Showing posts with label மயிலாடுதுறை வள்ளலார் கோயில். Show all posts
Showing posts with label மயிலாடுதுறை வள்ளலார் கோயில். Show all posts

Wednesday, November 18, 2026

P.531 - மயிலாடுதுறை வள்ளலார் கோயில் - பணங்கொளராத் திகழ்முடிமேல்

2020-11-25

P.531 - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்

(ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் கோயில்)

-----------

(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 6.1.1 - "அரியானை அந்தணர்தம்")


1)

பணங்கொளராத் திகழ்முடிமேல் மதியஞ் சூடி

.. பவளம்போல் மேனிமிசை நீறு பூசி

கணங்களெரி கொள்ளிவிளக் கேந்திச் சூழக்

.. கரிகானில் நள்ளிருளில் ஆடும் கூத்தர்

அணங்கையொரு கூறாக ஆகம் வைத்த

.. அன்புடைய பெருமானார் அங்கை கூப்பி

வணங்கியவர் விரும்புவரம் நல்கு கின்ற

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


பணங்கொள் அராத் திகழ் முடிமேல் மதியஞ் சூடி - படமுடைய நாகப்பாம்பு திகழும் திருமுடிமேல் பிறையைச் சூடியவர்; (சூடி - சூடியவர்);

பவளம்போல் மேனிமிசை நீறு பூசி - பவளம் போன்ற செம்மேனிமேல் திருநீற்றைப் பூசியவர்;

கணங்கள் எரி-கொள்ளி விளக்கு ஏந்திச் சூழக் - பூதகணங்கள் எரிகின்ற கொள்ளியை விளக்காக ஏந்திச் சூழ;

கரிகானில் நள்ளிருளில் ஆடும் கூத்தர் - சுடுகாட்டில் நள்ளிருளில் ஆடுகின்ற கூத்தர்;

அணங்கை ஒரு கூறாக ஆகம் வைத்த அன்புடைய பெருமானார் - உமையை ஒரு பாகமாகத் திருமேனியில் வைத்த அன்புடைய பெருமானார்; (அணங்கு - பெண்);

அங்கை கூப்பி வணங்கியவர் விரும்பு வரம் நல்குகின்ற - கைகள் கூப்பி வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அளிக்கின்ற;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்); (வதான்யன் - वदान्यः vadānyaḥ - வள்ளல்); (* வள்ளலார் - வதான்யேஸ்வரர் - இத்தலத்து இறைவர் திருநாமம்);


2)

சுழிபெருகு கங்கைதனை வேணி தன்னில்

.. சூடியவர் ஆறெனவே மும்ம தத்தைப்

பொழிகரியை உரிசெய்து போர்த்த மார்பர்

.. புற்றரவைப் புலித்தோல்மேல் அரையில் ஆர்த்த

எழிலுருவர் ஞானப்பூங் கொடியைப் பேணி

.. இடப்பாகம் வைத்துகந்தார் என்றும் ஏத்தி

வழிபடுவோர் விரும்புவரம் நல்கு கின்ற

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


சுழி பெருகு கங்கைதனை வேணி-தன்னில் சூடியவர் - சுழிகள் மிக்க கங்கையைச் சடையில் சூடியவர்; (வேணி - சடை);

ஆறு-எனவே மும்மதத்தைப் பொழி கரியை உரிசெய்து போர்த்த மார்பர் - ஆறு போல மும்மதங்கள் பொழிந்த ஆண்யானையைப் போரிட்டுக் கொன்று அதன் தோலை உரித்து மார்பு சூழப் போர்த்தவர்; (கரி - யானை);

புற்றரவைப் புலித்தோல்மேல் அரையில் ஆர்த்த எழில்-உருவர் - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அரையில் புலித்தோலின்மேல் கச்சாகக் கட்டிய அழகிய உருவம் உடையவர்; (ஆர்த்தல் - கட்டுதல்);

ஞானப்-பூங்கொடியைப் பேணி இடப்பாகம் வைத்து உகந்தார் - ஞானாம்பிகையை விரும்பி இடப்பாகமாக ஏற்றவர்; (* ஞானாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);

என்றும் ஏத்தி வழிபடுவோர் விரும்பு வரம் நல்குகின்ற - தினந்தோறும் துதித்து வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அளிக்கின்ற;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


3)

தீத்திரள்போல் திகழ்மேனி மீது நீற்றர்

.. திரிபுரங்கள் வேவவெய்த மேரு வில்லர்

பூத்திரள்கொண் டடிதொழுத மார்க்கண் டேயர்

.. பொன்றாது வாழவருள் கால காலர்

வாத்தியங்கள் பலவொலித்துப் பூதஞ் சூழ

.. மாநடஞ்செய் திருப்பாதர் மறவா தென்றும்

வாழ்த்தியவர் விரும்புவரம் நல்கு கின்ற

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


தீத்திரள்போல் திகழ் மேனிமீது நீற்றர் - தீயின் தொகுதி போன்ற செம்மேனிமேல் திருநீற்றை அணிந்தவர்;

திரிபுரங்கள் வேவ எய்த மேரு-வில்லர் - முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை எய்த மேருவில்லை ஏந்தியவர்; (அப்பர் தேவாரம் - 4.66.8 - "பருப்பத வில்லர் போலும்");

பூத்திரள்கொண்டு அடிதொழுத மார்க்கண்டேயர் பொன்றாது வாழ அருள் காலகாலர் - பூங்கொத்துகளால் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயர் இறவாது வாழ அருளிக் கூற்றுவனை உதைத்து அழித்தவர்; (பொன்றுதல் - இறத்தல்);

வாத்தியங்கள் பல ஒலித்துப் பூதம் சூழ மாநடம் செய் திருப்பாதர் - பல இசைக்கருவிகளை ஒலித்துப் பூதங்கள் சூழப் பெருங்கூத்து ஆடுகின்ற திருப்பாதம் உடையவர்;

மறவாது என்றும் வாழ்த்தியவர் விரும்பு வரம் நல்குகின்ற - மறத்தலின்றித் தினந்தோறும் போற்றி வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அளிக்கின்ற;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


4)

பலவடிவும் தம்வடிவே ஆய பண்பர்

.. பன்றியெய்து பார்த்தனுக்குப் படையொன் றீந்தார்

உலர்தலிலாச் சடையதன்மேல் பாம்பு திங்கள்

.. ஒன்றவைத்தார் கூவிளம்கொக் கிறகும் வைத்தார்

புலர்பொழுதின் ஞாயிறுபோல் பொலிபு ராணர்

.. புரிநூலர் திரிசூலர் புலியின் தோலர்

மலரடியைத் தொழுவார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


பல வடிவும் தம் வடிவே ஆய பண்பர் - அன்பர்கள் விரும்பி வழிபடும் எவ்வடிவமும் தாங்கி அருள்கின்றவர்;

பன்றி எய்து பார்த்தனுக்குப் படை ஒன்று ஈந்தார் - ஒரு பன்றியை எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அளித்தவர்; (படை - ஆயுதம்);

உலர்தல் இலாச் சடையதன்மேல் பாம்பு திங்கள் ஒன்ற வைத்தார் - (கங்கையைத் தாங்குவதால்) என்றும் ஈரமாக இருக்கும் சடையின்மேல் பாம்பையும் சந்திரனையும் நெருங்கி வாழ வைத்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.90.2 - "ஈர வார்சடைதன்மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்");

கூவிளம் கொக்கிறகும் வைத்தார் - வில்வத்தையும் கொக்கின் இறகையும் சடையில் சூடியவர்; (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவமுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

புலர்-பொழுதின் ஞாயிறுபோல் பொலி புராணர் - உதிக்கின்ற இளஞ்சூரியன் போலத் திகழும் செம்மேனி உடையவர், மிகவும் தொன்மையானவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.16.6 - "இளஞாயிறின் சோதி அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை யதுவே")

புரிநூலர் - மார்பில் முப்புரிநூல் (பூணூல்) அணிந்தவர்;

திரிசூலர் - மூவிலைவேலை ஏந்தியவர்;

புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;

மலரடியைத் தொழுவார்க்கு வரங்கள் நல்கும் - மலர் போன்ற திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


5)

சினவென்றி விடையேறும் தேவ தேவர்

.. செருச்செய்ய மலர்க்கணையை எய்த காமன்

தனையன்று பொடிசெய்த நெற்றிக் கண்ணர்

.. தலையொன்றை உண்கலனாத் தாங்கும் கையர்

அனமென்றும் பிடியென்றும் உவமிக் கின்ற

.. அழகுநடை உமையாளோர் பங்கர் நாளும்

மனமொன்றித் தொழுவார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


சின-வென்றி-விடை ஏறும் தேவதேவர் - சினம் மிக்கதும் வெற்றியுடையதுமான இடபத்தை வாகனமாக உடைய தேவாதிதேவர்;

செருச் செய்ய மலர்க்கணையை எய்த காமன்தனை அன்று பொடிசெய்த நெற்றிக்கண்ணர் - போர்செய்ய மலரம்பை ஏவிய மன்மதனை அன்று சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணர்; (செரு - போர்);

தலை ஒன்றை உண்கலனாத் தாங்கும் கையர் - ஒரு மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாகக் கையில் ஏந்தியவர்; (கலனா - கலனாக);

அனம் என்றும் பிடி என்றும் உவமிக்கின்ற அழகுநடை உமையாள் ஓர் பங்கர் - அன்னம் என்றும் பெண்யானை என்றும் வர்ணிக்கின்ற அழகிய நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்; (அனம் - அன்னம் - இடைக்குறை); (பிடி - பெண்யானை); (சம்பந்தர் தேவாரம் - 1.136.1 - "மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை யுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்");

நாளும் மனம் ஒன்றித் தொழுவார்க்கு வரங்கள் நல்கும் - தினமும் மன-ஒருமைப்பாட்டோடு வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


6)

நறவாரும் மலர்க்கூந்தல் மங்கை பங்கர்

.. நான்மறையோ டாறங்கம் பாடு நாவர்

குறமாது தனைவேட்ட குமரன் அத்தர்

.. கொடியின்மேல் விடையுடையார் கொன்றைத் தாரர்

பிறவாத இறவாத ஒருவர் கூனற்

.. பிறைசூடும் பெருமானார் பேணி நாளும்

மறவாது தொழுவார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


நறவு ஆரும் மலர்க்கூந்தல் மங்கை-பங்கர் - தேன் மலிந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த உமையை ஒரு பாகமாக உடையவர்; (நறவு - தேன்; வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

நான்மறையோடு ஆறங்கம் பாடு நாவர் - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் பாடியருளியவர்;

குறமாதுதனை வேட்ட குமரன் அத்தர் - குறப்பெண்ணான வள்ளியை மணம்புரிந்த முருகனுக்குத் தந்தையார்; (வேள்தல் - வேட்டல் - மணம்புரிதல்); (அத்தர் - தந்தையார்); (சுந்தரர் தேவாரம் - 7.7.1 - "அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்ப தடைவோமே");

கொடியின்மேல் விடை உடையார் - இடபக்கொடியை உடையவர்;

கொன்றைத் தாரர் - கொன்றைமாலையை அணிந்தவர்; (தார் - மாலை); (அப்பர் தேவாரம் - 6.38.9 - "நறுங்கொன்றைத் தாராய் நீயே");

பிறவாத இறவாத ஒருவர் - பிறப்பும் இறப்பும் இல்லாத ஒப்பற்றவர்; (ஒரு - ஒப்பற்ற);

கூனல்-பிறை சூடும் பெருமானார் - வளைந்த பிறையைச் சூடிய பெருமானார்; (கூனல் - கூன் - வளைவு); (சம்பந்தர் தேவாரம் - 1.14.11 - "கூனற்பிறை சடைமேல்மிக உடையான் கொடுங்குன்றை");

பேணி நாளும் மறவாது தொழுவார்க்கு வரங்கள் நல்கும் - விரும்பித் தினமும் மறத்தலின்றி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்; மதித்தல்);

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


7)

ஓர்விடையை ஊர்தியென உடைய ஈசர்

.. ஓதவிடம் கண்டஞ்சி உம்ப ரெல்லாம்

பேர்பலவும் ஏத்தியடி இணையைப் பேணப்

.. பெருநஞ்சைப் பிறங்குமணி செய்த கண்டர்

நீர்சுழலும் செஞ்சடையர் நீல மேனி

.. நெடுமாலுக் காழியருள் நிமலர் நாளும்

வார்கழலைத் தொழுவார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


ஓர் விடையை ஊர்தி என உடைய ஈசர் - ஒப்பற்ற இடபவாகனம் உடைய ஈசர்;

ஓதவிடம் கண்டு அஞ்சி உம்பரெல்லாம் பேர் பலவும் ஏத்தி அடிஇணையைப் பேணப் - கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு பயந்து தேவர்களெல்லாம் பல திருநாமங்களைச் சொல்லித் துதித்து இருதிருவடிகளை வழிபடவும்; (ஓதம் - கடல்); (உம்பர் - தேவர்);

பெருநஞ்சைப் பிறங்கு மணி செய்த கண்டர் - அவர்களுக்கு இரங்கி அந்தக் கொடிய விடத்தை ஒளிவீசும் கரிய மணியாகச் செய்த நீலகண்டர்; (பிறங்குதல் - விளங்குதல்; சிறத்தல்);

நீர் சுழலும் செஞ்சடையர் - சிவந்த சடையில் கங்கையை அடைத்தவர்; (சுழல்தல் - சுற்றித்திரிதல்);

நீலமேனி நெடுமாலுக்கு ஆழி அருள் நிமலர் - கரிய மேனியுடைய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளிய தூயர்; (நெடுமை - உயரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.67.10 - "கருமையுடை நெடுமாலும் கடிமலர் அண்ணலும் காணாப் பெருமையுடைப் பெருமானார்");

நாளும் வார்கழலைத் தொழுவார்க்கு வரங்கள் நல்கும் - தினமும் நீள்கழல் அணிந்த திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்; (வார்தல் - நீள்தல்);

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


8)

சிந்தித்தல் இலனாகி ஓடிச் சென்று

.. தேர்விடவிம் மலையுமொரு தடையோ என்று

நிந்தித்துப் பேர்த்தானை விரலை ஊன்றி

.. நெடுங்காலம் அழவைத்த நெற்றிக் கண்ணர்

பந்திக்கும் வினையெல்லாம் தீர்க்க வல்ல

.. பரம்பொருளே என்றென்று பரவி நாளும்

வந்திக்கும் அடியார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


சிந்தித்தல் இலனாகி ஓடிச் சென்று - சற்றும் யோசித்தலின்றி விரைந்து போய்;

"தேர் விட இம்-மலையும் ஒரு தடையோ" என்று நிந்தித்துப் பேர்த்தானை - "பறந்து செல்லும் என் தேரை இந்த மலையும் தடுக்குமோ" என்று பலவாறு பழித்துப் பேசிக் கயிலைமலையைப் பெயர்த்தவனான இராவணனை;

விரலை ஊன்றி நெடுங்காலம் அழவைத்த நெற்றிக் கண்ணர் - திருப்பாதவிரல் ஒன்றைச் சிறிதளவு ஊன்றி அந்த இராவணனை நசுக்கி, அவனை நெடுங்காலம் அழுது புலம்பவைத்த நெற்றிக்கண்ணர்;

"பந்திக்கும் வினையெல்லாம் தீர்க்க-வல்ல பரம்பொருளே" என்றென்று பரவி - "எம்மைப் பிணித்திருக்கும் வினைகளையெல்லாம் தீர்க்கவல்ல மேலான பொருளே" என்று பலவாறு துதித்து; (பரவுதல் - துதித்தல்);

நாளும் வந்திக்கும் அடியார்க்கு வரங்கள் நல்கும் - தினமும் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


9)

அகழ்ந்தடியைத் தேடுதிரு மாலும் வானில்

.. அன்னமெனப் பறந்துமுடி தேடி னானும்

புகழ்ந்துதொழ ஒளித்தூணாய் நீண்டு நின்றார்

.. புர(ம்)மூன்றும் வெந்தழலிற் புகச்சி ரித்தார்

இகழ்ந்துரைசெய் தக்கன்செய் வேள்வி செற்ற

.. இறைவரடி இணைதன்னை எண்ணி நாளும்

மகிழ்ந்துபணி அடியார்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


அகழ்ந்து அடியைத் தேடு திருமாலும் - நிலத்தை அகழ்ந்து திருவடியைத் தேடிய விஷ்ணுவும்;

வானில் அன்னம் எனப் பறந்து முடி தேடினானும் - வானத்தில் அன்னப்பறவை உருவில் பறந்து சென்று திருமுடியைத் தேடியவனான பிரமனும்;

புகழ்ந்து தொழ ஒளித்தூணாய் நீண்டு நின்றார் - துதித்து வணங்கும்படி நெருப்புத்தூண் ஆகி எல்லையற்று நீண்டு நின்றவர்;

புர(ம்) மூன்றும் வெந்தழலில் புகச் சிரித்தார் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி சிரித்தவர்;

இகழ்ந்து உரைசெய் தக்கன் செய் வேள்வி செற்ற இறைவர் - அவமதித்துப் பேசிய தக்கன் செய்த அவவேள்வியை அழித்த இறைவர்; (செறுதல் - அழித்தல்);

அடி-இணைதன்னை எண்ணி நாளும் மகிழ்ந்து பணி அடியார்க்கு வரங்கள் நல்கும் - அப்பெருமானாரது இருதிருவடிகளை மனத்தில் வைத்துத் தினமும் விரும்பி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்; (மகிழ்தல் - மனம் களித்தல்; விரும்புதல்);

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


10)

நெஞ்சினிடை இருள்தாங்கிப் பொய்கள் தம்மை

.. நீங்காத நாவுடைய நீசர்க் கில்லார்

நஞ்சமணி கண்டத்தர் நால்வே தத்தர்

.. நாகவரை நாணுடைய நம்பர் நாரி

அஞ்சமத கரியுரித்த மஞ்சர் வேலால்

.. அந்தகனைக் குத்தியவர் அண்ட ரண்டர்

வஞ்சமிலா அன்பர்க்கு வரங்கள் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


நெஞ்சினிடை இருள் தாங்கிப் பொய்கள்-தம்மை நீங்காத நாவுடைய நீசர்க்கு இல்லார் - தங்கள் நெஞ்சில் அறியாமையையும் வஞ்சத்தையும் உடையவர்களாய் என்றும் பொய்களைப் பேசுகின்ற கீழோர்களுக்கு அருள் இல்லாதவர்; (இருள் - அறியாமை; குற்றம்); (நீசர் - இழிந்தோர்);

நஞ்சம் அணி கண்டத்தர் - கண்டத்தில் ஆலகாலத்தை அணிந்தவர்;

நால்வேதத்தர் - நான்கு வேதங்களையும் பாடியருளியவர்; நான்கு வேதங்களாலும் போற்றப்படுபவர்;

நாக அரைநாண் உடைய நம்பர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர், விரும்பத்தக்கவர்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (அப்பர் தேவாரம் - 6.51.8 - "நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்");

நாரி அஞ்ச மதகரி உரித்த மஞ்சர் - உமை அஞ்சுமாறு மதயானையின் தோலை உரித்த வீரர்; (மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ; போலி எனலும் ஆம்); (மைந்தன் - வலிமை உடையவன்; வீரன்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்");

வேலால் அந்தகனைக் குத்தியவர் - சூலத்தால் அந்தகாசுரனது மார்பில் குத்தியவர்; (வேல் - திரிசூலம்); (அந்தகன் - அந்தகாசுரன்);

அண்டரண்டர் - தேவதேவர்; (அண்டர் - தேவர்);

வஞ்சம் இலா அன்பர்க்கு வரங்கள் நல்கும் - மனத்தில் கள்ளம் இல்லாது வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிக்கும்;

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


11)

காயாத செஞ்சடைமேல் கதிர்வெண் திங்கள்

.. கமழ்கொன்றை சூடியவர் உலகங் கட்குத்

தாயாகித் தந்தையுமாம் தலைவர் கையில்

.. தலையேந்திப் பலிதிரிவார் சாம வேதர்

மாயாத பெருமையினார் ஆல நீழல்

.. மகிழ்ந்திருந்து மறைவிரித்தார் தமிழ்கள் பாடி

வாயார வாழ்த்திடுவார்க் கின்பம் நல்கும்

.. மயிலாடு துறைமேய வள்ள லாரே.


காயாத செஞ்சடைமேல் கதிர்வெண் திங்கள் கமழ்கொன்றை சூடியவர் - (என்றும் கங்கை இருப்பதால்) உலராத சிவந்த சடைமீது கிரணங்களையுடைய வெண்பிறையையும், மணம் கமழும் கொன்றைமலரையும் அணிந்தவர்;

உலகங்கட்குத் தாய் ஆகித் தந்தையும் ஆம் தலைவர் - எல்லா உலங்களையும் படைத்த அம்மையப்பர்; எல்லார்க்கும் தலைவர்; (அப்பர் தேவாரம் - 4.32.8 - "தந்தையாய்த் தாயும் ஆகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க்கு எந்தையும் என்ன");

கையில் தலை ஏந்திப் பலி-திரிவார் - கையில் ஒரு மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழல்பவர்;

சாமவேதர் - சாமவேதப் பிரியர்;

மாயாத பெருமையினார் - என்றும் இறப்பு இல்லாதவர்; என்றும் அழியாத பெருமையை உடையவர்; (மாய்தல் - அழிதல்; இறத்தல்);

ஆல-நீழல் மகிழ்ந்து இருந்து மறை விரித்தார் - கல்லாலமரத்தின்கீழ் விரும்பி வீற்றிருந்து வேதங்களை உபதேசித்தவர்; (நீழல் - நிழல்); (இருத்தல் - உட்கார்தல்);

தமிழ்கள் பாடி வாயார வாழ்த்திடுவார்க்கு இன்பம் நல்கும் - தமிழ்ப்பாமாலைகளை வாயாரப் பாடி வாழ்த்தும் பக்தர்களுக்கு இம்மை மறுமை இன்பங்களை அளிக்கும்; (தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள்); (சம்பந்தர் தேவாரம் - 2.29.11 - "பந்தன் உரைசெய் தமிழ்கள் பத்தும் இசை கூர வந்தவணம் ஏத்துமவர் வானம் உடையாரே");

மயிலாடுதுறை மேய வள்ளலாரே - மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலார் (வதான்யேஸ்வரர்);


வி. சுப்பிரமணியன்

-----------