Saturday, February 27, 2016

02.87 – வேதிகுடி - (திருவேதிகுடி) - (வண்ணவிருத்தம்)

02.87 – வேதிகுடி (திருவேதிகுடி) - (வண்ணவிருத்தம்)



2013-06-07
திருவேதிகுடி
------------------
(வண்ணவிருத்தம்.
"தானதனத் .. தனதான" - என்ற சந்தக்குழிப்பு )
(காலனிடத் தணுகாதே - திருப்புகழ் - திருச்செங்கோடு)



1)
மாணில்வினைத் தொடர்மாய
.. வார்கழலைப் பணிவேனே
வாணிலவைப் புனைவோனே
.. வாரமிகுத் துனையோதும்
மாணியிறப் பிலனாகி
.. வாழநமற் செறுகாலா
வேணியிடைப் புனலானே
.. வேதிகுடிப் பெருமானே.



பதம் பிரித்து:
மாண் இல் வினைத்தொடர் மாய .. வார்கழலைப் பணிவேனே;
வாள் நிலவைப் புனைவோனே; .. வாரம் மிகுத்து உனை ஓதும்
மாணி இறப்பு இலன் ஆகி .. வாழ, நமற் செறுகாலா;
வேணியிடைப் புனலானே; .. வேதிகுடிப் பெருமானே.


மாண் இல் வினைத்தொடர் மாய வார்கழலைப் பணிவேனே - சிறப்பில்லாத தீயவினைகள் எல்லாம் அழிய உன் திருவடிகளைத் தொழுவேன்; (மாண் - மாட்சிமை;)
வாள் நிலவைப் புனைவோனே - ஒளியுடைய சந்திரனை அணிந்தவனே; (வாள் - ஒளி;)
வாரம் மிகுத்து உனை ஓதும் மாணி இறப்பு இலன் ஆகி வாழ, நமற் செறுகாலா - அன்பு மிக்கு உன்னை வழிபட்ட மார்க்கண்டேயர் என்றும் இறவாமல் வாழுமாறு காலனை உதைத்து அழித்த காலனே; (வாரம் - அன்பு; மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்; நமற் செறு காலா - நமனைச் செற்ற காலனே; )
வேணியிடைப் புனலானே - சடையிடைக் கங்கையை உடையவனே; (வேணி - சடை);
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியுள்ள பெருமானே;


(இலக்கணக் குறிப்புகள் :
செறு காலா - வினைத்தொகை - செற்ற காலனே;
நமற் செறு காலா - 2-ஆம் வேற்றுமைத்தொகை - நமனைச் செறு காலா;
ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து: #101 -
உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.)
-----------------------------



2)
சீருடைநற் றமிழ்பாடிச்
.. சேவடியைப் பணிவார்தம்
ஆருயிருக் கொருகாவல்
.. ஆகியவர்க் கருள்வோனே
நீருறுபொற் சடைமீது
.. நீண்மதியைப் புனைவோனே
மேருமலைச் சிலையானே
.. வேதிகுடிப் பெருமானே.



பதம் பிரித்து:
சீர் உடை நற்றமிழ் பாடிச் .. சேவடியைப் பணிவார்தம்
ஆர் உயிருக்கு ஒரு காவல் .. ஆகி அவர்க்கு அருள்வோனே;
நீர் உறு பொற்சடைமீது .. நீள்மதியைப் புனைவோனே;
மேருமலைச் சிலையானே; .. வேதிகுடிப் பெருமானே.


சீர் - செல்வம்; நன்மை; பெருமை; புகழ்; செய்யுளின் ஓர் உறுப்பு;
ஆர் உயிர் - அரிய உயிர்;
ஒரு - ஒப்பற்ற;
உறுதல் - இருத்தல்; தங்குதல்;
நீள் மதி - நீண்ட பிறை;
(சம்பந்தர் தேவாரம் - 2.81.4 - "நீர்கொண்ட சடைமுடிமே னீண்மதியம் பாம்பினொடும்...");
சிலை - வில்;
-----------------------------------



3)
ஊழியினிற் படகாகும்
.. ஊரிலுதித் தவர்பாடும்
ஏழிசையைத் தினமோதும்
.. ஏழையெனக் கருளாயே
ஆழிமிசைத் துயில்மாயன்
.. ஆதியுனைத் தொழவாழி
வீழிநகர்த் தருவோனே
.. வேதிகுடிப் பெருமானே.



ஊழியினில் படகு ஆகும் ஊரில் உதித்தவர் பாடும் - தோணிபுரத்தில் (சீகாழியில்) அவதரித்த திருஞானசம்பந்தர் பாடியருளிய;
ஏழிசையைத் தினம் ஓதும் ஏழை எனக்கு அருளாயே - இசைத்தமிழான தேவாரத்தை தினந்தோறும் ஓதுகின்ற அடியேனுக்கு அருள்புரிவாயாக;
ஆழிமிசைத் துயில் மாயன் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;
ஆதி உனைத் தொழ ஆழி வீழிநகர்த் தருவோனே - முதல்வனான உன்னை முன்பு தொழுதபோது, அவருக்குச் சக்கராயுதத்தைத் திருவீழிமிழலையில் கொடுத்தவனே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியுள்ள பெருமானே;


இலக்கணக் குறிப்பு : பாடும் என்பது பாடிய என்ற பொருளில் வந்தது. காலமயக்கம். (Deviation in the use of tenses sanctioned by usage; காலவழுவமைதி.)
உதாரணம்: திருக்கோவையார்: "அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்...." - அருந்துமென்பது காலமயக்கம்;
-----------------------------------



4)
ஞாலமிதிற் பிறவாமல்
.. நான்மகிழற் கருளாயே
சூலமழுப் படையானே
.. சூரர்கிளைக் கழிவாக
வேலவனைத் தருமீசா
.. வேலைவிடத் தினைநாடி
மேலவருக் கமுதீவாய்
.. வேதிகுடிப் பெருமானே.



ஞாலம்இதிற் பிறவாமல் நான் மகிழற்கு அருளாயே - இப்பூமியில் நான் மீண்டும் பிறந்து வருத்தமுறாதபடி இன்பநிலை அருள்வாயாக; (ஞாலம் - பூமி;)
சூலம் மழுப் படையானே - திரிசூலமும் மழுவாயுதமும் உடையவனே;
சூரர் கிளைக்கு அழிவு ஆக வேலவனைத் தரும் ஈசா - சூரர் குலம் அழியும்படி முருகனைத் தந்தவனே; (சூரர் கிளை - சூரர் கூட்டங்கள்; சூராதியவுணர்களும் அவர்களின் சுற்றங்களும்;)
வேலை விடத்தினை நாடி, மேலவருக்கு அமுது ஈவாய் - கடல் நஞ்சை விரும்பி உண்டு, தேவர்களுக்கு அமுதம் அளித்தவனே; (வேலை - கடல்; மேலவர் - தேவர்; உம்பர்;)
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியுள்ள பெருமானே;
-----------------------------------



5)
ஆழவினைக் கடல்தீர
.. ஆரருளைப் புரியாயே
சூழமரர்க் கொருநாதா
.. தூயநதிச் சடையானே
தாழடியர்க் கணியானே
.. தாயின்மிகப் பரிவோனே
வேழமுரித் தணிவோனே
.. வேதிகுடிப் பெருமானே.



ஆழ வினைக்கடல் தீர ஆர் அருளைப் புரியாயே - ஆழம் மிக்க வினைக்கடல் இல்லாமற்போகுமாறு உன் அரிய அருளைச் செய்வாயாக;
சூழ் அமரர்க்கு ஒரு நாதா - சூழ்ந்திருக்கும் / வலம்செய்யும் தேவர்களுக்கு எல்லாம் தலைவனான ஒப்பற்றவனே;
தூய நதிச் சடையானே - கங்கைச் சடையானே;
தாழ் அடியர்க்கு அணியானே - வணங்கும் அடியார்களுக்கு அருகு இருப்பவனே;
தாயின் மிகப் பரிவோனே - தாயினும் அதிக அன்புடையவனே;
வேழம் உரித்து அணிவோனே - எதிர்த்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டவனே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
-----------------------------------



6)
நீளநினைத் தடிபாடும்
.. நேயமதைத் தருவாயே
கோளரவைப் பிறையோடு
.. கோலமுறப் புனைவோனே
தாளைநினைத் திருபோதும்
.. தாழுமவர்க் கினியானே
வேளைவிழித் தருள்வோனே
.. வேதிகுடிப் பெருமானே.



நீள நினைத்தல் - மிகவும் நினைத்தல்;
நேயம் - அன்பு; பக்தி;
கோள் அரவு - கொடிய நாகம்;
கோலம் - அழகு;
தாளை - திருவடியை;
இருபோதும் - காலையும் மாலையும்; இரவும் பகலும்;
தாழுமவர்க்கு இனியானே - வணங்குகின்ற அடியவர்களுக்கு இனியவனே;
வேள் - மன்மதன்; முருகன்;
வேளை விழித்தருள்வோனே - மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனே; / முருகனை நெற்றிக்கண்ணிலிருந்து அருளியவனே;
-----------------------------------



7)
ஆரமெனத் தமிழாலே
.. ஆதியுனைப் பணிவேனே
பேரையழைத் தழுவானோர்
.. பேரிடரைக் களைவோனே
சீரடியைத் தொழுவார்தம்
.. தீயவினைத் தொடர்தீர
வேரையறுத் தருள்வோனே
.. வேதிகுடிப் பெருமானே.



ஆரம் எனத் தமிழாலே ஆதி உனைப் பணிவேனே - மாலையெனத் தமிழ்ப் பாமாலைகளைக்கொண்டு முதல்வனான உன்னை வழிபடுவேன்;
பேரை அழைத்து அழு வானோர் பேர் இடரைக் களைவோனே - நின் திருப்பெரைக் கூவி அழைத்து அழுத தேவர்களின் பெரும் துன்பத்தைத் தீர்த்தவனே;
சீர் அடியைத் தொழுவார்தம் தீய வினைத்தொடர் தீர, வேரை அறுத்து அருள்வோனே - உன் அழகிய திருவடியைத் தொழுபவர்களின் பாவங்கள் எல்லாம் தீருமாறு அவற்றின் வேரை அறுப்பவனே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
-----------------------------------



8)
சோகமறத் திருவாகத்
.. தூயவுனைத் தொழுவேனே
நாகமசைத் தவன்வாய்கள்
.. நாதவெனப் பரிவோனே
வேகவிடைத் தனியூர்தி
.. மீதுலகிற் பலிதேர்வாய்
மேகமிடற் றுடையானே
.. வேதிகுடிப் பெருமானே.



அறுதல் - இல்லாமற் போதல் (To cease, become extinct, perish);
திரு - செல்வம்;
நாகம் - மலை;
மேகமிடற்று - மேகம் போல் மிடறு உடைய; (அப்பர் தேவாரம் - 6.68.4 - "ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை ... கார்மேக மிடற்றானைக் ... " - கார்மேகம் போன்ற நீலகண்டனை);
உடையான் - சுவாமி;


சோகம் அறத், திரு ஆகத், தூய, உனைத் தொழுவேனே - தூயனே, துக்கம் நீங்கவும், செல்வங்கள் பெருகவும் உன்னை வணங்குவேன்;
நாகம் அசைத்தவன் வாய்கள் "நாத" எனப் பரிவோனே - கயிலைமலையை அசைத்த இராவணனின் வாய்கள் (அவன் மலைக்கீழ் நசுக்குண்டபின்) 'நாதனே' என்று ஓலமிடக் கேட்டு, அவனுக்கு இரங்கியவனே;
வேக விடைத் தனி ஊர்தி மீது உலகிற் பலி தேர்வாய் - வேகமாகச் செல்லும் ஒப்பற்ற இடப வாகனத்தின்மேற் சென்று உலகோர் இடும் பிச்சையை ஏற்பவனே;
மேக மிடற்று உடையானே - மேகம்போல் நீலகண்டத்தை உடைய சுவாமியே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
-----------------------------------



9)
நானவனிப் பிறவாமல்
.. வானடையத் தருவாயே
ஏனவுருத் திருமாலும்
.. ஏறுமனத் துருவானும்
ஞானவொளிச் சுடரானே
.. நாணியுனைத் தொழுவாரே
வேனயனத் துமைகூறா
.. வேதிகுடிப் பெருமானே.



அவனி - உலகம்;
ஏனம் - பன்றி;
அனத்து - அன்னத்து - இடைக்குறையாக வந்தது;
வேனயனம் - வேல் நயனம் - வேல் போன்ற கண்;


நான் அவனிப் பிறவாமல் வான் அடையத் தருவாயே - நான் பூமியில் மீண்டும் பிறவாமல், வானுலகம் அடையுமாறு அருள்புரிவாயாக;
ஏன உருத் திருமாலும், ஏறும் அனத்து உருவானும், ஞான ஒளிச் சுடரானே, நாணி உனைத் தொழுவாரே - ஞான ஒளிப் பிழம்பு ஆனவனே! பன்றி உருவிற் சென்ற திருமாலும், உயரும் அன்னப்பறவை உருவிற் சென்ற பிரமனும், (அடிமுடி காணாது) வெட்கி உன்னைத் தொழுவார்கள்;
வேல் நயனத்து உமைகூறா - வேல் போன்ற கண் உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
-----------------------------------



10)
நாவசையப் புறனேசொல்
.. நாணிலிகட் கருளாதான்
பூவடியிட் டவர்பாவம்
.. போய்மகிழற் கருளீசன்
தேவர்களுக் கொழியாது
.. தீமையிழைத் தவரூர்கள்
வேவநகைத் தவனேரார்
.. வேதிகுடிப் பெருமானே.



புறன் - பழிச்சொல்;
போதல் - நீங்குதல்; ஒழிதல்; கழிதல்;
ஒழியாது - இடைவிடாமல் எப்பொழுதும்; (ஒழிதல் - To cease, desist, stop; to discontinue; )
ஏர் - அழகு;
நகைத்தல் - நகுதல் - சிரித்தல்;


நா அசையப் புறனே சொல் நாணிலிகட்கு அருளாதான் - நாக்கு அசையும்போதெல்லாம் வைதிகச் சமயங்களைப் பழித்துப்பேசுகின்ற வெட்கமில்லாதவர்களுக்கு அருளாதவன்;
பூ அடி இட்டவர் பாவம் போய் மகிழற்கு அருள் ஈசன் - திருவடியில் பூ இட்டு வணங்கும் பக்தர்கள்தம் பாவம் நீங்கி அவர்கள் மகிழ்வதற்கு அருளும் ஈசன்;
தேவர்களுக்கு ஒழியாது தீமை இழைத்தவர் ஊர்கள் வேவ நகைத்தவன் - தேவர்களுக்கு ஓயாமல் தீங்கிழைத்த அசுரர்களின் முப்புரங்கள் எரிந்து அழியுமாறு சிரித்தவன்;
ஏர் ஆர் வேதிகுடிப் பெருமானே - அழகிய திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.


குறிப்பு: இப்பதிகத்தின் ஏனைய பாடல்கள் ஈசனை முன்னிலையில் விளிப்பன. இப்பாடல் ஈசனைப் படர்க்கையில் துதிக்கின்றது.
-----------------------------------



11)
வானநெறித் தமிழ்பாடி
.. வாழவெனக் கருளாயே
ஏனமருப் பணிமார்பா
.. ஈரிருவர்க் குயர்வான
ஞானமுரைத் தருள்போதா
.. நாகையினிற் கழல்நாடு
மீனவருக் கருள்நாதா
.. வேதிகுடிப் பெருமானே.



வானநெறித் தமிழ் பாடி வாழ எனக்கு அருளாயே - வீட்டு நெறியைக் காட்டும் தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி வாழுமாறு எனக்கு அருள்வாயாக;
ஏன மருப்பு அணி மார்பா - பன்றிக்கொம்பை அணிந்த மார்பினனே;
ஈரிருவர்க்கு உயர்வான ஞானம் உரைத்து அருள் போதா - சனகாதியர் நால்வருக்குப் பரமஞானம் உரைத்து அருளிய குருவே;
நாகையினிற் கழல் நாடு மீனவருக்கு அருள் நாதா - திருநாகைக் காரோணத்தில் திருவடியை நாடிய அதிபத்தருக்கு அருள்புரிந்தவனே;
வேதிகுடிப் பெருமானே - திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


(சம்பந்தர் தேவாரம் - 3.26.5 - "ஏனப்பூண் மார்பின்மேல் ...." - பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல், ....)
(சுந்தரர் தேவாரம் - 7.7.9 - "தந்தை யாருந் தவ்வை யாரும் .... வான நெறிகாட்டும் ...")


* அதிபத்த நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
திருவேதிகுடி - வேதபுரீஸ்வரர் கோயில் - தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=373
திருவேதிகுடி - மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் கோயில் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=271

----------------- ----------------

No comments:

Post a Comment