Showing posts with label துருத்தி (குத்தாலம்). Show all posts
Showing posts with label துருத்தி (குத்தாலம்). Show all posts

Saturday, August 24, 2019

03.05.047 – துருத்தி (குத்தாலம்) - இருநிலனில் எழுபிறவி அலையால் - (வண்ணம்)

03.05.047 – துருத்தி (குத்தாலம்) - இருநிலனில் எழுபிறவி அலையால் - (வண்ணம்)

2007-05-12

3.5.47) இருநிலனில் எழுபிறவி அலையால் - துருத்தி (குத்தாலம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தனதனன தனனா தனத்ததன

தனதனன தனதனன தனனா தனத்ததன

தனதனன தனதனன தனனா தனத்ததன .. தனதான )

(தனதனன = தனனதன )

(குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி .. திருப்புகழ் - சுவாமிமலை)


இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்துவரும்

.. .. .. இடர்களவை நலிவுதர வினையே பெருக்கிமிகும்

.. .. இருளிலுழல் மடமையொடு பலநோய் களுக்குடலும் .. இடமாகி

.. எருமைமிசை வருமறலி தமரால் இறுக்கலுறு

.. .. .. கயிறுதனில் விழுநிலையும் வருநாள் எரித்தபொடி

.. .. எனுநிலையை அடையுமுனம் உயுமோர் நினைப்புதனை .. உறுவேனோ


ஒருமனையில் விழவினொலி யுடனே அடுத்தமனை

.. .. .. அதனிலழும் ஒலியுமெழ அவர்மா வருத்தமற

.. .. உதவிசெய இவர்மகனை அளியா யெனத்தொழுது .. பணிதோழர்

.. அருகிலொரு முதலைவர முனைநா ளழித்தவுட

.. .. .. லதுவுமுயிர் கொளஅருளு மரனே உனைப்பரவி

.. .. அனுதினமும் இனியதமிழ் மலரே தொடுக்குமனம் .. அருளாயே


இருடியர்கள் அடியவர்கள் தொழுமோர் பொருப்புதனை

.. .. .. எறியவரு தசமுகனை விரலால் நெரித்தருளி

.. .. இசையினொடு பரவியழ ஒருவாள் அவற்கருளும் .. இறைவாமுன்

.. இருபுறமும் அசுரர்சுரர் நிரலாய் அரக்கயிறு

.. .. .. கொடுகடையும் அலைகடலில் விடமே எழப்பதறி

.. .. இணையடியை இமையவர்கள் தொழுநாள் அவர்க்கமுது .. தருமாறு


கருமுகிலின் நிறமொளிரு(ம்) மணிசேர் கழுத்துடைய

.. .. .. கருணைமிகு தலைவமதி புனைவாய் எதிர்த்தமத

.. .. கரியுரிவை அணியழக கொடிபோல் இடைத்தெரிவை .. ஒருகூறா

.. அருவியென விழிசொரிய உனையே நினைத்துநிதம்

.. .. .. அடிபணியு(ம்) மனமுடைய அடியார் தமக்கருளி

.. .. அறையளிகள் உலவுமணி பொழிலார் துருத்தியுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்து வரும்

.. .. .. இடர்களவை நலிவு தர, வினையே பெருக்கி மிகும்

.. .. இருளில் உழல் மடமையொடு பல நோய்களுக்கு உடலும் .. இடம் ஆகி,

.. எருமைமிசை வரு-மறலி தமரால் இறுக்கலுறு

.. .. .. கயிறுதனில் விழு-நிலையும் வரு-நாள் எரித்த-பொடி

.. .. எனு(ம்) நிலையை அடையுமுனம் உயும் ஓர் நினைப்புதனை .. உறுவேனோ;


ஒரு மனையில் விழவின் ஒலியுடனே அடுத்த மனை

.. .. .. அதனில் அழும் ஒலியும் எழ, அவர் மா வருத்தம் அற

.. .. உதவி-செய, "இவர் மகனை அளியாய்" எனத் தொழுது .. பணி-தோழர்

.. அருகில் ஒரு முதலை வர, முனை-நாள் அழித்த உடல்

.. .. .. அதுவும் உயிர் கொள அருளும் அரனே; உனைப் பரவி

.. .. அனுதினமும் இனிய தமிழ்-மலரே தொடுக்கு(ம்) மனம் .. அருளாயே


இருடியர்கள் அடியவர்கள் தொழும் ஓர் பொருப்புதனை

.. .. .. எறிய வரு தசமுகனை விரலால் நெரித்தருளி,

.. .. இசையினொடு பரவி அழ, ஒரு வாள் அவற்கு அருளும் .. இறைவா; முன்

.. இருபுறமும் அசுரர் சுரர் நிரலாய் அரக்-கயிறு

.. .. .. கொடு கடையும் அலைகடலில் விடமே எழப், பதறி

.. .. இணையடியை இமையவர்கள் தொழு-நாள், அவர்க்கு அமுது .. தருமாறு


கருமுகிலின் நிறம் ஒளிரு(ம்) மணி சேர் கழுத்து உடைய,

.. .. .. கருணை மிகு தலைவ; மதி புனைவாய்; எதிர்த்த மத-

.. .. கரி-உரிவை அணி அழக; கொடிபோல் இடைத்-தெரிவை .. ஒரு கூறா;

.. அருவி என விழி சொரிய, உனையே நினைத்து நிதம்

.. .. .. அடிபணியு(ம்) மனம் உடைய அடியார் தமக்கு அருளி,

.. .. அறை-அளிகள் உலவும் அணி பொழில் ஆர் துருத்தி உறை .. பெருமானே.


இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்து வரும் இடர்களவை நலிவு தர – பூமியில் தொடர்ந்து எழுகின்ற பிறவியலையால் பெருகி வரும் துன்பங்கள் என்னை வருத்த; (இருநிலன் - பூமி);

வினையே பெருக்கி மிகும் இருளில் உழல் மடமையொடு பல நோய்களுக்கு உடலும் இடம் ஆகி - தீவியயையே பெருக்கிப் பேரிருளில் உழலும் அறியாமையோடு பல நோய்கள் இந்த உடலைப் பற்றிக்கொள்ள;

எருமைமிசை வரு-மறலி தமரால் இறுக்கலுறு கயிறுதனில் விழு-நிலையும் வரு-நாள் - எருமையின்மேல் வரும் இயமனது தூதர்களால் சுருக்குக்கயிற்றில் விழும் நிலை எனக்கு வரும் தினம்; (மறலி - இயமன்);

எரித்த-பொடி எனு(ம்) நிலையை அடையுமுனம் உயும் ஓர் நினைப்புதனை உறுவேனோ - சுட்ட சாம்பல் என்ற நிலையை அடைவதன்முன்னமே உய்யும் எண்ணத்தை நான் அடைவேனோ; (பொடி - சாம்பல்); (உயும் - உய்யும் - இடைக்குறை விகரம்);


ஒரு மனையில் விழவின் ஒலியுடனே அடுத்த மனை அதனில் அழும் ஒலியும் எழ – (புக்கொளியூர் அவிநாசியில்) ஒரு வீட்டில் விழாவின் மங்கல ஒலியும் பக்கத்தில் இன்னொரு வீட்டில் அழுகை ஒலியும் கேட்க; (விழ – விழா);

அவர் மா வருத்தம் அற உதவி-செய – (விவரம் அறிந்துகொண்டு), அப்படி அழுகையொலி கேட்ட வீட்டிலுள்ளோரது பெருவருத்தம் தீர உதவி செய்ய;

"இவர் மகனை அளியாய்" எனத் தொழுது பணி-தோழர் அருகில் ஒரு முதலை வர – "(முன்பு முதலையால் உண்ணப்பட்டு அழிந்த) இவர்களது மகனைத் தந்தருள்க" என்று தொழுது வணங்கிய தம்பிரான் தோழரான சுந்தரர் அருகே ஒரு முதலை வந்து;

முனை-நாள் அழித்த உடல் அதுவும் உயிர் கொள அருளும் அரனே - அது முன்னொரு நாள் உண்ட சிறுவனை உயிரோடு தருமாறு அருளிய ஹரனே; (முனைநாள் - முன்னைநாள் - முற்காலத்தில்); (சுந்தரர் வரலாற்றில் முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்த நிகழ்ச்சியைப் பெரியபுராணத்திற் காண்க); (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "புக்கொளியூர் அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");

உனைப் பரவி அனுதினமும் இனிய தமிழ்-மலரே தொடுக்கு(ம்) மனம் அருளாயே - உன்னைத் துதித்துத் தினமும் இனிய தமிழ்ச்சொல்மலர்களைத் தொடுத்துப் பாமாலைகளைப் புனையும் மனத்தை எனக்கு அருள்வாயாக; (பரவுதல் - துதித்தல்);


இருடியர்கள் அடியவர்கள் தொழும் ஓர் பொருப்புதனை எறிய வரு தசமுகனை விரலால் நெரித்தருளி - ரிஷிகளும் பக்தர்களும் வழிபடும் ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்த இராவணனைத் திருப்பாத விரலால் நசுக்கி; (இருடி - ரிஷி); (ஓர் - ஒப்பற்ற); (பொருப்பு - மலை);

இசையினொடு பரவி அழ, ஒரு வாள் அவற்கு அருளும் இறைவா - (பின்) அவன் இசைபாடித் துதித்து அழுது இறைஞ்ச, அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற என்ற வாளை அருளிய இறைவனே;

முன் இருபுறமும் அசுரர் சுரர் நிரலாய் அரக்-கயிறு கொடு கடையும் அலைகடலில் விடமே எழப் - முன்பு இருபக்கமும் அசுரர்களும் தேவர்களும் வரிசையாகி நின்று வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்த பாற்கடலில் ஆலகாலமே விளைய; (நிரல் - வரிசை); (அர – பாம்பு);

பதறி இணையடியை இமையவர்கள் தொழு-நாள், அவர்க்கு அமுது தருமாறு - தேவர்கள் பதறி இருதிருவடியை வணங்கிய பொழுது, அவர்களுக்கு அமுதத்தை தருவதற்காக;


கருமுகிலின் நிறம் ஒளிரு(ம்) மணி சேர் கழுத்து உடைய, கருணை மிகு தலைவ – கரிய மேகத்தின் நிறம் திகழும் மணியைக் கண்டத்தில் தாங்கிய, பெருங்கருணைத் தலைவனே;

மதி புனைவாய் - சந்திரனைச் சூடியவனே;

எதிர்த்த மத-கரி-உரிவை அணி அழக – போர்செய்த மதயானையின் தோலை மார்பில் போர்த்த அழகனே; (உரிவை - தோல்);

கொடிபோல் இடைத்-தெரிவை ஒரு கூறா - கொடி போன்ற சிற்றிடையை உடைய உமை ஒரு கூறு ஆனவனே; (தெரிவை - பெண்);

அருவி என விழி சொரிய, உனையே நினைத்து நிதம் அடிபணியு(ம்) மனம் உடைய அடியார் தமக்கு அருளி - அருவி போலக் கண்கள் நீர் சொரிய, உன்னையே நினைத்துத் தினமும் வழிபடும் மனம் உடைய பக்தர்களுக்கு அருள்புரிந்து;

அறை-அளிகள் உலவும் அணி பொழில் ஆர் துருத்தி உறை பெருமானே - ஒலிக்கின்ற வண்டுகள் சஞ்சரிக்கும் அழகிய சோலை சூழ்ந்த திருத்துருத்தி (குத்தாலம்) என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


பிற்குறிப்பு:

இப்பாடலில் மோனை வரும் இடங்களில் ஒரோவழி எதுகை வந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, June 16, 2019

04.64 - துருத்தி (குத்தாலம்) - நிழலார் மழுவினர்

04.64 - துருத்தி (குத்தாலம்) - நிழலார் மழுவினர்

2014-05-22

துருத்தி (குத்தாலம்)

(இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)

----------------------------------

(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

நிழலார் மழுவினர்

பொழிலார் துருத்தியைத்

தொழவல் வினைத்தொடர்

கழலும் திண்ணமே.


நிழல் ஆர் மழுவினர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற; (நிழல் - ஒளி);

பொழில் ஆர் துருத்தியைத் தொழ - சோலை நிறைந்த திருத்துருத்தியைத் தொழுதால்;

வல்வினைத்தொடர் கழலும் திண்ணமே - நம் வலிய வினைத்தொடர் நீங்குவது உறுதி; (கழலுதல் - விலகுதல்);


2)

மங்கை பங்கினர்

தங்கும் துருத்தியை

அங்கை யால்தொழப்

பொங்கும் இன்பமே.


மங்கை பங்கினர் தங்கும் துருத்தியை - உமைபங்கனார் உறைகின்ற திருத்துருத்தியை;

அங்கையால் தொழப் பொங்கும் இன்பமே - கைகூப்பித் தொழுதால் இன்பம் மிகும்;


3)

சிவனார் மேவிய

கவினார் துருத்தியைக்

குவிகை யால்தொழ

அவியும் வினைகளே.


சிவனார் மேவிய கவின் ஆர் துருத்தியைக் - சிவபெருமானார் உறைகின்ற அழகிய திருத்துருத்தியை; (கவின் - அழகு);

குவி-கையால் தொழ அவியும் வினைகளே - குவிந்த கைகளால் தொழுதால் வினைகள் அழியும்; (அவிதல் - அழிதல்; வேதல்);


4)

கண்ணார் நுதலினர்

தண்ணார் துருத்தியை

எண்ணா ஏத்திட

நண்ணா நடலையே.


கண் ஆர் நுதலினர் - நெற்றிக்கண்ணர் உறைகின்ற;

தண் ஆர் துருத்தியை - குளிர்ச்சி பொருந்திய திருத்துருத்தியை;

எண்ணா ஏத்திட - எண்ணி ஏத்தினால்; (எண்ணா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);

நண்ணா நடலையே - துன்பம் அணுகமாட்டா;


5)

இமையா முக்கணர்

உமைகோன் துருத்தியை

அமர்வார் அடிதொழக்

குமையும் வினைகளே.


இமையா முக்கணர் - இமைத்தல் இல்லாத முக்கண் உடையவர்; (அப்பர் தேவாரம் - 5.47.4 - "இமையா முக்கணர் என்நெஞ்சத்து உள்ளவர்");

உமைகோன் - உமைமணாளன்;

துருத்தியை அமர்வார் அடிதொழக் குமையும் வினைகளே - திருத்துருத்தியை விரும்பி அங்கே உறைகின்ற பெருமானார் திருவடியை வழிபட்டால் வினைகள் அழியும்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (குமைதல் - அழிதல்);


6)

சூலப் படையினர்

சோலைத் துருத்தியைக்

கோலத் தாற்சொல

ஞாலத் தின்பமே.


சூலப் படையினர் சோலைத் துருத்தியைக் - சூலாயுதத்தை ஏந்திய சிவபெருமானார் உறைகின்ற சோலை சூழ்ந்த திருத்துருத்தியை;

கோலத்தால் சொல – பக்திப்பாமாலைகளை அழகுறச் சொல்லி வழிபட்டால்;

ஞாலத்து இன்பமே - இவ்வுலக வாழ்வில் இன்பம் எய்தும்;


7)

நீரார் சடையினர்

ஊராம் துருத்தியை

ஆரா அன்பினால்

ஓர்வார் உய்வரே.


நீர் ஆர் சடையினர் ஊர் ஆம் துருத்தியை - கங்கையைச் சடையில் உடைய சிவபெருமானார் உறைகின்ற திருத்துருத்தியை;

ஆரா அன்பினால் ஓர்வார் உய்வரே - மிகுந்த பக்தியோடு எண்ணுபவர்கள் உய்வார்கள்; (ஓர்வார் - எண்ணுவார்);


8)

பத்துத் தலைநெரி

அத்தன் துருத்தியைப்

பத்தி செய்திடச்

சித்தம் தெளியுமே.


பத்துத்-தலை நெரி அத்தன் துருத்தியைப் - இராவணனுடைய பத்துத்தலைகளை நசுக்கிய நம் தந்தையான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;

பத்தி செய்திடச் சித்தம் தெளியுமே - பக்தியோடு வணங்கினால் தெளிந்த அறிவு கிட்டும்;


9)

கரியான் அயன்தொழும்

எரியான் துருத்தியைப்

பரிவோ டேத்திடப்

பிரிவாம் பிணிகளே.


கரியான் அயன் தொழும் எரியான் துருத்தியைப் - திருமால் பிரமன் இவர்கள் தொழும் ஜோதி-உருவினனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை;

பரிவோடு ஏத்திடப் பிரிவு ஆம் பிணிகளே - அன்போடு துதித்தால் பந்தங்களும் நோய்களும் நீங்கும்; (பரிவு - அன்பு; பக்தி); (பிணிகள் - பந்தங்கள்; நோய்கள்);


10)

நீற்றைப் பூசிடார்

கூற்றைப் பேணிடேல்

ஏற்றன் துருத்தியைப்

போற்ற இன்பமே.


நீற்றைப் பூசிடார் கூற்றைப் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா;

ஏற்றன் துருத்தியைப் போற்ற இன்பமே - இடப-வாகனனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியைப் போற்றினால் இன்பம் கிட்டும்;


11)

கேழில் சுந்தரர்

தோழன் துருத்தியைச்

சூழ வல்லவர்

வாழ வல்லரே.


கேழ் இல் சுந்தரர் தோழன் துருத்தியைச் - ஒப்பற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தோழனான சிவபெருமான் உறைகின்ற திருத்துருத்தியை; (கேழ் இல் - ஒப்பு இல்லாத); (திருவெம்பாவை - 8.7.8 - "கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை");

சூழ வல்லவர் வாழ வல்லரே - வலம்செய்து வழிபடுபவர்கள் சிறந்து வாழ்வார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Monday, April 16, 2018

04.22 – துருத்தி (குத்தாலம்) - ஓலையால் அன்று

04.22 - துருத்தி (குத்தாலம்)

2013-11-16

துருத்தி (திருத்துருத்தி - இக்கால வழக்கில் 'குத்தாலம்'. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி")

(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - "இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்")


1)

ஓலை யாலன் றடிமை ஆனார் உடற்பிணி தீர்த்தவனே

பாலை யாழைப் பாடித் தேனைப் பரிசென வண்டடையும்

சோலை சூழ்ந்த துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

வேலை சூழ்ந்த உலகிற் பிறவா விதம்வினை தீர்த்தருளே.


ஓலையால் அன்று அடிமை ஆனார் - சுந்தரமூர்த்திநாயனார்;

பாலையாழ் - பாலைப்பண் - ஒரு பண்ணின் பெயர்;

(சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த

பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.");

துருத்திப் பெருமான் - திருத்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;

வேலை - கடல்;

* சுந்தரர் இத்தலத் திருக்குளத்தில் மூழ்கி உடற்பிணி நீங்கியதை அவர் பதிகத்திலும் பெரியபுராணத்திலும் காண்க.

(சுந்தரர் தேவாரம் - 7.74.1 - "என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை");


(பெரிய புராணம் - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - 12.29.299 -

மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாந்

தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது

புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி யதுநீங்கி

அக்கணமே மணியொளிசேர் திருமேனி யாயினார். )


2)

நெற்றிக் கண்ணாய் நிலவ ணிந்தாய் நீரை அடைத்தருளும்

கற்றைச் சடையாய் காவென் றிமையோர் கதற இரங்கிவிடம்

துற்று கண்டா துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

சுற்றும் உலகிற் பிறவா வண்ணம் தொல்வினை தீர்த்தருளே.


நெற்றிக் கண்ணாய் - நெற்றியில் கண்ணுடையவனே;

நிலவு அணிந்தாய் - பிறைசூடியவனே;

நீரை அடைத்தருளும் கற்றைச் சடையாய் - கங்காதரனே; ஜடாதாரியே;

"கா" என்று இமையோர் கதற இரங்கி விடம் துற்று கண்டா - "காவாய்" என்று தேவர்கள் கதறித் தொழவும், அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்ட கண்டனே; (துற்றுதல் - உண்ணுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.5 - "துஞ்சும்போதும் துற்றும்போதும்");

துருத்திப் பெருமான் - திருத்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானே;

தொழும் அடியேன் இனியும் சுற்றும் உலகிற் பிறவா வண்ணம் தொல்வினை தீர்த்தருளே - உன்னை வணங்கும் நான் இனி இவ்வுலகில் பிறப்பு எய்தாதபடி பழவினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (சுற்றும் உலகு - தன்னையும் சூரியனையும் சுற்றுகின்ற பூமி); (தொல்வினை - பழவினை);


3)

மடல விழ்ந்த மலர்கள் தூவி வானவர் வந்திறைஞ்சக்

கடலு மிழ்ந்த கடுவி டத்தைக் களத்தினில் வைத்தவனே

சுடலை ஆடும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

உடலை எய்தி உழலா வண்ணம் ஊழ்வினை தீர்த்தருளே.


மடல் அவிழ்ந்த மலர்கள் தூவி வானவர் வந்து இறைஞ்ச - வானவர் வந்து மடல் அவிழ்ந்த மலர்கள் தூவி இறைஞ்ச; (அவிழ்தல் = மலர்தல்);

களம் - கண்டம்; கழுத்து;

சுடலை - சுடுகாடு;

ஊழ்வினை - பழவினை; (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே");


4)

சீலத் தொண்டர் பால டைந்த சின(ம்)மலி காலனுயிர்

கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவ னேகரத்தில்

சூலம் ஏந்தும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

ஞாலம் எய்தி நலியா வண்ணம் நன்மை புரிந்தருளே.


சீலத் தொண்டர் - மார்க்கண்டேயர்;

பால் - ஏழாம்வேற்றுமை உருபு;

சினம் மலி காலன் உயிர் கால - கோபம் மிக்க கூற்றுவன் தன் உயிரைக் கக்க; (காலுதல் - கக்குதல்);

ஞாலம் - உலகம்;

நன்மை புரிந்தருளே - நன்மையை விரும்பியருள்வாயாக; நன்மை செய்தருள்வாயாக; (புரிதல் - விரும்புதல்; செய்தல்);


5)

பணியும் இமையோர் பரவ அவர்க்குப் பரிந்து மருந்தளித்த

மணிகண் டத்தாய் மங்கை பங்கா மாசுணம் ஊர்முடிமேல்

துணிவெண் பிறையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேன்பிறவிப்

பிணியும் நோயும் இன்றி மகிழப் பெருவினை தீர்த்தருளே.


மருந்து - அமுதம்;

மாசுணம் - பாம்பு;

ஊர்முடிமேல் - ஊர்கின்ற திருமுடிமீது;

துணி வெண் பிறையாய் - பிளவுபட்ட வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனே;

பெருவினை - பெரிய கொடிய வினை; (அப்பர் தேவாரம் - 5.5.7 - "அண்ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே.");


6)

சுடலைப் பொடியைப் பூசிக் கணங்கள் சூழ நடம்புரிவாய்

இடபக் கொடியாய் இண்டை போல இளமதி ஏறுகின்ற

சுடர்பொற் சடையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்

இடர்கட் கிடமாய் இளையா வண்ணம் இருவினை தீர்த்தருளே.


புரிவாய் - புரிபவனே;

இடபக் கொடி - எருதுச் சின்னம் பொறித்த கொடி;

இண்டை - தலையில் அணியும் ஒருவித மாலை; (அப்பர் தேவாரம் - 4.85.8 - "வார்சடைமேல் இண்டை மதியமன்றோ எம்பிரானுக் கழகியதே");

சுடர்பொற் சடையாய் - ஒளிவீசும் பொன் போன்ற சடையை உடையவனே; (சுடர்தல் - ஒளிவிடுதல்);

இடர்கட்கு இடமாய் இளையா வண்ணம் - இடர்களே அடைந்து வருந்தாதபடி;


7)

ஓடோர் கையில் உடைய வள்ளால் ஒள்ளெரி சேர்கணையால்

கூடார் புரங்கள் கொளுத்தும் மைந்தா குளிர்புனல் பாய்சடையாய்

தோடோர் செவியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

வாடா வண்ணம் வலிய வினைகள் மாய மகிழ்ந்தருளே.


ஓடு - பிரமனின் மண்டையோடு;

வள்ளால் - வள்ளல் என்பதன் விளி - வள்ளலே;

ஒள் எரி - ஒளி வீசும் தீ;

கூடார் - பகைவர்;

மைந்தன் - வீரன்;

தோடு ஓர் செவியாய் - ஒரு காதில் தோடு அணிந்தவனே - அர்த்தநாரீஸ்வரனே;


8)

தோளார் வலியால் மலையை அசைத்த துட்டனை அன்றடர்த்தாய்

வாளார் கண்ணி பங்கு மகிழ்ந்தாய் மாதவர் போற்றுகின்ற

தோளா முத்தே துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்

மீளா வண்ணம் வினைகள் தீர்த்து மெய்ந்நெறிச் சேர்த்தருளே.


தோள் ஆர் வலி - புஜபலம்; (தோள் - புஜம்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (வலி - வலிமை; பலம்);

துட்டன் - துஷ்டன் - இங்கே இராவணன்; (அப்பர் தேவாரம் - 4.78.10 - "வீரத்தால் மலையெடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்து");

அடர்த்தாய் - நசுக்கியவனே;

வாள் ஆர் கண்ணி - ஒளி பொருந்திய கண்ணை உடைய உமையம்மை;

தோளா முத்தே - துளைக்கப்படாத முத்தைப் போன்றவனே;


9)

கண்ணில் தீயாய் கரிய மாலும் கடிமலர் மேலவனும்

மண்ணில் விண்ணில் தேடி வாடி வாழ்த்து பரஞ்சுடரே

சுண்ண நீற்றாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

மண்ணில் பிறவி எய்தா வண்ணம் வல்வினை தீர்த்தருளே.


கண்ணிற் றீயாய் - கண்ணில் தீயாய் - நெற்றிக்கண்ணனே;

கடிமலர் - வாசம் மிகுந்த தாமரை;

சுண்ணநீறு - கலவைச் சந்தனம்போலக் கொள்ளப்படும் திருநீறு;


10)

மாயம் பேசி வலையை விரிக்கும் வஞ்சகர் சொல்விடுமின்

தூய மதியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

காயம் எய்திக் கலங்கா வண்ணம் கடுவினை தீர்த்தருளாய்

தோயச் சடையாய் என்னும் அன்பர் துயர்களை வான்சிவனே.


மாயம் பேசி வலையை விரிக்கும் வஞ்சகர் சொல் விடுமின் - பொய்யுரைத்து வலை விரிக்கின்ற வஞ்சகர்களது பேச்சை மதிக்கவேண்டா; (மாயம் - பொய்; அஞ்ஞானம்);

காயம் - உடல்; புண்;

கடுவினை - கொடிய வினை;

தோயம் - நீர்; (சம்பந்தர் தேவாரம் - 1.48.11 - "தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபுரத் தலைவன்" - தோயடைந்த - நீர் நிறைந்த. தோயம் என்பது தோய் என ஈறு குறைந்தது);

அன்பர் - பக்தர்;


11)

கடிய விடையன் கலைசேர் கையன் கார்மலி மாமிடறன்

கொடிய பாம்பு குளிர்வெண் திங்கள் கொன்றை அணிந்தபரன்

துடியை ஏந்தி துருத்திப் பெருமான் துணையடி ஏத்துகின்ற

அடியர் தங்கள் மிடியை நீக்கி அருள்புரி சங்கரனே.


கடிய விடையன் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவன்;

கலைசேர் கையன் - கையில் மானை ஏந்தியவன்;

கார் மலி மா மிடறன் - கருமை திகழும் அழகிய கண்டன்;

கொடிய பாம்பு - கோளரவம்;

குளிர்வெண் திங்கள் - குளிர்ச்சி பொருந்திய வெண் பிறைச்சந்திரன்;

துடியை ஏந்தி - உடுக்கையை ஏந்தியவன்;

துணையடி - இருதிருவடிகள்; துணையாக இருந்து காக்கின்ற திருவடி;

அடியர் - அடியவர்; பக்தர்கள்;

மிடி - துன்பம்; தரித்திரம்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.

அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.

5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.

(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")

( கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 -

களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்

றொளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடி யார்க்கருளும்

தெளிவா ரமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.);


2) திருத்துருத்தி - குத்தாலம் - சொன்னவாறு அறிவார் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=213

திருத்துருத்தி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=149

----------- --------------