Saturday, February 20, 2016

02.76 – புனவாயில் - ("திருப்புனவாசல்")

02.76 – புனவாயில் - ("திருப்புனவாசல்")



2013-02-03
திருப்புனவாயில் (இக்காலத்தில் "திருப்புனவாசல்" )
----------------------
(சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.56.1 - "இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற")



1)
பாம்பொடு வாண்மதியைப் படர் செஞ்சடை வைத்தவனே
காம்பன தோளிபங்கா கலை மான்மறிக் கையினனே
பூம்பொழில் சூழ்ந்தழகார் புன வாயில்நி லாயவனே
சாம்பலை ஆடிறையே தமி யேனிடர் தீர்த்தருளே.



வாண்மதி - வாள் மதி - ஒளி வீசும் சந்திரன்;
காம்பு அன தோளி - மூங்கில் போன்ற புஜம் உடையவள் - உமையம்மை;
கலைமான்மறி - ஆண் மான்கன்று;
நிலாயவன் - நிலவி நின்றவன்;
புனவாயினிலாயவனே - புனவாயில் நிலாயவனே; (ல்+நி = னி);
ஆடுதல் - பூசுதல் (To rub, besmear, as sandal paste);
தமியேன் - துணையற்ற நான்;


பாம்பையும் ஒளிவீசும் சந்திரனையும் படர்ந்த செஞ்சடையில் வைத்தவனே; மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையம்மையைப் பங்காக உடையவனே; ஆண் மான்கன்றைக் கையில் ஏந்தியவனே; பூஞ்சோலைகள் சூழ்ந்து அழகு பொருந்திய திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; திருநீற்றைப் பூசிய இறைவனே; தனித்து வருந்தும் அடியேன் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



2)
எலிதிரி தூண்டிடவும் எழில் வானமும் ஈந்தவனே
மெலிவுறு வெண்மதியை விரி செஞ்சடை மேலணிந்தாய்
பொலிவுறு சோலைகள்சூழ் புன வாயில்நி லாயவனே
புலியதள் ஆடையினாய் புகழ் வேனிடர் தீர்த்தருளே.

வானமும் எச்சவும்மை;
(திருமறைக்காட்டில் சன்னிதியில் தீபத்தில் நெய் உண்ணும்போது) எலி தற்செயலாகத் திரியைத் தூண்டிவிட்ட செயலுக்கு மகிழ்ந்து அதற்கு மண்ணோடு வானுலகமும் அருள்புரிந்தவனே; தேய்ந்து வாடிய சந்திரனை விரிந்த செஞ்சடைமேல் அணிந்தவனே; அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; உன் புகழே பாடும் அடியேன் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.


* அடி-1 திருமறைக்காட்டில் நிகழ்ந்ததைச் சுட்டியது. மஹாபலியின் பூர்வ ஜன்ம வரலாறு.
(அப்பர் தேவாரம் - 4.49.8 -
"நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.")



3)
அன்றிமை யோர்பரவ அரு நஞ்சினை உண்டவனே
மன்றினில் ஆடிறையே மலை மங்கையொர் பங்குடையாய்
பொன்றிகழ் கொன்றையினாய் புன வாயில்நி லாயவனே
வென்றிகொள் ஏறுடையாய் வினை யேனிடர் தீர்த்தருளே.



ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
பொன்றிகழ் - பொன் திகழ் - பொன்னிறம் விளங்கும்; (4.35.9 - "பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்...");
வென்றி - வெற்றி;


முன்னம் தேவர்கள் போற்றி வணங்கவும், அவர்களுக்கு அருள்புரிந்து, கொடுவிடத்தை உண்டு காத்தவனே; அம்பலத்தில் திருநடம் செய்பவனே; மலைமகளை ஓர் பங்காக உடையவனே; பொன்போல் திகழும் கொன்றைமலரை அணிந்தவனே; திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; வெற்றி உடைய இடபத்தை ஊர்தியாக உடையவனே; தீவினையேனாகிய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



4)
காமனைக் கண்ணழலாற் கணப் போதினில் நீறுசெய்தாய்
தூமறை சொன்னவனே சுடர் ஏந்திந டிப்பவனே
பூமலி சோலைகள்சூழ் புன வாயில்நி லாயவனே
சோமனைச் சூடிறையே தொழு வேனிடர் தீர்த்தருளே.



அழல் - நெருப்பு;
சுடர் - தீ;
நடித்தல் - கூத்தாடுதல்;
சோமன் - சந்திரன்;


மன்மதனை நெற்றிக்கண்ணால் கணப்பொழுதினில் சாம்பல் ஆக்கியவனே; தூய வேதத்தைச் சொன்னவனே; அனலேந்தி ஆடுபவனே; பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; சந்திரனைச் சூடிய இறைவனே; உன்னைத் தொழும் என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



5)
பழியறு தண்டமிழாற் பணி பத்தருக் கன்பினனே
வழியினில் வந்துணவும் மகிழ் வோடருள் செய்பவனே
பொழிலிடை வண்டறையும் புன வாயில்நி லாயவனே
விழியொரு மூன்றுடையாய் வினை யேனிடர் தீர்த்தருளே.



பழி அறு தண் தமிழால் - குற்றமற்ற தமிழான தேவாரம், திருவாசகம், முதலியவற்றால்;


குற்றமற்ற தேவாரம், திருவாசகம் முதலியவற்றைப் பாடிப் பணிந்து போற்றும் பக்தர்களுக்கு அன்பு உடையவனே; அப்பர், சுந்தரர் போன்ற அடியவர்கள் தலயாத்திரை செல்லும் வழியில் பசித்திருந்த சமயத்தில் அங்கு வந்து உணவும் அளித்து அவர்களுக்கு அருளியவனே; சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; முக்கண்ணனே; தீவினையேனாகிய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.


(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ...");


* அடி-2: திருநாவுக்கரசருக்குத் திருப்பைஞ்ஞீலியிலும், சுந்தரருக்குத் திருக்குருகாவூரிலும் திருக்கச்சூரிலும் ஈசன் திருவமுது அளித்த அருட்செயல்களைச் சுட்டியது.



6)
கனலுடைக் கண்ணுடையாய் கரி யின்னுரி போர்த்தவனே
மினலிடை மங்கைபங்கா விடம் உண்டமி டற்றினனே
புனலடை நெல்வயல்சூழ் புன வாயில்நி லாயவனே
சினவிடை ஒன்றுடையாய் சிறி யேனிடர் தீர்த்தருளே.



கரி - ஆனை;
உரி - தோல்;
கரியின்னுரி - னகர ஒற்று விரித்தல் விகாரம்;
மினல் - மின்னல்;


தீ இருக்கும் (நெற்றிக்)கண் உடையவனே; ஆனையின் தோலைப் போர்த்தவனே; மின்னல் போன்ற இடையை உடைய உமையம்மையைப் பங்காக உடையவனே; விடத்தை உண்ட நீலகண்டனே; நீர் அடையும் நெல்வயல்கள் சூழ்ந்த திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவனே; சிறுமைமிக்கவனாகிய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



7)
முன்பொரு பத்தருக்கா முனி வோடடற் கூற்றுதைத்தாய்
இன்புரு ஆயவனே இமை யாதமுக் கண்ணினனே
புன்சடை மேற்பிறையாய் புன வாயில்நி லாயவனே
மின்னிடை யாள்துணைவா வினை யேனிடர் தீர்த்தருளே.



முனிவு - கோபம்;
அடல் கூற்று - வலிய நமன்;
புன்மை - புகர் நிறம் (tawny colour) - (tawny - of an orange-brown or yellowish-brown color);
புன்சடை - பொன்போலும் செஞ்சடை;
மின் - மின்னல்;


முன்னம் மார்க்கண்டேயருக்காக வலிய காலனைக் கோபித்து உதைத்தவனே; இன்ப வடிவினனே; இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடையவனே; பொன்போல் விளங்கும் செஞ்சடையின்மேல் பிறைச்சந்திரனை அணிந்தவனே; திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; மின்னலைப் போன்ற இடையை உடைய உமையம்மைக்குக் கணவனே; தீவினையேனாகிய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



8)
வெற்பதன் மேல்மலர்த்தாள் விரல் ஊன்றியி ராவணன்றன்
கற்பொலி தோள்நெரித்தாய் கழல் போற்றவும் வாளளித்தாய்
பொற்சடை மேற்பிறையாய் புன வாயில்நி லாயவனே
அற்புத னேஅடிகேள் அடி யேனிடர் தீர்த்தருளே.



கற்பொலி தோள் - கல்+பொலி+தோள் = மலை போல விளங்கிய வலிய புயங்கள்;
அடிகேள் - அடிகள் என்பது விளியில் அடிகேள் என்று ஆயிற்று;


(கயிலைமலையை இராவணன் அசைத்தபோது) மலைமேல் மலர் போன்ற பாதத்து விரலை ஊன்றி இராவணனின் மலை போன்ற வலிய தோள்களை நசுக்கியவனே; அவன் உன் திருவடியைப் போற்றிப் பாடவும், மகிழ்ந்து அவனுக்குச் சந்திரஹாசம் என்ற வாளை அருள்செய்தவனே; பொன் போன்ற சடைமேல் பிறைச்சந்திரனை அணிந்தவனே; திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; அற்புதனே; கடவுளே; என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



9)
கடிமலர் மேலுறைவான் கடல் மேல்துயில் வானிவர்கள்
முடியடி நேடிடவே முனம் ஓங்கழல் ஆனவனே
பொடியணி மார்பினனே புன வாயில்நி லாயவனே
அடியிணை யேதொழுதேன் அடி யேனிடர் தீர்த்தருளே.



கடி - வாசனை;
நேடுதல் - தேடுதல்;
பொடி - திருநீறு;


வாசத் தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாற்கடலில் துயிலும் திருமாலும் முடியையும் அடியையும் தேடுமாறு முன்பு ஓங்கும் சோதி ஆனவனே; திருநீறு பூசிய மார்பினனே; திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; உன் இரு திருவடிகளையே தொழுதேன்; என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



10)
வெள்ளிய நீறணிய மிக அஞ்சிடும் வீணருரை
கள்ளம கன்றுனையே கரு தன்பருக் கன்புடையாய்
புள்ளினம் ஆர்பொழில்சூழ் புன வாயில்நி லாயவனே
தெள்ளுந திச்சடையாய் சிறி யேனிடர் தீர்த்தருளே.



வெள்ளிய - வெண்மையான;
கருதுதல் - விரும்புதல்;
புள் - பறவை;
ஆர்த்தல் - ஒலித்தல்;
தெள்ளுதல் - தெளிவாதல்;


வெண்திருநீற்றைப் பூச மிகவும் பயப்படுகிற வீணர்கள் சொல்லும் வஞ்ச வார்த்தைகளை நீங்கி, உன்னையே விரும்பும் பக்தர்களுக்கு அன்பு உடையவனே; பறவைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; தெளிந்த கங்கையைச் சடையில் உடையவனே; சிறுமைமிக்க என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.



11)
உருவினில் மாதொருபால் உடன் ஆகிய உத்தமனே
இருவினைக் கோர்மருந்தே இமை யோர்தனி நாயகனே
பொருவிடை ஊர்தியினாய் புன வாயில்நி லாயவனே
அருமணி காண்மிடற்றாய் அடி யேனிடர் தீர்த்தருளே.



உடன் - ஒக்க (adv. 1. Together with);
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்");
ஓர் - ஒரு; ஒப்பற்ற;
தனி - ஒப்பற்ற;
பொரு விடை - போர் செய்யும் இடபம்;
அரு மணி காண் மிடற்றாய் - அரிய நீலமணி தோன்றும் கண்டத்தனே;


திருமேனியில் உமையம்மை ஒரு பக்கம் சேரும் உத்தமனே; இருவினையைத் தீர்க்கும் ஒரு மருந்தே; தேவர்களின் ஒப்பற்ற தலைவனே; போர்செய்யும் இடபத்தை வாகனமாக உடையவனே; திருப்புனவாயிலில் எழுந்தருளியவனே; அரிய நீலமணி தோன்றும் கண்டம் உடையவனே; என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
  • சந்த விருத்தம் - “தானன தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்.
  • அடிகளின் முதற்சீர் - தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.
  • "தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா
  • இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.
  • இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.
  • ப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).).
2) சம்பந்தர் தேவாரம் - 3.61.1 -
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.
3) திருப்புனவாயில் (இக்காலத்தில் "திருப்புனவாசல்" ) - கோயில் தகவல்கள் :
விருத்தபுரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=254
பழம்பதிநாதர் கோயில் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=212 )

-------- ---------------

No comments:

Post a Comment