன்மதனை; (ஏ - அம்பு); (ஏ அது ஆக்கும் = ஏவதுவாக்கும்); (சம்பந்தர் தேவாரம் - 1.112.6 - "திரிபுரமெரித்து நீறது வாக்கிய நிமலனகர்)";

அங்கம் இலன் ஆக்கி - உடலற்றவனாகச் செய்தவன்; (ஆக்கி - ஆக்கியவன்);

சேவது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம் - இடபம் உள்ளே ஈசனை நோக்காமல் வாயிலை நோக்கியபடி இருக்கும் கோயிலான திருவல்லத்தில்; (சே - எருது);

நாவது கொண்டு நற்றமிழ் பாட நலம் ஆமே - நாவினால் தேவாரம் முதலியன பாடினால் நன்மை விளையும்;



5)

வான்மிக வாழ்த்த வல்விடம் உண்ட மணிகண்டன்

மான்மறி ஏந்தி மாதொரு பங்கன் மகிழ்கின்ற

தேன்மலர் நாடிச் சிறையளி ஆர்க்கும் திருவல்லம்

வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழியாமே.


வான் - தேவர்கள்;

மான்மறி - மான் கன்று;

சிறை அளி ஆர்க்கும் - சிறகுடைய வண்டு ஒலிக்கும்;

வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழி ஆமே - அழகிய பூக்களைத் தூவி வழிபடுவது உய்யும் வழி ஆகும்; (வான் - அழகு);


6)

கொம்பன மங்கை கூறமர் எந்தை குளிர்திங்கள்

வம்பவிழ் கொன்றை மலரணி ஈசன் வடவாற்கீழ்ச்

செம்பொருள் சொன்ன சிவனுறை கின்ற திருவல்லம்

நம்பிய டைந்து நாம்தொழு தேத்த நலமாமே.


கொம்பு அன மங்கை கூறு அமர் எந்தை - பூங்கொம்பு போன்ற உமாதேவியை ஒரு கூறாக மகிழ்ந்த எம் தந்தை;

குளிர்-திங்கள் வம்பு அவிழ் கொன்றைமலர் அணி ஈசன் - குளிர்ந்த திங்களையும் வாசம் கமழும் கொன்றைமலரையும் சூடிய ஈசன்;

வட-ஆல்கீழ்ச் செம்பொருள் சொன்ன சிவன் உறைகின்ற திருவல்லம் - கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை உபதேசித்த சிவபெருமான் உறைகின்ற திருவல்லத்தை; (வடவால் - கல்லால மரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

நம்பி அடைந்து நாம் தொழுது ஏத்த நலம் ஆமே - விரும்பி அடைந்து நாம் தொழுது போற்றினால் நன்மை உண்டாகும்.


7)

கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை கழல்போற்று

சந்திர னுக்குத் தண்ணருள் செய்து தலையேற்றான்

செந்தழல் மேனிச் சிவனுறை கின்ற திருவல்லம்

வந்தனை செய்தல் வல்வினை தீரும் வழியாமே.


கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை - முருகனைப் பெற்ற நெற்றிக்கண்ணனான எம் தந்தை;


8)

வரையசைத் தானை வாடநெ ரித்து வரமீந்தான்

சிரைதலை ஏந்திச் சில்பலி தேரும் சிவன்மேவும்

திரைபுனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம்

கரைமனத் தோடு கைதொழு தல்லல் களைவோமே.


வரை அசைத்தானை வாட நெரித்து வரம் ஈந்தான் - கயிலைமலையை அசைத்த இராவணனை வாடுமாறு நசுக்கிப் பின் அவனுக்கு வரம் கொடுத்தவன்; (வரை - மலை);

சிரை-தலை ஏந்திச் சில்-பலி தேரும் சிவன் மேவும் - மயிரற்ற மண்டையோட்டை ஏந்திச் சிறு அளவில் இடும் பிச்சை ஏற்கும் சிவன் உறைகின்ற; (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி");

திரை-புனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம் - அலைக்கின்ற ஆற்றுநீர் மோதுகின்ற கரையில் உள்ள திருவல்லத்தை; (திரைதல் - அலையெழுதல்); (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);

கரை-மனத்தோடு கைதொழுது அல்லல் களைவோமே - கரைகின்ற மனத்தோடு கைகூப்பித் தொழுது நம் அல்லல்களைத் தீர்ப்போம்.


9)

பங்கய னோடு பாற்கட லானும் பதமேத்த

அங்கள வில்லா ஆரழல் ஆனான் அமர்கின்ற

செங்கயல் பாயும் செய்புடை சூழ்ந்த திருவல்லம்

கொங்கலர் தூவிக் கும்பிட அல்லல் குறுகாவே.


பங்கயன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்;

பாற்கடலான் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;

அங்கு அளவு இல்லா ஆரழல் ஆனான் - அங்கே அளவற்ற ஜோதி ஆனவன்;

செங்கயல் பாயும் செய் புடை சூழ்ந்த திருவல்லம் - சிவந்த கயல்மீன்கள் பாயும் வயல்கள் சூழ்ந்த திருவல்லம்; (செய் - வயல்);

கொங்கு அலர் - வாசமலர்;

குறுகா - அணுகா; அடையா; (குறுகுதல் - அணுகுதல்);


10)

வலையினை வீசும் வஞ்சகர் வார்த்தை மதியாதீர்

அலைமலி கங்கை அஞ்சடை ஏற்ற அருளாளன்

சிலையினை ஏந்தித் திரிபுரம் எய்தான் திருவல்லம்

நிலையினன் நற்றாள் நினைவது வான்சேர் நெறிதானே.


மதியாதீர் - மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா;

அம் சடை - அழகிய சடை;

சிலை - மலை; வில்; (மேருமலை என்ற வில்);

திருவல்லம் நிலையினன் - திருவல்லத்தில் நிலைத்து உறைகின்ற சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மாசிலாச் சீர்மறைக்காடு நெய்த்தானம் நிலையினான்");

வான் சேர் நெறி - வானுலகம் சேரும் வழி ஆகும்;


11)

இகழ்தரு தக்கன் வேள்வித கர்த்த எரிவண்ணன்

உகள்தரு மானை ஒருகரம் ஏந்தி உரகத்தார்

திகழ்தரு மார்பன் திருவலம் மேய சிவனெம்மான்

புகழ்தனை ஓதப் பொருவினை எல்லாம் பொடியாமே.


தருதல் - ஒரு துணைவினைச்சொல்;

தகர்த்தல் - அழித்தல்;

எரிவண்ணன் - தீப் போன்ற செம்மேனியன்;

உகள்தல் - பாய்தல்; தாவுதல்;

உரகத்-தார் - பாம்பு மாலை;

பொரு-வினை - தாக்குகின்ற வினை; (பொருதல் - போர்செய்தல்);

பொடி ஆம் - சாம்பல் ஆகும்; அழியும்;

இலக்கணக் குறிப்பு: புணர்ச்சியில்: ழ்+த = ட ; ள்+த = ட ; இகழ்தரு, உகள்தரு, திகழ்தரு, புகழ்தனை = இகடரு, உகடரு, திகடரு, புகடனை;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

Friday, February 19, 2016

02.75 – வல்லம் ("திருவலம்")

02.75 – வல்லம் ("திருவலம்")



2013-02-03
திருவல்லம் (இக்காலத்தில் "திருவலம்" )
----------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - திருவிராகம் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - திருவிராகம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது)



1)
இணையடி தொழுசுரர் இடர்கெட எயிலெரி
கணையினன் அணியுமை துணையினன் நதியொடு
பணமதி யிவைபுனை பசுபதி உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே.



பணம் - பாம்பின் படம் (Expanded hood of a cobra); பாம்பு (Cobra);


இரு திருவடிகளைத் தொழுத தேவர்களின் துன்பம் தீர முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; அழகிய உமையம்மைக்குக் கணவன்; கங்கை, நாகம், சந்திரன் இவற்றைச் சூடிய பசுபதி உறையும் இடம், வாசமலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



2)
கதுமென வருநமன் உயிர்செகு கழலிறை
புதுமலர் எனவிழி இடுமரி புரிபடை
அதுதரும் அருளுடை அரனவன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே.



கதும் எனல் - விரைவுக்குறிப்பு (Expression denoting quickness);
செகுத்தல் - கொல்லுதல்;
புரிதல் - விரும்புதல்;
படை - ஆயுதம்;


(மார்க்கண்டேயரிடம்) விரைந்து வந்தடைந்த காலனின் உயிரைக் கொன்ற தாளினன்; புதிய மலராகத் தன் கண்ணை இடந்து இட்டு அர்ச்சித்த திருமாலுக்கு அவன் விரும்பிய சக்கராயுதத்தை அருள்புரிந்த அரன் உறையும் இடம், தேன்மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



3)
கிட்டலர் திரியெயில் எரியெழ ஒருகணை
தொட்டவன் அடியிணை தொழுமதி தனைமுடி
இட்டவன் எருதமர் இறையவன் உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே.



கிட்டலர் - பகைவர்;
திரி எயில் - திரியும் கோட்டைகள்;
கணை தொடுதல் - கணையைச் செலுத்துதல்;
மட்டு - தேன்; வாசனை;


பகைவர்களான அசுரர்களின் திரியும் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஒரு கணையை ஏவியவன்; திருவடிகளைத் தொழுத சந்திரனைத் தன் முடியில் வைத்தவன்; இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் இடம், தேன்மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



4)
புதியவன் நறைமலர் புனைபவன் அழகுமை
பதியவன் அடியிணை பணிபவர் அடையருள்
நிதியவன் உரைசெய நிகரிலன் உறைவிடம்
மதியண வியமதில் அணிதிரு வலமே.



நறை - தேன்; வாசனை;
நிகர் - ஒப்பு;
அணவுதல் - அணுகுதல்;


என்றும் புதியவன்; வாசமலர்களைச் சூடுபவன்; அழகிய உமையம்மைக்குப் பதி; திருவடி இணையைப் பணிபவர்கள் அடையும் அருள்நிதி; சொல்வதற்கு ஓர் ஒப்பும் இல்லாதவன்; அப்பெருமான் உறையும் இடம், சந்திரன் அணுகுமாறு ஓங்கிய (வானளாவிய) மதிலை உடைய திருவல்லம்.



5)
பொடியணி உடலினன் வெடிபடு துடியினன்
இடியன குரலுடை விடையினன் இளமதி
முடியினன் எரிநிகர் வடிவினன் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே.



வெடிபடுதல் - பேரோசை உண்டாதல்;
துடி - உடுக்கை;


திருநீறு பூசிய திருமேனியன்; வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கையை ஏந்தியவன்; இடி போன்ற குரலை உடைய இடபத்தை ஊர்தியாகக் கொண்டவன்; இளம்பிறைச்சந்திரனை முடிமேல் அணிந்தவன்; தீப்போன்ற சிவந்த உருவினன்; அப்பெருமான் உறையும் இடம், பக்தர்கள் தங்கள் வினைகள் அழியவேண்டி அடையும் திருவல்லம்.



6)
இடைமெலி அரிவையர் இடுபலி பெறவவர்
கடையடை நடையினன் நடமிடு கழலினன்
விடையினன் அயிலுறு படையினன் உறைவிடம்
அடைபவர் அருவினை அறுதிரு வலமே.



பலி - பிச்சை;
கடை - வாயில்;
நடை - நடத்தல்; வழக்கம்; ஒழுக்கம்;
அயில் - கூர்மை;


இடைமெலிந்த மடமங்கையர் இடும் பிச்சையை ஏற்க அவர்கள் இல்லங்களின் வாயிலை அடையும் நடை உடையவன்; திருநடம் செய்யும் திருவடியை உடையவன்; இடப வாகனன்; கூர்மையான சூலப்படையை ஏந்தியவன்; அப்பெருமான் உறையும் இடம், அடையும் பக்தர்களின் அரிய வினைகளைத் தீர்க்கும் திருவல்லம்.



7)
விண்புவி யினர்தொழ மிகவருள் அரனொரு
தண்புனல் அடைசடை மிசைமதி தரியிறை
பண்பயில் மொழியுமை பதியவன் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே.



தேவர்களும் மண்ணுலகினரும் தொழ மிகவும் அருள்புரிகின்ற அரன்; ஒப்பற்ற, குளிர்ந்த கங்கையை அடைத்த சடையின்மேல் சந்திரனைத் தரிக்கும் இறைவன்; பண் திகழும் இனிய மொழி பேசும் உமைக்குப் பதி; அப்பெருமான் உறையும் இடம், வளம் பொருந்திய ('நிவா / பொன்னை' என்று அழைக்கப்படும்) நதி வந்து மலர்போன்ற திருவடியை வணங்கும் திருவல்லம்.



8)
மலையசை தசமுகன் மணிமுடி ஒருபது
குலைவுற மலர்விரல் இடுமிறை குளிர்மதி
நிலைபெறு தலையினன் நிருபம னுறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே.



ஒருபது - பத்து;
தசமுகன் - இராவணன்;
குலைவு - குலைதல் - அழிதல்; நடுங்குதல்;
நிருபமன் - ஒப்பில்லாதவன்;


கயிலைமலையை அசைத்த இராவணனின் மணிமுடிகள் பத்தும் அழிய / நடுங்கும்படி மலர்போன்ற விரலை ஊன்றிய இறைவன்; குளிர்ந்த திங்கள் நிலைபெறும் சென்னியன்; ஒப்பில்லாதவன்; அப்பெருமான் உறையும் இடம், அலைகள் பொருந்திய 'நிவா / பொன்னை' நதி ஈசன் திருவடியை வணங்க வந்து அடையும் திருவல்லம்.



9)
மணிவணன் அயனிவர் வெருவுற வளரெரி
அணியுமை ஒருபுடை அமரரன் அரவொடு
துணிமதி முடிமிசை அணியிறை உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே.



வெருவுறுதல் - அஞ்சுதல்; (வெருவு - அச்சம்);
அணி - 1) அழகு; 2) அணிதல் - சூடுதல்;
புடை - பக்கம்;
அமர்தல் - விரும்புதல்;
துணித்தல் - வெட்டுதல்;
மணி - அழகு; பளிங்கு, நீலமணி, முதலியன;


திருமால் பிரமன் இவர்கள் இருவரும் அஞ்சுமாறு சோதியாக ஓங்கியவன்; அழகிய உமையை ஒரு கூறாக விரும்பும் அரன்; பாம்பையும், பிறைச்சந்திரனையும் திருமுடிமேல் சூடும் இறைவன்; அப்பெருமான் உறையும் இடம், அழகிய 'நிவா / பொன்னை' நதி மலர்த்திருவடியை வணங்கும் திருவல்லம்.



10)
இழிவழி தனையுயர் வழியென மொழிபவர்
குழிவிழ விரையிரு விழியிலர் அனையவர்
எழிலுற மதிபுனை இறையவன் உறைவிடம்
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே.



இழிந்த நெறியைச் சிறந்த நெறி என்று சொல்பவர்கள், குழியில் விழ விரைகின்ற, இருகண்களும் இல்லாத குருடர்கள் போல்பவர். அழகுறப் பிறைச்சந்திரனைச் சூடும் இறைவன் உறையும் இடம், வழிபடும் பக்தர்கள் மகிழ்கின்ற திருவல்லம்.



11)
உருமணி மினலன ஒலிபுனல் உளசடை
ஒருமணி எனவிடம் ஒளிர்மிட றுடையிறை
குருமணி எனவடம் அமர்பவன் உறைவிடம்
வருமடி யவர்மகிழ் மணிதிரு வலமே.



உரும் - இடி;
உரும் அணி மினல் அன ஒலிபுனல் உள சடை - இடியோடு கூடிய மின்னல் போல முழங்கும் கங்கைப் புனல் உள்ள பொற்சடை;
(அப்பர் தேவாரம் - 6.48.8 - "முன்னவன்காண் பின்னவன்காண் ... மின்னவன்காண் உருமவன்காண் ....");
மணி - இரத்தினங்கள்; நீலமணி; அழகு;
(6.9.10 - "... மணிமிழலை மேய மணாளர் போலும் ..."; 6.2.9 - "... மணியாரூர்...")
குருமணி - குருசிரேட்டன் (Exalted guru, highly esteemed guru, as a gem among gurus);
பவன் - சிவன்;
வடம் - கல்லால மரம்;


இடியோடு கூடிய மின்னல் போல முழங்கும் கங்கைப் புனல் உள்ள பொற்சடையையும், ஒப்பற்ற நீலமணி போல நஞ்சு பிரகாசிக்கும் கண்டத்தையும் உடையவன்; தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தவன்; அப்பெருமான் உறையும் இடம், வந்து வழிபடும் பக்தர்கள் மகிழ்கின்ற அழகிய திருவல்லம்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.
முதற்சீர் 'தானன' என்ற சந்தத்திலும் சில பாடல்களில் வரலாம்.
பாடல்தோறும் ஈற்றுச்சீர் 'தனனா'.
திருவிராகம் அமைப்பு. முடுகு ஓசை அமைந்த பாடல்கள்.)
2) சம்பந்தர் தேவாரம் - 1.123.5 -
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
3) திருவல்லம் (திருவலம்) - வல்லநாதர் கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=119 )
திருவல்லம் (திருவலம்) - - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=243 )

-------------- ---------------