Saturday, February 20, 2016

02.82 – களக்காடு

02.82 – களக்காடு



2013-04-10
களக்காடு 
----------------------
(திருநெல்வேலிக்குத் தென்மேற்கே 44 கிமீ தூரம்)
(அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.)
(திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி)



1)
கொடிமலரும் செடிமலரும் கொய்துபல தொடைபுனைந்து குழைம னத்தால்
அடிமலரைப் பணிந்தேத்தும் அடியார்தம் அருவினையை அகற்று வானை
முடிமலரும் பிறையானைப் பிடிநடையாள் பங்கினனை மொய்க்கும் வண்டார்
கடிமலரார் பொழில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



முடி மலரும் பிறையான் - முடியில் இளம்பிறை சூடியவன்;
பிடிநடையாள் - பெண்யானைபோல் நடையை உடைய பார்வதி; (பிடி - பெண்யானை);
ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆர்தல் - நிறைதல்;
கடிமலர் - வாசமலர்;
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;
கொடிகளிலும் செடிகளிலும் பூக்கின்ற பூக்களைப் பறித்துப் பல மாலைகள் தொடுத்துக், குழைகின்ற மனத்தோடு ஈசன் திருவடி மலர்களை வணங்கித் துதிக்கும் அடியவர்களின் வினைகளை நீக்குபவனைத், திருமுடிமேல் இளம்பிறைச்சந்திரனைச் சூடியவனைப், பெண்யானைபோல் நடையை உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனை, மொய்க்கின்ற வண்டுகள் ரீங்காரம் செய்யும் வாசமலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!



2)
அந்தமலர் பலதூவி அடிபோற்று மார்க்கண்டர் அவரைக் கொல்ல
வந்தநமன் மாளவவன் மார்பினிலே உதைத்தானை வான வர்க்கா
முந்தரணம் மூன்றெரியில் மூழ்கவொரு கணைதொட்ட மூர்த்தி தன்னைக்
கந்தமலி பொழில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



அந்தம் - அழகு;
அரணம் - கோட்டை;
கந்தம் - வாசனை;


அழகிய பூக்கள் பலவும் தூவித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த காலனே மாளுமாறு அக்காலன் நெஞ்சில் உதைத்தவனைத், தேவர்களுக்காக முன்பு முப்புரங்களும் தீயில் மூழ்கி அழியும்படி ஒரு கணையை ஏவிய மூர்த்தியை, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!



3)
விண்டங்கு சுரரசுரர் வேலையினைக் கடைந்ததினம் விளைந்த நஞ்சை
உண்டங்கு மணிதிகழுங் கண்டத்து மாமருந்தை ஒருபக் கத்திற்
பெண்டங்கு பெற்றியனைப் பிறையொன்றை முடிமீது பேணு வானைக்
கண்டங்கு நெற்றியனைக் களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



பதம் பிரித்து:
விண் தங்கு சுரர் அசுரர் வேலையினைக் கடைந்த தினம் விளைந்த நஞ்சை
உண்டு அங்கு மணி திகழும் கண்டத்து மா மருந்தை, ஒரு பக்கத்தில்
பெண் தங்கு பெற்றியனைப், பிறை ஒன்றை முடிமீது பேணுவானைக்,
கண் தங்கு நெற்றியனைக், களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.


சுரர் - தேவர்;
வேலை - கடல்;
அங்கு - அசைச்சொல்;
மருந்து - அமுதம்; ஆகுபெயராகச் சிவபெருமானைக் குறித்தது;
பெற்றி - தன்மை; பெருமை;
பிறையொன்று - (சம்பந்தர் தேவாரம் - 1.37.3 - "அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்");
பேணுதல் - போற்றுதல்; பாதுகாத்தல்; விரும்புதல்;



4)
அவிநாசி யேசடையாய் அருளாயென் றிருபோதும் அன்போ டேத்தின்
செவிநாசி யோடுகண்வாய் தேகமிவை செய்ம்மயக்கம் தீர்த்து மீண்டும்
புவிநாடி வாராத பொன்னுலக நெறிதந்து புரக்கும் கோனைக்
கவினாரும் பொழில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



அவிநாசி - அழிவில்லாதவன்;
செய்ம்மயக்கம் - செய்+மயக்கம் - வினைத்தொகை;
(இலக்கணக் குறிப்பு: கை, பை, செய், நெய், பொய், போன்ற சொற்களுக்குப் பின் மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், அம்மெல்லினம் மிகும்.
உதாரணம்: கைம்மா, பொய்ஞ்ஞானம், மெய்ந்நெறி.
தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல், ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல், நொ, து என்னும் ஓர் எழுத்துச்சொற்கள் நிலைமொழிகளாக இருந்து அவற்றிற்கு முன்னே ‘ஞ,,ம’ என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும்.)
புரத்தல் - காத்தல்;
கவின் - அழகு;
பொன்னுலக நெறிதந்து புரக்கும் கோன் - (சேந்தனார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு - 11.29.1 - "மன்னுக தில்லை ... அடியோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே");
(சுந்தரர் தேவாரம் - 7.100.5 -
மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன்...);


'அழிவற்றவனே! சடையுடையவனே! அருளாய்!" என்று காலை மாலை இருபோதும் பக்தியோடு துதித்தால், ஐம்புலன்கள் விளைக்கும் மயக்கத்தைத் தீர்த்து, அவ்வன்பர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறவாமல் சிவலோகம் சேர்கின்ற வழியைக் காட்டி அவர்களைக் காத்தருளும் தலைவனை, அழகிய சோலைகள் சூழ்ந்த களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!


5)
நாமருவு தமிழ்பாடி நாளுமடி பணிவார்கள் நானி லத்தில்
சேமமுறத் தீவினைகள் தீர்த்தருள்கள் செய்வானைத் தீவி ழித்துக்
காமனுடல் பொடிசெய்த கண்ணுதலை வண்டினங்கள் களிப்போ டார்க்கும்
காமருபூம் பொழில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



மருவுதல் - தழுவுதல்; பயிலுதல்; பொருந்துதல்;
நானிலம் - பூமி; (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது);
சேமம் - க்ஷேமம்; (நல்வாழ்வு, இன்பம், காவல்);
ஆர்க்கும் - ஒலிக்கும்;
காமரு - அழகிய;



6)
வளிமண்தீ புனல்வெளியாய் வருவானைத் தமிழ்பாடி வாழ்த்து கின்ற
அளிகொண்டார் பழவினைகள் அறுப்பானை வானவர்தம் அச்சம் தீர்த்துத்
துளியுண்டோர் நீலமணி தோன்றுமிட றுடையானைத் துரிசில் லானைக்
களிவண்டார் பொழில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



வளிமண்டீ - வளி+மண்+தீ;
வளி - காற்று;
வெளி - ஆகாயம்;
அளி -அன்பு;
அறுத்தல் - நீக்குதல்;
துளி - நஞ்சு;
மிடறு - கண்டம்;
துரிசு - குற்றம்; துன்பம்;
களி வண்டு ஆர் பொழில் சூழ்ந்த - களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த;



7)
நீளநினை அடியார்க்கு நீராரும் கடல்சூழ்ந்த நிலமி தன்மேல்
மீளலிலா நிலையளிக்கும் விருப்பினனை விடையவனை வீட்டும் காலன்
மாளமுனி இறவாது வாழவருள் புரிந்தானை மஞ்ஞை ஆலக்
காளமுகில் அடைபொழில்சூழ் களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



மஞ்ஞை - மயில்;
ஆலுதல் - ஆடுதல்;


மிகவும் நினைந்து போற்றும் பக்தர்களுக்கு, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த இப்பூமியின்மேல் மீண்டும் பிறவாத நிலையை அளிக்கும் அன்புடையவனை, இடப வாகனனை, உயிர்களைக் கொல்லும் காலனே மாளுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர் சாவாமல் வாழுமாறு அருள்புரிந்தவனை, மயில்கள் ஆடக் கருமுகில்கள் அடையும் சோலைகள் சூழ்ந்த களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!



8)
பனிமலிந்த மலையசைத்தான் பத்திரட்டி தோள்களுரம் பாற ஊன்றி
நனிநலிந்து கதறியவன் நரம்பால்யாழ் இசைபாட நாளீந் தானை
நுனிமலிந்த சூலத்தால் அந்தகனை அழித்தானை நுதற்கண் ணானைக்
கனிமலிந்த சோலைகள்சூழ் களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



பத்திரட்டி தோள்கள் - இருபது தோள்கள்; (சம்பந்தர் தேவாரம் 2.116.8 - "2.116.8
பத்திரட்டி திரடோ ளுடையான் முடிபத்திற...."); (சம்பந்தர் தேவாரம் 3.44.8 - "இலங்கை மன்னனை யீரைந் திரட்டிதோள் துலங்க வூன்றிய...");
பாறுதல் - அழிதல்;
அந்தகன் - அந்தகாசுரன்;


பனி மலிந்த மலை அசைத்தான் பத்து இரட்டி தோள்கள் உரம் பாற ஊன்றி - பனி மிகுந்த கயிலைமலையை அசைத்த இராவணின் இருபது புஜங்களின் பலம் அழியத் திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி;
நனி நலிந்து கதறி அவன் நரம்பால் யாழ் இசை பாட நாள் ஈந்தானை - அவ்வரக்கன் மிகவும் துன்புற்றுக் கதறித் தன் நரம்பால் யாழ் செய்து இசைபாடிப் பணியவும், அவனுக்கு நீண்ட வாழ்நாள் கொடுத்தவனை;
நுனி மலிந்த சூலத்தால் அந்தகனை அழித்தானை - மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தால் அந்தகாசுரனைக் கொன்றவனை;
நுதற்கண்ணானைக் - நெற்றிக்கண்ணனை;
கனி மலிந்த சோலைகள் சூழ் களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே - பழங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!


(அப்பர் தேவாரம் - 6.96.5 - "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்" - அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவர்);



9)
நாரணனும் நான்முகனும் பாரகழ்ந்தும் வானுயர்ந்தும் சோர ஓங்கும்
பூரணனைக் காரணனைப் புண்ணியனை விண்ணவரும் போற்று கின்ற
ஆரணனை ஆணொடுபெண் ஆயவனைத் தூயவனை அலையில் தோன்று
காரணவும் மதில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



நாரணன் - திருமால்;
காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணமாயிருப்பவன் - சிவபிரான்;
ஆரணன் - வேத முதல்வன்; (ஆரணம் - வேதம்)
அலையில் தோன்று கார் அணவும் மதில் - கடலில் தோன்றிய கருமேகம் அணுகும் மதிற்சுவர்;



10)
பொல்லாத வழிதன்னைப் புதுவழியாப் புகழ்ந்துழலும் பொய்யர்க் கென்றும்
இல்லாத எம்மானை வல்லானை வண்டமிழ்சொல் நல்லார் கட்குச்
செல்லாத செல்வமெனத் திகழ்வானைத் திங்களணி சென்னி யானைக்
கல்லாரும் மதில்சூழ்ந்த களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



பொய்யர்க்கு என்றும் இல்லாத - பொய்யர்களுக்கு அருள்செய்யாத;
வல்லான் - வல்லவன்;
வண் தமிழ் சொல் நல்லார்கட்குச் செல்லாத செல்வம் எனத் திகழ்வானை - தேவாரம் திருவாசகம் பாடிப் பரவும் நல்லவர்களுக்குத் தொலையாச் செல்வனை;
திங்கள் அணி சென்னியானை - பிறைசூடியை;
கல் ஆரும் மதில் - கற்களால் கட்டப்படுதலைப் பொருந்திய மதிற்சுவர்; 'மலையை ஒத்த மதில்' என்றும் பொருள்கொள்ளலாம்;



11)
நிச்சமணி கலனாக நீற்றினையே புனைவார்க்கு நேயத் தானை
உச்சிமணி நீர்க்கங்கை உடையானை ஓலமிட்ட உம்பர்க் காத்த
நச்சுமணி மிடற்றானை நாகத்தை நற்றாரா நயந்து நாகக்
கச்சுமணி இறையானைக் களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.



பதம் பிரித்து:
நிச்சம் அணிகலனாக நீற்றினையே புனைவார்க்கு நேயத்தானை,
உச்சி மணி நீர்க் கங்கை உடையானை, ஓலமிட்ட உம்பர்க் காத்த
நச்சு மணி மிடற்றானை, நாகத்தை நல் தாரா நயந்து நாகக்
கச்சும் அணி இறையானைக், களக்காட்டில் உறைவானைக் கருது நெஞ்சே.


நிச்சம் - நித்யம் - எப்பொழுதும்;
மணி நீர் - பளிங்கு மணி (ஸ்படிகம்) போன்ற தெளிந்த நீர்; அழகிய நீர்;
உம்பர்க் காத்த - தேவர்களைக் காத்த;
(இலக்கணக் குறிப்பு: பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு.
உதாரணம்: ஒன்னலர்ச் செகுத்தான். - ஒன்னலரைச் செகுத்தான் என்பது பொருள்.)
நற்றாரா - நற்றாராக என்பது கடைக்குறையாக வந்தது. நற்றாராக - நல்+தார்+ஆக;
தார் - மாலை;


எப்பொதும் திருநீற்றையே ஆபரணமாக அணியும் பக்தர்களுக்கு அன்புடையவனைத், தலைமேல் தெளிந்த நீரை உடைய கங்கையை உடையவனை, ஓலம் என்று அடைந் தேவர்களைக் காத்து அருள்செய்த, விடமணி தோன்றும் நீலகண்டனை, நாகப்பாம்பை மாலையாகப் பூண்டதோடன்றி அரையில் கச்சாகவும் அணியும் இறைவனைக், களக்காடு என்ற தலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ விரும்பித் தியானிப்பாயாக!



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) களக்காடு - சத்தியவாகீசர் கோயில் தகவல்கள் - சைவம் ஆர்க் தளத்தில்: http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_thenkalakkudi.htm

-------------- --------------

No comments:

Post a Comment