Friday, February 19, 2016

02.75 – வல்லம் ("திருவலம்")

02.75வல்லம் ("திருவலம்")



2013-02-03
திருவல்லம் (இக்காலத்தில் "திருவலம்" )
----------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - திருவிராகம் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - திருவிராகம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது)



1)
இணையடி தொழுசுரர் இடர்கெட எயிலெரி
கணையினன் அணியுமை துணையினன் நதியொடு
பணமதி யிவைபுனை பசுபதி உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே.



பணம் - பாம்பின் படம் (Expanded hood of a cobra); பாம்பு (Cobra);


இரு திருவடிகளைத் தொழுத தேவர்களின் துன்பம் தீர முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; அழகிய உமையம்மைக்குக் கணவன்; கங்கை, நாகம், சந்திரன் இவற்றைச் சூடிய பசுபதி உறையும் இடம், வாசமலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



2)
கதுமென வருநமன் உயிர்செகு கழலிறை
புதுமலர் எனவிழி இடுமரி புரிபடை
அதுதரும் அருளுடை அரனவன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே.



கதும் எனல் - விரைவுக்குறிப்பு (Expression denoting quickness);
செகுத்தல் - கொல்லுதல்;
புரிதல் - விரும்புதல்;
படை - ஆயுதம்;


(மார்க்கண்டேயரிடம்) விரைந்து வந்தடைந்த காலனின் உயிரைக் கொன்ற தாளினன்; புதிய மலராகத் தன் கண்ணை இடந்து இட்டு அர்ச்சித்த திருமாலுக்கு அவன் விரும்பிய சக்கராயுதத்தை அருள்புரிந்த அரன் உறையும் இடம், தேன்மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



3)
கிட்டலர் திரியெயில் எரியெழ ஒருகணை
தொட்டவன் அடியிணை தொழுமதி தனைமுடி
இட்டவன் எருதமர் இறையவன் உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே.



கிட்டலர் - பகைவர்;
திரி எயில் - திரியும் கோட்டைகள்;
கணை தொடுதல் - கணையைச் செலுத்துதல்;
மட்டு - தேன்; வாசனை;


பகைவர்களான அசுரர்களின் திரியும் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஒரு கணையை ஏவியவன்; திருவடிகளைத் தொழுத சந்திரனைத் தன் முடியில் வைத்தவன்; இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் இடம், தேன்மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் திருவல்லம்.



4)
புதியவன் நறைமலர் புனைபவன் அழகுமை
பதியவன் அடியிணை பணிபவர் அடையருள்
நிதியவன் உரைசெய நிகரிலன் உறைவிடம்
மதியண வியமதில் அணிதிரு வலமே.



நறை - தேன்; வாசனை;
நிகர் - ஒப்பு;
அணவுதல் - அணுகுதல்;


என்றும் புதியவன்; வாசமலர்களைச் சூடுபவன்; அழகிய உமையம்மைக்குப் பதி; திருவடி இணையைப் பணிபவர்கள் அடையும் அருள்நிதி; சொல்வதற்கு ஓர் ஒப்பும் இல்லாதவன்; அப்பெருமான் உறையும் இடம், சந்திரன் அணுகுமாறு ஓங்கிய (வானளாவிய) மதிலை உடைய திருவல்லம்.



5)
பொடியணி உடலினன் வெடிபடு துடியினன்
இடியன குரலுடை விடையினன் இளமதி
முடியினன் எரிநிகர் வடிவினன் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே.



வெடிபடுதல் - பேரோசை உண்டாதல்;
துடி - உடுக்கை;


திருநீறு பூசிய திருமேனியன்; வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கையை ஏந்தியவன்; இடி போன்ற குரலை உடைய இடபத்தை ஊர்தியாகக் கொண்டவன்; இளம்பிறைச்சந்திரனை முடிமேல் அணிந்தவன்; தீப்போன்ற சிவந்த உருவினன்; அப்பெருமான் உறையும் இடம், பக்தர்கள் தங்கள் வினைகள் அழியவேண்டி அடையும் திருவல்லம்.



6)
இடைமெலி அரிவையர் இடுபலி பெறவவர்
கடையடை நடையினன் நடமிடு கழலினன்
விடையினன் அயிலுறு படையினன் உறைவிடம்
அடைபவர் அருவினை அறுதிரு வலமே.



பலி - பிச்சை;
கடை - வாயில்;
நடை - நடத்தல்; வழக்கம்; ஒழுக்கம்;
அயில் - கூர்மை;


இடைமெலிந்த மடமங்கையர் இடும் பிச்சையை ஏற்க அவர்கள் இல்லங்களின் வாயிலை அடையும் நடை உடையவன்; திருநடம் செய்யும் திருவடியை உடையவன்; இடப வாகனன்; கூர்மையான சூலப்படையை ஏந்தியவன்; அப்பெருமான் உறையும் இடம், அடையும் பக்தர்களின் அரிய வினைகளைத் தீர்க்கும் திருவல்லம்.



7)
விண்புவி யினர்தொழ மிகவருள் அரனொரு
தண்புனல் அடைசடை மிசைமதி தரியிறை
பண்பயில் மொழியுமை பதியவன் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே.



தேவர்களும் மண்ணுலகினரும் தொழ மிகவும் அருள்புரிகின்ற அரன்; ஒப்பற்ற, குளிர்ந்த கங்கையை அடைத்த சடையின்மேல் சந்திரனைத் தரிக்கும் இறைவன்; பண் திகழும் இனிய மொழி பேசும் உமைக்குப் பதி; அப்பெருமான் உறையும் இடம், வளம் பொருந்திய ('நிவா / பொன்னை' என்று அழைக்கப்படும்) நதி வந்து மலர்போன்ற திருவடியை வணங்கும் திருவல்லம்.



8)
மலையசை தசமுகன் மணிமுடி ஒருபது
குலைவுற மலர்விரல் இடுமிறை குளிர்மதி
நிலைபெறு தலையினன் நிருபம னுறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே.



ஒருபது - பத்து;
தசமுகன் - இராவணன்;
குலைவு - குலைதல் - அழிதல்; நடுங்குதல்;
நிருபமன் - ஒப்பில்லாதவன்;


கயிலைமலையை அசைத்த இராவணனின் மணிமுடிகள் பத்தும் அழிய / நடுங்கும்படி மலர்போன்ற விரலை ஊன்றிய இறைவன்; குளிர்ந்த திங்கள் நிலைபெறும் சென்னியன்; ஒப்பில்லாதவன்; அப்பெருமான் உறையும் இடம், அலைகள் பொருந்திய 'நிவா / பொன்னை' நதி ஈசன் திருவடியை வணங்க வந்து அடையும் திருவல்லம்.



9)
மணிவணன் அயனிவர் வெருவுற வளரெரி
அணியுமை ஒருபுடை அமரரன் அரவொடு
துணிமதி முடிமிசை அணியிறை உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே.



வெருவுறுதல் - அஞ்சுதல்; (வெருவு - அச்சம்);
அணி - 1) அழகு; 2) அணிதல் - சூடுதல்;
புடை - பக்கம்;
அமர்தல் - விரும்புதல்;
துணித்தல் - வெட்டுதல்;
மணி - அழகு; பளிங்கு, நீலமணி, முதலியன;


திருமால் பிரமன் இவர்கள் இருவரும் அஞ்சுமாறு சோதியாக ஓங்கியவன்; அழகிய உமையை ஒரு கூறாக விரும்பும் அரன்; பாம்பையும், பிறைச்சந்திரனையும் திருமுடிமேல் சூடும் இறைவன்; அப்பெருமான் உறையும் இடம், அழகிய 'நிவா / பொன்னை' நதி மலர்த்திருவடியை வணங்கும் திருவல்லம்.



10)
இழிவழி தனையுயர் வழியென மொழிபவர்
குழிவிழ விரையிரு விழியிலர் அனையவர்
எழிலுற மதிபுனை இறையவன் உறைவிடம்
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே.



இழிந்த நெறியைச் சிறந்த நெறி என்று சொல்பவர்கள், குழியில் விழ விரைகின்ற, இருகண்களும் இல்லாத குருடர்கள் போல்பவர். அழகுறப் பிறைச்சந்திரனைச் சூடும் இறைவன் உறையும் இடம், வழிபடும் பக்தர்கள் மகிழ்கின்ற திருவல்லம்.



11)
உருமணி மினலன ஒலிபுனல் உளசடை
ஒருமணி எனவிடம் ஒளிர்மிட றுடையிறை
குருமணி எனவடம் அமர்பவன் உறைவிடம்
வருமடி யவர்மகிழ் மணிதிரு வலமே.



உரும் - இடி;
உரும் அணி மினல் அன ஒலிபுனல் உள சடை - இடியோடு கூடிய மின்னல் போல முழங்கும் கங்கைப் புனல் உள்ள பொற்சடை;
(அப்பர் தேவாரம் - 6.48.8 - "முன்னவன்காண் பின்னவன்காண் ... மின்னவன்காண் உருமவன்காண் ....");
மணி - இரத்தினங்கள்; நீலமணி; அழகு;
(6.9.10 - "... மணிமிழலை மேய மணாளர் போலும் ..."; 6.2.9 - "... மணியாரூர்...")
குருமணி - குருசிரேட்டன் (Exalted guru, highly esteemed guru, as a gem among gurus);
பவன் - சிவன்;
வடம் - கல்லால மரம்;


இடியோடு கூடிய மின்னல் போல முழங்கும் கங்கைப் புனல் உள்ள பொற்சடையையும், ஒப்பற்ற நீலமணி போல நஞ்சு பிரகாசிக்கும் கண்டத்தையும் உடையவன்; தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தவன்; அப்பெருமான் உறையும் இடம், வந்து வழிபடும் பக்தர்கள் மகிழ்கின்ற அழகிய திருவல்லம்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.
முதற்சீர் 'தானன' என்ற சந்தத்திலும் சில பாடல்களில் வரலாம்.
பாடல்தோறும் ஈற்றுச்சீர் 'தனனா'.
திருவிராகம் அமைப்பு. முடுகு ஓசை அமைந்த பாடல்கள்.)
2) சம்பந்தர் தேவாரம் - 1.123.5 -
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
3) திருவல்லம் (திருவலம்) - வல்லநாதர் கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=119 )
திருவல்லம் (திருவலம்) - - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=243 )

-------------- ---------------

No comments:

Post a Comment