Showing posts with label அறுசீர்ச் சந்தவிருத்தம். Show all posts
Showing posts with label அறுசீர்ச் சந்தவிருத்தம். Show all posts

Monday, November 16, 2026

P.529 - வெண்ணெய்நல்லூர் - விண்ணவர் விரைமலர்

2020-10-25

P.529 - வெண்ணெய்நல்லூர்

-----------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா தான தானா);

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")


1)

விண்ணவர் விரைமலர் இட்டடி வாழ்த்திட மேருவில்லால்

நண்ணலார் முப்புரம் தீப்புக எய்தவன் நரைவெளேற்றன்

பெண்ணையோர் பங்கெனக் காட்டிடும் பெற்றியன் பேணுமிடம்

பெண்ணையின் தென்கரை வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


விண்ணவர் விரைமலர் இட்டு அடி வாழ்த்திட - தேவர்கள் வாசமலர்களைத் தூவித் திருவடியை வணங்க;

மேருவில்லால் நண்ணலார் முப்புரம் தீப்-புக எய்தவன் - மேருமலையை வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களும் எரிந்து விழும்படி ஒரு கணை எய்தவன்; (நண்ணலார் - பகைவர்); (சம்பந்தர் தேவாரம் - 3.51.5 - "நண்ணலார் புர(ம்) மூன்றெரி ஆலவாய் அண்ணலே");

நரை-வெள்-ஏற்றன் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);

பெண்ணை ஓர் பங்கு எனக் காட்டிடும் பெற்றியன் - உமையை ஒரு பங்காகத் திருமேனியில் காட்டும் பெருமை உடையவன்; (பெற்றி - பெருமை);

பேணும் இடம் - அப்பெருமான் விரும்பி உறையும் தலம்;

பெண்ணையின் தென்கரை வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


2)

மண்ணுளார் வானவர் வணங்கிடும் திருவடி மலரைஉன்னம்

பண்ணுமோர் மாணியைக் காத்துவெங் கூற்றுமேல் பாய்ந்தபாதன்

ஒண்ணுதல் வேற்கண்ணி ஒருபுடை மகிழ்ந்தவன் உறையுமிடம்

விண்ணுயர் பொழிலணி வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


மண்-உளார் வானவர் வணங்கிடும் திருவடி-மலரை - நிலவுலகத்தவர்களும் தேவர்களும் வணங்கும் திருவடித்-தாமரையை;

உன்னம் பண்ணும் ஓர் மாணியைக் காத்து வெங்கூற்றுமேல் பாய்ந்த பாதன் - மனத்தில் தியானம் செய்யும் ஒப்பற்ற மார்கண்டேயரைக் காத்துக் கொடிய காலன்மேல் பாய்ந்து உதைத்தவன்; (உன்னம் - தியானம்); (சம்பந்தர் தேவாரம் - 2.40.3 - "நன்னெஞ்சே உனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே உன்னஞ்செய்து இருகண்டாய்");

ஒண்ணுதல் வேற்கண்ணி ஒரு புடை மகிழ்ந்தவன் - ஒளி திகழும் நெற்றியையுடையவளும் வேல் போன்ற கண்ணை உடையவளுமான உமையை ஒரு பக்கம் பாகமாக விரும்பியவன்; (ஒண்ணுதல் - ஒள்-நுதல்); (* வேற்கண்ணி - இத்தலத்து இறைவி திருநாமம்);

உறையும் இடம் - அப்பெருமான் விரும்பி உறையும் தலம்;

விண்-உயர் பொழில் அணி வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - வானில் ஓங்கும் சோலை சூழும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


3)

ஒருமுடை நாறிடு தலையினில் ஊணிரந் தூர்கள்தோறும்

தெருவிடை வருபவன் செஞ்சுடர் மேனிமேல் திகழு(ம்)நீற்றன்

பொருவிடை ஊர்தியன் பகீரதன் போற்றிடப் புனலணிந்த

விரிசடைப் பரனிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


ஒரு முடை நாறிடு தலையினில் ஊண் இரந்து ஊர்கள்தோறும் தெருவிடை வருபவன் - முடை நாறுகின்ற மண்டையோட்டை ஏந்திப் பிச்சையேற்றுப் பல ஊர்களில் தெருவில் வருபவன்; (முடை - புலால்); (ஊண் - உணவு); (சுந்தரர் தேவாரம் - 7.45.5 - "சென்றவன் சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை");

செஞ்சுடர் மேனிமேல் திகழும் நீற்றன் - செஞ்சுடர் போன்ற செம்மேனியின்மேல் ஒளிவீசும் திருநீற்றைப் பூசியவன்;

பொரு-விடை ஊர்தியன் - போர் செய்யும் இடபத்தை ஊர்தியாக உடையவன்; (பொருதல் - போர்செய்தல்);

பகீரதன் போற்றிடப் புனல் அணிந்த விரிசடைப் பரன் இடம் - பகீரதன் தவம் செய்து வேண்ட இரங்கிக் கங்கையைத் தன் விரித்த சடையில் தாங்கிய பரமன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


4)

அத்தியைச் செற்றதன் அதளினைப் போர்த்தவன் ஆலமுண்ட

உத்தமன் ஒண்கழல் போற்றிய உம்பர்கள் உய்யுமாறு

மத்தநன் மலரணி சடைமிசைப் பாம்புடன் மதியைவைத்த

வித்தகன் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


அத்தியைச் செற்று அதன் அதளினைப் போர்த்தவன் - யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்தவன்; (அத்தி - ஹஸ்தி - யானை); (செறுதல் - வெல்தல்; அழித்தல்); (அதள் - தோல்);

ஆலம் உண்ட உத்தமன் ஒண்கழல் போற்றிய உம்பர்கள் உய்யுமாறு - ஒளியுடைய திருவடியை வணங்கிய தேவர்கள் உய்யும்படி ஆலகாலத்தை உண்ட உத்தமன்;

மத்த-நன்மலர் அணி சடைமிசைப் பாம்புடன் மதியை வைத்த வித்தகன் - நல்ல ஊமத்தமலர் அணிந்த சடையின்மேல் பாம்புடன் பிறையை வாழவைத்த வல்லவன்; (மத்தம் - ஊமத்தை);

உறைவிடம் - அப்பெருமான் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


5)

படைக்கலம் வேண்டிய பார்த்தனுக் கருளிடப் பன்றிஎய்தான்

அடைக்கலம் என்றடை திங்களை அஞ்சடை அணியவல்லான்

மடக்கொடி மங்கையைப் பங்கென ஒருபுறம் வைத்துகந்த

விடைக்கொடி யானிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


படைக்கலம் வேண்டிய பார்த்தனுக்கு அருளிடப் பன்றி எய்தான் - பாசுபதாஸ்திரம் வேண்டித் தவம் செய்த அர்ஜுனனுக்கு அருள்செய்ய வேடனாகிச் சென்று ஒரு பன்றியை எய்தவன்; (படைக்கலம் - ஆயுதம்);

அடைக்கலம் என்று அடை திங்களை அஞ்சடை அணிய வல்லான் - சரண் புகுந்த சந்திரனை அழகிய சடையில் அணிந்தவன்; (அம் - அழகு);

மடக்கொடி மங்கையைப் பங்கு என ஒரு புறம் வைத்து உகந்த விடைக்கொடியான் இடம் - இளங்கொடி போன்ற உமையைப் பங்காக ஒரு பக்கத்தில் விரும்பி வைத்தவனும் இடபக்கொடியை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


6)

உள்ளிடும் அன்பருக் குறுதுணை ஆனவன் ஒருகரத்தில்

துள்ளிடும் மான்மறி தாங்கிய சுந்தரன் தூயநீற்றன்

கள்வடி மாமலர்க் கொன்றையந் தாரினன் காலகாலன்

வெள்விடை யானிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


உள்ளிடும் அன்பருக்கு உறுதுணை ஆனவன் - மனத்தில் வைத்து எண்ணுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணை ஆனவன்; (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் வைத்தல்);

ஒரு கரத்தில் துள்ளிடும் மான்மறி தாங்கிய சுந்தரன் - ஒரு கையில் துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய அழகன்;

தூய நீற்றன் - தூய திருநீற்றைப் பூசியவன்;

கள் வடி மாமலர்க் கொன்றையந்-தாரினன் - தேன் சொரியும் கொன்றைமலர்மாலை அணிந்தவன்;

காலகாலன் - காலனுக்குக் காலன்; காலனை உதைத்து அழித்தவன்;

வெள்விடையான் இடம் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய பெருமான் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


7)

மகிடமே ஊர்தியா வருநமன் தனதுயிர் மாய்த்தபாதர்

திகிரியைத் தரைமிசை எழுதியச் சலந்தரற் செற்றதேவர்

உகிர்தனால் மலரினான் ஒருசிரம் கிள்ளினார் உரைகடந்த

விகிர்தனார் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


மகிடமே ஊர்தியா வரு நமன்தனது உயிர் மாய்த்த பாதர் - எருமையே வாகனமாக வரும் கூற்றுவனது உயிரை அழித்த திருவடியை உடையவர்; (மகிடம் - மஹிஷம் - எருமை);

திகிரியைத் தரைமிசை எழுதி அச்-சலந்தரற் செற்ற தேவர் - சக்கரம் ஒன்றைத் தரையில் எழுதி (அந்தச் சக்கரத்தால்) அந்த ஜலந்தராசுரனை அழித்த தேவர்; ("சலந்தரற் செற்ற தேவர்" - சலந்தரனைச் செற்ற தேவர்; உயர்திணையில் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

உகிர்தனால் மலரினான் ஒரு சிரம் கிள்ளினார் - நகத்தால் பிரமனது ஒரு தலையைக் கிள்ளியவர்; (உகிர் - நகம்; உகிர்தனால் - உகிர்தன்னால் - உகிரால்); (மலரினான் - மலரோன் - தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன்); (அப்பர் தேவாரம் - 4.84.7 - "உளைந்தான் செறுதற் கரியான் தலையை உகிரொன்றினால் களைந்தான்");

உரை கடந்த விகிர்தனார் உறைவிடம் - சொல்லைக் கடந்தவரும், விகிர்தன் என்ற திருநாமம் உடையவருமான சிவபெருமானார் உறையும் தலம்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


8)

ஆட்டினான் கயிலையை அலறிட ஓர்விரல் அந்தவெற்பில்

நாட்டினார் பின்னவன் நல்லிசை பாடவும் நாளுமீந்தார்

பாட்டினால் நாள்தொறும் பரவிடும் பத்தர்தம் பாவமெல்லாம்

வீட்டினார் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


ஆட்டினான் கயிலையை அலறிட ஓர் விரல் அந்த வெற்பில் நாட்டினார் - கயிலைமலையைப் அசைத்துப் பெயர்த்த இராவணன் அலறும்படி ஒரு திருப்பாதவிரலை அந்த மலையின்மேல் ஊன்றினார் (= ஊன்றி அவனை நசுக்கியவர்); (வெற்பு - மலை);

பின் அவன் நல்-இசை பாடவும் நாளும் ஈந்தார் - பிறகு அவன் வருந்தி இனிய இசைபாடி வழிபட, இரங்கி (வாளும் பெயரும்) வாழ்நாளும் அருளியவர்; (நாளும் - உம் - எச்சவும்மை);

பாட்டினால் நாள்தொறும் பரவிடும் பத்தர்தம் பாவமெல்லாம் வீட்டினார் உறைவிடம் - பாமாலைகள் பாடித் தினமும் போற்றும் பக்தர்களது பாவத்தையெல்லாம் தீர்ப்பவரான சிவபெருமானார் உறையும் தலம்; (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்);

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


9)

கமரிடை மாவடு உண்டருள் கருணையார் காதலிக்கும்

தமருளம் கோயிலாத் தங்கிடும் தன்மையார் சாமவேதர்

கமலனும் கண்ணனும் கழல்முடி காணொணாக் கனலதான

விமலனார் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


கமரிடை மாவடு உண்டருள் கருணையார் - வயலிடை நிலப்பிளப்பில் விழுந்த மாவடுவையும் உண்டு அரிவாட்டாய நாயனாருக்கு அருளியவர்; (கமர் - நிலப்பிளப்பு); (பெரியபுராணம் - அரிவாட்டாய நாயனார் புராணம் - 12.13.18 - "அம்பலத்தாடும் ஐயர் வீசிய செய்ய கையும் மாவடு விடேல்விடேலென் றோசையுங் கமரினின்றும் ஒக்கவே எழுந்தவன்றே");

காதலிக்கும் தமர் உளம் கோயிலாத் தங்கிடும் தன்மையார் - அன்பு செய்யும் தொண்டர்களது உள்ளமே கோயிலாக விரும்பி உறையும் இயல்பு உடையவர்;

சாமவேதர் - சாமவேதம் ஓதுபவர்;

கமலனும் கண்ணனும் கழல்-முடி காணொணாக் கனல்அது ஆன விமலனார் உறைவிடம் - பிரமன் திருமால் இவர்களால் அடியும் முடியும் காண ஒண்ணாத ஜோதியாகி ஓங்கிய தூயரான சிவபெருமானார் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


10)

பூசிடார் நீற்றினைத் தத்துவம் அறிகிலார் பொய்யைநீங்கும்

நேசமார் நெஞ்சினால் நினைபவர் இடர்களை நீக்குமீசர்

மாசிலாத் தேசனார் மலரடி தன்னைமுன் மறலிமார்பில்

வீசினார் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


பூசிடார் நீற்றினைத், தத்துவம் அறிகிலார் பொய்யை நீங்கும் - திருநீற்றைப் பூச மாட்டார்கள்; மெய்ப்பொருளை அறியமாட்டார்கள்; அவர்கள் சொல்லும் பொய்வார்த்தைகளை மதிக்கவேண்டா; விலகுங்கள்;

நேசம் ஆர் நெஞ்சினால் நினைபவர் இடர்களை நீக்கும் ஈசர் - உள்ளத்தில் பக்தியோடு தியானிக்கும் அன்பர்களது துன்பங்களை நீக்கும் ஈசர்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (அப்பர் தேவாரம் - 5.62.3 - "அன்பனை அடியார் இடர் நீக்கியை");

மாசு-இலாத் தேசனார் - குற்றமற்ற ஒளியுருவினர்; (தேசன் - தேஜோமயன்);

மலரடி-தன்னை முன் மறலி மார்பில் வீசினார் உறைவிடம் - (மார்க்கண்டேயரைக் காப்பதற்காக) மலர் போன்ற திருவடியை முன்பு காலன் மார்பில் வீசி உதைத்த சிவபெருமானர் உறையும் தலம்; (மறலி - இயமன்);

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


11)

பூக்களே கணையெனத் தாக்கிய காமனைப் பொடியதாக

நோக்கினார் கண்ணமர் நுதலினார் மூப்பிலார் நோயுமில்லார்

ஆக்கினார் உலகெலாம் அந்தமும் ஆனவர் அரையில்நாகம்

வீக்கினார் உறைவிடம் வெண்ணெய்நல் லூரினில் அருட்டுறையே.


பூக்களே கணை எனத் தாக்கிய காமனைப் பொடியதாக நோக்கினார் கண்-அமர் நுதலினார் - மலர்களையே அம்பாகக் கொண்டு தாக்கிய மன்மதனைச் சாம்பலாகும்படி பார்த்தவர், நெற்றிக்கண்ணர்;

மூப்பு இலார் நோயும் இல்லார் - முதுமை, நோய்கள் இவை இல்லாதவர்;

ஆக்கினார் உலகு-எலாம் - எல்லா உலகங்களையும் படைத்தவர்;

அந்தமும் ஆனவர் - எல்லாவற்றிற்கும் முடிவும் ஆனவர்;

அரையில் நாகம் வீக்கினார் உறைவிடம் - அரையில் பாம்பைக் கட்டியவரான சிவபெருமானார் உறையும் தலம்; (வீக்குதல் - கட்டுதல்);

வெண்ணெய்நல்லூரினில் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்துறை என்ற கோயில் ஆகும்;


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா தான தானா;

  • சந்தக் கலித்துறை - தானனா தானனா தானனா தானனா தானதானா - என்றும் கருதலாம்;

  • தானனா என்ற சீர்கள் தனதனா / தனதன என்றும் வரலாம்;

  • அடியீற்றில் - தானதானா - தனனதானா / தானதனா என்றவாறும் அமையலாம்;


வி. சுப்பிரமணியன்

-----------


Sunday, September 13, 2026

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - உம்பர் உய்ய

2020-07-30

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா தான தான தானனா - சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

* திருநல்லத்தில் (கோனேரிராஜபுரத்தில்) நடராஜமூர்த்தம் விசேஷம்;


1)

உம்பர் உய்ய நஞ்சினை .. உண்டி ருள்மி டற்றினான்

கொம்ப னாளொர் பங்கினன் .. குஞ்சி மீது கூவிளம்

வம்பு நாறு கொன்றையன் .. மார்பில் நூலன் நற்கழல்

நம்பி னார்தம் நற்றுணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


உம்பர் உய்ய நஞ்சினை உண்டு இருள்-மிடற்றினான் - தேவர் உய்யுமாறு ஆலகாலத்தை உண்டு கறுத்த கண்டன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

கொம்பனாள் ஒர் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்;

குஞ்சி மீது கூவிளம், வம்பு நாறு கொன்றையன் - தலைமேல் வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (கூவிளம் - வில்வம்); (வம்பு - வாசனை);

மார்பில் நூலன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;

நற்கழல் நம்பினார்தம் நற்றுணை - நல்ல திருவடியை விரும்பியவர்களுக்கு நல்ல துணைவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


2)

நச்ச ராவை மார்பினில் .. நல்ல ஆரம் ஆக்கினான்

கச்ச தாக மாசுணம் .. கட்டி வந்து வெண்டலைப்

பிச்சை ஏற்று ழல்பவன் .. பேதை பங்கன் நாள்தொறும்

நச்சி வாழ்த்தி னார்துணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நச்சராவை மார்பினில் நல்ல ஆரம் ஆக்கினான் - விஷப்பாம்பை மார்பில் சிறந்த மாலை போல அணிந்தவன்; (ஆரம் - மாலை);

கச்சதாக மாசுணம் கட்டி வந்து வெண்தலைப் பிச்சை ஏற்று உழல்பவன் - கச்சாகப் பாம்பை அரையில் கட்டி வந்து வெள்ளை மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவன்; (மாசுணம் - பாம்பு);

பேதை-பங்கன் - உமைபங்கன்;

நாள்தொறும் நச்சி வாழ்த்தினார் துணை - தினமும் விரும்பித் துதிப்பவர்களுக்குத் துணைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


3)

நூல்வி ளங்கு மார்பினன் .. நோயு(ம்) மூப்பும் அற்றவன்

சேல்வி ளங்கு கண்ணுமை .. சேர்ந்த செய்ய மேனியன்

பால்வி ரும்பி ஆடினான் .. பண்டை வேதம் ஆல்நிழல்

நால்வ ருக்கு ரைத்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நூல் விளங்கு மார்பினன் - பூணூல் திகழும் திருமார்பன்;

நோயு(ம்) மூப்பும் அற்றவன் - பிணியும் முதுமையும் இல்லாதவன்;

சேல் விளங்கு கண்-உமை சேர்ந்த செய்ய மேனியன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமை ஒரு பாகமாகச் சேர்ந்த செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

பால் விரும்பி ஆடினான் - பால்அபிஷேகம் விரும்பியவன்;

பண்டை வேதம் ஆல்நிழல் நால்வருக்கு உரைத்தவன் - தொன்மையான வேதங்களைக் கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்; (பண்டை - பழமை);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


4)

பொன்செய் கொன்றை மாமலர் .. புற்ற ராவி ளம்பிறை

புன்ச டைப்பு னைந்தவன் .. பூத நாதன் மென்கொடி

மின்செய் நுண்ம ருங்குலாள் .. மேனி பாகம் ஆயினான்

நன்செய் நாற்பு றந்திகழ் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


பொன்-செய் கொன்றை மாமலர், புற்றரா, இளம்பிறை புன்சடைப் புனைந்தவன் - பொன் போன்ற கொன்றைமலரையும், புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும், இளந்திங்களையும் செஞ்சடையில் அணிந்தவன்; (செய்தல் - ஒத்தல்); (புன்சடை - செஞ்சடை; புன்மை - புகர்நிறம்)

பூதநாதன் - பூதகணநாதன்;

மென்கொடி மின்-செய் நுண்-மருங்குலாள் மேனி பாகம் ஆயினான் - மென்மையான கொடி போன்றவளும் மின்னல் போன்ற சிற்றிடை உடையவளுமான உமாதேவி தன் திருமேனியில் ஒரு பாகம் ஆனவன்; (மின் - மின்னல்); (மருங்குல் -இடை); (செய் + நுண் = செய்ந்நுண்; இங்கே, ஓசைகருதி ந் மிகாது வந்தது);

நன்செய் நாற்புறம் திகழ் - வளம் மிக்க வயல் புடைசூழ்ந்த;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


5)

மென்மை மிக்க தாளிணை .. மெச்சு மாணி வாழவே

வன்மை மிக்க கூற்றினை .. மாளு மாறு தைத்தவன்

புன்மை அற்ற நெஞ்சராய்ப் .. போற்றி செய்யில் நாள்தொறும்

நன்மை செய்யு(ம்) நம்பிரான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


மென்மை மிக்க தாளிணை மெச்சு மாணி வாழவே வன்மை மிக்க கூற்றினை மாளுமாறு உதைத்தவன் - மென்மையான இருதிருவடிகளைப் போற்றிய மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக என்றும் உயிர்வாழ வலிய காலனை இறக்கும்படி உதைத்தவன்; (மெச்சுதல் - புகழ்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

புன்மை அற்ற நெஞ்சராய்ப் போற்றிசெய்யில் நாள்தொறும் நன்மை செய்யு(ம்) நம்பிரான் - தூயநெஞ்சினராகி வழிபாடு செய்தால் எந்நாளும் நன்மையே செய்யும் நம்பெருமான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


6)

வேகம் ஆர்ந்த கங்கையை .. வேணி யிற்க ரந்தவன்

பாகம் ஆர ணங்கமர் .. பற்றி லாத பண்பினன்

மேகம் ஆர்மி டற்றினன் .. வேதம் ஓது நாவினன்

நாகம் ஆரு(ம்) மார்பினன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வேகம் ஆர்ந்த கங்கையை வேணியில் கரந்தவன் - வேகம் மிகுந்த கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை); (கரத்தல் - ஒளித்தல்);

பாகம் ஆரணங்கு அமர், பற்று-இலாத பண்பினன் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பிய, எப்பற்றும் இல்லாதவன்; (அணங்கு - தெய்வம்; தெய்வப்பெண்); (அப்பர் தேவாரம் - 5.18.9 - "ஆரணங்கு ஒருபாலுடை மைந்தனே"); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

மேகம் ஆர் மிடற்றினன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

வேதம் ஓது நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

நாகம் ஆரு(ம்) மார்பினன் - பாம்பை அணிந்த திருமார்பன்; (ஆர்தல் - அணிதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


7)

தக்கன் வேள்வி செற்றவன் .. தந்தை தாயி லாதவன்

அக்கி னைப்பு னைந்தவன் .. அங்கம் ஆறும் ஓதினான்

செக்கர் அஞ்ச டைப்பரன் .. தேரில் ஏறி அச்சிற

நக்க ரண்கள் அட்டவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


தக்கன் வேள்வி செற்றவன் - தக்கன் செய்த அவவேள்வியை அழித்தன்; (செறுதல் - அழித்தல்);;

தந்தை தாய் இலாதவன் - தனக்கு ஒரு தாய்தந்தை இல்லாதவன்;

அக்கினைப் புனைந்தவன் - எலும்பை அணிந்தவன்; (அக்கு - எலும்பு);

அங்கம் ஆறும் ஓதினான் - ஆறங்கங்களைப் பாடியருளியவன்;

செக்கர் அஞ்சடைப்-பரன் - சிவந்த அழகிய சடையுடைய பரமன்; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

தேரில் ஏறி அச்சு இற, நக்கு அரண்கள் அட்டவன் - (தேவர்கள் செய்த) தேரில் ஏறியதும் அதன் அச்சு முரிந்ததும், சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (இறுதல் - முரிதல்); (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


8)

வரையி டந்த மூடனார் .. வாய்கள் பத்த ரற்றவே

விரலை வைத்த டர்த்தவன் .. வெற்றி வாளும் ஈந்தவன்

பரவி னார்கள் தீவினை .. பாற்றி இன்ப(ம்) நல்குவான்

நரைவெ ளேறு கந்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வரை இடந்த மூடனார் வாய்கள் பத்து அரற்றவே விரலை வைத்து அடர்த்தவன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்து வாய்களும் அழுது புலம்பும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (மூடனார் - அறிவில்லாதவன் - இங்கே, இராவணன்; ஆர் விகுதி இழிவுசிறப்பு); (அரற்றுதல் - புலம்புதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வெற்றி வாளும் ஈந்தவன் - (பிறகு, இராவணன் பாடிய துதிகளைக் கேட்டு இரங்கி) அவனுக்கு (வாழ்நாள், பெயர் இவற்றோடு) சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்; (வாளும் - உம் - எச்சவும்மை);

பரவினார்கள் தீவினை பாற்றி இன்ப(ம்) நல்குவான் - போற்றித் துதிக்கும் பக்தர்களது தீவினையை அழித்து அவர்களுக்கு இன்பம் தருபவன்; (பரவுதல் - துதித்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

நரை-வெளேறு உகந்தவன் - மிகவும் வெண்மையான எருதை வாகனமாக மகிழ்ந்தவன்; (நரை - வெண்மை); (வெளேறு - வெள்ளேறு; ஓசைகருதி ள் மிகாது வந்தது); (நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


9)

வெண்ணெய் உண்ட மாலொடு .. வேதன் நேட நீண்டவன்

கண்ணி லங்கு நெற்றியன் .. காம னைச்சி னந்தவன்

பெண்ணி லங்கு மேனியன் .. பெற்றம் ஏறு பெற்றியன்

நண்ணி னார்க்க ருள்பவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வெண்ணெய் உண்ட மாலொடு வேதன் நேட நீண்டவன் - (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெய் உண்டவனான திருமாலும் பிரமனும் அடிமுடி தேட எல்லையின்றி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

கண் இலங்கு நெற்றியன் - நெற்றியில் கண் உடையவன்;

காமனைச் சினந்தவன் - மன்மதனைக் கோபித்து எரித்தவன்;

பெண் இலங்கு மேனியன் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடபவாகனம் ஏறும் பெருமையினன்; (பெற்றம் - எருது); (பெற்றி - தன்மை; பெருமை);

நண்ணினார்க்கு அருள்பவன் - தன்னை அடைந்தவர்களுக்கு அருள்பவன்; (நண்ணுதல் - கிட்டுதல்; பொருந்துதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


10)

நீறு பூச அஞ்சிடும் .. நீசர் சொல்லை நீங்குமின்

ஆறு சூடி நாமமாம் .. அஞ்செ ழுத்தை நாள்தொறும்

கூறும் அன்பர் நெஞ்சிடம் .. கொள்ளும் எந்தை சங்கரன்

நாறு கொன்றை மாலையான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நீறு பூச அஞ்சிடும் நீசர் சொல்லை நீங்குமின் - திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற கீழோர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஆறுசூடி நாமம் ஆம் அஞ்செழுத்தை நாள்தொறும் கூறும் அன்பர் நெஞ்சு இடம் கொள்ளும் எந்தை - கங்காதரனது திருநாமம் ஆகும் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் தந்தை;

சங்கரன் - சங்கரன் (நன்மை செய்பவன்);

நாறு கொன்றை மாலையான் - மணம் கமழும் கொன்றைமாலை அணிந்தவன்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


11)

கோளு(ம்) நாளும் என்செயும் .. குன்ற வில்லி தன்னையே

மூளும் அன்பி னால்தினம் .. முன்ப ணிந்து போற்றினால்

நீளும் வேணி தன்னிடை .. நீர்க ரந்த நின்மலன்

நாளும் இன்ப(ம்) நல்குவான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


கோளு(ம்) நாளும் என் செயும் - நவகிரகங்களும், (நட்சத்திரம், திதி, கிழமை முதலிய) நாள்களும் என்ன செய்யும்? (தீமை செய்யமாட்டா); (செயும் - செய்யும்);

குன்றவில்லி-தன்னையே மூளும் அன்பினால் தினம் முன்-பணிந்து போற்றினால் - மேருவில் ஏந்தியவனையே பொங்கும் அன்பால் தினமும் வணங்கித் துதித்தால்; (குன்றம் - மலை);

நீளும் வேணி-தன்னிடை நீர் கரந்த நின்மலன் - நீளும் சடையில் கங்கையை ஒளித்த பரிசுத்தன்; (வேணி - சடை); (நின்மலன் - நிர்மலன்);

நாளும் இன்ப(ம்) நல்குவான் - எந்நாளும் இன்பம் தருவான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


பிற்குறிப்புகள் :

யாப்புக்குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4-ஆம் சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5-ஆம் சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6-ஆம் சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

--------- ---------


Wednesday, April 30, 2025

P.404 - கடவூர் - காத ஓடிவரு வன்னமன்

2017-06-17

P.404 - கடவூர்

---------------------------------

(சந்தக் கலித்துறை - தானதான தனதானன தானன தானா தனதானா;

அறுசீர்ச் சந்தவிருத்தம் என்றும் நோக்கலாம்;

சில பாடல்களில் முதற்சீர் "தனனதான" என்றும் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.2.1 - "குறிகலந்தவிசை பாடலினான்நசை")

(சம்பந்தர் தேவாரம் - 1.2.3 - "பண்ணிலாவும் மறைபாடலினான்")


1)

காதஓடி வருவன்னமன் மாள்வுற அன்று கழலார்க்கப்

பாதம்வீசி அடியாருயிர் காத்தவர் பாம்பைப் புனைமார்பர்

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடமென்பர்

காதலாளர் கருதித்தொழு தேத்திட ஆரும் கடவூரே.


காத ஓடி வரு வன்-நமன் மாள்வுற அன்று கழல் ஆர்க்கப் பாதம் வீசி அடியார் உயிர் காத்தவர் - கொல்ல ஓடி வந்த கொடிய வலிய கூற்றுவனே மாளுமாறு அச்சமயத்தில் திருப்பாதத்தை வீசி மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (காதுதல் - கொல்தல்);

பாம்பைப் புனை மார்பர் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவர்;

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடம் என்பர் - உமையை ஒரு பக்கத்தில் உடைய திருமேனியர் உறையும் தலம் ஆவது;

காதலாளர் கருதித் தொழுது ஏத்திட ஆரும் கடவூரே - அன்பர்கள் விரும்பித் தொழுது போற்றிட நிறையும் திருக்கடவூர்;


2)

நடலையின்றி அடிவாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே

படவுதைத்த அடிகள்பலி தேர்ந்துழல் பண்பர் பரமேட்டி

சுடலைநீறு துதைமார்பினில் நூலணி தூயர் இடமென்பர்

கடலெழுந்த முகிலேதொடு கோபுரம் ஆரும் கடவூரே.


நடலை இன்றி அடி வாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே பட உதைத்த அடிகள் - வஞ்சம் இன்றித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனே அழியும்படி உதைத்த கடவுள்;

பலி தேர்ந்து உழல் பண்பர் பரமேட்டி - பிச்சையேற்று உழலும் பண்பினர், பரமர்;

சுடலை நீறு துதை மார்பினில் நூல் அணி தூயர் இடம் என்பர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய மார்பில் பூணூல் அணிந்த தூயவர் உறையும் தலம் ஆவது;

கடல் எழுந்த முகிலே தொடு கோபுரம் ஆரும் கடவூரே - கடலில் தோன்றிய மேகமே தொடுமாறு உயர்ந்த கோபுரம் பொருந்திய திருக்கடவூர்.


3)

அரியஅன்பர் உயிருக்கரண் ஆனவர் ஆடல் புரிநாதர்

பெரியதேவர் கழலைப்பல வானவர் பேணப் புரமூன்றும்

எரியுமாறு மலையைச்சிலை ஆக்கிய ஈசர் இடமென்பர்

கரியமேகம் அணவும்படி நீள்பொழில் ஆரும் கடவூரே.


அரிய அன்பர் உயிருக்கு அரண் ஆனவர் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (பக்தர்களைக் காப்பவர்);

ஆடல் புரி நாதர் - கூத்தர்;

பெரிய-தேவர் கழலைப் பல வானவர் பேணப் - மகாதேவர் திருவடியைப் பல தேவர்களும் போற்ற அவர்களுக்கு இரங்கி;

புரம் மூன்றும் எரியுமாறு மலையைச் சிலை ஆக்கிய ஈசர் இடம் என்பர் - முப்புரங்களும் எரியும்படி மேருமலையை வில்லாக வளைத்த ஈசனார் உறையும் தலம் ஆவது;

கரிய மேகம் அணவும்படி நீள்-பொழில் ஆரும் கடவூரே - கரிய மேகம் தொட உயரும் சோலை திகழும் திருக்கடவூர். (அணவுதல் - அணுகுதல்);


4)

நலமிலங்கு மலராலடி வாழ்த்திய நம்பி உயிர்காத்தார்

சலமிலங்கு மதிசூடிய தாழ்சடை அண்ணல் தனியேற்றர்

வலமிலங்கு மழுவாளினர் மாதொரு பங்கர் மகிழூராம்

கலயர்முன்பு புகையால்தொழு தேத்திய சீரார் கடவூரே.


நலம் இலங்கு மலரால் அடி வாழ்த்திய நம்பி உயிர் காத்தார் - மார்க்கண்டேயரைக் காத்த வரலாறு;

சலம் இலங்கு மதி சூடிய தாழ்சடை அண்ணல் - கங்காதரர், சந்திரசேகரர், ஜடாதாரி;

தனி ஏற்றர் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவர்;

வலம் இலங்கு மழுவாளினர் - வலக்கையில் வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவர்; (வலம் - வலப்பக்கம்; வெற்றி; வலிமை);

மாது ஒரு பங்கர் மகிழ் ஊர் ஆம் - உமைபங்கர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கலயர் முன்பு புகையால் தொழுது ஏத்திய சீர் ஆர் கடவூரே - குங்கிலியக்-கலய நாயனார் முன்பு தூபத்தால் வழிபாடு செய்த வளமும் புகழும் மிகுந்த திருக்கடவூர்;


5)

நறையிலங்கு மலர்போற்கழ லால்நமன் மாள உதைசெய்தார்

இறையிலங்கு வளையாளையி டத்தினில் ஏற்ற பெருமானார்

மறையிலங்கு திருநாவினர் மாமணி கண்டர் மகிழூராம்

கறையிலங்கு கடியார்பொழில் சூழ்கவின் ஆரும் கடவூரே.


நறை இலங்கு மலர்போல் கழலால் நமன் மாள உதைசெய்தார் - வாசமலர் போன்ற திருவடியால் கூற்றுவன் அழியுமாறு உதைத்தவர்; (நறை - தேன்; வாசனை);

இறை இலங்கு வளையாளை இடத்தினில் ஏற்ற பெருமானார் - முன்கையில் வளை அணிந்த உமையை இடப்பக்கத்தில் ஏற்ற பெருமான்; ( இறை - முன்-கை);

மறை இலங்கு திருநாவினர் - வேதம் ஓதியவர்;

மா-மணி-கண்டர் மகிழ் ஊர் ஆம் - அழகிய நீலகண்டர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கறை இலங்கு கடி ஆர் பொழில் சூழ் கவின் ஆரும் கடவூரே - அடர்ந்த, மணம் கமழும், சோலை சூழ்ந்த அழகிய திருக்கடவூர்; (கறை - இருள்); (கடி - வாசனை);


6)

தேனிலங்கு மலரால்தொழு தாருயிர் காத்த திருவாளர்

ஊனிலங்கு தலையிற்பலி ஏற்பவர் உம்பர்க் கொருநாதர்

வானிலங்கு மதியம்புனை செஞ்சடை மைந்தர் மகிழூராம்

கானிலங்கு பொழிலிற்கரு வண்டிசை பாடும் கடவூரே


தேன் இலங்கு மலரால் தொழுதார் உயிர் காத்த திருவாளர் - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவர், திருவுடையவர்;

ஊன் இலங்கு தலையில் பலி ஏற்பவர் - புலால் நாறும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவர்;

உம்பர்க்கு ஒரு நாதர் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர்;

வான் இலங்கு மதியம் புனை செஞ்சடை மைந்தர் மகிழ் ஊர் ஆம் - வானத்தில் விளங்கும் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த அழகர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கான் இலங்கு பொழிலில் கருவண்டு இசை பாடும் கடவூரே - மணம் கமழும் சோலையில் கரிய வண்டுகள் இசைபாடுகின்ற திருக்கடவூர். (கான் - வாசனை);


7)

காமனைக்கண் அழலால்சுட வல்லவர் காலிற் கழலார்த்தார்

நாம(ம்)நித்தம் நவில்மாணியை நண்ணிய கூற்றை உதைநம்பர்

மாமரத்தை இருகூறிடு வேலவன் அத்தர் மகிழூராம்

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்தடை சோலைக் கடவூரே.


காமனைக் கண் அழலால் சுட வல்லவர் - மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சுட்டவர்;

காலில் கழல் ஆர்த்தார் - காலில் கழலை அணிந்தவர்;

நாமம் நித்தம் நவில் மாணியை நண்ணிய கூற்றை உதை நம்பர் - அப்பெருமானார் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய நமனை உதைத்தவர், நம்பன் என்ற திருநாமம் உடையவர்;

மாமரத்தை இரு-கூறிடு வேலவன் அத்தர் மகிழ் ஊர் ஆம் - சூரசம்ஹாரத்தின்போது, சூரபதுமன் மாமரத்தின் உருவில் நின்றபோது, அதனை வேல்விட்டு இரண்டாகப் பிளந்த முருகனுக்குத் தந்தையாரான ஈசர் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.96.4 - "அத்தர் அன்னியூர்ச் சித்தர்");

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்து அடை சோலைக் கடவூரே - காமரம் (சீகாமரம்) என்ற பண்ணை வரியுடைய வண்டுகள் ஒலித்து அடைகின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


8)

புத்தியின்றி அருவெற்பெறி கோன்வலி பொன்றக் கழலூன்றிப்

பத்துவாய்கள் பலநாளிசை பாடுதல் கேட்டுப் படையீந்தார்

மத்தயானை அதனீருரி மூடிய மார்பர் மகிழூராம்

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே.


புத்தியின்றி அருவெற்பு எறி கோன்-வலி பொன்றக் கழல் ஊன்றிப் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணனது வலிமை அழியும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கி;

பத்து வாய்கள் பலநாள் இசை பாடுதல் கேட்டுப் படை ஈந்தார் - பின் அவனது பத்துவாய்களும் பலகாலம் இசைபாடித் துதிக்கக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தவர்;

மத்தயானை அதன் ஈருரி மூடிய மார்பர் மகிழ் ஊர் ஆம் - மதயானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்தவர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே - கையில் சூலத்தை ஏந்திய காலனை அழித்த திருக்கடவூர்; (கைத்தலம் - கை); (அயில் - இங்கே, சூலம்); (வீட்டுதல் - அழித்தல்);


9)

நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழநின்றார்

ஏல(ம்)நாறு குழலாளையி டத்தினில் ஏற்ற இருள்கண்டர்

மேலர்மேலர் மலரம்பெறி வேளுடல் வேவ விழிசெய்தார்

காலகாலர் கருதும்பதி காமரு சோலைக் கடவூரே.


நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழ நின்றார் - கரிய மாலும் வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனும் தேடித் தொழும்படி ஜோதிவடிவில் நின்றவர்;

ஏலம் நாறு குழலாளை இடத்தினில் ஏற்ற இருள்கண்டர் - வாசக்குழலியான உமையை இடப்பாகம் ஏற்ற நீலகண்டர்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (நாறுதல் - மணம் கமழ்தல்);

மேலர் மேலர் - மேலானவர்க்கும் மேலானவர்; தேவதேவர்; (அப்பர் தேவாரம் - 6.55.7 - "மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி");

மலர்-அம்பு எறி வேள் உடல் வேவ விழிசெய்தார் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடம்பு சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்;

காலகாலர் கருதும் பதி காமரு சோலைக் கடவூரே - காலகாலரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


10)

வீதிநின்று பலபொய்யுரை பேசிடு வீணர் தமைநீங்கும்

பூதிபூசி அடியைப்புகழ் வார்துயர் போக்கும் பெருமானார்

மேதிஏறு நமனைக்குமை செய்தவர் வேலை விடமுண்டார்

காதிலங்கு குழையார்பதி காமரு சோலைக் கடவூரே.


வீதி நின்று பல பொய்யுரை பேசிடு வீணர்தமை நீங்கும் - தெருவில் நின்று பல பொய்களைப் பேசுகின்ற வீணர்களை விட்டு நீங்குங்கள்;

பூதி பூசி அடியைப் புகழ்வார் துயர் போக்கும் பெருமானார் - திருநீற்றைப் பூசித் திருவடியைத் துதிக்கும் பக்தர்களது துயரத்தைத் தீர்க்கும் பெருமானார்; (பூதி - திருநீறு);

மேதி ஏறு நமனைக் குமை செய்தவர் - எருமையை வாகனமாக உடைய கூற்றுவனை அழித்தவர்; (மேடி - எருமை); (குமை - அழிவு);

வேலை-விடம் உண்டார் - கடல்நஞ்சை உண்டவர்; (வேலை - கடல்);

காது இலங்கு குழையார் பதி காமரு சோலைக் கடவூரே - காதில் விளங்கும் குழையை அணிந்த சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


11)

பண்ணிலங்கு தமிழாற்பதம் ஏத்திடு பத்தர் பவ(ம்)மாய்ப்பார்

எண்ணிலெங்கும் வருவார்வட வாலமர் ஈசர் உமைநேசர்

தண்ணிலங்கு மதியார்சடை மேல்இள நாகம் தனைவைத்தார்

கண்ணிலங்கு நுதலார்பதி காமரு சோலைக் கடவூரே.


பண் இலங்கு தமிழால் பதம் ஏத்திடு பத்தர் பவம் மாய்ப்பார் - பண் பொருந்திய இசைத்தமிழான தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்ப்பவர்;

எண்ணில் எங்கும் வருவார் - எங்கிருந்து பக்தர்கள் தியானித்தாலும் அங்கே வந்து அருள்பவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.40.6 - "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்று அருள்புரியும் எம்பெருமான்");

வடவால் அமர் ஈசர் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

உமைநேசர் - உமைக்குக் கணவர்;

தண் இலங்கு மதி ஆர் சடைமேல் இள-நாகம்தனை வைத்தார் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் இருக்கும் சடையின்மேல் இளம்பாம்பையும் அணிந்தவர்;

கண் இலங்கு நுதலார் பதி காமரு சோலைக் கடவூரே - நெற்றிக்கண்ணரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------