Saturday, February 20, 2016

02.78 – வெண்ணியூர் - (கோயில் வெண்ணி)

02.78 – வெண்ணியூர் - (கோயில் வெண்ணி)



2013-02-09
வெண்ணியூர் (இக்காலத்தில் "கோயில் வெண்ணி")
----------------------
(சந்தக் கலித்துறை - "தானன தான தானன தான தானனா" என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 3.9.1 - "கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா")



1)
கல்லடி தன்னையும் பூவென ஏற்றருள் கண்ணுதல்
மெல்லடி மாதொரு பங்கினர் மேன்மைகொள் நாமமே
சொல்லடி யாருயிர் காத்தவர் தூமதி சூடிய
வெல்விடை யாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



சாக்கியநாயனார் எறிந்த கல்லையும் பூவாக ஏற்று அருள்புரிந்தவர்; நெற்றிக்கண்ணினர்; மென்மையான திருவடியை உடைய உமையை ஒரு பங்காக உடையவர்; அவர் திருப்பெயரையே சொல்லி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; தூய வெண் திங்களைச் சூடியவர்; வெற்றிகொள் இடப வாகனர்; அப்பெருமானார் உறையும் தலம் வண்டுகள் பண் இசைத்து ரீங்காரம் செய்யும் வெண்ணியூர்.



2)
கொங்கலர் கூவிளம் கூன்மதி கோளர வத்தொடு
கங்கையும் சென்னியில் வைத்தவர் மங்கையொர் பங்கினர்
எங்கணும் சென்றிடர் செய்யெயில் மூன்றெரி செய்தஓர்
வெங்கணை யாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



கொங்கு - வாசனை; தேன்;
அலர் - பூ;
கூவிளம் - வில்வம்;
கூன் மதி - வளைந்த பிறைச்சந்திரன்;
கோள் அரவம் - கொடிய பாம்பு;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கம்;
எங்கணும் சென்று இடர் செய் எயில் மூன்று - எவ்விடமும் திரிந்து துன்புறுத்திய முப்புரங்கள்;
வெங்கணையார் - கொடிய வெம்மையான அம்பினை ஏவியவர்;



3)
உண்மையர் அன்பருக் கண்மையர் வெற்புவில் ஒன்றினால்
திண்மதில் மூன்றையும் தீப்புகச் செய்தவர் சென்னியில்
ஒண்மதிக் கண்ணியர் ஓர்புறம் பெண்ணினர் கையிலோர்
வெண்மழு வாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



உண்மையர் - மெய்ப்பொருள்;
அண்மையர் - அருகில் இருப்பவர்;
வெற்பு வில் - மேருமலையாகிய வில்;
ஒண் மதிக் கண்ணியர் - ஒளி திகழும் பிறைச்சந்திரனைக் கண்ணிமாலையாக அணிபவர்;


---- Some Q&A on a word usage in this song: -----
Q: "கையிலோர் வெண்மழுவார்" என்னும் பயன்பாடு உண்டா? "கையிலோர் வெண்மழுவுடையார்" என்றோ "...வெண்மழுவேற்றார்" என்றோ வரலாம். இத்தகைய பயன்பாடு உண்டா?
A: தேடியதிற் கண்ட ஓர் உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.55.3 - "கையார் வெண்மழுவா கனல்போற்றிரு மேனியனே" - கையின்கண் பொருந்திய வெண்மையான மழுவாயுதத்தை உடையவனே!



4)
கரிசடை யாவழி ஆனவர் காய்நுதற் கண்ணினர்
துரிசடை யாமனத் தொண்டர்தம் தொல்வினை தீர்ப்பவர்
பரிசடை பாடலைப் பாண்டிய நாட்டினில் தந்தவர்
விரிசடை யாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



கரிசு அடையா வழி - குற்றம் அடையாத நல்வழி;
(சம்பந்தர் தேவாரம் - 1.79.1 - "அயிலுறு படையினர் விடையினர்... கழுமல நினையநம் வினைகரிசறுமே.")
துரிசு அடையா மனத் தொண்டர் - குற்றம் அற்ற மனத்தை உடைய அன்பர்கள்;
தொல்வினை - பழவினை;
பரிசு அடை பாடலைப் பாண்டிய நாட்டினில் தந்தவர் - பரிசில் பெறும் பாடலைத் தருமிக்குத் தந்தது, பாணபத்திரர்க்குத் திருமுகப் பாசுரம் தந்தது முதலியன;
விரி சடையார் - விரிந்த சடையை உடைய சிவபெருமானார்;



5)
திடமலி முப்புரம் ஓர்நொடித் தீப்புக நக்கவர்
சடையிடைத் தண்புனல் தாங்கிய சந்திர சேகரர்
இடைமெலி மாதினுக் கோர்புறம் ஈந்தவர் வென்றிகொள்
விடையுடை யாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



திடம் மலி முப்புரம் - வலிமைமிக்க முப்புரங்கள்;
நக்கவர் - சிரித்தவர்;
வென்றி - வெற்றி;



6)
படத்தினைக் காட்டிளம் பாம்பணி பண்பினர் பார்புகழ்
நடத்தினை நள்ளிருள் ஆடிடும் நாடகர் நாரியை
இடத்தினில் ஏற்றவர் வானவர் ஏத்துமி டற்றினில்
விடத்தினர் மேவிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



படம் உடைய இளம் நாகத்தைப் பூணாக அணிபவர்; உலகம் புகழும் கூத்தை நள்ளிருளில் ஆடும் கூத்தர்; உமையை இடப்புறம் ஏற்றவர்; தேவர்கள் துதிக்கும் நீலகண்டர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம், வண்டுகள் பண் இசைத்து ரீங்காரம் செய்யும் வெண்ணியூர்.



7)
கூருல வும்மழு வாளினர் கொல்புலித் தோலினர்
நீருல வுஞ்சடை மேல்நிரை கொன்றைய ணிந்தவர்
ஏருல வும்புரம் மூன்றெரி வெங்கணை ஏவிய
மேருவில் லாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



கூர்மையான மழுவாளை உடையவர்; கொல்லும் புலியின் தோலை அணிந்தவர்; கங்கை உலவுகின்ற சடையின்மேல் வரிசையாகக் கொன்றைமலரைச் சூடியவர்; அழகிய முப்புரங்களை எரித்த வெங்கணையை ஏவிய மேருவில்லை ஏந்தியவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வண்டுகள் பண் இசைத்து ரீங்காரம் செய்யும் வெண்ணியூர்.


(சுந்தரர் தேவாரம் - 7.24.10 - "ஏரார் முப்புரமும் எரி யச்சிலை தொட்டவனை);



8)
நற்பதம் நச்சிடும் அன்பருக் கின்பினை நல்குவார்
மற்புயத் தால்மலை ஆட்டிய வாளரக் கன்துளிக்
கற்பிலன் தானழ வேவொரு பூவன கால்விரல்
வெற்பிலிட் டாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



நச்சுதல் - விரும்புதல்;
இன்பு - இன்பம்;
மற்புயம் - மல்+புயம் - வலிய புஜங்கள்;
வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்;
கற்பு - கல்வி; ஒழுக்கம்; ("கற்பித்தபடி ஒழுகுதல் என்பது பொருள். குரவரும் பெரியோரும் கற்பித்த ஒழுக்கநெறி நிற்றலைக் கற்பு எனக் கூறுவர்...");
துளிக் கற்பு இலன் - உம்மைத்தொகை - கொஞ்சமும் அறிவோ ஒழுக்கமோ இல்லாதவன்;
பூவன கால்விரல் - பூ அன கால்விரல் - பூப்போன்ற பாத விரல்;
வெற்பு - மலை;



9)
மண்ணகழ் மாலடி வானுயர் மாமல ரான்முடி
நண்ணவொ ணாவெரி வண்ணம தாயவர் நாள்தொறும்
எண்ணிவ ணங்கிடும் அன்பருக் கின்னருள் செய்துயர்
விண்ணளிப் பாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



மாமலரான் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்;
நண்ண ஒணா எரி வண்ணம் அது ஆயவர் - அடைய இயலாத சோதி ஆனவர்;


மண்ணை அகழ்ந்து தேடிய திருமாலால் அடியையும், வானில் பறந்து தேடிய பிரமனால் முடியையும் சென்றடைய ஒண்ணாத சோதி வடிவானவர்; தினந்தோறும் நினைந்து வழிபடும் பக்தர்களுக்கு இனிய அருள்புரிந்து அவர்களுக்கு உயர்ந்த விண்ணுலகை அளிப்பார்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வண்டுகள் பண் இசைத்து ரீங்காரம் செய்யும் வெண்ணியூர்.



10)
உள்விரி யாச்சில ஊமர்கள் வாவெனச் சொல்வழி
முள்விர வும்வழி என்றறிந் தவ்வழி தள்ளுமின்
கள்வடி கான்மல ரால்தொழு வார்க்கருள் கண்டனார்
வெள்விடை யாரிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



உள் விரியா - குறுகிய உள்ளம் உடைய; (உள் - மனம்); (விரிதல் - பரத்தல்; மலர்தல்);
ஊமர் - ஊமையர்; (வாய்பெற்ற பயன் ஐந்தெழுத்து ஓதுதல், ஈசனைத் துதித்தல். அப்படிச் செய்யாதவர், பயனற்ற வாயை உடையவர். ஆகவே, வாயிருந்தும் ஊமையர்);
(திருமந்திரம் - 10.9.8.1 - "சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்...");
அவ்வழி தள்ளுமின் - அந்த மார்க்கங்களைத் தள்ளுங்கள்; (தள்ளுதல் - விலகுதல்; நிராகரித்தல்; கைவிடுதல்); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);
கள் வடி கான்மலர் - தேன் ஒழுகும் வாசமலர்; (கான் - வாசனை);
கண்டனார் - நீலகண்டர்;
வெள்விடையார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார்;



11)
நீணய னத்துமை பங்கரை நித்தல்நி னைந்திடு
மாணியின் பாலடை வன்நமன் மாளவு தைத்தவர்
கோணிய வெண்பிறை தண்புனல் கூவிளம் கொன்றையார்
வேணியர் மேவிடம் பண்ணிசை வண்டறை வெண்ணியே.



நீணயத்துமைபங்கர் - நீள் நயனத்து உமை பங்கர் - நீண்ட கண்களை உடைய உமையை ஒரு பங்காக உடைய சிவபெருமானார்;
நித்தல் - எந்நாளும்;
மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;
பால் அடை வன் நமன் - அருகே அடைந்த கொடிய கூற்றுவன்;
கோணிய - வளைந்த;
ஆர்தல் - பொருந்துதல்;
வேணி - சடை;


நீண்ட கண்களை உடைய உமையை ஒரு பங்காக உடைய சிவபெருமானாரைத் தினமும் தியானிக்கும் மார்க்கண்டேயரிடம் நெருங்கிய கொடிய எமனே மாளுமாறு அவன் மார்பில் உதைத்தவர்; வளைந்த வெண்பிறைச்சந்திரனும் குளிர்ந்த கங்கையும் வில்வமும் கொன்றைமலரும் பொருந்திய சடையினர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வண்டுகள் பண் இசைத்து ரீங்காரம் செய்யும் வெண்ணியூர்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலித்துறை - "தானன தானன தானன தானன தானனா" என்ற சந்தம்;
முதற்சீர் தனதன என்றும் வரலாம்;
"விளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்" என்ற வாய்பாடு.



2) சம்பந்தர் தேவாரம் - 3.9.1 -
கேள்வியர் நாடொறும் ஓதுநல் வேதத்தர் கேடிலா
வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே.



3) வெண்ணியூர் - (கோயில் வெண்ணி) - கரும்பேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=310
திருவெண்ணியூர் - வெண்ணிக்கரும்பர் கோயில் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=266

-------------- --------------

No comments:

Post a Comment